Share

Aug 19, 2019

Match box criminal


தீப்பெட்டிகளில் ஒரு பண்டர்ரோல் என்று கவர்ன்மெண்ட் லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு தீப்பெட்டியிலும்.மத்திய கலால் வரி. அந்த பண்டர்ரோல் சென் ட்ரல் எக்சைஸ் டிபார்ட்மெண்டில் தான் அது பிரிண்ட் செய்யப்பட்டு தீப்பெட்டிகளில் ஒட்ட எல்லா தீப்பெட்டி ஆஃபிஸ்களுக்கும் அனுப்பப்படும்.
அது சென்ட்ரல் எக்சைஸ் லேபிள். 
அந்த காலத்தில் சென்ட்ரல் எக்சைஸ் கண்ட்ரோலில் அனைத்து தீப்பெட்டி ஆஃபிஸ்களும் இருக்கும். சாவியையே மத்திய கலால் வரி ஆஃபிஸில் கொடுத்து வைக்கவேண்டும் என்று கூட ஒரு சட்டம் இருந்ததுண்டு.
அப்போது தமிழ்நாடு கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸ் இரண்டு டிவிசன்களாக பிரிக்கப்பட்டு மதுரை டிவிசனுக்கு கலெக்டர் எம்.எஸ்.சுப்ரமண்யம். இவர் எங்களுக்கு தூரத்து உறவினர்.
சென்னை டிவிசன் கலெக்டராக எழுத்தாளர் கௌசல்யா நாராயண்.
இவர் மோகன் குமாரமங்கலம், தோழர் பாலதண்டாயுதபாணி, கவர்னர் குர்ணாம் சிங் பயணம் செய்து பெரும் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்ததால் அகால மரணமடைந்தவர்.

Irony! அந்த நேரத்தில் கௌசல்யா நாராயண் தினமணி கதிரில் “வாழ்வைத்தேடி” என்று ஒரு தொடர் நாவல் எழுதிக்கொண்டிருந்தார்.

அந்த பயணத்தில் உயிர் பிழைத்தவர் சிவகாசி எம்.பி. ஜெயலட்சுமி.
கஸ்டம்ஸ் கலெக்டர் எம்.எஸ்.சுப்ரமண்யம் காலத்தில் தான் திருச்சி மெய்வழிச்சாலை ரெய்டு. முதல் நாள் ரெய்டில் என் பெரியப்பாவும் சவுரிப்பெருமாளும் தான் மெய்வழிச்சாலை மர்மத்தை கண்டறிந்த அதிகாரிகள். அப்புறம் கலெக்டர் எம்.எஸ்.சுப்ரமண்யமே ப்ரசன்னமானார். அந்த பரபரப்பான தங்க சுரங்க வேட்டையை இண்டியன் நியூஸ் ரெவ்யூ செய்தியாக்கிய போது அதில் பெரியப்பா இடம் பெற்றிருந்தார். இந்தியாவின் அனைத்து சினிமா தியேட்டர்களிலும் அந்த செய்திச்சுருள் ஓட்டப்பட்டது.
எம்.எஸ்.சுப்ரமண்யம் காலத்திலேயே பரபரப்பான மற்றொரு கஸ்டம்ஸ் கேஸ் கள்ள பண்டர்ரோல் கேஸ்.
கையும் களவுமாக சிக்கிய ஆள் பால்ராஜ் என்பவர்.
இந்த பால்ராஜ் பெரிய ஃப்ராட். கலெக்டரின் சொந்த ஊரிலேயே பிரபலமான குடும்பம் ஒன்றின் மூத்த மருமகன்.
அந்த மனிதன் குற்றத்தை ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு போனார்.
அதில் ஒரு உண்மை டிபார்ட்மெண்ட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியவில்லை. என் தகப்பனார், பெரியப்பாவுக்கும் கூட.
அந்த பண்டர்ரோல் அடிக்க உபயோபப்படுத்தப்பட்ட முத்திரை எப்படி அந்த பால்ராஜ் கைக்கு போனது என்பது பெரும் ரகசியம் ஆனது.
ஜெயிலுக்கு போன குற்றவாளியிடம் அது குறித்து எந்த தகவலும் பெற முடியவில்லை என்று வழக்கு முடிக்கப்பட வேண்டியிருந்தது. அது வெளிப்பட்டிருந்தால் டிபார்ட்மெண்டில் ஒரு அதிகாரிக்கு பெரும் இழிவும், கடும் விளைவும் ஏற்பட்டிருக்கும்.
பின்னால் பல வருடங்கள் கழித்து இந்த ஆளை நான் சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. என் மாமனாரின் தீப்பெட்டி பிசினஸில் இவர் மீடியேட்டர் ஆக நுழைந்தார். வடநாட்டில் சேட்களிடம் ஆர்டர் எடுத்து என் மாமனாரின் தீப்பெட்டி ஆஃபிஸ்களுக்கு கொடுத்து அதற்கு கமிஷன் கேட்டு வந்தார். ஆர்டர் நல்ல ரேட் என்பதால் மாமா ஒப்புக்கொண்டிருந்தார்.
பால்ராஜ் தன் முதல் மனைவியை விட்டு விலகி வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணும் அவள் தங்கையும் என் மாமனாரின் தீப்பெட்டி ஆஃபிஸில் தீப்பெட்டி ஒட்டும் வேலை பார்த்தனர்.
கஸ்டம்ஸ் குற்றவாளி தன் கள்ள பண்டர்ரோல் கேஸ் பற்றி என்னிடம் சொன்னார்.
கலெக்டர் சுப்ரமண்யம் நேரடியாக இவரை விசாரித்த போது அந்த கள்ள பண்டர்ரோல் அச்சடிக்க அரசாங்க முத்திரை எப்படி கிடைத்தது என்று கேட்டிருக்கிறார்.
பால்ராஜ் மௌனமாய் தலை குனிந்திருக்கிறார்.
தன் கீழ் வேலை பார்க்கும் ஒரு அதிகாரி தான் என்பதில் கலெக்டருக்கு சந்தேகமில்லை. யாரோ?
அந்த முத்திரை கலெக்டரின் நேரடி பொறுப்பில் இருந்திருக்கிறது.
அவர் யார்?
கலெக்டர் மிகவும் நேர்மையானவர். கண்டிப்பானவர் தான்.
எப்போதும் ரொம்ப பெரிய இடம் இப்படி கேட்டவுடன் அந்த சூப்ரண்ட் யார் என்கிற ரகசியத்தை பால்ராஜ் உடைத்திருக்கிறார். நினைத்தே பார்க்க முடியாத பெருந்தொகை கொடுத்திருக்கிறார்.
கலெக்டருக்கு அந்த கறுப்பு ஆடு யார் என்பதை தெரிந்து கொண்ட ஆசுவாசம்.
அந்த அதிகாரியை வெளிச்சம் போட்டு காட்டாமல் கலெக்டர் வேறு மாதிரி தண்டித்திருக்கிறார். வேலையை விட்டு தூக்காமல் ஒரு மத்திய கலால் துறை தலைவர் என்ற அளவில் அந்த அதிகாரியை கூப்பிட்டு கண்டித்து பல்லு பிடுங்கிற வேலையை செய்திருக்கிறார்.
பால்ராஜ் கள்ள பண்டர்ரோல் தயாரிக்க உதவிய அதிகாரி யார் என்று என்னிடமும் சொன்னார்.
பால்ராஜ் என்னிடம் சொல்லும்போது கலெக்டர் உயிருடன் இல்லை.
என் அப்பா, பெரியப்பா பற்றி பால்ராஜுக்கு நன்கு தெரிந்திருந்தது. கலெக்டருக்கு உறவினர்கள் என்பதைக்கூட அந்த பால்ராஜ் தெரிந்து வைத்திருந்தார்.
அந்த கறுப்பு ஆடு கஸ்டம்ஸ் அதிகாரி யார் என்பதை என் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் நான் தான் தெரியப்படுத்தினேன்.
இருவருமே “அவரா?” என்று அதிர்ந்து கேட்டார்கள்.

இனி அடுத்த அத்தியாயம்
என் மாமனார் அந்த பால்ராஜை நம்பி தீப்பெட்டி ஆர்டர் எடுத்து தொழில் செய்தது அப்போது மாமாவின் அண்ணனுக்கு வருத்தம் கொடுத்தது. என்னிடம் தன் வேதனையை தெரிவித்தார் “தொர, அவன் பெரிய ஃப்ராட். ஒன் மாமன் அவனை நம்புறது எனக்கு பிடிக்கல. விளைவு பயங்கரமாயிருக்கும்.” என்றார்.
நான் எச்சரிக்கை மணியடித்தும் மாமா கேட்கவில்லை. என்னேரமும் போதையில் இருப்பவர்.
“அதெல்லாம் நம்ம கிட்ட அவன் வேலய காட்ட மாட்டான். பயப்படாதீங்க” என்று என்னை சமாதானப்படுத்தினார்.
கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா?
A criminal is a creative artiste.
பெரிய ஆர்டர். அந்த நேரம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்களை ஏற்றிச் சென்ற லாரி தீப்பற்றி எரிந்து எல்லாம் நாசம்.
பால்ராஜ் ”சரக்கை இன்சுரன்ஸ் செய்யச்சொன்னேன். உங்க மாமா கேக்கல.அவசரப்பட்டு அனுப்பிட்டாரு.”
வழியிலெயே பொருளை இறக்கி விட்டு லாரிக்கு நெருப்பு வைத்து..
பால்ராஜின் கிரிமினல் வேலை என்று தான் முடிவு கட்டும்படியானது.

கோழி களவாணி கோழி மட்டும் தான் திருடுவான். நகை திருடுறவன் நகை தான் திருடுவான்.அது மாதிரி ஒவ்வொரு திருடனுக்கும் ஒவ்வொரு லைன் இருக்கும். அதை விட்டு track மாறவே மாட்டான். இந்த பால்ராஜுக்கு தீப்பெட்டி லைன்.

..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.