Share

Sep 29, 2018

Piere Bonnard's "Nude in the bath, with a dog"


பியர் பொனார் ஓவியன். 

பாரிஸ் நகர ட்ராம் வண்டியில் இருந்து இறங்கிய ஒரு பெண் மீது உடனே மையல் கொண்டு பின் தொடர்ந்து சென்றிருக்கிறான். அவள் பிணங்களுக்காக தயாரிக்கப்படும் மலர் வளையங்களில் முத்து மணிகளை தைப்பவள்.
நெருங்கிய பழக்கத்தில் வேலையை விட்டு விலகி பொனாருடன் இணைகிறாள். அவள் தன் வயது 16 என்றும், பெயர் மார்த் து மெலினி என்றும் பொய் சொல்கிறாள். முப்பது வருடங்களுக்கு பின் அவள் பெயர் வேறு என்பதும் அவள் சந்தித்த காலத்தில் பொனார் போல 20 ஒட்டிய வயதுடையவள் தான் என்பதும் தெரிய வந்தது.
மார்த் இறப்பதற்கு பதினைந்து வருடம் முன் இருவரும் ஒரு கிராமத்தில் செட்டிலாகிறார்கள். யாருடனும் ஒட்டாத தனிமை வாழ்க்கை.
தினமும் மணிக்கணக்காக மார்த் குளியல் தொட்டியிலேயே கிடந்திருக்கிறாள் மார்த்.
அவளுடைய மரணத்திற்கு ஒரு வருடம் முன் 1941 ல் இருந்து 1946 வரை கூட இந்த ஓவியத்தை பொனார் முடித்திருக்கவில்லை. அதாவது அவள் இறந்து ஐந்து வருடங்களுக்கு பின்னும் இந்த ஓவியத்தை வரைந்து கொண்டிருந்திருக்கிறான்.

 ஓவியத்தில் அவளுடைய டாஷண்ட் நாய் படுத்து பார்த்துக்கொண்டு இருக்கிறது.
கடைசியாக தீட்டிக்கொண்டிருந்த அந்த குளியலறை ஓவியங்களில் கிழவி எழுபது வயது ’மார்த்’ தை முதலில் தான் சந்தித்த போது நம்பியிருந்த பதினாறு வயது பெண்ணாகவே தான் வரைந்து கொண்டிருந்திருக்கிறான்.

ஐரிஷ் எழுத்தாளர் ஜான் பான்வில் எழுதியுள்ள
“ The Sea" நாவலில் இந்த ஓவியம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்த “கடல் “ 

மான் புக்கர் பரிசு பெற்றிருக்கிறது.
Nude in the Bath, with Dog
In Nude in the Bath, with Dog, begun in 1941, a year before Marthe’s death and not completed until 1946, left end, and beneath the bath on that side, in the same force-field, the floor is pulled out of alignment too, and seems on the point of pouring away into the corner, not like she lies there, pink and mauve and gold, a goddess of the floating world, attenuated, ageless, as much dead as alive, beside her on the tiles her little brown dog, her familiar, a dachshund, I think, curled watchful on its mat or what may be a square of flaking sunlight falling from an unseen window. The narrow room that is her refuge vibrates around her, throbbing in its colours. Her feet, the left one tensed at the end of its impossibly long leg, seem to have pushed the bath out of shape and made it bulge at the a floor at all but a moving pool of dappled water. All moves here, moves in stillness, in aqueous silence. One hears a drip, a ripple a fluttering sigh. A rust-red patch in the water beside the bather’s right shoulder might be rust or old blood, even.
- John Banville in "The Sea"
...................

Sep 28, 2018

ஏவிஎம் ஸ்டுடியோ - அந்த நாள் ஞாபகம்


2015ல் சென்னைக்கு வந்த பத்து நாட்களில் வேறு வீடு பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது நானும், என் இளைய மகன் அஷ்வத் துணையுடன் என் ஸ்கூட்டரில் கோயம்பேடில் இருந்து கிளம்பி சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து வந்து திடீரென்று ஒரு சந்தில் இருந்து வெளி வந்த அந்த வினாடி மறக்கவே முடியாது. எதிரே ஏ.வி.எம் ஸ்டுடியோ.
பக்கத்து ஏவிஎம் ராஜேஷ்வரி தியேட்டரில் கூட்டம். விஜய் படம் ரிலீஸ்.
சென்னை பெரிதாக மாறி எனக்கு topography சுத்தமாக புரிந்து கொள்ள முடியவில்லை.
தினமும் நான் அலுவலகம் போல வந்து போய்க்கொண்டிருந்த ஏ.வி.எம்.ஸ்டுடியோ.
அன்றைக்கு இருந்த துக்கத்துடன், பழம் நினைவுகள் மேகமாய் என்னை மூடியது.
அதன் பின் நெற்குன்றத்தில் இருந்த போதும், ஆலப்பாக்கம் வந்து விட்ட பின்னும் எவ்வளவு தடவை அந்த ஆற்காடு ரோட்டிலும், அருணாச்சலம் ரோட்டிலும் கடந்து செல்லும் போதெல்லாம் ஏ.வி.எம்.ஸ்டுடியோவிற்குள் போய் அந்த ஞாபக அடுக்கின் நினைவுகளை மேலெலுப்பி விட வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.
சென்ற ஞாயிறன்று மாலை பஸ்ஸில் இருந்து இறங்கி ஏ.வி.எம். குளோப் உருண்டை கொண்ட கேட்டில் நுழையும் போது சில பத்து வருடங்களுக்கு முன் தினம் அந்த கேட்டை நான் நெருங்கி உள் நுழையும் போதெல்லாம் கூர்க்காவால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் கொல்ட்டி பெண்கள் கூட்டம் என்னைப் பார்த்து இறைஞ்சும் குரலில் சொல்லும் வார்த்தைகள் : ’ஏமண்டி, சூட்டிங் சூடாலண்டி….. செப்பண்டி..”

இப்போது அந்த நீண்ட பாதையில் செல்கிறேன்.
ஏ.வி.எம். 'ஜி' தியேட்டர் இப்போது ‘ஜி’ஸ்டுடியோ?
நான் நினைவில் வைத்திருந்த காட்சிகளை இன்றைய சூழல் நிர்த்தாட்சண்யமாக சிதைத்து, உருமாற்றி இருக்கிறது. முழுக்க வேறு கட்டடங்கள். அபார்ட்மெண்ட்ஸ்.

ஆனால் ஏ.வி.எம் எடிட்டிங் பகுதி மட்டும் என்னை திகைக்க வைக்கும்படி மாறாமல், காலத்தின் தவிர்க்க முடியாத தீற்றல்களுடன் அப்படியே இருக்கிறது. ஆர்.ஆர் தியேட்டர் எங்கே என்று நான் பார்க்கவில்லை.

The past beats inside me like a second heart.

Really,one might almost live one's life over, if only one could make a sufficient effort of recollection.
- John Banville in his novel " The Sea"
அக்ரஹாரத்தில் கழுதை ஜான் ஆப்ரஹாமை நான் பார்த்தது இங்கே தான். பீம்சிங்கின் எடிட்டர் பால்துரை சிங்கம், லெனின், கே.ஆர் ராமலிங்கம் எடிட்டிங் ரூம்கள். அதன் முன் இப்போதும் இரண்டு பெஞ்ச்கள்.
புட்டண்ணா கனகல், (கிருஷ்ணன்) பஞ்சு இருவரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருக்க நான் பக்கத்தில் நின்ற காட்சி.
கமல் ஹாசன், மகேந்திரன், எஸ்.பி.முத்துராமன், ஜி.என்.ரங்கராஜன் அங்கே உழன்று கொண்டிருந்த அந்த கடந்த நாட்கள்.
கண்ணதாசன் மகன் கலைவாணன் “ அழகே, அழகு. தேவதை” என்று வாய் விட்டு ஒரே பாட்டை பாடிக்கொண்டே எடிட்டிங் அறையில் என் போல அஸிஸ்டண்ட் டைரக்டராக சுழன்ற இறந்த நாட்கள்.
Nostalgia..reminiscence.. Evocation.
அந்த சுருள் படிக்கட்டில் அந்தக் காலத்தில் இயக்குனராகத் துடித்த ஒருவன் என்னை உட்கார வைத்து தன் திரைக்கதையை விவரிக்க ஆரம்பித்து, அவன் கண்ணீர் விட்டு, தேம்பிக்கூட அழுத போதும் நான் கல் நெஞ்சுடன் முகத்தை Placid ஆக வைத்திருப்பதைப் பார்த்து “ என்னங்க, கொஞ்சம் கூட என் கதையில் இன்வால்வ் ஆக மாட்டேன்றீங்களே? “ என்று முகம் சுண்டி கேட்டானே.
ரத்தவேர்வையுடன் ஜீசஸ் தவித்த போது உறங்கிக்கொண்டிருந்த சீடர்கள். Gethsemane crisis?


அங்கே பக்கத்தில் இருந்த ரொம்ப ரொம்ப சின்ன தியேட்டரில்  ‘மனுசங்கடா’ படம் பிரிவியூ.
அழையா விருந்தாளியாக சென்ற நான் படம் பார்த்தேன்.
கதை இன்றைய காலத்தில் நடப்பதாக இயக்குனர் சொன்னார். அப்படியானால் தலித் தலைவர்கள், தலித் இயக்கங்கள் கவனத்திற்கு இந்த கதை எப்படி வராமல் போயிருக்க முடியும். ’முன்னே இப்படி நடந்திருக்கலாம். இப்ப நடக்க விட மாட்டோம்’ என்று கண்ணும் கருத்துமாக இருக்கும் தலித் அரசியல் இயக்கங்கள் கவனத்தை மீறி இப்படி நடந்திருக்கிறதா? அது சாத்தியமா? உண்மை சம்பவம் தான் என்று தான் சொல்கிறார்.
தீண்டாமை என்பதை இந்த மொபைல் போன் யுகத்தில் மேல் ஜாதியினரால் இப்படி இந்த படத்தில் காட்டப்படுவது போல செயல் படுத்த முடியுமா?

புதுமைப்பித்தனின் ’புதிய நந்தன்’ 
கு.ப.ராவின் 
‘பண்ணை செங்கான்’ ‘வாழ்க்கை காட்சி’ ந.பிச்சமூர்த்தியின் ‘அடகு’ 
தி.ஜானகிராமனின் ‘எருமைப்பொங்கல்’ போன்ற சிறுகதைகள் எல்லாம் நினைவில் நிழலாடுகிறது.
ஹை கோர்ட் ஜட்ஜ்மெண்ட்டை நடைமுறைப்படுத்த விடாமல் எவ்வளவு பிரக்ஞைபூர்வமாக ஆர்.டி.ஒ, போலீஸ் துறை தடுத்து விடுகிறது. அவர்களுக்கு இருக்கும் ஒரு துருப்புச் சீட்டு “ சட்டம் ஒழுங்கு பிரச்னை.”
“Contempt of court” என்ற வார்த்தை இன்று அரசியல் தலைவர்களை மிரட்டவே பயன் படும் நிலையில் ஒரு கிராமத்து உயர் ஜாதியினரை லோக்கல் அதிகார வர்க்கம் ஒன்றும் செய்ய முடியவில்லை.
விட்டோரியா டெசிக்காவின் “பைசைக்கிள் தீவ்ஸ்” படத்தில் திருடு போகிற சைக்கிளை சுற்றி கதையென்றால் ”மனுசங்கடா”வில் அப்பாவின் பிணம். A death is the problem of survivors. An emotionally devastating event.

ஹை கோர்ட்டுக்கு கூட்டிக்கொண்டு போய், ஆர்டர் வாங்க வழி செய்து, காரில் ”சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே” பாடலை முழுமையாக பாடும் அந்த Big Brother பின் பகுதியின் இறுக்கமான தீவிர சூழலில், அரைக்கிணறு தாண்டிய நிலையில் படத்தில் இருந்து காணாமல் போவது உறுத்துகிறது. அவருக்கு அடுத்த பல சமூக பிரச்னைகளை கவனிக்க செல்ல வேண்டியிருந்தது என்று சாதாரணமாக சொல்லி முடியுமா?
ஐம்பது லட்சம் செலவில் இருபத்து மூன்று நாட்களில் “மனுசங்கடா” படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தைப்பற்றிய தலித் தலைவர்கள், தலித் இலக்கியவாதிகளின் அபிப்ராயங்கள் முக்கியம்.
இந்த பணம் மீட்கப்பட நல்ல படம் தேடும் நல்லவர்கள் மட்டுமின்றி இன்னும் மற்றவர்களும் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். 
”மேற்கு தொடர்ச்சி மலை” பார்த்தது சமீபத்திய சந்தோஷம். நெஞ்சில் மிக கனமாக உட்கார்ந்த மேற்கு தொடர்ச்சி மலை. மலையிலிருந்து இன்னும் இறங்கவே முடியவில்லை.விரிவாக எதுவுமே பேச அவசியமில்லாமல் செய்த கண்ணீர் சாம்ராஜ்ஜியம்.
………………………………………………………………..



Sep 23, 2018

நடராஜ மூர்த்தி


மனநோய் என்பது எவ்வளவு கொடுமையானது. சமூகத்திலும் குடும்பத்திலும் இவர்களுக்கு எந்த கருணையும் கிடைப்பதில்லை. நோயாளிக்கு பச்சாத்தாபம் குடும்பத்தினரிடம் உண்டு. மனநோயாளிக்கு அடியும் மிதியும் இல்லாமல் போவது அபூர்வம். ஒரு குடும்பத்தில் ஒரு மனநோயாளி இருந்தால் பெரு நரகமாக மற்றவர்களின் வாழ்க்கை மாறிப்போகும். இது ஒரு Social Stigma என்பதாக பாவிக்க வேண்டி நேர்கிறது. மனநோயாளியால் அக்கம்பக்கத்தாரிடம் ஏற்படும் முகச்சுளிப்பு குடும்ப உறுப்பினர்களை முறித்துப் போட்டு விடும்.
அசோகமித்திரனின் மூத்த சகோதரி ஒருவர் மனநோயாளியாக இருந்ததால் அவர் அனுபவித்த வியாகூலம் சொல்லி முடியாது.
மனநோயாளியின் மரணம் எப்போதும் குடும்பத்தாரை நிம்மதியடையச்செய்கிறது.
நடராஜ மூர்த்தி என்பவர் ஒரு டாக்டர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தவர். அப்போது சென்னை துறைமுகத்தில் தற்காலிக வேலை கிடைத்திருந்திருக்கிறது. ஆனால் ஆறே மாதத்தில் வேலையை விட்டு விட்டார். மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்பத்தார் கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் சேர்த்து விட்டார்கள்.
2014ம் ஆண்டு ஒரு செய்தி பத்திரிக்கையில் நடராஜ மூர்த்தி பற்றிய செய்தியொன்றில் அப்போது 25 ஆண்டுகளாக மன நல காப்பகமே இவரது நிரந்தர இருப்பிடமாகி விட்ட சோகத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். அவரோடு பிறந்தவர்கள் நல்ல நிலைமையில் இருந்தாலும் இவரை பற்றிய அக்கறை, ஆதரவு எதுவும் தரத்தயாராய் இல்லாதவர்களாக அலட்சியப்படுத்தியிருக்கிறார்கள்.
பெற்றோருக்கு ஐந்து மகன்கள். நடராஜ மூர்த்தி தான் கடைக்குட்டி.
நான்கு வருடங்களுக்கு முன், ஐம்பத்தெட்டு வயதாகியிருந்த நடராஜ மூர்த்தி நிருபரிடம் சொல்லியிருக்கிறார் : ”என் அம்மா சுவர்ணம் பார்வதி என்னை எப்படி பார்த்துக்கிட்டாங்க! அவர் இருந்திருந்தா, என் நிலையே வேற மாதிரி இருந்து இருக்கும்.”
இப்போதும் இவர் கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் தான் இருக்கிறாரா? அல்லது இறந்து விட்டாரா?
நடராஜ மூர்த்தியின் அப்பா பிரபலமான ஒரு அரசியல் வாதி. நேர்மைக்கும், தூய்மைக்கும் இவரைத்தான் உதாரணமாக சொல்வார்கள். தமிழகத்தில் அமைச்சராய் இருந்தவர். காங்கிரஸ்காரர்களுக்கு இவர் மூலதனமாக ஆகி விட்டவர். ’எங்கள் கட்சிக்காரராக்கும்’ என்று மார் தட்டிக்கொள்வார்கள்.
ஆம், கக்கன் பெற்ற மகன் தான் நடராஜ மூர்த்தி.


https://rprajanayahem.blogspot.com/2009/03/blog-post_19.html

http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post.html

புகைப்படத்தில் இருப்பது ராஜநாயஹம்

Sep 18, 2018

பேச்சு ஆங்கிலம்


மகனைப்பார்க்க அமெரிக்காவுக்கு போன அந்த பெரியவர் மிகுந்த ஆங்கிலப்புலமை மிகுந்தவர். சிறுவனாய் இருந்த காலத்திலே, கல்லூரியில் படிக்கும் காலத்திலே அவர் பேசும் ஆங்கிலம் பிரமிக்கும்படியாக இருக்கும். Spontaneous English. Fluency, Diction எல்லாமே அவர் தொழிலில் கூட பிரமாதமாக கை கொடுத்தது.
ஆங்கிலத்தில் லெக்சர் கொடுத்தால் இவருடைய வெக்காபுலரி, இடியம்ஸ், ப்ரேசஸ் இங்கே உள்ளவர்களை அசரச் செய்யும்.
அப்பேர்ப்பட்ட மனிதர் அமெரிக்காவில் அந்த பெரிய பிரபலமான நகரில் தன் ஐந்து வயது பேரனுடன் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு போயிருக்கிறார்.
பேரக்குழந்தை உடன் அங்கே விளையாட ஆரம்பித்திருக்கிறான்.
வீட்டிற்கு வேண்டிய சில பொருட்கள் பற்றி அங்கு இருந்த அமெரிக்க சேல்ஸ்வுமனிடம் விளக்கும் பொருட்டு தாத்தா உரையாடல் செய்திருக்கிறார். அவள் புருவத்தை தூக்கி விட்டு இவர் பேச்சின் பொருள் புரியவில்லை என்பதை உணர்த்த முயன்றிருக்கிறாள்.
உடன் இந்த தமிழ் பெரியவர் தன் இந்திய ஆங்கிலத்தை மெதுவான கதியில் அழுத்தம் கொடுத்து பேசிப்பார்த்திருக்கிறார். அவள் உடனே மேனேஜரை அழைத்து இவருடைய மொழி சிக்கலாயிருப்பதை கவனப்படுத்த, மேனேஜர் அதிக முயற்சியெடுத்து இவரிடம் விவரம் கேட்டுப்பார்த்திருக்கிறார். அவர் பேசும் ஆங்கிலம் இந்த பெரியவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
விளையாட்டில் கவனமாய் இருந்த பேரன் உடனே தாத்தாவை நோக்கி வந்து தன் கவனத்தை அந்த சம்பவத்தில் குவித்திருக்கிறான். பேரனுக்கு புரிந்து விட்டது.
தாத்தாவைப் பார்த்து உரத்த குரலில் “Old man, you sit here” என்று ஒரு சோஃபாவைக்காட்டியிருக்கிறான். “Put your finger on your mouth.”
அவன் அமெரிக்க ஆங்கிலத்தில் சரளமாக மேனேஜரிடமும், சேல்ஸ்வுமனிடம் பேசியிருக்கிறான். என்னென்ன வேண்டும் என்பதை பிரமாதமாக சொல்லி ஒரு பத்து நிமிடத்தில் பர்ச்சேஸ் செய்திருக்கிறான்.
” Old man, let’s go now. May be, you are a big shot in your country. But mind you, here you are a zero. Poor old man.”
தாத்தாவை இங்கே தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்று பேரன் அறிவுறுத்தியிருக்கிறான். In American accent with American Slang.
Living American spoken English பற்றிய பதைபதைப்பு பெரியவருக்கு இந்தியா வந்த பின்னும் இன்னும் நீங்கவில்லை.பேரனைப் பற்றிய பெருமையும் புளகாங்கிதமும் கூட.
ஒரு பிராந்திய மொழியில் பேச்சு வட்டார வழக்கில் எவ்வளவு டிவிசன்ஸ். மதுரைத் தமிழ், மெட்ராஸ் தமிழ், திருநெல்வேலி தமிழ், நாகர்கோவில் தமிழ், இலங்கைத்தமிழ்.
ஆங்கிலம் universal language. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா … வட்டார வழக்கு. Slang. Living spoken English.
(கீழே உள்ள லிங்க் அவசியம் க்ளிக் செய்து படிக்கவும்.)

Sep 17, 2018

Out stealing horses – Per Petterson


பதினைந்து வயது பையன், அடுத்து அவனே அறுபத்து ஏழு வயதாகும்போது என இரண்டு கட்டங்கள். இதை வைத்து பெர் பெட்டர்சன் எழுதியுள்ள நார்வேஜியன் நாவல். "Out  stealing horses"

If I just concentrate I can walk into memory's store and find the right shelf with the right film and disappear into it....
அறுபத்தேழு வயதில் தனிமை. மௌனம். மரணத்தை எதிர்நோக்கிய நிலை. Trond craves Isolation.
அப்பா. Invariably, a father is a mystery to his son.
தன் நண்பன் ஜானுடைய அம்மாவை காதல் முத்தமிடும் தன் அப்பா.
“But that’s life. That’s what you learn from; When things happen.
Especially at your age. You just have to take it in and remember to think afterwards and
not forget and never grow bitter.”
இரண்டாம் உலகப்போரில் மறைமுகமான ஜெர்மன் எதிர்ப்பாளராக அப்பாவை அடையாளம் காணும் ட்ரோண்ட் எனும் பதினைந்து வயது சிறுவன். வாழ்ந்து முடித்த பின் அறுபத்து ஏழு வயதில் நனவோடையில் நீந்துகிறான்.
இயற்கையோடு ஒன்றி விடும் நாவல் களம்.
சிறுவர்கள் ட்ரோண்டும் ஜானும் காட்டில் காணும் சாகச அனுபவங்கள்.
ஜானின் ரெட்டை சகோதரர்கள்.
ட்ரோண்ட் தாயோடு பிறந்த மற்றொரு ரெட்டையர்கள்.
ஜானின் ரெட்டை சகோதரர்களில் ஒருவனான லார்ஸ் மற்றவனை பத்து வயது பாலகனாக இருக்கும்போது விளையாட்டாக சுட நேர்ந்து விடுகிறது.
தன் தாயோடு பிறந்த ரெட்டையர்களில் ஒருவர் ஜெர்மனியின் மறைமுக எதிர்ப்பாளனாக போலீஸால் சுடப்பட்டு இறக்கிறார்.
தன் அப்பாவைப் போலவே ட்ரோண்ட் தன் மகளுக்கே தெரியாமல் தனிமையில் மறைந்து வாழ ஆசைப்படுவது.
பதினைந்தாவது வயதில் ஒரு பாலகனாக தான் கண்ட லார்ஸ் இப்போது ட்ரோண்டின் அறுபத்தேழு வயதில் அண்டை வீட்டுக்காரனாக பார்க்க நேர்வது.
ஆற்றில் மரக்கட்டைகளை போடும் அப்பாவின் கடும் உழைப்பு பலனற்று போவது. அதில் கிடைக்கும் சொற்ப பணம்.
குடும்பத்தலைவன் இனி வரமாட்டான். A planned betrayal. 

காற்றின் வேகத்தில் வளைந்து கீழ் சாயும் பைன் மரங்கள் உடைந்து வீழ்ந்து விடுவதில்லை. மீண்டும் நிமிர்ந்து நிற்கின்றன.

கைக்கு கிடைத்த அந்த சின்ன தொகையை மகனுக்கு செலவழிக்கும் தாய். மகனோடு கை கோர்த்து நடக்கிறாள். கழுத்துப்புருஷன் இல்லையென்றால் வவுத்துப் புருஷன் தானே ஒரு பெண்ணுக்கு. நாவல் மீண்டும் பதினைந்து வயது சிறுவனின் வாழ்வின் வினோதமான இந்த நிகழ்வுடன் முடிந்து விடுகிறது. வாழ்வின் கதை எங்கே தான் நிறைவுறும்.
We do decide for ourselves when it will hurt.

Bittersweet memories.

……………….

Sep 13, 2018

மு.க. நெஞ்சுக்கு நீதியில்


ஏ.கோவிந்தசாமி அண்ணா அமைச்சரவையில் அமைச்சராயிருந்தவர். இவருக்கு ஒரு தனித்துவம் உண்டு. என்னவென்றால் தி.மு.கவின் முதல் எம்.எல்.ஏ.
1957ல் தான் தி.மு.க முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் 1952ல் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் கோவிந்தசாமி. அவர் வேட்பாளராய் இருந்த போது தி.மு.க ஆதரவு தந்தது. இந்த இணக்கம் காரணமாக அவர் எம்.எல்.ஏயாக இருக்கும் போது தி.மு.கவில் இணைந்தார். இவருடைய மகன் ஏ.ஜி.சம்பத். இப்போது விழுப்புரம் பொன்முடியால் கட்டம் கட்டப்பட்டு இருக்கிறார். மு.க.அழகிரி ஆதரவாளராகி விட்டார்?
எஸ்.டி. சோமசுந்தரம் என் மாமனாரின் மிகச்சிறந்த நண்பர். என் மனைவியின் மூத்த சகோதரியின் திருமணத்தில் “ சந்திரனே மாப்பிள்ளை போல இருக்கிறார். அவர் மகளுக்கு திருமணம் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது” என்று பேசினார்.
என் மாமனார் இறந்த பிறகு சில வருடங்களுக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த ஒரு அதிமுக காரர் ஒருவர் சென்னையில் எஸ்.டி.எஸ்ஸிடம் “ நான் எஸ்.எம்.டி.சந்திரனின் உறவினர். அவருக்கு கஸின்.” என்று சொன்ன போது எஸ்.டி.எஸ். “ சந்திரன் எனக்கு மகன் போல. இறந்துட்டானே.” என்று கண்ணீர் விட்டு அழுது விட்டாராம்.
இங்கே நான் சொல்ல வருவது வேறு.
குங்குமத்தில் நெஞ்சுக்கு நீதி தொடராக வெளியிட்ட போது படித்திருக்கிறேன்.
அதில் இரு அரசியல் நிகழ்வுகள் என்னால் மறக்க இயலாது.
அண்ணா மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரான மூன்றாவது மாதம் நடந்த விஷயம்.
என் நினைவில் இருந்து எடுத்து எழுதுகிறேன். நெஞ்சுக்கு நீதி முப்பத்தைந்து வருடம் முன்னால் படித்ததை என் ஞாபகத்தில் இருந்து அந்த சம்பவங்களை சுட்டுகிறேன்.
விவசாய அமைச்சர் ஏ.கோவிந்தசாமி மரணப்படுக்கையில் இருந்த போது முதல்வர் கருணாநிதியிடம் “ நான் இறந்த பின் என்னுடைய ஜாதியில் ஒருவரை அமைச்சராக்க வேண்டுமே என்று எண்ணி பண்ருட்டி ராமச்சந்திரனை மந்திரியாக்கி விடாதீர்கள்” என்று சொன்னாராம்.
கருணாநிதி சொல்கிறார்.” ஏ.ஜி. மரணப்படுக்கையில் இருக்கும்போது அப்படி வலியுறுத்தி சொல்லியும் கேளாமல் பண்ருட்டியை அமைச்சராக்கினேன். அது என் பெரிய தவறு பின்னால் தெரிந்து கொண்டேன்.”
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த போது நிகழ்ந்த விறுவிறுப்பான விஷயங்கள் பல.
பொதுவாக அன்று தமிழக பெண்கள் கருணாநிதியை மிகவும் வெறுத்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு விலக்கப்பட்ட இரண்டாம் நாள். நான் தெருவில் நடந்து வரும்போது  தண்ணீர் பிடிக்க குழாயடியில் பெண்கள் பத்து பேருக்கும் மேல் கூடியிருந்தனர். ஒரு பெண் சொன்னார் : கருணாநிதி கொலையெல்லாம் செய்வானாமில்ல. பெண்களோட கற்ப கெடுத்து விட்டுருவானாம்..”
அங்கிருந்த பெண்கள் அனைவருமே முகம் சுளித்து அதை ஆமோதிப்பது போல தலையாட்டினார்கள்.
ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு பதம்.
எம்.ஜி.ஆர் நல்லவரு. கருணாநிதி கெட்ட ஆளு.
அன்றைய தமிழக பெண்களின் பொதுப்புத்தி இது.
பின் புத்தி?
அரசியல் மேல் மட்டத்தில் அன்று நடந்த ஒரு எதிர் பாரா திருப்பம் நிறைந்த விஷயம் பற்றி நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு இரண்டாம் முறையாக வந்திருந்த போது குங்குமத்தில் எழுதியதில் நான் படித்ததில் ஞாபக அடுக்கில் இருந்து இங்கே கீழே.
எஸ்.டி. சோமசுந்தரம் அப்போது பாராளுமன்ற உறுப்பினர். கலைஞரிடம் வந்து எம்.ஜி.ஆர் துரோகம் பற்றி வேதனை தெரிவித்திருக்கிறார். துரோகி எம்.ஜி.ஆருக்கு அ ஆதரவாக மேதை மதியழகன் செயல்படுவதைப்பற்றிய தன் தீவிர கோபத்தையும், கடும் அதிருப்தியையும் கருணாநிதியிடம் தெரிவித்திருக்கிறார்.
மதியழகனை நேரில் போய் பார்த்து நாலு வார்த்தை நறுக்கு தெறித்தாற் போல் கேட்கப்போவதாக எஸ்.டி.எஸ். சொல்லியிருக்கிறார்.
கருணாநிதி உடனே,உடனே ‘மதியழகனை சந்திக்க நீங்கள் போகவே வேண்டாம்” என்று தடுத்திருக்கிறார். எஸ்.டி.எஸ் “ நீங்க சும்மா இருங்க. நான் அந்த மனுசனை நேரில் பார்த்து திட்டாமல் இருக்க முடியாது.” என்றாராம்.
மதியழகனை எஸ்.டி.எஸ் சந்தித்த பின் அந்த விசித்திரம் நிகழ்ந்திருக்கிறது. அ.தி.மு.வில் சேர்ந்த முதல் எம்.பி எஸ்.டி.சோம சுந்தரம் என்று மறு நாள் பத்திரிக்கைகளில் செய்தி.
கருணாநிதி இந்த இடத்தில் மதியழகனின் ஆளுமை பற்றி சொல்வது சுவையானது.
மேதை மதியழகனிடம் ஒரு அற்புதமான திறமை உண்டு. அது கான்வர்சேசனில் எவரையும் கன்வின்ஸ் செய்து விடுவார். அவர் சொல்வதை பிறர் ஆமோதித்து ஏற்றுக்கொள்ளும்படி அவருடைய உரையாடலின் வீச்சு இருக்கும். அவர் பேசுவதை மறுத்து பேசவே முடியாது என்று கழகத்தலைவர் குறிப்பிடுகிறார்.
இவர் சொன்னதை மீறி மதியழகனை சந்தித்த சோமுவை இப்படி எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்த முதல் பாராளுமன்ற உறுப்பினராக்கி விட்டார் அந்த மேதை.


Sep 10, 2018

அமேசான் கிண்டிலில் R.P.ராஜநாயஹம் நூல் “தூறலாய் சாரல்”


அமேசான் கிண்டிலில் என் நூல் “தூறலாய் சாரல்”.
இதை சாத்தியப்படுத்திய திருஞான சம்பந்தமும், பெங்களூர் மகாலிங்கமும் என் நன்றிக்குரியவர்கள்.
அன்பு என்னை அசௌகரியப்படுத்தி உடைந்து கண் கலங்கச்செய்து விடும்.
நான் கேட்காமலே தாமாகவே முன் வந்து இதை செய்த திருஞான சம்பந்தமும், பெங்களூர் மகாலிங்கமும் என்னை கலங்கச் செய்து விட்டார்கள். எழுத்தாளர் பாவண்ணனின் அனுசரனையும்.
என்ன ஒரு வாத்சல்யம்.
அமேசான் கிண்டிலில் என் நூல் “ தூறலாய சாரல்”
லிங்க்
https://www.amazon.in/%E0%AE%A4%E0%AF%82%E0%A…/…/ref=sr_1_1…



Sep 8, 2018

வள்ளியம்மாவும் வேலம்மாவும்


செய்துங்கநல்லூர்.
ஊரில் முதல் காரை வீடு அது தான்.
மாமியார் வீட்டில் இருக்கும் வேலம்மா இளைய மகனின் மனைவி.
வாசலில் “அம்மா, தாயே, புண்ணியவதி. சோறு போடுங்கம்மா”
வேலம்மா “ இருப்பா. இந்தா வர்றேன்.”
சோறு எடுத்துக்கொண்டு போய் பிச்சைக்காரனுக்கு போடுகிறாள்.

 காதில் தங்க பாம்படம் நகை ஆட, மாமியார் வள்ளியம்மா “ ஏட்டி, உங்கப்பன் வீட்டு சோறா? என்னட்டி நெனச்சிக்கிட்டிருக்க? பெரிய தர்ம புத்திரன் மக..”
இன்னொரு நாள் பிச்சைக்காரன் வருகிறான். ”அம்மா தாயே.”
வேலம்மா வாளாவிருக்கிறாள். Once bitten, twice shy.

“ பிச்சை போடும்மா மகராசி.”
வேலம்மா “ ஒன்னும் இல்லப்பா. போ.”
மாமியார் கையில் பேரக்குழந்தை துரை. ஒரு வயது.
“ ஏல, கொஞ்சம் நில்லு.”

வாசலுக்கு குழந்தையோடு வந்த வள்ளியம்மா  தன் மருமகள் வேலம்மாவை கை காட்டி பிச்சைக்காரனிடம் “ ஏம்ல.. இவ வாழ்ந்தாளா. இல்ல வாழ்ந்து கெட்டாளா. நில்லு. அவ சொன்னான்னு போயிடாத. இவ வாழ்ந்தாளா? வாழ்ந்து கெட்டாளா? வீடான வீட்டுல ஒன்னுமே இல்லன்றாளே, பாதகத்தி..”

உள்ளே போய் சோறு, ஆட்டுக்கறியோடு குழம்பு சட்டி நிறைய எடுத்து வந்து பிச்சைக்காரனின் திருவோட்டில் வழிய, வழிய போடுகிறாள்.

வெராண்டாவில் அமர்ந்திருக்கும் மாமனார் செய்துங்க நல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளை குறும்பு புன்னகை புரிகிறார்.

“ ஏல..என்னல. கோட்டிக்காரப்பயலெ. மாமியாள கோவமூட்டி வேடிக்க பாக்கத் தான் நெதம் வருவியோல்ல.” என்று பிச்சைக்காரனைப் பார்த்து பொய்க்கோபத்துடன் கண்ணடிக்கிறார்.
மாமியார் வள்ளியம்மா என் ஆச்சி – அப்பாவின் அம்மா.
மாமனார் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளை என் தாத்தா. அப்பாவின் அப்பா.
மருமகள் வேலம்மா என்னை பெற்ற அம்மா.
ஆச்சி கையில் இருந்த ஒரு வயது குழந்தை துரை நான் தான்.










Sep 5, 2018

ஆல்பர் காம்யுவின் கடைசி நாவல் “முதல் மனிதன்”


’When you refuse to accept anything but the best, often you will get it’ ங்கறது உண்மை தான்.


"I know nothing more stupid than to die in an automobile accident." – Albert Camus.

வாகன விபத்தில் மரணம் என்பதன் அபத்தம் பற்றி உள்ளுணர்வு தான் ஆல்பெர் காம்யுவிற்கு சொன்னதோ? வாழ்க்கையின் அர்த்தமின்மை பற்றி அதிகம் சிந்தித்த ஒரு மனதில் இப்படியும் ஒரு எண்ணம்.

அந்நியன் நாவலில் காம்யு சொல்வது போல
‘ வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருப்பதற்கு லாயக்கானதில்லை. முப்பதில் இறப்பதும் ஒன்று தான். எழுபதில் இறப்பதும் ஒன்று தான்.’
46 வயது ஆல்பர் காம்யு அந்த கார் விபத்தில் அகால மரணம் அடைந்தது தற்செயல் அல்ல. ரஷ்ய ஒற்றர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியென்று சொல்லப்படுவதுண்டு. விபத்து நடந்த இடத்தில் அவருடைய முடிக்கப்படாத நாவலின் கையெழுத்துப்பிரதியும், ஒரு ட்ரெயின் டிக்கட்டும் கிடைத்தது.ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ, நீட்ஷேயின் ’ஆனந்த அறிவியல்’ புத்தகமும் கூட.
முடிக்கப்படாத அந்த நாவல் “ முதல் மனிதன்” அவருடைய பால்ய பருவத்தைப்பற்றியும், அவருடைய தந்தையைப்பற்றிய காம்யுவின் தேடல் குறித்தும் பேசிய சுயசரிதைத்தன்மை கொண்டது. அவருடைய மற்ற படைப்புகளில் இருந்து வித்தியாசமான தன்மை ’முதல் மனிதன்’ கொண்டிருந்தது.

ஒரு கலைஞனின் குறைப்படைப்பு தான் எத்தனை சோகமானது. கீட்ஸின் ஹைப்பீரியன், லார்ட் பைரனின் டான் ஹுவான்..
Perhaps, Life is a fear and a dream.. என்ற ஜோசப் கான்ராடின் வார்த்தைகள்.
Camus was an obsessive womanizer.
சார்த்ர் மிகவும் உயர்வாய் சொன்ன காம்யுவின் ”வீழ்ச்சி” நாவல்.
வீழ்ச்சி க்லாமென்ஸ் சொல்வான்: " தூள் பிகரை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது நான் ஐன்ஸ்டீன் உடன் பத்து சந்திப்பை நான் ஒதுக்கியிருப்பேன். அந்த பெண்ணுடன் பத்து சந்திப்பிற்கு அப்புறம் தான் ஐன்ஸ்டீன் பற்றியோ அல்லது ஒரு நல்ல முக்கியமான புத்தகத்தையோ விரும்பி எண்ணுவேன்.”
பாரிஸில் வசதியான, மெத்தப்படித்தவர்கள் குடும்பத்தில், ஏராளமான புத்தகங்களுக்கிடையில் வளர்ந்தவர் ழான் பால் சார்த்ர். ஆனால் அல்ஜீரியாவில் ஒரு மோசமான வறுமை சூழ்ந்த பகுதியில் படிப்பறிவற்றவர்கள் மத்தியில் பிறந்து வளர்ந்தவர் ஆல்பர் காம்யு.
ஆல்பர் காம்யுவுக்கு 46 வயதில் இந்த நாவல் குறித்து பெரிய கனவும், உறுதியும் கூட இருந்திருக்கிறது. இது தான் தன்னுடைய ஆகச்சிறந்த படைப்பாக இருக்கப்போகிறது என்பதாக.
காம்யு மறைந்து 34 வருடங்களுக்குப் பின் அவர் மகள் இந்த முடிக்கப்படாத நாவலை வெளிக்கொண்டு வந்தார்.
அவர் இறந்த சமயத்தில் அவருடைய அல்ஜீரிய சிக்கல் பற்றிய அபிப்ராயங்கள் பற்றி வலது சாரி, இடதுசாரி அறிவுஜீவிகள் மிகுந்த கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள். ஆனால் பிற்காலம் ( 1980-1985) காம்யு சொன்ன நியாங்களை புரிந்து கொண்டதாக ஆகியிருந்தது.
Algiers Slum Kid எப்படி 43 வயதில் நோபல் பரிசு வாங்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்க முடிந்தது?
ஆல்பர் காம்யு தன் பால்யத்தில், பள்ளிப்பருவத்தில் எதிர்கொண்ட வறுமை அளவிட முடியவே இல்லை.
ஒரு வயதில் தகப்பனை பறி கொடுத்த குழந்தை. அல்ஜீரியாவில் பிரஞ்சு குடியேறியான தகப்பன் பிரான்ஸைப் பார்த்ததேயில்லை. முதலாம் உலகப்போரில் சிப்பாயாக அதைப்பார்த்தார். அதைப் பார்த்ததும் கொல்லப்பட்டார்.
அப்பாவின் சமாதியில் முதல் முறையாக நாற்பது வயதில் காம்யு நிற்கும்போது அவர் இருபத்தொன்பது வயதில் இறந்திருப்பதை அறியும்போது தன்னை விட இளையவரான தந்தை முன் நிற்பதாக உணர்கிறார்.
அவருடைய அம்மா காது கேட்பதில் பிரச்னை உள்ளவர். கல்வியறிவில்லாதவர். அம்மாவும் இவரும் பாட்டியின் கட்டுப்பாட்டில். அம்மா வேலைக்காரியாக.
இந்த புத்தகத்தை ஒரு போதும் படிக்க இயலாத தன் தாய் ‘விதவை காம்யு’வுக்கு தான் சமர்ப்பித்திருக்கிறார் மகன்.
தன்னுடைய மௌனங்களில் ஒன்றே ஒன்றின் மூலமாகக்கூட தாயால் சொல்ல முடிந்ததை ஆயிரக்கணக்கான சொற்களின் மூலமாகக் கூடத் தேடிக் கண்டு பிடிக்க முடியாத மகன் காம்யு.
இங்கே உழைத்தால் தான் சாப்பாடு. Poverty is a fortress without drawbridges.
அல்ஜீரியாவில் பிரஞ்சுக்குடியேறிகளும் அராபியர்களும் இணைந்து வாழ நிர்ப்பந்த நிலை.
குடியேறிகளான முன்னோர்கள் பிரான்ஸில் இருந்து 1848ல் பயணப்பட்டு அல்ஜீரியாவின் போன் துறைமுகத்தில் இறங்கி அனுபவிக்கும் துயரங்களை காம்யுவால் சொல்லில் வடிக்க முடிந்திருக்கிறது.
அந்தப்பிரதேசத்தில் வேலை என்பது ஒரு உயர்ந்த பண்பாக இல்லாமல் சாவுக்கு இட்டுச் சென்ற அத்தியாவசியத்தேவையாகவே இருந்திருக்கிறது.
When the soul suffers too much, it develops a taste for misfortune.
சொல்லொணா துயரத்துடன் தான் காம்யுவின் தாய் தன் பிள்ளையிடம் சுட்டெரிக்கும் வெய்யிலிலும் பரிவு காட்டுகிறாள். மாமா எர்னஸ்ட் கூட வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை தன் மருகனுக்கு காட்டுகிறார்.கறாரும் கண்டிப்புமான பாட்டி, ’தெய்வத்துளி’ போன்ற அவனுடைய அந்த அற்புதமான ஆசிரியர் பெர்னார். சிறுவன் ஆல்பர் காம்யு அவன் நண்பன் பியர், நூலகம், கால் பந்து விளையாட்டு போன்ற உன்னதங்கள்.
For all his life it could be kindness and love that made him cry, never pain or persecution.
இந்த ’முதல் மனிதன்’ கியான்னி அமெலியோ என்ற இத்தாலிய இயக்குனரின் நெறியாள்கையில் இட்டாலியன் ஃப்ரன்ச் திரைப்படமாக 2011ல் வந்திருக்கிறது.

பின் இணைப்பாக உள்ள குறிப்புகளை படிக்கும்போது சோகம் கவ்வுகிறது. ஆல்பர் காம்யுவுக்கு பெரிய திட்டம் இருந்திருக்கிறது.
'ஒடுக்குமுறையை எதிர்த்துப்போராடுவதில் தான் எழுத்தாளனின் மேன்மை அடங்கியுள்ளது. அதாவது தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையை ஏற்றுக்கொள்வதில்' என்று நாவலுக்கான குறிப்புகளில் ஒன்றில் காம்யு சொல்கிறார்.
ஏனென்றால் பாசிசவாதிகள் தங்களைப் போலவே சிந்திப்பது தான், தாங்கள் சரியென்று நினைப்பது மட்டும் தான் எல்லோருக்குமான ’சுதந்திரம்’ என்று நினைக்கிறார்கள்.
வாழ்க்கையின் மீதான நேசம் மறைந்து விடும்போது எவ்வித உள்ளர்த்தமும் ஆறுதல் அளிக்காது என்று காம்யுவின் டைரி சொல்கிறது.

தன்னுடைய வாழ்க்கைக்கான் காரண- காரியரீதியான நியாயங்களைத் தனக்கு கொடுத்திருந்த அதே சக்தி, அதே சோர்வில்லாத தாராளத்துடன் தான் முதுமையடைவதற்கும், கிளர்ச்சி செய்யாமல் சாவதற்கான நியாயத்தையும் அளிக்கும் என்பது ஆல்பர் காம்யுவின் குருட்டு நம்பிக்கை தான்?


2013ல் காம்யு நூற்றாண்டில் பிரஞ்சு மொழியிலிருந்து நேரடியாக வெ.ஸ்ரீராம் தமிழில் மொழிபெயர்த்து க்ரியா வெளியீடாக ’முதல் மனிதன்’ பிரசுரிக்கப்பட்டுள்ளது.

https://rprajanayahem.blogspot.com/2017/08/blog-post_19.html