Share

Dec 30, 2017

சரியாக ஏழாவது நாள்


சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளைக்கும் புதுக்குடியா வள்ளியம்மைக்கும் பிறந்த குழந்தைகள் ஐந்து. கடைசி மகன் குட்டி எட்டு வயதில் இறந்து விட்டான். மூத்த மகன் செல்லத்துரை இருபத்து மூன்று வயதில் நல்ல அரசு உத்தியோகத்தில் இருக்கும்போது மரணம். செல்லத்துரை பெரியப்பா பெயர் தான் எனக்கு சொந்தமானது. ’தொர’ என்று சொந்த பந்தங்கள் அழைக்க காரணமானது. கஸ்டம்ஸ அண்ட் சென்ட்ரல் எக்சைஸில் என் அப்பாவும் மாசிலாமணி பெரியப்பாவும் வேலை பார்த்து கொடி கட்டினார்கள். அத்தை சங்கரன் கோவிலில் ரத்தினம் பிள்ளை மாமாவுக்கு மனைவி.
இரண்டு ஆண்குழந்தைகளை பறிகொடுத்த சோகம் தாத்தா சாராயக்கடை ராஜநாயஹம் பிள்ளையையும் வள்ளியம்மை ஆச்சியையும் படுத்தியெடுத்தது.
ஆச்சி இரவு விளக்கு வைக்கும் நேரம் செல்லத்துரை பெரியப்பா புகைப்படத்தின் முன் உட்கார்ந்து அழ ஆரம்பித்து விடுவாள். தாத்தாவின் கண்கள் பளபளக்கும். ஒரு நாள் விடாமல் “ என் செல்லத்துரை” என்ற ஒப்பாரி விளக்கு வைக்கும் நேரம் கேட்காமல் இராது. ஆண்டாண்டு தோறும் தன் மூத்த மகனுக்காக ஆச்சி அழுது புரண்டாள்.
தாத்தா சாவு கல்யாண சாவு. நூற்றி ஒரு வயதில் இறந்தார்.
ஆச்சி ஒரு அறையில் வெள்ளைச்சேலை கட்டி உட்கார்ந்திருந்தாள்.
என்னை ஆச்சியை போய் பாருடா என்று அம்மா சொன்னாள். நான் அந்த அறைக்குள் நுழைந்ததும் ஆச்சி தேம்பி தேம்பி அழுதாள். என்னை பார்த்து “ தாத்தா எங்கல” என்று கேட்டாள்.
நான்கு வருடங்கள் தான் ஆச்சி அதன் பின் உயிரோடு இருந்தாள்.
நல்லா நடமாடிக்கொண்டிருந்த ஆச்சி ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியப்பா வீட்டில் குளியலறையில் வழுக்கி விழுந்தாள்.
அவளை கொண்டு வந்து படுக்கையில் கிடத்த வேண்டியிருந்தது.
என் பெரியம்மாவை ஆச்சி அழைத்தாள்.
“ நான் படுக்கையில் கிடந்து உனக்கு ரொம்ப சிரமம் கொடுப்பேனோ என்று நினைத்து கவலைப்படாதே. இன்னும் ஒரு வாரம். ஒரு வாரத்தில் எழுந்து விடுவேன். இல்லையேல் நான் இருக்க மாட்டேன். போய் விடுவேன். உயிரோடு இருந்து உனக்கு சிரமம் கொடுக்கவே மாட்டேன்.”
சரியாக ஏழாவது நாள் ஆச்சி இறந்து விட்டாள்.
டெலிபதியோ என்னவோ. நான் அன்று திருச்சியில் அழுதேன். என்ன காரணம் என்றே தெரியாமல் பரிட்சை நேரத்தில் அழுதேன்.
அரையாண்டு தேர்வு முடிந்து ரயில் ஏறி கரூர் வந்து ரயில்வே ஸ்டேசனில் இருந்து வீடு வரை கண்ணீர் வடித்துக்கொண்டே வந்தேன்.
ஆச்சி காரியமெல்லாம் முடித்து வீட்டிற்கு கொஞ்ச நேரம் முன் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கரூர் வந்திருக்கிறார்கள் அப்பாவும் அம்மாவும்.

”ஆச்சி செத்துட்டாடா” என்று அப்பா சொன்னவுடன் தேம்பி தேம்பி கதறி அழுதேன்.
............................









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.