Share

Aug 6, 2019

விகடன் தடம் ரங்காராவ் கட்டுரையில் தகவல் பிழை

1974ல் இறந்த எஸ்.வி.ரங்காராவை 1971ல் குழி தோண்டி புதைத்திருக்கிறார்கள்.
1971ல் மாரடைப்பு ஏற்பட்டு 53வயதில் காலமானார் என்பது தவறான தகவல்.
விகடன் தடம் ஆகஸ்ட் இதழில் ரங்காராவ் பற்றிய கட்டுரை தகவல் பிழைகளுடன் முடிகிறது. ராஜா என்ற படம் 1972ல் வந்தது.ராஜா 1971ல் என குறிக்கப்பட்டிருக்கிறது.
.
1974ம் வருடம் ஜூலை 18ம் தேதி ரங்காராவ் இறந்தார்.
ரங்காராவ் முதுமையை பார்க்காமலே 56 வயதில் இறந்தார் என்பதை 2009ம் ஆண்டிலேயே என் வலைத்தள பக்கத்தில் எழுதியிருந்தேன்.
‘பல படங்களில் வயதானவராக நடித்த ரங்காராவ் தனது முதுமையை அடையும் முன்பே இறந்து போய்விட்டார் என்ற தகவலை நண்பர் ராஜநாயஹம் வலைப்பக்கத்தில் ஒரு முறை வாசித்த போது அதிர்ச்சியாக இருந்தது. ராஜநாயஹம் கறுப்பு வெள்ளைக் கால தமிழ் திரையுலகின் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம். அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள சுவாரஸ்யமான திரைக்குறிப்புகள் தனித்து நூலாக வரவேண்டியவை.’ என எஸ்.ராமகிருஷ்ணன் வெப்சைட்டில் எழுதினார்.
நான் தமிழ் இந்து டாக்கீஸ் பகுதியில் 2015ம் ஆண்டு எழுதிய கட்டுரையில்  56 வயதில் இறந்தவர் என்பதை குறிப்பிட்டிருக்கிறேன்.
(1950களில்,1960களில்,1970களின்முன்பகுதியில் ) நிறைய வயதான,முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை.
அந்த கால குணச்சித்திர நடிகர்கள் ரெங்காராவ், பாலையா, எஸ்.வி.சுப்பையா மூவரும் முதுமையை காணாமல் மறைந்தார்கள்.
இவர்களுக்கு நல்ல சீனியர் எம்.ஆர்.ராதா மட்டும் முதுமையை பார்த்து விட்டு 72 வயதில் இறந்தார்.
பாலையாவுக்கு 58 வயது. சுப்பையாவுக்கு 57 வயது.
வினோதம் என்னவென்றால் படங்களில் பெரிசுகளாக இவர்கள் நடித்த காலத்தில் இளம் வாலிபர்களாக நடித்த கதாநாயகர்கள் எல்லோரும் நல்ல முதுமையைப்பார்த்து விட்டுத்தான் இறந்தார்கள். 52 வயதில் இறந்த முத்துராமன் தவிர.
ரங்காராவ் நூற்றாண்டு சென்ற வருடம் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அவர் 1918ம் வருடம் ஜூலை மாதம் 3ம் தேதியில் பிறந்தவர்.
1919ல் பிறந்தவர் என்று குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தார் உறுதி செய்திருந்தால் சரி. பிறந்த தேதி எப்படியோ, இறந்த வருடம் பற்றி எந்த குழப்பமும் தேவையில்லை.

1973ம் ஆண்டு ’அன்புச் சகோதரர்கள்’. “முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம்” கண்டசாலா பாடலுக்கு நடித்த ரங்காராவ். கண்டசாலாவும் கூட அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இறந்தார்.
1974ம் ஆண்டு வெளியான ’சிவகாமியின் செல்வன்’. ரங்காராவ் இதில் நடித்திருந்தார். அதே வருடம் ’பிள்ளைச்செல்வம்’ மறைந்த மாமணிகள் நடித்த படம் என்றே விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகியது. அதில் 1973ம் ஆண்டு மறைந்த ஒ.ஏ.கே தேவர், 1974ல் மார்ச் மாதம் 8ம் தேதி இறந்த சந்திரபாபு, ஜூலை 18ம் தேதி மறைந்த ரங்காராவ் நடித்திருந்தார்கள்.

’ரங்காராவ் ஷேக்ஸ்பியரியன் ஆக்டர்’ என்பதை அடையார் ஃப்ல்ம் இன்ஸ்டிடியூட்டில் ’லீனா, ரீனா, மீனா’ ஷூட்டிங்கின் போது, வி.எஸ்.ராகவன் கண்ணை விரித்து அழுத்தமாக என்னிடம் தெரிவித்தார். டி.வி பேட்டிகளில் கூட சொல்லியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.