ஜெமினி கணேசன் தாத்தா நாராயணசாமி ஐயர் புதுக்கோட்டை மஹாராஜா கல்லூரி பிரின்சிபாலாயிருந்தாராம்.. இவர் ஒரு இசை வேளாளர் இன பெண்ணை அபிமான தாரமாக மணந்திருக்கிறார். அவருக்கு பிறந்தவர்கள் பின்னால் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என அறியப்பட்டவரும், ஜெமினி கணேசனின் தந்தை ராமசாமியும். ராமசாமியும் ஒரு இசை வேளாளர் இனப்பெண்ணைத் தான் மணந்திருக்கிறார். அவரை தான் கங்கா பாட்டி என்று ஜெமினி மகள் கமலா செல்வராஜ் சொல்கிறார்.
ஜெமினி சுத்த பிராமணர் அல்ல. ஆனால் ஜெமினியின் மகள் இவரை பிராமணர் என்றே சித்தரிக்கிறார். ஜெமினி பெருமளவுக்கு ’முக்கா படி அரை வீசம்’ இசை வேளாளர் இனம் தான்.
ஜெமினியின் தாயார் முண்டனம் செய்த பிராமண விதவைக்கோலத்தில் தான் தன் வாழ்நாளில் இருந்தார். ஒரு விஷயம். இசை வேளாள இனம் பிராமண ஜாதியுடன் கலந்து விட்டால் அப்படிப்பட்டவர்கள் பிராமண கோலம் கொள்வதையே விரும்புவர் என்பதற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மடிசார் புடவையே சாட்சி.
” என்னோட அம்மா ஒரு கம்மனாட்டி. கம்மனாட்டி வளத்த பிள்ளை நான்” என்று என்னிடம் ஜெமினி சொன்னார். (தன் தாய் இளமையிலேயே விதவையானவர் என்பதை ’கம்மனாட்டி’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி சொன்னார்.)
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தன் அத்தை என்பதை ஜெமினி மறைத்ததில்லை. ஆனால் எப்படியோ ஜெமினிக்கு பிராமணர் என்ற பிம்பம் சாசுவதமாயிருந்திருக்கிறது.
ஜெமினியின் முதல் மனைவி பாப்ஜி பிராமணப்பெண் என்று சொல்லப்படுகிறது.
ஜெமினியின் பேச்சே பிராமண பாஷை தானே.
பி.யூ.சின்னப்பா புதுக்கோட்டைக்காரர்.
புதுக்கோட்டைக்காரர் ஜெமினி என்னும்போது மற்றொரு திரைப்பட நடிகர் ஏ.வி.எம்.ராஜனும் புதுக்கோட்டைக்காரர் தான். ஜெமினிக்கு தம்பி போல இருப்பார். இவர் அம்மா இசை வேளாளர், அப்பா முக்குலத்தோர் என சொல்லி கேள்வி.
ஜெமினியின் திரையுலக அந்தஸ்து பற்றி நான் தெளிவாக ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
தமிழ் திரையுலக மூவேந்தர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூன்று கூர்முனை என்பது ஐம்பதுகளில். அதில் ஜெமினி என்ற கூர் முனை 1960களில் மெல்ல மழுங்கிப்போனதை யாரும் மறக்கக்கூடாது. ஜெமினியின் இயல்பும் இதற்கு ஒரு காரணம். சிவாஜியோடு இரண்டாவது கதாநாயகனாக நடித்ததோடு நிற்கவில்லை. எம்.ஜி.ஆர் இதற்கே “ ஜெமினி தனித்துவத்தை விட்டுத்தருகிறாரே” என்று வருத்தப்பட்டார்.
தன் திரையுலக அந்தஸ்திற்கு குறைவான நடிகர்கள் ஜெய்சங்கர், முத்துராமன், ஏ.வி.ஏம்.ராஜன், ரவிச்சந்திரனோடும் இணைந்து ஜெமினி பல படங்கள் நடித்தார். எஸ்.எஸ்.ஆரோடு வைராக்கியம், குலவிளக்கு ஆகிய படங்கள்.
திரையுலக மூவேந்தர் என்ற அமைப்பு மாறி திரையுலகின் இரண்டு திலகங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி உச்ச அந்தஸ்து பெற்று விட்டனர்.
ஜெமினி சின்ன பட்ஜெட் நடிகராகி விட்டார்.
சின்ன பட்ஜெட் நடிகரானது Blessing in disguise. கே.பாலச்சந்தரின் தரமான படங்கள் அவருக்கு கிடைத்தன.
சாவித்திரியோடு அவர் வாழ்ந்த காலங்கள். சாவித்திரி கொடி கட்டிய காலங்களில் ஜெமினிக்கு மார்க்கெட் தமிழ் திரையுலகம் மட்டும் தான். ஆனால் சாவித்திரிக்கு பிரமாண்டமான தெலுங்கு திரையுலகிலும் மார்க்கெட். ஆந்திர மண்ணின் மகள்.
தெலுங்கில், தமிழில் அவர் மொத்த சம்பாத்தியம், ஜெமினியின் சம்பாத்தியத்தை விட நிச்சயம் அதிகம் தான் என்பதை மறந்து விடக்கூடாது. சாவித்திரி பிஸியாக இருந்த காலங்களில் அவர் அந்தஸ்து ஜெமினியை விட கூடுதல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. ஜெமினி நடித்த இந்திபடங்கள் கூட வெற்றி பெற்றன என்பது வேறு விஷயம். ஆனால் ஒன்று. சாவித்திரி தெலுங்கு, தமிழில் கதாநாயகி அந்தஸ்து இழந்த பின்னும் தமிழ் திரையில் பல வருடங்கள் ஜெமினி கணேசன் கதாநாயகன் அந்தஸ்தில் இருந்தார்.
1953ல் ஜெமினி ’மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் தொடங்கி 1974ல் ’நான் அவனில்லை’ படத்தோடு அவர் மார்க்கெட் முடிவுக்கு வந்தது.
”உண்மைக்கின்னே ‘புன்னகை’ (1971)ன்னு ஒரு படம் நடிச்சேனே..அதையும் ரசிக்க மாட்டேன்னுட்டானுங்க.. பொய்க்குன்னே ஒரு படம் ‘ நான் அவனில்லை’ …அதையும் ரசிக்க மாட்டேன்னுட்டானுங்க..” என்று ஜெமினி வேதனையோடு சொன்னார்.
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் 1974ல் உரிமைக்குரல், தங்கப்பதக்கம் என சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தார்கள்.
1953 துவங்கி 1974 வரை ஜெமினி 21 வருடங்கள் மார்க்கெட்டில் இருந்ததாகக் கொள்ளலாம்.
பின்னரும் ஜெமினி எத்தனையோ படங்களில் இருந்தார் என்றாலும் அவை ஜெமினி கணேசன் படம் என்றெல்லாம் சொல்லலாகாது.
மார்க்கெட் போனதை ஜெமினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முழு மேக்கப், தலையில் விக் வைத்துக்கொண்டு ஸ்டுடியோக்களில் காரில் வலம் வருவார். பார்ப்பதற்கு ஜெமினி இன்னும் மார்க்கெட்டில் இருப்பதாக தெரிய வேண்டும்!
மார்க்கெட். தினத்தந்தியில் ஒரு செய்தி அந்தக்காலத்தில்.
”சௌகார் ஜானகியின் மார்கட்டு சரிந்தது!”
மார் கட்டு.
நடிகையர் திலகம் படம் பார்க்கிற விசேஷ ஆர்வம் எனக்கு இல்லை. சாவித்திரியம்மாவைப் பற்றி ராஜநாயஹம் புதிதாக தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
BioPic எப்போதும் ஒரு ஆளுமை பற்றி கூடுதல் புகழ்ச்சி இருக்கும். படத்தை மஹாநதி என்று தெலுங்கர்கள் எடுத்திருக்கிறார்கள். மண்ணின் மகளை உயர்த்திப்பிடிக்கவே செய்வார்கள். பொதுப்புத்தி காவிய நாயகியாக உயர்த்தும்போது கணவன் வில்லனாக மாறுவது என்ன அதிசயமா?
சாவித்திரியின் தெலுங்கு திரைச் சாதனைகள் இங்கே உள்ளவர்களுக்கு எப்படி முழுமையாக அறிய முடியும்.
ஜெமினி கணேசனை மட்டம் தட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. ஜெமினி பேச்சை சாவித்திரி கேட்டிருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தடுத்திருக்க முடியும்.
சாவித்திரியின் Bio pic கமலா செல்வராஜ் சகோதரிகள், சாவித்திரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி, மகன் சதீஷ் ஆகிய இரண்டு குடும்பங்களுக்கிடையில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது.
புஸ்பவல்லி, மகள்கள் ரேகா, ராதா நல்லவர்கள். ஆனால் சாவித்திரி மகள்? என்று பொங்குகிறார் கமலா.
சாவித்திரி Possessive lady. புஸ்பவல்லியும் அப்படித்தான் என்று ஜெமினியே சொல்லியிருக்கிறார். புஸ்பவல்லியுடன் வாழ்ந்த காலத்தில் கூட பாப்ஜியின் வீட்டை மறந்து தான் இருந்ததாக ஜெமினி குமுதம் பேட்டியொன்றில் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்.
சமந்தா ‘என் முதல் காதலன் ஜெமினி மாதிரி தான். நல்லவேளை அவனை நான் கட்டியிருந்தால் எனக்கு சாவித்திரி நிலை தான்’ என்று ஆசுவாசப்படுகிறாள்.
சாவித்திரிக்கு ஜெயசித்ரா கேள்வி ‘ நீங்க ஏம்மா ஜெமினிய கட்டினீங்க. வேற யாரயாவது கட்டியிருக்கலாமே’
கமல் அந்தக்காலத்தில் சொல்வார் “ ஜெமினி மாமாவை யாராலும் அவமானப்படுத்தவே முடியாது. உங்களப் பத்தி இப்படி இந்த ஆள் பேசறான்னு அவர் கிட்ட சொன்னா ‘போறாண்டா. சொல்லிட்டுப்போறான்…’ என்பார்”
இப்போது அவர் உயிருடன் இருந்து இந்த ’நடிகையர் திலகம்’ பார்த்திருந்தால் “சாவித்திரிய நன்னாத்தான்டா காண்பிச்சிருக்கான்….” அது போதுமே என்று திருப்திப்பட்டிருப்பாரோ.
விஜய சாமுண்டீஸ்வரி சாவித்திரியோடு பகை பாராட்டியதால் தான் அண்ணா நகரில் தனியாக வசித்திருக்கிறார். ஜெமினி கணேசன் மீது சாவித்திரி மகள் கேஸ் போட்டதுண்டு. ஜெமினியை கடுமையாக தாக்கி பேட்டி கொடுத்ததுண்டு.
கமலா செல்வராஜ் தன் தாயை விட சாவித்திரியம்மாவை பிடிக்கும் என்று கூட பேட்டியில் சொன்னதுண்டு. ஆனால் சாவித்திரி படம் அவர் மீது மிகுந்த துவேசத்தை ஏற்படுத்தி விட்டது. “She is very bad. கல்யாணத்திற்கு பிறகும் சாவித்திரிக்கு affairs இருந்தது.” என்று கமலா தூற்றும்படியாக இந்த சாவித்திரி படம் மாற்றி விட்டது.
Caesar’s wife is above suspicion.
என்னுடைய சாவித்திரி கட்டுரையில் அவர் affairs பற்றி குறிப்பிட்டதில்லை.
இப்போது நடிகர் ராஜேஷ் “ அப்படி சாவித்திரியோடு affair வைத்திருந்த நடிகர்களை எம்.ஜி.ஆர் மிரட்டியிருக்கிறார் தெரியுமா?’’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார்!
கத்திரிக்கா முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்.
அவர் மறைந்து இவ்வளவு காலம் கழித்து அவர் கற்பு விவாதத்துக்குள்ளாகிறது.
ஜெமினி, சாவித்திரி இருவருமே Promiscous persons. Yet both are honourable.
எம்.எஸ் பெருமாள் என்னுடைய ’நடிகையர் திலகம் சாவித்திரி’ கட்டுரை படித்து விட்டு என்னிடம் சொன்ன ஒரு விஷயம்.
’மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ பாடல் இப்போது கேட்கும் போதாவது ஜெமினி மாமா உங்க கூட இனிமேலாவது சேரமாட்டாரா’ என்று 1970களில் எம்.எஸ்.பெருமாள் கேட்ட போது சாவித்திரி “இப்ப அந்த பாட்ட பார்த்தா அவர் என் கையில உள்ள பெண் குழந்தை இப்ப பெரிய பிள்ளையாயிருப்பாளே, அவள எப்படி கணக்கு பண்ணலாம்னு தான் அவர் புத்தி போகும்” என்றாராம்.
கமலா செல்வராஜுக்கு அவர் அப்பா பற்றி ரொம்ப பிரமையிருக்கிறது. அவர் அழகானவர் என்பதால் எல்லா பெண்களும் அவரை காதலித்தார்களாம். அவரைத் தேடி வந்தார்களாம். அவர் மேல தப்பில்லையாம். எல்லா நடிகைகளுமே அவரை விரும்பினார்கள் என்று பட்டவர்த்தனமாக சொல்கிறார்.
என் பங்குக்கு நானும் சொல்கிறேன்.
”குழந்தையுள்ளம்” (1969) படம் சாவித்திரி இயக்கிய சொந்தப்படம். ஜெமினி கணேசனும் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த படம். சௌகார் ஜானகியும் உண்டு.எஸ்.பி.பியின் ஆரம்பக்கால பாடல் ”முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு”. சாவித்திரி டாக்டரம்மாவாக வருவார்.
இந்தப்படத்தில் பி.வாசுவின் சித்தப்பா சேகர் கேமராவில் பணி புரிந்திருக்கிறார். அப்பா பீதாம்பரம் மேக் அப்.
சாவித்திரிக்கும் ஜெமினிக்கும் சண்டை பார்த்திருக்கிறீர்களா என்று நான் சேகரிடம் கேட்டேன்.
சேகர் சொன்னார். “ ரெண்டு பேருக்கும் சண்ட என்ன…. ’நீ அவன் கூட படுத்தில்ல..எனக்கு தெரியாதுன்னு நெனச்சிண்டியா?’ன்னு இவரு கேப்பார்..பதிலுக்கு அந்தம்மா ’நீ அவ கூட, இவ கூடல்லாம் படுத்தேல்ல’ன்னு சொல்லும்.
எல்லா கேசனோவோக்களும் பெண்களிடம் செருப்படி வாங்கித்தான் ஆக வேண்டும்.
கமல் மற்றொரு நடிகரிடம் சொன்னதாக ஒரு சம்பவம் கேள்விப்பட்டேன். என்னுடைய புரிதல் கீழ்கண்டவாறு.
ஜெமினி ஒரு நடிகையை தொடக்கூடாத இடத்தில் தொட்டிருக்கிறார். நடிகை இவரை உடனே மறுதலித்து எதிர்த்து கன்னத்தில் ஒரு அறை கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன் அப்போது உள்ளே நுழைந்தவர் அதை பார்த்து விட்டார். இந்த மூன்றுமே சில வினாடிகளில். எதுவுமே நடக்காதது போல ஜெமினி சௌஜன்யமாக கமலைப்பார்த்து கேட்டாராம் “ என்னடா பிள்ளையாண்டான்! எப்படிடா இருக்கே..எப்படா வந்தே…”
அவருடைய கடைசி மனைவி(!) ஜூலியானா அவருடைய தள்ளாத வயதில் குடையால் அடித்திருக்கிறாள்.
ஜூலியானா Spendthrift. ஜெமினி சிக்கனக்காரர். ’எவ்வளவு நகை வாங்கியிருக்கா. இப்பவும் உங்க கடையிலும் நகைய அள்ளறா பாருங்க.’ என்று என் மாமா அங்குராஜிடம் வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார்.
ஜூலியானாவிடம் இருந்து தன் அப்பாவை மீட்டு கமலா செல்வராஜ் ஜி.ஜி.ஆஸ்பிடலில் வைத்திருந்த போது ஜெமினியின் அறைக்கு வெளியே ஒரு போர்டு.
“ LADIES NOT ALLOWED”
The height of Irony!
இந்த ‘Ladies not allowed’ அறிவிப்பு காதல் மன்னனின் இழிவான வீழ்ச்சியா? சபலம் நிறைந்த தந்தையை பாதுகாக்க வேண்டுமே என்ற அவருடைய மகளின் பரிதவிப்பின் வெளிப்பாடா?
…………………………….