Share

Sep 13, 2018

மு.க. நெஞ்சுக்கு நீதியில்


ஏ.கோவிந்தசாமி அண்ணா அமைச்சரவையில் அமைச்சராயிருந்தவர். இவருக்கு ஒரு தனித்துவம் உண்டு. என்னவென்றால் தி.மு.கவின் முதல் எம்.எல்.ஏ.
1957ல் தான் தி.மு.க முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் 1952ல் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனவர் கோவிந்தசாமி. அவர் வேட்பாளராய் இருந்த போது தி.மு.க ஆதரவு தந்தது. இந்த இணக்கம் காரணமாக அவர் எம்.எல்.ஏயாக இருக்கும் போது தி.மு.கவில் இணைந்தார். இவருடைய மகன் ஏ.ஜி.சம்பத். இப்போது விழுப்புரம் பொன்முடியால் கட்டம் கட்டப்பட்டு இருக்கிறார். மு.க.அழகிரி ஆதரவாளராகி விட்டார்?
எஸ்.டி. சோமசுந்தரம் என் மாமனாரின் மிகச்சிறந்த நண்பர். என் மனைவியின் மூத்த சகோதரியின் திருமணத்தில் “ சந்திரனே மாப்பிள்ளை போல இருக்கிறார். அவர் மகளுக்கு திருமணம் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது” என்று பேசினார்.
என் மாமனார் இறந்த பிறகு சில வருடங்களுக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த ஒரு அதிமுக காரர் ஒருவர் சென்னையில் எஸ்.டி.எஸ்ஸிடம் “ நான் எஸ்.எம்.டி.சந்திரனின் உறவினர். அவருக்கு கஸின்.” என்று சொன்ன போது எஸ்.டி.எஸ். “ சந்திரன் எனக்கு மகன் போல. இறந்துட்டானே.” என்று கண்ணீர் விட்டு அழுது விட்டாராம்.
இங்கே நான் சொல்ல வருவது வேறு.
குங்குமத்தில் நெஞ்சுக்கு நீதி தொடராக வெளியிட்ட போது படித்திருக்கிறேன்.
அதில் இரு அரசியல் நிகழ்வுகள் என்னால் மறக்க இயலாது.
அண்ணா மறைவிற்கு பின் கருணாநிதி முதல்வரான மூன்றாவது மாதம் நடந்த விஷயம்.
என் நினைவில் இருந்து எடுத்து எழுதுகிறேன். நெஞ்சுக்கு நீதி முப்பத்தைந்து வருடம் முன்னால் படித்ததை என் ஞாபகத்தில் இருந்து அந்த சம்பவங்களை சுட்டுகிறேன்.
விவசாய அமைச்சர் ஏ.கோவிந்தசாமி மரணப்படுக்கையில் இருந்த போது முதல்வர் கருணாநிதியிடம் “ நான் இறந்த பின் என்னுடைய ஜாதியில் ஒருவரை அமைச்சராக்க வேண்டுமே என்று எண்ணி பண்ருட்டி ராமச்சந்திரனை மந்திரியாக்கி விடாதீர்கள்” என்று சொன்னாராம்.
கருணாநிதி சொல்கிறார்.” ஏ.ஜி. மரணப்படுக்கையில் இருக்கும்போது அப்படி வலியுறுத்தி சொல்லியும் கேளாமல் பண்ருட்டியை அமைச்சராக்கினேன். அது என் பெரிய தவறு பின்னால் தெரிந்து கொண்டேன்.”
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த போது நிகழ்ந்த விறுவிறுப்பான விஷயங்கள் பல.
பொதுவாக அன்று தமிழக பெண்கள் கருணாநிதியை மிகவும் வெறுத்தார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு விலக்கப்பட்ட இரண்டாம் நாள். நான் தெருவில் நடந்து வரும்போது  தண்ணீர் பிடிக்க குழாயடியில் பெண்கள் பத்து பேருக்கும் மேல் கூடியிருந்தனர். ஒரு பெண் சொன்னார் : கருணாநிதி கொலையெல்லாம் செய்வானாமில்ல. பெண்களோட கற்ப கெடுத்து விட்டுருவானாம்..”
அங்கிருந்த பெண்கள் அனைவருமே முகம் சுளித்து அதை ஆமோதிப்பது போல தலையாட்டினார்கள்.
ஒரு பான சோத்துக்கு ஒரு சோறு பதம்.
எம்.ஜி.ஆர் நல்லவரு. கருணாநிதி கெட்ட ஆளு.
அன்றைய தமிழக பெண்களின் பொதுப்புத்தி இது.
பின் புத்தி?
அரசியல் மேல் மட்டத்தில் அன்று நடந்த ஒரு எதிர் பாரா திருப்பம் நிறைந்த விஷயம் பற்றி நெஞ்சுக்கு நீதியில் கருணாநிதி பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு இரண்டாம் முறையாக வந்திருந்த போது குங்குமத்தில் எழுதியதில் நான் படித்ததில் ஞாபக அடுக்கில் இருந்து இங்கே கீழே.
எஸ்.டி. சோமசுந்தரம் அப்போது பாராளுமன்ற உறுப்பினர். கலைஞரிடம் வந்து எம்.ஜி.ஆர் துரோகம் பற்றி வேதனை தெரிவித்திருக்கிறார். துரோகி எம்.ஜி.ஆருக்கு அ ஆதரவாக மேதை மதியழகன் செயல்படுவதைப்பற்றிய தன் தீவிர கோபத்தையும், கடும் அதிருப்தியையும் கருணாநிதியிடம் தெரிவித்திருக்கிறார்.
மதியழகனை நேரில் போய் பார்த்து நாலு வார்த்தை நறுக்கு தெறித்தாற் போல் கேட்கப்போவதாக எஸ்.டி.எஸ். சொல்லியிருக்கிறார்.
கருணாநிதி உடனே,உடனே ‘மதியழகனை சந்திக்க நீங்கள் போகவே வேண்டாம்” என்று தடுத்திருக்கிறார். எஸ்.டி.எஸ் “ நீங்க சும்மா இருங்க. நான் அந்த மனுசனை நேரில் பார்த்து திட்டாமல் இருக்க முடியாது.” என்றாராம்.
மதியழகனை எஸ்.டி.எஸ் சந்தித்த பின் அந்த விசித்திரம் நிகழ்ந்திருக்கிறது. அ.தி.மு.வில் சேர்ந்த முதல் எம்.பி எஸ்.டி.சோம சுந்தரம் என்று மறு நாள் பத்திரிக்கைகளில் செய்தி.
கருணாநிதி இந்த இடத்தில் மதியழகனின் ஆளுமை பற்றி சொல்வது சுவையானது.
மேதை மதியழகனிடம் ஒரு அற்புதமான திறமை உண்டு. அது கான்வர்சேசனில் எவரையும் கன்வின்ஸ் செய்து விடுவார். அவர் சொல்வதை பிறர் ஆமோதித்து ஏற்றுக்கொள்ளும்படி அவருடைய உரையாடலின் வீச்சு இருக்கும். அவர் பேசுவதை மறுத்து பேசவே முடியாது என்று கழகத்தலைவர் குறிப்பிடுகிறார்.
இவர் சொன்னதை மீறி மதியழகனை சந்தித்த சோமுவை இப்படி எம்.ஜி.ஆர் கட்சியில் சேர்ந்த முதல் பாராளுமன்ற உறுப்பினராக்கி விட்டார் அந்த மேதை.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.