Share

Sep 5, 2018

ஆல்பர் காம்யுவின் கடைசி நாவல் “முதல் மனிதன்”


’When you refuse to accept anything but the best, often you will get it’ ங்கறது உண்மை தான்.


"I know nothing more stupid than to die in an automobile accident." – Albert Camus.

வாகன விபத்தில் மரணம் என்பதன் அபத்தம் பற்றி உள்ளுணர்வு தான் ஆல்பெர் காம்யுவிற்கு சொன்னதோ? வாழ்க்கையின் அர்த்தமின்மை பற்றி அதிகம் சிந்தித்த ஒரு மனதில் இப்படியும் ஒரு எண்ணம்.

அந்நியன் நாவலில் காம்யு சொல்வது போல
‘ வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இருப்பதற்கு லாயக்கானதில்லை. முப்பதில் இறப்பதும் ஒன்று தான். எழுபதில் இறப்பதும் ஒன்று தான்.’
46 வயது ஆல்பர் காம்யு அந்த கார் விபத்தில் அகால மரணம் அடைந்தது தற்செயல் அல்ல. ரஷ்ய ஒற்றர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியென்று சொல்லப்படுவதுண்டு. விபத்து நடந்த இடத்தில் அவருடைய முடிக்கப்படாத நாவலின் கையெழுத்துப்பிரதியும், ஒரு ட்ரெயின் டிக்கட்டும் கிடைத்தது.ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ, நீட்ஷேயின் ’ஆனந்த அறிவியல்’ புத்தகமும் கூட.
முடிக்கப்படாத அந்த நாவல் “ முதல் மனிதன்” அவருடைய பால்ய பருவத்தைப்பற்றியும், அவருடைய தந்தையைப்பற்றிய காம்யுவின் தேடல் குறித்தும் பேசிய சுயசரிதைத்தன்மை கொண்டது. அவருடைய மற்ற படைப்புகளில் இருந்து வித்தியாசமான தன்மை ’முதல் மனிதன்’ கொண்டிருந்தது.

ஒரு கலைஞனின் குறைப்படைப்பு தான் எத்தனை சோகமானது. கீட்ஸின் ஹைப்பீரியன், லார்ட் பைரனின் டான் ஹுவான்..
Perhaps, Life is a fear and a dream.. என்ற ஜோசப் கான்ராடின் வார்த்தைகள்.
Camus was an obsessive womanizer.
சார்த்ர் மிகவும் உயர்வாய் சொன்ன காம்யுவின் ”வீழ்ச்சி” நாவல்.
வீழ்ச்சி க்லாமென்ஸ் சொல்வான்: " தூள் பிகரை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் போது நான் ஐன்ஸ்டீன் உடன் பத்து சந்திப்பை நான் ஒதுக்கியிருப்பேன். அந்த பெண்ணுடன் பத்து சந்திப்பிற்கு அப்புறம் தான் ஐன்ஸ்டீன் பற்றியோ அல்லது ஒரு நல்ல முக்கியமான புத்தகத்தையோ விரும்பி எண்ணுவேன்.”
பாரிஸில் வசதியான, மெத்தப்படித்தவர்கள் குடும்பத்தில், ஏராளமான புத்தகங்களுக்கிடையில் வளர்ந்தவர் ழான் பால் சார்த்ர். ஆனால் அல்ஜீரியாவில் ஒரு மோசமான வறுமை சூழ்ந்த பகுதியில் படிப்பறிவற்றவர்கள் மத்தியில் பிறந்து வளர்ந்தவர் ஆல்பர் காம்யு.
ஆல்பர் காம்யுவுக்கு 46 வயதில் இந்த நாவல் குறித்து பெரிய கனவும், உறுதியும் கூட இருந்திருக்கிறது. இது தான் தன்னுடைய ஆகச்சிறந்த படைப்பாக இருக்கப்போகிறது என்பதாக.
காம்யு மறைந்து 34 வருடங்களுக்குப் பின் அவர் மகள் இந்த முடிக்கப்படாத நாவலை வெளிக்கொண்டு வந்தார்.
அவர் இறந்த சமயத்தில் அவருடைய அல்ஜீரிய சிக்கல் பற்றிய அபிப்ராயங்கள் பற்றி வலது சாரி, இடதுசாரி அறிவுஜீவிகள் மிகுந்த கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள். ஆனால் பிற்காலம் ( 1980-1985) காம்யு சொன்ன நியாங்களை புரிந்து கொண்டதாக ஆகியிருந்தது.
Algiers Slum Kid எப்படி 43 வயதில் நோபல் பரிசு வாங்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்க முடிந்தது?
ஆல்பர் காம்யு தன் பால்யத்தில், பள்ளிப்பருவத்தில் எதிர்கொண்ட வறுமை அளவிட முடியவே இல்லை.
ஒரு வயதில் தகப்பனை பறி கொடுத்த குழந்தை. அல்ஜீரியாவில் பிரஞ்சு குடியேறியான தகப்பன் பிரான்ஸைப் பார்த்ததேயில்லை. முதலாம் உலகப்போரில் சிப்பாயாக அதைப்பார்த்தார். அதைப் பார்த்ததும் கொல்லப்பட்டார்.
அப்பாவின் சமாதியில் முதல் முறையாக நாற்பது வயதில் காம்யு நிற்கும்போது அவர் இருபத்தொன்பது வயதில் இறந்திருப்பதை அறியும்போது தன்னை விட இளையவரான தந்தை முன் நிற்பதாக உணர்கிறார்.
அவருடைய அம்மா காது கேட்பதில் பிரச்னை உள்ளவர். கல்வியறிவில்லாதவர். அம்மாவும் இவரும் பாட்டியின் கட்டுப்பாட்டில். அம்மா வேலைக்காரியாக.
இந்த புத்தகத்தை ஒரு போதும் படிக்க இயலாத தன் தாய் ‘விதவை காம்யு’வுக்கு தான் சமர்ப்பித்திருக்கிறார் மகன்.
தன்னுடைய மௌனங்களில் ஒன்றே ஒன்றின் மூலமாகக்கூட தாயால் சொல்ல முடிந்ததை ஆயிரக்கணக்கான சொற்களின் மூலமாகக் கூடத் தேடிக் கண்டு பிடிக்க முடியாத மகன் காம்யு.
இங்கே உழைத்தால் தான் சாப்பாடு. Poverty is a fortress without drawbridges.
அல்ஜீரியாவில் பிரஞ்சுக்குடியேறிகளும் அராபியர்களும் இணைந்து வாழ நிர்ப்பந்த நிலை.
குடியேறிகளான முன்னோர்கள் பிரான்ஸில் இருந்து 1848ல் பயணப்பட்டு அல்ஜீரியாவின் போன் துறைமுகத்தில் இறங்கி அனுபவிக்கும் துயரங்களை காம்யுவால் சொல்லில் வடிக்க முடிந்திருக்கிறது.
அந்தப்பிரதேசத்தில் வேலை என்பது ஒரு உயர்ந்த பண்பாக இல்லாமல் சாவுக்கு இட்டுச் சென்ற அத்தியாவசியத்தேவையாகவே இருந்திருக்கிறது.
When the soul suffers too much, it develops a taste for misfortune.
சொல்லொணா துயரத்துடன் தான் காம்யுவின் தாய் தன் பிள்ளையிடம் சுட்டெரிக்கும் வெய்யிலிலும் பரிவு காட்டுகிறாள். மாமா எர்னஸ்ட் கூட வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை தன் மருகனுக்கு காட்டுகிறார்.கறாரும் கண்டிப்புமான பாட்டி, ’தெய்வத்துளி’ போன்ற அவனுடைய அந்த அற்புதமான ஆசிரியர் பெர்னார். சிறுவன் ஆல்பர் காம்யு அவன் நண்பன் பியர், நூலகம், கால் பந்து விளையாட்டு போன்ற உன்னதங்கள்.
For all his life it could be kindness and love that made him cry, never pain or persecution.
இந்த ’முதல் மனிதன்’ கியான்னி அமெலியோ என்ற இத்தாலிய இயக்குனரின் நெறியாள்கையில் இட்டாலியன் ஃப்ரன்ச் திரைப்படமாக 2011ல் வந்திருக்கிறது.

பின் இணைப்பாக உள்ள குறிப்புகளை படிக்கும்போது சோகம் கவ்வுகிறது. ஆல்பர் காம்யுவுக்கு பெரிய திட்டம் இருந்திருக்கிறது.
'ஒடுக்குமுறையை எதிர்த்துப்போராடுவதில் தான் எழுத்தாளனின் மேன்மை அடங்கியுள்ளது. அதாவது தனிமைப்படுத்தப்பட்ட நிலைமையை ஏற்றுக்கொள்வதில்' என்று நாவலுக்கான குறிப்புகளில் ஒன்றில் காம்யு சொல்கிறார்.
ஏனென்றால் பாசிசவாதிகள் தங்களைப் போலவே சிந்திப்பது தான், தாங்கள் சரியென்று நினைப்பது மட்டும் தான் எல்லோருக்குமான ’சுதந்திரம்’ என்று நினைக்கிறார்கள்.
வாழ்க்கையின் மீதான நேசம் மறைந்து விடும்போது எவ்வித உள்ளர்த்தமும் ஆறுதல் அளிக்காது என்று காம்யுவின் டைரி சொல்கிறது.

தன்னுடைய வாழ்க்கைக்கான் காரண- காரியரீதியான நியாயங்களைத் தனக்கு கொடுத்திருந்த அதே சக்தி, அதே சோர்வில்லாத தாராளத்துடன் தான் முதுமையடைவதற்கும், கிளர்ச்சி செய்யாமல் சாவதற்கான நியாயத்தையும் அளிக்கும் என்பது ஆல்பர் காம்யுவின் குருட்டு நம்பிக்கை தான்?


2013ல் காம்யு நூற்றாண்டில் பிரஞ்சு மொழியிலிருந்து நேரடியாக வெ.ஸ்ரீராம் தமிழில் மொழிபெயர்த்து க்ரியா வெளியீடாக ’முதல் மனிதன்’ பிரசுரிக்கப்பட்டுள்ளது.

https://rprajanayahem.blogspot.com/2017/08/blog-post_19.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.