அடையார் சாஸ்திரி நகர் வீட்டுக்கு குடி போக (April 15) இன்னும் நாட்கள் இருக்கிறது.
அந்த பகுதி சம்பந்தப்பட்ட பழைய நினைவுகள்.
1989.
பேரறிஞர் அண்ணாவின் கல்லூரி வகுப்புத் தோழர் மணிக்கொடி சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரம். மறக்கவே முடியாத அற்புதமானமான மனிதர். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு பல செய்தவர்.
அவருடன் அஷ்ட லட்சுமி கோவில் போகும் போது தெருவொன்றில் தூரத்தில் வீட்டின் முன் முதியவர் நிற்பதை காண முடிந்தது. வருவது விஸ்வேஸ்வரம் தான். உற்று சில விநாடிகள் பார்த்து..அடையாளம் கண்டு கொண்டு விருட்டென்று வேகமாக வீட்டிற்குள் சென்று விட்டார்.
விஸ்வேஸ்வரம் " அந்த பெரியவர் எங்கள் சொந்தக்காரர். இந்த தெருவில் வருவதை பார்த்து விட்டால் உடனே வீட்டுக்குள் போய் ஒளிந்திருந்து ரகசியமாக கவனிப்பார். மாமியிடம் கவன ஈர்ப்பு செய்வார். 'விஸ்வேஸ்வரம் நம்ம வீட்டுக்கு அழைக்காமலே வர வேண்டும். உள்ளே வருகிறானா பார்ப்போம். பிரியம், மரியாதை இருந்தால்
வராமல் போவானோ'
அந்த வீடு வந்ததும் மெதுவாக திரும்பி பார்த்தேன். பெரியவர் தன் மனைவியுடன் ஹாலை ஒட்டிய அறை உள்ளிருந்து ரகசியமாக பார்ப்பது தெரிந்தது.
வீட்டைத் தாண்டியதும் சொந்தக்காரர்களுக்கெல்லாம் போன் போட்டு ' விஸ்வேஸ்வரம் எங்க ஆத்த தாண்டி போறதை நானும் இவளும் இப்ப தற்செயலா பாத்துட்டோம். ஆத்துக்குள்ள வராமலே போறான். கண்ணு தெரியறதில்ல. இதெல்லாம் நன்னாருக்கா..' என்பார்.
அஷ்ட லட்சுமி கோயில் போய் விட்டு திரும்பியதும் சிட்டி சொன்னார் ' ஏன் எங்காத்துக்கு வராம விஸ்வேஸ்வரம் போறான்ன்னு அவர் பிராது வாசிக்கிறார்'.
லஸ் கார்னரில் பஜாரில் முனைப்பகுதியில் இருந்த கடையில் குண்டான மனிதர் கல்லாவில். அவரைக் காட்டி விஸ்வேஸ்வரம் " இவன் என் க்ளாஸ் மேட். அப்படியே அச்சு அசலாக அவனுடைய அப்பா மாதிரியே இருக்கான். இப்படியே தான் அவரும் இதே கடையில ஒக்காந்திருப்பார். எனக்கு எப்பவுமே ஒரே ஆள் தான் ஐம்பது வருஷமா இந்த கடையில் ஒக்காந்திருக்கிற மாதிரி தோணுது."
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.