Share

Dec 21, 2017

ஆங்கில ஆசிரியரும், கலைவாணரின் சொந்த ஊரும்


என்னுடைய ஆங்கில ஆசிரியர் ஒருவர்.
ஆலிவர் கோல்ட்ஸ்மித்தின் ”விக்கர் ஆஃப் வேக்ஃபீல்ட்,”
ஜார்ஜ் எலியட்டின் ” மில் ஆன் த ஃப்ளாஸ்” நாவல்களை பிரமாதமாக பாடமெடுத்தவர்.

என்.எஸ். கிருஷ்ணன் பெயரை விரித்துக்கூறும் போது பல முறை நிலக்கோட்டை எஸ்.கிருஷ்ணன் என்றே கூறியிருந்தார். கலைவாணர் ஊர் நிலக்கோட்டை என்றே என் மனதில் பதிந்து விட்டது. பின்னர் கலைவாணரின் ஊர் நாகர் கோவில் என்ற விஷயம் தெரிய வந்த போது அந்த ஆங்கில ஆசிரியர் ஞாபகம் வந்தது. அதன் பிறகு என்.எஸ். கிருஷ்ணனை பற்றி நினைக்கும்போதெல்லாம் அந்த ஆசிரியர் என் நினைவுக்கு வருவார்.

திருச்சியில் தில்லை நகரில் ஒரு புக் ஃபேருக்கு போயிருந்தேன். அங்கே அந்த ஆசிரியரை அவர் ஓய்வு பெற்ற பிறகு சந்திக்க நேர்ந்தது. அவர் அங்கே ஒரு ஆங்கில புத்தக ஸ்டால் போட்டிருந்தார். நான் அவருடைய முன்னாள் மாணவன் என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவருக்கு சந்தோஷம். அவருடைய ஸ்டாலில் சில ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வாங்கினேன்.
பிறகு மெதுவாக சொன்னேன். ‘சார்! உங்களிடம் எனக்கு ஒரு மறக்க முடியாத விஷயம் ஒன்று உண்டு’
”நீங்க உங்க க்ளாஸ்ல அடிக்கடி என்.எஸ்.கிருஷ்ணன் பெயரில் அவருடைய ஊர் பற்றி சொல்வீர்களே!”

ஆங்கில ஆசிரியர் அவசரமாக முகம் மலர “ ஆமாம். நிலக்கோட்டை எஸ்.கிருஷ்ணன்!” என்று பெருமையாக சொன்னார். தன் மாணவன் ஒருவன் தான் சொன்னதை ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறானே என்ற பெருமிதம்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எழுபது வயது வரை அவர் என்.எஸ்.கே  ஊர் பற்றி இப்படியே தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்.

“ சார் நீங்க நினைப்பது தவறு. கலைவாணருடைய ஊர் நாகர்கோவில்”

அவர் அவநம்பிக்கையுடன் “ நோ..நோ..அவர் நிலக்கோட்டைக்காரர் ஆச்சே”

நான் அழுத்தமாக “ இல்ல சார். நாகர் கோவில் தான் அவருடைய நேட்டிவ் ப்ளேஸ்”

”ஓ….அப்படியா.. Are you sure?”
……………………………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.