Share

Dec 31, 2017

Crisp 'News summaries'


-    அருவி
அதிதி தேவோ பவ
அதிதி என்றால் விருந்தாளி என்று அர்த்தம்.
தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள புதிய விருந்தாளி.


 தமிழ் திரையின் மசாலா சமாச்சாரங்கள் இந்த அற்புத தேவதை அதிதி பாலனை தீண்டாமல் இருக்கவேண்டுமே.
என்ன ஒரு performance!

-    ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு
சதிகாரகும்பல் ஒன்று சபையேறக்கண்டேன்.
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன்
-
கண்ணதாசன்
மீண்டும் அதிமுக இணைப்பு முயற்சி என்று தீவிரமாக மாயாஜால ஜிகினா தகிடுதத்தங்களை ரெட்ட எல கூட்டம் பிரஸ்ஸர் குக்கர்காராவோட நடத்த பி.ஜே.பியே தூபம் போடும்.


-    அறிவாளி கமல் திகட்டுவதால் ” என்னுள் மையம் கொண்ட புயல்” படிக்க பயப்படுவேன். இந்த வார விகடனில் இளையராஜா பற்றி இதயத்தால் எழுதியிருக்கிறார். படித்தேன்.


-    ரஜினி
பொறுத்தார் பூமி ஆள்வாராயிருக்கலாம் தான். பொறுமையை சோதித்தார்? 
அகழ்வாராய்ச்சி செய்து அறுத்து, அறுத்து வெறுப்பேற்றி, வறுத்து வறுத்து எடுத்தார்??

’ஆன்மீகம்’ மிக்ஸ் செய்யப்பட்ட ’அரசியல்’ என்பதிலேயே பி.ஜே.பி வாடையடிக்குதே. சரி தான். பி.ஜே.பி சவாரி செய்ய இன்னொரு குதிரை ரெடியாகுதா?


-    மாக்கள்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்  நியாண்டர்தால், தோடர்மால் ஏன் கவலைப்படவேண்டும். இருவது ரூபா நோட்டு கையில் தீர்ப்பு.




Dec 30, 2017

சரியாக ஏழாவது நாள்


சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளைக்கும் புதுக்குடியா வள்ளியம்மைக்கும் பிறந்த குழந்தைகள் ஐந்து. கடைசி மகன் குட்டி எட்டு வயதில் இறந்து விட்டான். மூத்த மகன் செல்லத்துரை இருபத்து மூன்று வயதில் நல்ல அரசு உத்தியோகத்தில் இருக்கும்போது மரணம். செல்லத்துரை பெரியப்பா பெயர் தான் எனக்கு சொந்தமானது. ’தொர’ என்று சொந்த பந்தங்கள் அழைக்க காரணமானது. கஸ்டம்ஸ அண்ட் சென்ட்ரல் எக்சைஸில் என் அப்பாவும் மாசிலாமணி பெரியப்பாவும் வேலை பார்த்து கொடி கட்டினார்கள். அத்தை சங்கரன் கோவிலில் ரத்தினம் பிள்ளை மாமாவுக்கு மனைவி.
இரண்டு ஆண்குழந்தைகளை பறிகொடுத்த சோகம் தாத்தா சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளையையும் வள்ளியம்மை ஆச்சியையும் படுத்தியெடுத்தது.
ஆச்சி இரவு விளக்கு வைக்கும் நேரம் செல்லத்துரை பெரியப்பா புகைப்படத்தின் முன் உட்கார்ந்து அழ ஆரம்பித்து விடுவாள். தாத்தாவின் கண்கள் பளபளக்கும். ஒரு நாள் விடாமல் “ என் செல்லத்துரை” என்ற ஒப்பாரி விளக்கு வைக்கும் நேரம் கேட்காமல் இராது. ஆண்டாண்டு தோறும் தன் மூத்த மகனுக்காக ஆச்சி அழுது புரண்டாள்.
தாத்தா சாவு கல்யாண சாவு. நூற்றி ஒரு வயதில் இறந்தார்.
ஆச்சி ஒரு அறையில் வெள்ளைச்சேலை கட்டி உட்கார்ந்திருந்தாள்.
என்னை ஆச்சியை போய் பாருடா என்று அம்மா சொன்னாள். நான் அந்த அறைக்குள் நுழைந்ததும் ஆச்சி தேம்பி தேம்பி அழுதாள். என்னை பார்த்து “ தாத்தா எங்கல” என்று கேட்டாள்.
நான்கு வருடங்கள் தான் ஆச்சி அதன் பின் உயிரோடு இருந்தாள்.
நல்லா நடமாடிக்கொண்டிருந்த ஆச்சி ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியப்பா வீட்டில் குளியலறையில் வழுக்கி விழுந்தாள்.
அவளை கொண்டு வந்து படுக்கையில் கிடத்த வேண்டியிருந்தது.
என் பெரியம்மாவை ஆச்சி அழைத்தாள்.
“ நான் படுக்கையில் கிடந்து உனக்கு ரொம்ப சிரமம் கொடுப்பேனோ என்று நினைத்து கவலைப்படாதே. இன்னும் ஒரு வாரம். ஒரு வாரத்தில் எழுந்து விடுவேன். இல்லையேல் நான் இருக்க மாட்டேன். போய் விடுவேன். உயிரோடு இருந்து உனக்கு சிரமம் கொடுக்கவே மாட்டேன்.”
சரியாக ஏழாவது நாள் ஆச்சி இறந்து விட்டாள்.
டெலிபதியோ என்னவோ. நான் அன்று திருச்சியில் அழுதேன். என்ன காரணம் என்றே தெரியாமல் பரிட்சை நேரத்தில் அழுதேன்.
அரையாண்டு தேர்வு முடிந்து ரயில் ஏறி கரூர் வந்து ரயில்வே ஸ்டேசனில் இருந்து வீடு வரை கண்ணீர் வடித்துக்கொண்டே வந்தேன்.
ஆச்சி காரியமெல்லாம் முடித்து வீட்டிற்கு கொஞ்ச நேரம் முன் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கரூர் வந்திருக்கிறார்கள் அப்பாவும் அம்மாவும்.

”ஆச்சி செத்துட்டாடா” என்று அப்பா சொன்னவுடன் தேம்பி தேம்பி கதறி அழுதேன்.
............................









Dec 27, 2017

அழகிய மிதிலை நகரினிலே!


ஹரநாத் ராஜா ! பானுமதி நடித்த 'அன்னை' படத்தில் அவருக்கு வளர்ப்பு மகன். தங்கை மகனை தத்து எடுத்து வளர்ப்பார். தங்க தட்டில் தான் சோறூட்டி பொத்தி பொத்தி வளர்ப்பார் படத்தில்.
சச்சு உடன் ஹரநாத் ராஜாவுக்கு ஒரு அருமையான பாடல். அழகான காரில்.
”அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிய ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள்”

’சுமைதாங்கி’யில்
எல் .விஜயலக்ஷ்மி யுடன்
'ஒ மாம்பழத்து வண்டு '

சரஸ்வதி சபதம் படத்தில் ' நாட்டிய பேரொளி 'பத்மினிக்கு ஜோடி. பரமசிவனாக.

எங்கிருந்தோ வந்தாள் படத்தில் வில்லன். சிவாஜியை குடித்து விட்டு ஹரநாத் ராஜா நிஜமாகவே நடிக்கும்போது கன்னத்தில் அறைந்து விட்டார். பாலாஜி இவரை பெண்டு கழட்டி விட்டார்.

ராஜா நடிக்க வந்த கதை.
விமான பைலட் ஆக இண்டர்வியூக்கு போவதற்காக வாணிமஹால் பஸ் ஸ்டாப்பில் நின்றிருக்கிறார். ஒரு தெலுங்கு பட ப்ரொட்யூசர் இவரை பார்த்து விட்டு தன் படத்தில் நடிக்க வைத்தார். தெலுங்கிலேயே படு பிசியாகி பின் தமிழ் படங்களிலும் நடித்தவர்.
பாண்டி பஜார் ரோகினி இண்டெர்நேஷனல் லொட்ஜில் வைத்து ஒரு நாள் சுப்ரமணிய அய்யர் என்பவர் இவர் நடந்து போகும்போது காட்டி ' இவர் யார் தெரியறதோ ? ஹரிநாத் ராஜா . ' என சுட்டினார்.
ஆர்வமாக பார்த்தேன். வசதி இல்லை இப்போது அசதியில் இருப்பது பார்த்தவுடன் தெரிந்தது. குடித்தே வீணாக போய் விட்டார்.
ஹரநாத் ராஜா போன சிறிது நேரத்தில் நான் கிளம்பினேன். பஸ் ஸ்டாப். ராஜா அங்கே பஸ்க்காக நின்று கொண்டிருந்தார். நான் அவரை மீண்டும் பார்த்தேன். தான் இன்னார் என்று எனக்கு தெரிந்து புரிந்து தான் கவனிக்கிறேன் என்பதை உணர்ந்து என்னை பார்த்தார். அதற்குள் பஸ் வந்து விட்டது . சரியான கூட்டம் பஸ் நிறைய. ஏறவும் பலரும் பெரும் முயற்சி எடுக்க ஆரம்பித்தனர்.
இவர் பின்புற வாசல் கம்பியை பிடித்து ஏற பகீரத பிரயத்தனம் செய்கிறார். நழுவி மீண்டும் முயல்கிறார் . கம்பியை பிடித்த பிடியை விடவில்லை. கண்டக்டர் ' இடமில்லைப்பா. அடுத்த வண்டியில் வாப்பா ' என்று கூப்பாடு போடுகிறார்.
கூட்டம் முண்டிக்கொண்டு இருக்கிறது. பஸ் கிளம்ப விசில் கொடுத்த கண்டக்டர் கம்பியை பிடித்திருக்கிற ராஜாவின் கையில் அடித்து ' கைய எடுப்பா . கைய எடுக்க மாட்டே ' சத்தம் போடுகிறார். ராஜா வின் பிடி தளர்ந்து தடுமாறி கடைசி படியிலிருந்த ஒற்றை காலை கீழிறக்கி தள்ளாடி தவித்து நிற்கமுடியாமல் இறங்கி நிற்கிறார். நிலைப்பட சற்று நேரமாகிறது.
'அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிய ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் .'
அந்த பாடல் அந்த கணத்தில் அங்கிருந்த கடையொன்றில் நிஜமாக ஒலித்தது.
அவர் அவமானத்துடன் என்னை ஒரு பார்வை பார்த்தார். உறுத்தும் உண்மையை காண சகியாமல் நான் நடக்க ஆரம்பித்தேன்.
அடுத்த பஸ் க்காக காத்துகொண்டிருந்தார்.
ரேடியோ பாடல் சரணம் பாடிகொண்டிருந்தது
"காவிய கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே "
அவர் அந்த பாடலை கேட்டுகொண்டே தான் அடுத்த
டவுன் பஸ்ஸை எதிர்நோக்கிக்கொண்டிருந்தார்.

.....................................................


Dec 26, 2017

ஆச்சி – அப்பாவின் அம்மா


அப்பாவின் அம்மா – என் ஆச்சிக்கு பனங்கிழங்கு என்றால் உயிர். வள்ளியம்மா என்ற பெயர் கொண்ட ஆச்சியை புதுக்குடியா என்று தான் செய்துங்கநல்லூரில் அடையாளம் சொல்வார்கள்.
பனங்கிழங்கு விற்பவனை கண்டால் காலிலுள்ள மெட்டியை கழட்டி கொடுத்து விட்டு பனங்கிழங்கு வாங்கி விடும் புதுக்குடியா.
1930,1940களில் கையில் பணம் இருந்தால் தான் வாங்கல் கொடுக்கல் என்று கிடையாது. பெரும்பாலும் பண்டமாற்று.
திருச்செந்தூரில் இருந்து வந்திருந்த ஆச்சியின் மூத்த சகோதரியின் மகன் செம்புகுட்டியை ரயில் ஏற்றி விட ஸ்டேசன் வந்த ஆச்சி. எனக்கு செம்பு குட்டி பெரியப்பா.
ஆச்சி “ எலெ செம்புகுட்டி, அக்காள நல்லா கவனிச்சிக்க. இன்னா திருச்செந்தூர் ட்ரெயின் வருதுல….” இப்படி சொல்லிக்கொண்டே பக்கத்தில் பனங்கிழங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு ஆளிடம் “யய்யா, எனக்கு கொஞ்சம் கொடேன்” என்று சௌஜன்யமாக கேட்டிருக்கிறாள். அந்த ஆளும் தான் தின்று கொண்டிருந்த பனங்கிழங்கிலே பின் பகுதியை ஒடித்து கொடுத்திருக்கிறான்.
இதை கவனித்த செம்புகுட்டி பெரியப்பா திருச்செந்தூர் போனதும் ஒரு பெரிய கூடை நிறைய பனங்கிழங்கை தன் அம்மைக்காக ஒரு ஆள் மூலம் கொடுத்து அனுப்பினாராம்.
…………………………………………….


ஒன்றாம் வகுப்பு மே மாத விடுமுறையில் ஆச்சியும் நானும் திருச்செந்தூருக்கு செய்துங்க நல்லூரில் இருந்து பஸ் பயணம். ஐயர் ஓட்டல் முன் தான் பஸ் ஏறினோம்.
பஸ் பயணம் எனக்கு சிறுவனாய் இருக்கும்போது ஒத்துக்கொள்வதில்லை. வாந்தியெடுத்தேன். ஆச்சி சேலையால் என் வாயை சுத்தம் செய்தாள்.
கொஞ்ச நேரத்தில் நான் ரொம்ப கிறங்கிப்போனேன்.
ஆச்சிக்கு பஸ் டிரைவர் மேல் கோபம் வந்து விட்டது.
கண்டக்டரிடம் சொன்னாள் “ ஏலே, அவன் என்னல வண்டி ஓட்டுதான்? இங்க பாருல.. என் பேரன் என்ன பாடு படுதான் பாரு. ஏல.. திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட்ல என் மகன் செம்புகுட்டி உங்க நெளுசல கழட்டிருவாம்ல… என் பேரனுக்கு ஏதாவது ஆச்சுன்னா பாத்துக்க..”
திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டிலே செம்புகுட்டி பெரியப்பா கடை. இறங்கவுமே குதிரை வண்டி வச்சி வீட்டுக்கு எங்கள அனுப்பினார். செம்புகுட்டியா பிள்ளை பெரியப்பா திருச்செந்தூர் சண்டியர். காதில் கடுக்கன் போட்டிருப்பார். நெற்றி திருநீறு,குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
திருச்செந்தூர் கோவிலுக்கு மறு நாள் மாலை ஆச்சி என்னை கூட்டிக்கொண்டு போனாள். “முருகா! முருகா!” என்று அதீத பரவசத்துடன் சன்னதம் வந்தது போல சாமி கும்பிட்டாள். எனக்கு பயமாக கூட இருந்தது. வேண்டுதல்களை எல்லாம் எல்லோருக்கும் கேட்கும்படியாக வாய் விட்டே சொன்னாள். தனக்கு பிடிக்காத உறவினர் ஒருவருக்கு தண்டனை வேண்டினாள் ” பவுண்டு வீட்டுக்காரன ஜெயிலுக்கு அனுப்பு முருகா! எப்பவும் எசளி பண்ணிக்கிட்டே இருக்கான்.அவன் நல்லவனே இல்ல பாத்துக்க” என்றாள்.
………………………………………






.........................................

Dec 22, 2017

Dancer Joe


மதுரை மெடிக்கல் காலேஜில் ஒரு கலகலப்பான கல்ச்சுரல் ப்ரோக்ராம். எம்.ஜி.ஆர் கலந்து கொள்ள இருந்தார் என்பது முக்கிய விஷயம். அமெரிக்கன் காலேஜையும் ஒரு ஐட்டம் செய்யச்சொல்லியிருந்தார்கள். ஆங்கில இலக்கிய முதலாமாண்டு மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
எங்கள் வகுப்பில் ஜோ மிக அற்புதமான டான்ஸர். மிகையல்ல. பெண் வேடமிட்டு ஜோ ஆடினால் காணக் கண் கோடி வேண்டும்.
அவனுடைய பேச்சில் ஆங்கிலம் ரொம்ப இயல்பாக இருக்கும். 
Fluency. Spontaneous English!

பிரபலமான இந்திப்பாடல் தம் மாரா தம் பாடலுக்கு நடனம் ஆடுவது என்று முடிவு செய்யப்பட்டது. எந்தப்பாடல் என்பதை ஜோ முடிவு செய்வது சிரமமாயில்லை. ஜீனத் அமன் ஆடி பிரபலமான அந்தப் பாடல் ஜோவுக்கு ஜுஜுபி. சும்மா அல்வா சாப்பிடுவது போல. ஜோ ஊதி தள்ளி விடுவான் என்பதால் அந்தப்பாடலில் புகை பிடித்துக்கொண்டு ஆடுகிற ஆண்களாக நான், அருண், ரவி, முபாரக் ஆகியோர் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. எங்களோடு எப்போதும் இருக்கும் மதுரைக்கல்லூரி திலகர் மருதுவும் இணைந்து கொண்டான். அமெரிக்கன் கல்லூரி மரத்தடி,முபாரக்கின் இந்தியன் சில்க் பேலஸ் மாடி, ஜோவின் வீடு என்று ரிகர்சல் பார்த்துக்கொண்டோம்.
மெடிக்கல் காலேஜ் போய் சேர்ந்தோம்.
எம்.ஜி.ஆர் வந்து விட்டார். மேடையில் ஏறும்போது படியை ஒட்டியிருந்த ஃப்ளவர் பாட் தவறி விழ இருந்தது. கீழே விழாமல் எம்.ஜி.ஆர் மின்னல் வேகத்தில் பிடித்துக்கொண்டார். உடனே மருத்துவ மாணவர்களின் கைத்தட்டல், கரகோஷம். எம்.ஜி.ஆர் அந்த அப்ளாஸை கரம் குவித்து ஏற்றுக்கொண்டார்.
மேடை மேலேயே இருந்த நாங்கள் அவரை மிக அருகில் பார்க்க வாய்த்தது.
நான் எம்.ஜி.ஆர் ரசிகன்.  கல்லூரியில் ஃப்ளிண்ட் ஹவுஸ் முன் எம்.ஜி.ஆர்  எப்படி நடனம் ஆடுவார் என்பதை கோமாளித்தனமாக ஆடிக்காட்டி என்னை கிண்டல் செய்து “இதாண்டா ஒன் எம்.ஜி.ஆர்” என்பான்.

என்னுடைய உறவினர் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் முத்து அவர்கள் எம்.ஜி.ஆரை வரவேற்றுப் பேசினார்.
எம்.ஜி.ஆர் மேடையில் ஒரு மருத்துவ மாணவரின் படிப்புச்செலவை தான் ஏற்பதாக அறிவித்தார். கரகோஷம்.
வாத்தியார் மாணவர்களுக்கு அறிவுரை செய்தார். “வளர்ச்சியில் தான் மலர்ச்சியை காண்கிறோம். மலர்ச்சியிலும் வளர்ச்சியைக் காண்கிறோம்.”
கீழே இறங்கி முதல் வரிசையில் உட்கார்ந்தார். மேடைக்கு மிக அருகில் எம்.ஜி.ஆர். கலை நிகழ்ச்சி ஆரம்பம்.
முதல் நிகழ்ச்சி அமெரிக்கன் கல்லூரி மாணவர்களின் நடனம்.
’தம் மாரா தம்’ பாடல். ஜீனத் அமன் நடனத்தில் ஜோ கலக்கு கலக்கு என்று கலக்கி விட்டான்.
மற்ற நாங்கள் ஆடினது பேருக்கு தான். ஜோ முன்னால் ஆட்டத்தில் எவனும் நிற்க முடியாது.
எம்.ஜி.ஆர் முன் சிகரெட், ஹூக்கா கஞ்சா புகை ஊதினோம் என்பது இன்று நினைக்க விந்தையாக இருக்கிறது. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா..
திலகர் மருது தம் மாரா தம் டான்ஸில் கலந்து கொண்டான். நான் ஆடுவதை என் கூடவே வந்து பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.
சிகரெட் பழக்கமெல்லாம் இப்போது எனக்கு கிடையாது. I’m a non smoker and a teetotellar. சிகரெட் வாடையே சுத்தமாக அருவருப்பாக இருக்கிறது. சிகரெட் புகையை சுவாசிக்க நேர்ந்தால் ரொம்ப சிரமமாக இருக்கிறது.
ஜோவின் நடனத்தில் பெண்மையின் நளினத்தைப் பார்த்து விட்டு பெண் தான் என எல்லோருமே நினைத்து விட்டார்கள்.
பல மருத்துவ மாணவர்கள் ஜோ ஒரு ஆண் என்று அறிந்து திகைத்துப் போனார்கள்.
என்னுடைய வகுப்புத் தோழன் என்பதற்காக சொல்லவில்லை. எங்க ஜோ மாதிரி நடனம் ஆட ஆளே கிடையாது.
…………………………..



Dec 21, 2017

அமலா


குமுதத்தில் தன் நிறைவேறாத காதல் பற்றி ரகுவரன் வெளிப்படையாக 'ஒருதலையாக அமலாவை மிகவும் காதலித்தேன்.இதை நாகார்ஜுனனிடமே சொல்லியிருக்கிறேன்.' என்று சொல்லியிருந்தார்.
https://www.youtube.com/watch?v=LVK5FMmzCto

அந்த 80களில்அமலா நிறைய பேரை பாதித்திருக்கிறார். பலருக்கும் crush இருந்திருக்கிறது. தலைமுறை தாண்டி இன்றும் இளைஞர்கள் பலரும் அமலாவின் வசீகரம் பற்றி பேசுகிறார்கள்.

நானும் அமலா புகைப்படங்கள் பல சேர்த்து வைத்திருந்திருக்
கிறேன். ஏதாவது ஒரு ஸ்டுடியோவில் அமலா புகைப்படம் பார்த்தால் அன்று உடனே வாங்கிவிடுவேன்.
நடிகைகள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் பிரமிப்பு,கிறக்கம் எல்லாம் கிடையாது.

அந்தக்கால நடிகைகளில் சாவித்திரி, தேவிகாவை பார்த்தால் ஏதோ இதமான கிளர்ச்சி மனதில் ஏற்படும். பெண்மையின் வசீகரம் மிகச்சிறப்பாக இவர்களிடம் வெளிப்பட்டிருக்கிறது.
அது போல அமலா.
அபூர்வ தேவதை!
....................................................



ஆங்கில ஆசிரியரும், கலைவாணரின் சொந்த ஊரும்


என்னுடைய ஆங்கில ஆசிரியர் ஒருவர்.
ஆலிவர் கோல்ட்ஸ்மித்தின் ”விக்கர் ஆஃப் வேக்ஃபீல்ட்,”
ஜார்ஜ் எலியட்டின் ” மில் ஆன் த ஃப்ளாஸ்” நாவல்களை பிரமாதமாக பாடமெடுத்தவர்.

என்.எஸ். கிருஷ்ணன் பெயரை விரித்துக்கூறும் போது பல முறை நிலக்கோட்டை எஸ்.கிருஷ்ணன் என்றே கூறியிருந்தார். கலைவாணர் ஊர் நிலக்கோட்டை என்றே என் மனதில் பதிந்து விட்டது. பின்னர் கலைவாணரின் ஊர் நாகர் கோவில் என்ற விஷயம் தெரிய வந்த போது அந்த ஆங்கில ஆசிரியர் ஞாபகம் வந்தது. அதன் பிறகு என்.எஸ். கிருஷ்ணனை பற்றி நினைக்கும்போதெல்லாம் அந்த ஆசிரியர் என் நினைவுக்கு வருவார்.

திருச்சியில் தில்லை நகரில் ஒரு புக் ஃபேருக்கு போயிருந்தேன். அங்கே அந்த ஆசிரியரை அவர் ஓய்வு பெற்ற பிறகு சந்திக்க நேர்ந்தது. அவர் அங்கே ஒரு ஆங்கில புத்தக ஸ்டால் போட்டிருந்தார். நான் அவருடைய முன்னாள் மாணவன் என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவருக்கு சந்தோஷம். அவருடைய ஸ்டாலில் சில ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வாங்கினேன்.
பிறகு மெதுவாக சொன்னேன். ‘சார்! உங்களிடம் எனக்கு ஒரு மறக்க முடியாத விஷயம் ஒன்று உண்டு’
”நீங்க உங்க க்ளாஸ்ல அடிக்கடி என்.எஸ்.கிருஷ்ணன் பெயரில் அவருடைய ஊர் பற்றி சொல்வீர்களே!”

ஆங்கில ஆசிரியர் அவசரமாக முகம் மலர “ ஆமாம். நிலக்கோட்டை எஸ்.கிருஷ்ணன்!” என்று பெருமையாக சொன்னார். தன் மாணவன் ஒருவன் தான் சொன்னதை ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறானே என்ற பெருமிதம்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எழுபது வயது வரை அவர் என்.எஸ்.கே  ஊர் பற்றி இப்படியே தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்.

“ சார் நீங்க நினைப்பது தவறு. கலைவாணருடைய ஊர் நாகர்கோவில்”

அவர் அவநம்பிக்கையுடன் “ நோ..நோ..அவர் நிலக்கோட்டைக்காரர் ஆச்சே”

நான் அழுத்தமாக “ இல்ல சார். நாகர் கோவில் தான் அவருடைய நேட்டிவ் ப்ளேஸ்”

”ஓ….அப்படியா.. Are you sure?”
……………………………

Dec 20, 2017

Primordial wooing


எழுபத்தஞ்சு வருசத்துக்கு முந்திய சமாச்சாரம். தியாகராஜ பாகவதரின் சிவகவி, ரஞ்சனும்,வசுந்தராதேவி(வைஜயந்திமாலாவின் தாயார்) நடித்த மங்கம்மா சபதம் படமெல்லாம் ஓடிய நேரம்.
என் அப்பாவும் பெரியப்பாவும் சிறு பையன்கள். அப்பாவின் பெரியம்மா மகன் செம்பு குட்டி இளம் வாலிபன். செம்புகுட்டியுடன் தம்பிகள் வாய்க்காலுக்கு குளிக்க போவார்கள்.
செம்புகுட்டி பெரியப்பா ’சைட்’ அடிக்க ஒரு விசித்திர முறையை கையாள்வார்.
சிறுவர்களான என் அப்பாவையும் அப்பாவின் அண்ணனையும் “ஏலே, நீங்க எதிர்த்த படித்துறையில் குளிக்கிற அந்த ரெண்டு பெரிய பொண்ணுங்க ரெண்டு பேரையும் முங்கு நீச்சல்ல போய் தொடையில கிள்ளிட்டு முங்கு நீச்சல்லயே திரும்பி வாங்க.. போங்கல.. ஏல.. திரும்பி வரும் போது முங்கு நீச்சல்லயெ வரனும்ல.. நீங்க தாம் கிள்ளுனதுன்னு அவுளுகளுக்கு தெரியக்கூடாதுலேய்..”

என் அப்பாவும் பெரியப்பாவும் முங்கு நீச்சல்ல போய் அந்த இளம் சிட்டுகளின் தொடையில் கிள்ளி விட்டு முங்கு நீச்சல்ல திரும்பி வரும் போதே இந்த பக்கம் தூரத்தில் நீரில் இருந்து செம்புகுட்டி பெரியப்பா எழுந்து அந்த பெண்களை பெருமை பொங்க பார்ப்பாராம்.
‘ எவன்டி அது, எந்த செத்த மூதி கிள்ளுனான்னு தெரியலேயே’ன்னு பொண்டுக அந்த பக்கமும் இந்த பக்கமும் தேடும்போது,
ரொம்ப தூரத்தில் நீரில் இருந்து தலையை உயர்த்தி உதறி, பெருமையாக தங்களைப் பார்த்து சிரிக்கும் செம்புக்குட்டியை பார்த்து “ ஏட்டி, கிள்ளிட்டு அவ்வளவு தூரம் போயிட்டானே ராட்சசன் செம்புகுட்டி.. முங்கு நீச்சல்லயே எப்படி அதுக்குள்ள அவ்வளவு தூரம் போயிட்டான்!” என்று மலைப்பார்களாம்.

Dec 18, 2017

RELEVANT



பாக்யராஜ் என்னை 1992ல் இண்டர்வ்யூ செய்த போது ஒரு தலைப்பு கொடுத்து ‘இதுக்கு ரிலேஷன்சிப்பா பேசுங்க’ என்றார்.
நான் “ இதுக்கு ரெலவண்ட்டாவா?’ என்றேன்.
”என்ன சொன்னீங்க.”
”ரெலவண்ட்… RELEVANT”
“ஓ! டேய் இதை குறிச்சிக்கடா.” என்று அங்கிருந்த ஒரு அசிஸ்டண்ட்டிடம் அந்த வார்த்தைக்கு என்னை ஸ்பெல்லிங் சொல்லச்சொன்னார்.
‘ ரிலேஷன் சிப்புன்னு சொல்லக்கூடாதுல்ல. இது தான் சரியான வார்த்தையா?’
ரெலவண்ட், ரெலவண்ட் என்று பலமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டார்.
’இதுக்கு ரெலவண்ட்டா பேசுங்க’
பாக்யாவிற்கு வந்த கேள்வி ஒன்றிற்கு என்னிடம் பதில் சொல்லச்சொன்னார்.
“There is no wisdom like frankness"
’அப்படின்னா என்ன அர்த்தம் ராஜநாயஹம்?’
”வெளிப்படையாக எது பற்றியும் சொல்வது தான் ஞானம்.’”
’உள்ளதை உள்ளபடியே சொல்வது தான் ஞானம்’
இது அந்த வார பாக்யா கேள்வி பதிலில் வெளியானது.

..................................

என்னுடைய ப்ளாக் பதினாறு லட்சத்து, பதினைந்தாயிரத்து இருநூற்றி ஒன்று ஹிட்ஸ் இன்று இந்த நிமிடம் வரை.https://rprajanayahem.blogspot.in/

Dec 15, 2017

’தண்ணீர் தண்ணீர்’ அருந்ததி.


கே.பாலசந்தரின் ’தண்ணீர் தண்ணீர்’ அருந்ததி.


பெரியகுளம் உஷா.

”மானத்தில மீன் இருக்க
மதுரையில நீ இருக்க
சேலத்தில நான் இருக்க
சேருவது எக்காலம் ”
தண்ணீர் தண்ணீர் படத்தில் இவர் நடித்த பாடல் காட்சி.
https://www.youtube.com/watch?v=NLBrluuwU2Q

இப்போது அருந்ததி எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? 
பெரியகுளம் எல்.ஐ.சியில் ஸ்டாப் ஆக இருந்தவர் கோபாலன். அவருடைய மகள் தான் பின்னாளில் அருந்ததி என அறியப்பட்ட உஷா.
இந்த கோபாலன் நாடக நடிகரா? 
எல்.ஐ.சி கோபாலன் மகள் அருந்ததி என்று சொல்வது தான் சரி.
.........................

......................................


கர்நாடக சங்கீதத்தை பக்தி பாடல்களோடு ஒப்பிட்டு பக்தி பாடல்கள் தான் சிறப்பானவை என்று ஒப்பிடும் மடத்தனம் எவ்வளவு அபத்தமானது.
கர்நாடக சங்கீதம் மலை என்றால் லைட் மியூசிக் பக்தி பாடல்கள் மடு. கர்நாடக சங்கீதம் கற்பூர வாசனை.
கர்நாடக சங்கீதம் ரசிக்க நல்ல பயிற்சி தேவை. பக்தி பாடல்களை சினிமா பாடல் கேட்கிற எவராயிருந்தாலும் ரசிக்க முடியும்.
மதுரை மணி ஐயர், ஜி.என். பாலசுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.டி.ராமநாதன் போன்றவர்கள் புரியாமல் இருப்பதற்கும், டி.எம்.எஸ், சீர்காழி, எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பக்தி பாடல்கள் பிடித்துப்போவதற்கும் இசை பற்றிய அறிவின்மை தான் காரணம்.
தியாகப்ரும்மம், முத்துசாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரி.
கோபாலகிருஷ்ண பாரதி, முத்துத்தாண்டவர், அருணாச்சல கவி போன்ற கர்நாடக சங்கீத சிங்கங்களை பக்தி பாடல்கள் எழுதுகிறவர்களோடு ஒப்பிட்டு பக்தி பாடல்கள் சூப்பர் ஹிட் ஆவதாக புளகாங்கிதம் காணும் புண்ணாக்குகள்.

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரர்கள் பனங்கொட்டையை கரடி முட்டை என்பார்கள்.
 ...........................................

ஒருவர் சைகையால் வலதுகை கட்டை விரலை வாயருகில் வளைத்து வைத்து மற்ற விரல்களை மடக்கி, கண்ணியமாக
“ உங்களுக்கு இந்த பழக்கம் உண்டா?” என்றார்.
பதில் : “ விரல் சூப்பரதா? சின்ன வயசிலேயே விட்டுட்டேன். எங்கம்மா கட்டை விரல்ல வேப்பெண்ண தடவினாங்க..வேப்பெண்ண தடவிக்கிட்டே இருந்தாங்க…வேற வழியே இல்லாம விரல் சூப்பரத நிறுத்திட்டேன்.”