Share

Sep 8, 2018

வள்ளியம்மாவும் வேலம்மாவும்


செய்துங்கநல்லூர்.
ஊரில் முதல் காரை வீடு அது தான்.
மாமியார் வீட்டில் இருக்கும் வேலம்மா இளைய மகனின் மனைவி.
வாசலில் “அம்மா, தாயே, புண்ணியவதி. சோறு போடுங்கம்மா”
வேலம்மா “ இருப்பா. இந்தா வர்றேன்.”
சோறு எடுத்துக்கொண்டு போய் பிச்சைக்காரனுக்கு போடுகிறாள்.

 காதில் தங்க பாம்படம் நகை ஆட, மாமியார் வள்ளியம்மா “ ஏட்டி, உங்கப்பன் வீட்டு சோறா? என்னட்டி நெனச்சிக்கிட்டிருக்க? பெரிய தர்ம புத்திரன் மக..”
இன்னொரு நாள் பிச்சைக்காரன் வருகிறான். ”அம்மா தாயே.”
வேலம்மா வாளாவிருக்கிறாள். Once bitten, twice shy.

“ பிச்சை போடும்மா மகராசி.”
வேலம்மா “ ஒன்னும் இல்லப்பா. போ.”
மாமியார் கையில் பேரக்குழந்தை துரை. ஒரு வயது.
“ ஏல, கொஞ்சம் நில்லு.”

வாசலுக்கு குழந்தையோடு வந்த வள்ளியம்மா  தன் மருமகள் வேலம்மாவை கை காட்டி பிச்சைக்காரனிடம் “ ஏம்ல.. இவ வாழ்ந்தாளா. இல்ல வாழ்ந்து கெட்டாளா. நில்லு. அவ சொன்னான்னு போயிடாத. இவ வாழ்ந்தாளா? வாழ்ந்து கெட்டாளா? வீடான வீட்டுல ஒன்னுமே இல்லன்றாளே, பாதகத்தி..”

உள்ளே போய் சோறு, ஆட்டுக்கறியோடு குழம்பு சட்டி நிறைய எடுத்து வந்து பிச்சைக்காரனின் திருவோட்டில் வழிய, வழிய போடுகிறாள்.

வெராண்டாவில் அமர்ந்திருக்கும் மாமனார் செய்துங்க நல்லூர் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளை குறும்பு புன்னகை புரிகிறார்.

“ ஏல..என்னல. கோட்டிக்காரப்பயலெ. மாமியாள கோவமூட்டி வேடிக்க பாக்கத் தான் நெதம் வருவியோல்ல.” என்று பிச்சைக்காரனைப் பார்த்து பொய்க்கோபத்துடன் கண்ணடிக்கிறார்.
மாமியார் வள்ளியம்மா என் ஆச்சி – அப்பாவின் அம்மா.
மாமனார் சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளை என் தாத்தா. அப்பாவின் அப்பா.
மருமகள் வேலம்மா என்னை பெற்ற அம்மா.
ஆச்சி கையில் இருந்த ஒரு வயது குழந்தை துரை நான் தான்.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.