Share

Aug 27, 2019

மஸ்தானா? மஸ்தானா?


ஜெயகாந்தன் பெயர் முருகேசன். ஜெயகாந்தனுடைய அப்பா ஃபயர் சர்வீஸில் வேலை பார்த்தவர்.
சந்திரபாபுவுக்கு எழுதப்படிக்கத்தெரியாது என்று ஜெயகாந்தன் ‘இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ நூலில் அனுபவப்பூர்வமாக பார்த்து விட்டு சொல்லியிருக்கிறார். சந்திரபாபு சிலோன்ல சீனியர் கேம்பிரிட்ஜ் படித்தவர் என்று வார பத்திரிக்கை ஒன்றில் பேட்டியில் அந்த காலத்தில் சொன்னது பொய் தான் என்றாகிறது. அல்லது பேட்டியில் பத்திரிக்கை அள்ளி விட்டிருக்கிறது என்பது தான் உண்மை. ஜெயகாந்தன் பொய் சொல்லவில்லை.
ஸ்ரீதரின் உடன் பிறவா சகோதரர் சி.வி.ராஜேந்திரன் என்று ஜேகே அதில் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்ரீதரின் உடன் பிறந்த சகோதரர் என்று தான் பரவலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஸ்ரீதரின் இனிசியல் கூட சி.வி. தான்.
நான் இது பற்றி இப்போது சித்ராலயா கோபுவின் மகன் ஹிண்டு நரசிம்மனிடம் கேட்டேன். அவர் ஸ்ரீதரின் மாமா மகன் சி.வி.ராஜேந்திரன் என உறுதிப்படுத்தினார்.
மதுரை பக்கம் இதை சொன்னா 'ஸ்ரீதரோட தம்பி தான் சி.வி.ராஜேந்திரன்’னு கட்டி உருண்டுடுவாங்கே. இப்படியெல்லாம் கூட மதுரையில பெரிய சலம்பல் ஆகியிருக்கிறது.
ஜெயகாந்தனின் கலையுலக அனுபவங்கள் நூலில் கவி.கா.மு.ஷெரிஃப் தான் பாட்டும் நானே, பாவமும் நானே பாடலை எழுதியவர் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கண்ணதாசன் அதை அப்போதே மறுத்து ‘போயும் போயும் வயிற்றுழவுக்காரன் மலத்தையா உண்பான்’ என்று தன் பத்திரிக்கையில் மறுத்திருந்தார்.
இப்போது அவரது பிள்ளைகளும் சொல்வது ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ எங்கப்பா தான் எழுதினார்’
பிரபலங்களின் வம்சபரம்பரை எப்போதும் எமோஷனலாக சொல்வது கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையற்றது.
ஜெயகாந்தனின் பால்ய நண்பர் திராவிட கழக தலைவர் கே.வீரமணி என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய இன்னொரு நண்பர் கூலி மஸ்தான் என்ற ஹாஜி மஸ்தான் என்று ஒரு செய்தி கூட பத்திரிக்கையொன்றில் அந்த காலத்தில் வந்திருக்கிறது.
ஜெயகாந்தன், வீரமணி, ஹாஜி மஸ்தான் ஆகியோர் சிறுவர்களாக இருக்கும்போதே நண்பர்கள் – இப்படி.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஜெயகாந்தனே சொன்னாரா? வீரமணி சொன்னாரா? இது உண்மையா என்பதை இனி வீரமணி தான் சொல்ல முடியும். வீரமணி, ஜெயகாந்தன் ஏறத்தாழ சம வயதினர். மஸ்தான் ஏழெட்டு வயது மூத்தவர்.
மஸ்தான் அன்று பம்பாய் டான். வர்தா பாய் போல. இருவரும் தமிழர்கள்.
எமர்ஜென்ஸி காலத்தில் இவர் ஜெயிலில் வைக்கப்பட்டார். அப்போது தான் இவரைப் பற்றி பத்திரிக்கைகள் எழுதித் தள்ளின.

ஹாஜி மஸ்தான் காலில் ராஜ்கபூர் விழுகிற புகைப்படம் ஒன்று அன்று நான் பார்த்திருக்கிறேன். அன்றும் தாதாக்களின் பிடியில் தான் இந்தி திரையுலகம் இருந்திருக்கிறது. பல படங்களுக்கு மஸ்தான் ஃபைனான்ஸ். படத்தயாரிப்பாளராகவும் ஆனார் என்றே சொல்லப்பட்டதுண்டு.
ஹாஜி மஸ்தான் கதையை தான் தீவார் என்று உல்டா பண்ணி அமிதாப்பை வைத்து இந்தியில் எடுத்தார்கள். சில வருடங்கள் கழித்து தீவார் தமிழில் ரஜினி ”தீ”.
வர்தா பாய் பின்னால் தமிழில் “நாயகன்”. அப்புறம் தான் வினோத் கன்னா “தயாவான்”.
ஜெயில் வாழ்க்கையில் பலரிடம் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும்.
ஆட்டோ சங்கர் கிறிஸ்தவராக மாறினார். ராஜீவ் கொலை வழக்கு முருகன் சாமியாராக மாறினார். இதில் உண்மை சம்பந்தப்பட்ட சிக்கல்கள் இருப்பது தவிர்க்க முடியாது. ஜெயில் வாழ்க்கை அலுப்பே மனித இயல்பில் தவிர்க்க முடியாத ஏதேனும் மாற்றத்தை உண்டு பண்ணும் என்பது உளவியல் உண்மை.
எமர்ஜென்சியில் சிறையில் அடைக்கப்பட்ட மஸ்தான் அப்போது ஜெயப்ரகாஷ் நாராயணின் கொள்கைகளால் கவரப்பட்டு தொண்டராக மாறினார். இது கூட எமர்ஜென்ஸி கொண்டு வந்த இந்திராகாந்தியை எதிர்த்த மஸ்தானின் மனநிலை என்று எளிதாக குறிப்பிட முடியும்.
ஆனால் பம்பாய் நகரின் நிழல் உலக அரசர் அப்போது சிறையில் இந்தி கற்க ஆரம்பித்தார் என்பது அதிசயம்.
பம்பாயை இந்தி தெரியாமலே ஒரு தமிழர் ஆட்டி வைத்திருக்கிறார் என்பது பெரிய விஷயம். ஆச்சரியம்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.