Share

Dec 22, 2017

Dancer Joe


மதுரை மெடிக்கல் காலேஜில் ஒரு கலகலப்பான கல்ச்சுரல் ப்ரோக்ராம். எம்.ஜி.ஆர் கலந்து கொள்ள இருந்தார் என்பது முக்கிய விஷயம். அமெரிக்கன் காலேஜையும் ஒரு ஐட்டம் செய்யச்சொல்லியிருந்தார்கள். ஆங்கில இலக்கிய முதலாமாண்டு மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.
எங்கள் வகுப்பில் ஜோ மிக அற்புதமான டான்ஸர். மிகையல்ல. பெண் வேடமிட்டு ஜோ ஆடினால் காணக் கண் கோடி வேண்டும்.
அவனுடைய பேச்சில் ஆங்கிலம் ரொம்ப இயல்பாக இருக்கும். 
Fluency. Spontaneous English!

பிரபலமான இந்திப்பாடல் தம் மாரா தம் பாடலுக்கு நடனம் ஆடுவது என்று முடிவு செய்யப்பட்டது. எந்தப்பாடல் என்பதை ஜோ முடிவு செய்வது சிரமமாயில்லை. ஜீனத் அமன் ஆடி பிரபலமான அந்தப் பாடல் ஜோவுக்கு ஜுஜுபி. சும்மா அல்வா சாப்பிடுவது போல. ஜோ ஊதி தள்ளி விடுவான் என்பதால் அந்தப்பாடலில் புகை பிடித்துக்கொண்டு ஆடுகிற ஆண்களாக நான், அருண், ரவி, முபாரக் ஆகியோர் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. எங்களோடு எப்போதும் இருக்கும் மதுரைக்கல்லூரி திலகர் மருதுவும் இணைந்து கொண்டான். அமெரிக்கன் கல்லூரி மரத்தடி,முபாரக்கின் இந்தியன் சில்க் பேலஸ் மாடி, ஜோவின் வீடு என்று ரிகர்சல் பார்த்துக்கொண்டோம்.
மெடிக்கல் காலேஜ் போய் சேர்ந்தோம்.
எம்.ஜி.ஆர் வந்து விட்டார். மேடையில் ஏறும்போது படியை ஒட்டியிருந்த ஃப்ளவர் பாட் தவறி விழ இருந்தது. கீழே விழாமல் எம்.ஜி.ஆர் மின்னல் வேகத்தில் பிடித்துக்கொண்டார். உடனே மருத்துவ மாணவர்களின் கைத்தட்டல், கரகோஷம். எம்.ஜி.ஆர் அந்த அப்ளாஸை கரம் குவித்து ஏற்றுக்கொண்டார்.
மேடை மேலேயே இருந்த நாங்கள் அவரை மிக அருகில் பார்க்க வாய்த்தது.
நான் எம்.ஜி.ஆர் ரசிகன்.  கல்லூரியில் ஃப்ளிண்ட் ஹவுஸ் முன் எம்.ஜி.ஆர்  எப்படி நடனம் ஆடுவார் என்பதை கோமாளித்தனமாக ஆடிக்காட்டி என்னை கிண்டல் செய்து “இதாண்டா ஒன் எம்.ஜி.ஆர்” என்பான்.

என்னுடைய உறவினர் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் முத்து அவர்கள் எம்.ஜி.ஆரை வரவேற்றுப் பேசினார்.
எம்.ஜி.ஆர் மேடையில் ஒரு மருத்துவ மாணவரின் படிப்புச்செலவை தான் ஏற்பதாக அறிவித்தார். கரகோஷம்.
வாத்தியார் மாணவர்களுக்கு அறிவுரை செய்தார். “வளர்ச்சியில் தான் மலர்ச்சியை காண்கிறோம். மலர்ச்சியிலும் வளர்ச்சியைக் காண்கிறோம்.”
கீழே இறங்கி முதல் வரிசையில் உட்கார்ந்தார். மேடைக்கு மிக அருகில் எம்.ஜி.ஆர். கலை நிகழ்ச்சி ஆரம்பம்.
முதல் நிகழ்ச்சி அமெரிக்கன் கல்லூரி மாணவர்களின் நடனம்.
’தம் மாரா தம்’ பாடல். ஜீனத் அமன் நடனத்தில் ஜோ கலக்கு கலக்கு என்று கலக்கி விட்டான்.
மற்ற நாங்கள் ஆடினது பேருக்கு தான். ஜோ முன்னால் ஆட்டத்தில் எவனும் நிற்க முடியாது.
எம்.ஜி.ஆர் முன் சிகரெட், ஹூக்கா கஞ்சா புகை ஊதினோம் என்பது இன்று நினைக்க விந்தையாக இருக்கிறது. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா..
திலகர் மருது தம் மாரா தம் டான்ஸில் கலந்து கொண்டான். நான் ஆடுவதை என் கூடவே வந்து பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.
சிகரெட் பழக்கமெல்லாம் இப்போது எனக்கு கிடையாது. I’m a non smoker and a teetotellar. சிகரெட் வாடையே சுத்தமாக அருவருப்பாக இருக்கிறது. சிகரெட் புகையை சுவாசிக்க நேர்ந்தால் ரொம்ப சிரமமாக இருக்கிறது.
ஜோவின் நடனத்தில் பெண்மையின் நளினத்தைப் பார்த்து விட்டு பெண் தான் என எல்லோருமே நினைத்து விட்டார்கள்.
பல மருத்துவ மாணவர்கள் ஜோ ஒரு ஆண் என்று அறிந்து திகைத்துப் போனார்கள்.
என்னுடைய வகுப்புத் தோழன் என்பதற்காக சொல்லவில்லை. எங்க ஜோ மாதிரி நடனம் ஆட ஆளே கிடையாது.
…………………………..



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.