Share

Sep 30, 2017

’டேய்’ ’வாடா போடா’

என் மூத்தமகன் கீர்த்தி  என்னை ’டேய்’ சொல்வான்.  என்னை ’டேய்’ விளிப்பில் தான் பேசுவான். வாடா, போடா..

என் தகப்பனாரையும் ’டேய்’ என்று கூப்பிட்டிருக்கிறான். அவர் அதிர்ந்து போய் விட்டார்.

என்னிடம் தன் தர்மசங்கடத்தையும், கடும் அதிருப்தியையும் கூட கீர்த்தியின் தாத்தா வெளிப்படுத்தினார்.
“ என்னடா உன் மகன் என்னை ’டேய்’ னு கூப்பிடுறான்”
’எல்லோரையுமே ”டேய்”னு தான் சொல்றான். இது என்ன பழக்கம்’
சித்தப்பா, பெரியப்பா, மாமா, வீட்டிற்கு வருகிற விருந்தாளிகள் என்று எல்லோருக்கும் “ டேய்” சொன்னா ’வாடா, போடா’ன்னா நல்லாவா இருக்கு. குழந்தைய வளக்கத்தெரியல.

கீர்த்திக்கு புத்திமதி சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானேன்.
அவனை கண்டிக்க வேண்டிய நிலை. அப்பாவாக நான் செய்ய வேண்டிய கடமை என்று பல பக்கமிருந்தும் அறிவுறுத்தப்பட்டேன்.
பாவிப்பய. பிரமிளை கூட ’டேய்’னானே.
அவனிடம் நான் புரியும்படியாக சொன்னேன். “ இனி அப்பாவை தவிர வேறு யாரையும் “ டேய்” சொல்லக்கூடாது. சரியா?”
 ” அப்பாவை மட்டும் ‘டேய்’ ’வாடா, போடா’ சொல்லு..தாத்தாவ ’டேய்’னு கூப்பிடாதடா” கெஞ்சிக்கேட்டேன்.
எல்.கே.ஜி படித்துக்கொண்டிருந்த கீர்த்தி யோசித்து தலையை ஆட்டினான்.
 மழலை வாய் மலர்ந்தான். “சரிடா”
அப்பாடா என்று நான் ஆசுவாசமாக பெருமூச்சு விட்டேன்.


என் அப்பா திருச்சி கஸ்டம்ஸில் Airport preventive Supdt of customs.

மறு நாள் அவர் யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு ஜீப்பில் ஏறும்போது வெராண்டாவில் நின்று கொண்டிருந்த கீர்த்தி அவரைப்பார்த்து சொன்னான்
“ டேய், என் பர்த்டே ட்ரஸ் பாரு”.



……………………………………………………..

புகைப்படங்கள்
1. நான் நிற்கிறேன். என் அப்பா மடியில் கீர்த்தி
2. என் அப்பாவுடன் கீர்த்தி
3. பிரமிளுடன் விளையாடும் கீர்த்தி
4. என் அப்பா
5. கீர்த்தி மடியில் அஷ்வத்



Sep 29, 2017

To be stuck within a traffic jam


காலை நேரம் பத்து மணியிருக்கும்.

ஆலப்பாக்கத்திலிருந்து ஆற்காட் ரோடு வழியாக கூத்துப்பட்டறை போக ஸ்கூட்டரில் கிளம்புகிறேன்.


சீமான், திருமாவளவன் இருவரும் விளம்பரத்திற்காக ரொம்ப செலவழிக்கிறார்கள். பெரும் பணக்காரர்கள் போல. சென்னையை இவர்களின் போஸ்டர்களும் பேனர்களும், சுவர் விளம்பரங்களும் ரொம்ப ஆக்கிரமிக்கின்றன. இருவரும் தங்கள் தலைமையை மக்கள் ஏற்க வேண்டும் என பலமாக நிர்ப்பந்திக்கிறார்கள்.

டாஸ்மாக் சரக்குகள் முழுமையாக ஏற்றப்பட்ட வேன். ஒரு இளைஞன் அடுக்கப்பட்ட அட்டைப்பெட்டிகள் இடையே நெருக்கடியான இடத்தில் விழுந்து விடுவது போல சிரமப்பட்டு தன்னை திணித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான். ஒரு ப்ரேக் போட்டால் கீழே விழுந்து ஆற்காட் ரோட் ட்ராஃபிக்கில் சட்னியாகி விடுவான். இந்த நிலையில் அவன் நல்ல தூக்கம். தலையை ஆட்டி ஆட்டி சொக்கி சொக்கி சட்டென்று விழிக்கிறான். Existential Choice.
அந்த வேன் பின்னால் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த நான் நிம்மதியிழந்து விட்ட நிலை...
அவனிடம் சிக்னலில் போக்குவரத்து நிற்க நேர்ந்த போது சற்று சத்தமாக சொன்னேன்.
 “ தூங்காதப்பா”. சட்டென்று கண் விழித்து என்னைப்பார்த்து புன்னகைத்து தலையசைக்கிறான். வேன் ஸ்ரீதேவி குப்பம் சாலையில் மெதுவாக திரும்புகிறது. கவனமாக இரு என்று சைகையில் கையசைக்கிறேன். அவன் மீண்டும் என்னைப்பார்த்து சிரிக்கிறான். ஏழையின் சிரிப்பு.

அடுத்த சிக்னலில் நிற்க நேரும்போது ஒரு ஆட்டோ வலது புற ரோட்டில் இருந்து ஆற்காட் ரோட்டில் திரும்ப வேண்டி நிற்கிறது. அதனுள்ளே ஒரு பள்ளிக்கூட குழந்தை. தன் தாயுடன். இரண்டாம் வகுப்போ மூன்றாவது வகுப்போ? பாரத மாதா மேக் அப். பள்ளியில் ஏதோ விழா போல. அந்த குழந்தையைப் பார்த்து கண்ணை அகட்டி சிரித்து என் மகிழ்ச்சியை காட்டுகிறேன். வெட்கத்துடன் என்னைப் பார்த்து வாய் அகல சிரிக்கிறது. சிக்னல் போட்டவுடன் அதைப்பார்த்து கையை ஆட்டி கட்டை விரலை உயர்த்துகிறேன். கலக்கப்போற! வெட்கத்துடன் சிரித்து தலையை ஆட்டுகிறது. 
Beads of sweat trickled down alongside the cheek–plate of my helmet.

Persona என்ற இங்க்மார் பெர்க்மன் படத்தில் ஒரு வசனம்.“ Life is trickled in everywhere and you are forced to react.”

Sep 26, 2017

Classic Versatile


என்னுடைய ப்ளாக்கில் இது ஆயிரமாவது பதிவு

"என் நினைவில் பதிந்த முதல் மரம் பாதாம் மரம். நான் படித்த எலிமெண்டரி ஸ்கூலில் ஒரு வாதா மரம் இருந்தது. பாதாம் பருப்பு கிடைக்குமோன்னு உடைச்சி,உடைச்சி பார்ப்போம். பெரிசா ஒன்னும் இருக்காது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மரம்” இப்படி ந.முத்துசாமி என்னிடம் சொல்லியிருக்கிறார்.


ந.முத்துசாமி எலிமெண்டரி ஸ்கூல் சிறுவனாயிருக்கும் போது தர்மபுர ஆதீன தோட்டத்தில் ஒரு மாமரம். அந்த மரம் பற்றியும் சொல்லுவார். அந்த மரமாம்பழம் பாதிரி பழம். பறித்த பிறகு தோல் சுருங்கிக்கிட்டே இருக்கும். சிவப்பாய் இருக்கும். அழுகாது. ரொம்ப ருசியாய் இருக்கும்.


இப்போது நான் குடியேறியுள்ள ஆலப்பாக்கம் வீட்டின் ஃப்ரன்ச் விண்டோவை ஒட்டி ஒரு பாதாம் மரம். அணில்கள் அந்த வாதா மரத்தில் இருந்து பாதாம்பழம் பழுக்கு முன்னே துருவித்துருவி தின்னும் அழகை தினம் பார்க்கக்கிடைக்கிறது.

…………………………………..

1970களில் இலக்கிய அரசியல் காரசாரமாகவே இருந்திருக்கிறது.
ஒரு சாம்ப்பிள்

ஞானக்கூத்தன் : தூக்கிக்காட்டுறேன்..தெரியுதா பாரு

ந.முத்துசாமி: இவருக்கென்ன தங்கத்திலா தொங்குது?

………………………………………


’Neither – Nor’
 Said
 To ’Either – Or’
 From here
Where do we go?

- Nakulan's English poem in his small booklet of poems " Non - Being"

நகுலன் ஒரு சின்னஞ்சிறிய ஆங்கிலக்கவிதை இப்படி எழுதியிருக்கிறார். "What is right? What is left."

…………………

பல வருடங்களுக்கு முன் டி.வி. நிகழ்ச்சியில் கேள்வி.
”நீங்கள் நன்றி சொல்ல விரும்பும் ஒருவர் யார்?”

 நடிகர் சுரேஷ் பதில் : ”ஜான். என் முன்னாள் மனைவி அனிதாவின் இன்றைய கணவர். எனக்கும் அனிதாவுக்கும் பிறந்த குழந்தையை தன் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு வளர்ப்பதற்கு ஜான் எப்போதும் என் நன்றிக்குரியவர்.”

……………………………….





Sep 23, 2017

ஈதெல்லாம்


நடிகை வாணிஸ்ரீ அந்தக்காலங்களில் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் தான் நடிகையர் திலகம் சாவித்திரி சாயலில் இருப்பதாக அடிக்கடி சொல்வார். இவரை சிறுமியாக, பதின் பருவத்தில் சாவித்திரி சாயலில் இருப்பதாக சொல்வார்களாம்.

சாவித்திரியே இவரை ஜெமினிகணேசனுக்கு இணையாக நடிக்க வைத்து “குழந்தையுள்ளம்” படத்தை இயக்கியிருக்கிறார். ஜெமினிக்கும் வாணிஸ்ரீக்கும் டூயட் பாடல் “முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு குடி கொண்டதே இன்பத்தேனுண்டு.”
ஆரம்ப கால எஸ்.பி.பி.யுடன் சுசிலா பாடிய பாடல்.

வாணிஸ்ரீயிடம் ஒரு பிரமாதமான தேஜஸ் உண்டு.
சிவாஜி மகன் ராம்குமார் தன் அப்பாவுடன் வாணிஸ்ரீ நடிக்கிற காட்சி படமாக்கப்படுகிறது என்றால் ஷூட்டிங் பார்க்க ஆசைப்படுவாராம்.

சாயல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியில் தோன்றும். இதில் பலரும் விவாதம் செய்வார்கள். அப்படியில்லை என்று.
சுருளிராஜன் ஒரு பேட்டியில் சொன்னதைக்கேட்டால் உடனே யாருக்கும் சிரிப்பு வரும்.
அப்படி என்ன சுருளிராஜன் சொன்னார் - “ என்னைப்பார்த்து பலரும் நான் மலையாள நடிகர் பிரேம் நசீர் மாதிரி இருக்கிறேன் என்று அந்தக்காலத்தில் சொல்லியிருக்கிறார்கள்.”

…………………….

இப்போதெல்லாம் ஆங்கிலப்படங்கள், இந்திப்படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். எப்போதும் இப்படி படங்களை பார்க்காமல் தவிர்த்து விடுவேன். ஆங்கிலப்படங்களை ஆங்கிலத்திலேயே தான் பார்க்க பிடிக்கும்.
அந்தக்காலத்தில் ஆங்கிலப்படங்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்ததில்லை. ஆனால் போஸ்டரில் சில ஆங்கிலப்படங்களுக்கு வினோதமாக தமிழ் பெயர் சூட்டியிருப்பார்கள். வேடிக்கையான தமிழ் தலைப்புடன் சுவரொட்டிகள்.
Panic in Bangkok ஃப்ரன்ச் இத்தாலிய கூட்டுத்தயாரிப்பு எடுக்கப்பட்டு ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு இங்கு ரிலீஸ் செய்யப்பட்டு ரொம்ப பிரபலமான படம்.
Panic in Bangkok – வந்தேன் உதை மாஸ்டர்
Three Musketeers – மூன்று எம்.ஜி.ஆர் வீரர்கள்
Cold Sweat – கொல்லத்தான் நினைக்கிறேன்.
Snake in the Monkey shadow –  பாம்பு பிடி , குரங்கு பிடி, மரண அடி
ஹாங்காங் மார்ஷியல் ஆர்ட்ஸ் படம் இந்த ’ஸ்னேக் இன் த மங்கி ஷேடோ.’
சென்ற மாதம் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த மு.ரவி (ந.முத்துசாமியின் இளைய மகன்) ’இருபத்தைந்தாவது ஆண்டு திருமண நிறைவு விழா’வில் வேடிக்கையான இந்த ஆங்கிலப்பட போஸ்டர்களை நினைவு கூர்ந்து சிரித்துக்கொண்டிருந்தோம்.
.................................

Sep 22, 2017

வன்முறை


’குரங்கு பொம்மை’, ’துப்பறிவாளன்’ இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி ஒரு குறிப்பிட்ட காட்சி இடம்பெற்றுள்ளது. கொலை செய்வதோடு, கசாப்புக்கடையில் ஆடு அறுப்பது போல் துண்டு துண்டாக உடல் உறுப்புகளை அறுக்கிற மாதிரி காட்சி. உடம்பில் ரத்தக்கறைகளோடு இரு படங்களிலும் வெட்டுகிறவர்களை காட்டுகிறார்கள். வயலன்ஸ்.
பழைய படங்கள் சுப்ரமணியபுரம், பருத்திவீரன் இரண்டு படங்களிலும், மைனா படத்திலும் க்ளைமாக்ஸ் வன்முறை பயங்கரம். 
ரொம்ப காலமாகவே ரத்தக்களரியில் தமிழ் படங்கள்.
சிரிப்பு என்பதிலேயே கூட வன்முறை இருக்கிறது.
செந்திலை கவுண்டமணி அடிக்கும்போது தியேட்டரே சிரிக்கும். வடிவேலுவின் பெரும்பாலான காட்சிகளில் அவர் மற்றவர்களிடம் அடி வாங்குவார். பொறித்து எடுக்கப்படுவார்.அப்போது எப்படி சிரித்து ரசித்தார்கள்.

“ விழுந்து விழுந்து ஒருவன் சிரிக்கிறான் எனில் அதற்குப்பின் பதப்படுத்தப்பட்ட வன்முறை உள்ளது. நல்ல சந்தோஷமான மன நிலையில் ஒருவன் சிரிக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது.” – ஓவியர் மு. நடேஷ் சொல்வார்.

ஆமாம் ஆரோக்கியமான மகிழ்வில் சிரிப்பு தேவையேயில்லை.

"There is daggers in men's smiles"- Shakespeare in Macbeth. Donalbain is speaking to Malcom. Both are King Duncan's sons.
A man's smile can often be backstabbing and painful.

"One can smile and smile and be a villain."
- Hamlet
……………………….

நேற்று வளசரவாக்கம் ஆற்காட் ரோட்டில் ஒரு தள்ளுவண்டி கடைக்காரரிடம் இரண்டு நிலக்கடலை பாக்கெட் சுடச்சுட வாங்கினேன். ’ஆண்டாளே, ரங்கமன்னாரே, இவருக்கு அமோகமாக வியாபாரம் நடக்க வேண்டும்.’
ரொம்ப பிசியான அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை. அதில் எஸ்.ஆர்.எம் எஞ்ஜினியரிங் காலேஜ் கொழந்தங்க ஆறேழு பேர். அதில் ரெண்டு பெண் கொழந்தங்க. பக்கத்தில் ஏதோ கல்ச்சுரல் ப்ரோக்ராமுக்கு வந்தவர்கள்.
கடலைக்காரர் “ பாருங்க சார்.. பொம்பள பிள்ளங்க சிகரெட் குடிக்கிறாங்க”
எஞ்சினியரிங் படித்த கொழந்தங்க எல்லோரும் சிகரெட் பற்ற வைத்து இருந்தார்கள்.
பெண் கொழந்தங்க புகையை இழுத்து ஊதியவாறே பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த காட்சி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை எல்லாம் மிகவும் கவர்ந்து விட்டது. ஏழெட்டு கடை தள்ளி ஒரு பைக் மெக்கானிக் கடையில் இருந்து அந்த மெக்கானிக் கிளம்பி வந்து இந்த புகைக்காட்சியை ரசித்தார். அரைக்கண் போட்டு அங்கிருந்த எல்லோரும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்கள். எல்லோர் வாயும் சிரிக்கிற பாவத்தில் அகன்று இருந்தன. பிசியான ட்ராஃபிக் உள்ள மாநகரச்சூழலிலும் எத்தனை கிராம மனங்கள்!
பொது இடங்களில் பெட்டிக்கடையில் சிகரெட் குடிப்பது கூட ஒரு வன்முறை. எல்லா பெட்டிக்கடைகளிலும் சிகரெட்டோடு நிற்கிறார்கள். பத்திரிக்கை, செய்தித்தாள் வாங்கப் போகிறபோது இந்தப் புகை ரொம்ப தொந்தரவாக இருக்கிறது.


”ஒரு சராசரி மனிதப்பிறவியிடம் இருக்கும்
இரண்டகமும் வெறுப்பும் வன்முறையும் அபத்தமும்
எந்த நாளும் எந்த ராணுவத்துக்கும்
வழங்கப்போதுமானது”
- சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி
( பெருந்தேவி மொழி பெயர்த்த ’கூட்டத்தின் மேதை’ என்ற கவிதையில்)

...........................................


http://rprajanayahem.blogspot.in/2016/03/blog-post_22.html


Sep 20, 2017

Poetry and Polytricks


மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு தானே
முற்றான கவிதை 
- தேவ தேவன்
நீர் நிலைகளைகளத்தேடி ஆயிரக்கணக்கான மைல்கல் நாடு விட்டு நாடு பயணிக்கும். வேடந்தாங்கல் வரும் பறவைகள்.
அற்ற குளத்துப்பறவை
நீர் நிலை வற்றி வறண்டு விட்டால் பறவைகள் வராது நீங்கி விடும்.
மாலதி மைத்ரி கவிதையொன்றில் ஒரு கொக்கு வந்திருக்கிறது.
“ தன் நினைவில் மீன்கள் நீந்த
நீரற்ற நதிக்கரையில்
காத்திருக்கிறது கொக்கு”

ஏன் நீரற்ற நதிக்கரையில் கொக்கு காத்திருக்க வேண்டுமோ?
மாடப்புறா கூடு கட்டாது.கூடு கட்டும் நிலைக்கு தள்ளப்பட்ட நிர்ப்பந்தம் மாடப்புறாவுக்கு என்பதாக கண்ணதாசன் எழுதிய பாடல்’கோட்டையிலே ஒரு ஆலமரம், அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா”

………………..



’யானைக்கு ஒரு தோட்டா நெத்தியிலே’
18 எம்.எல்.ஏக்களை நீக்கிய சபாநாயகர். சசிகலா கும்பல் அம்பேல்?
பன்னீருக்கு துணை முதல்வர் பதவி
’வெள்ளரிப்பழத்துக்கு பூண் ?’
எடப்பாடி – பன்னீர்
எடப்பாடி புளியங்காய்
பன்னீர் எலுமிச்சை
’அதுக்கு இது நீளந்தான். புளிப்புல அவுங்க அப்பன் தான்.’
ரெண்டு பேருக்கும் பெரிசா பேச்சு வார்த்தயெல்லாம் இல்லையாமே.
’கடுவாப்புலிக்கு காளைக்கோட்டான் எதிரி.’


ஒரு எம்.ஜி.ஆர், ஒரு ஜெயலலிதா என்று இருந்த காலம் போய், எடப்பாடி, பன்னீர், ’ஜெயக்குமார திண்டுக்கல் சீனிவாச ஓ.எஸ். மணியம்’, சசிகலா, தினகரன், திவாகரன்,
தீபா, ( தீபா கட்சியும் புருஷன் மாதவன் கட்சியும் இணைந்து விட்டதாமே.) என்று பல பாத்திகள் இன்று.
பல பேர் அதிமுகவிற்கு மானசீக பொறுப்பு வகிக்கிற சூழல். அல்லது பல அண்ணாதிமுக.
’அரண்மனைக்கு ஆயிரம் பாத்தின்னா தோட்டக்காரன் பொறுப்பாவானா?’
தோட்டக்காரன் என்று யாரை சொல்ல முடியும் இங்கு?
…………………………………

Sep 18, 2017

கி.ரா அறியாத பலகாரமும்,புலவர் பிரபஞ்சனும் (1991)


கணையாழி ஆகஸ்ட் 1991 இதழில் நான் எழுதிய இதன் ஒரு பகுதி ‘புலவர் பிரபஞ்சன்’ என்ற தலைப்பில் பிரசுரமானது.

கேக் கொண்டு வந்த சினிமா நடிகர் பார்த்திபனிடம் பின்னால் கி.ரா கடிதத்தில் கேட்ட கேள்வி. ‘அது என்ன பலகாரம்?’ என்ன தான் காஸ்ட்லியான கேக் என்றாலும் பார்த்தவுடனே கண்டு பிடிக்க முடியும். கி.ரா எப்படில்லாம் காதில் பூ சுத்திருக்காரு. எல்லா கிராமங்களுக்கும் கேக் 1970லேயெ வந்துடுச்சி. கோவில்பட்டியிலேயே பேக்கரி கேக் உண்டு. இடைச்செவல் கிராமம் பக்கத்தில் தான். கேக் தெரியாத கிராமத்தானே கிடையாது. பாண்டிச்சேரி போன்ற நகரத்துக்கு வந்து மூன்று வருடம் கழித்து ’அது என்ன பலகாரம்?’ என்று வியந்து கேட்பது ரொம்ப ஓவர் தானே?

பிரபஞ்சன் பின்னால் ஒரு எட்டு ஒன்பது வருடங்களில் தி.ஜாவின் பெருமைகளை புரிந்து கொண்டார். ’தி.ஜாவை மிஞ்ச ஆளேயில்லை’ என்று வானளாவ ஜானகிராமனை புகழ ஆரம்பித்தார்.
…………………………………..

கி.ரா அறியாத பலகாரமும்,புலவர் பிரபஞ்சனும். (1991)
- R.P.ராஜநாயஹம்

சென்ற ஜுலை மாத கணையாழியில் பிரபஞ்சன் பேட்டியில் தி.ஜாவின் பெண் கதாபாத்திரங்களை Utopian characters ஆக மட்டையடி அடித்திருப்பது ஏற்க முடியாத விஷயம். பெண்மையின் மேன்மையையும், உன்னதத்தையும் தன் பெண் கதாபாத்திரங்களின் பலம், பலவீனத்துடன் தெளிவாக சித்தரித்தவர் தி.ஜானகிராமன்.
’தாங்க முடியாத மன உளைச்சலுக்குத் தான் ஆட்படும்போது தி.ஜாவின் மோகமுள்ளை ஒரே இரவில், ஒரே மூச்சில் எத்தனையோ தடவை படித்துள்ளதாக’ சொல்லும் பிரபஞ்சன் தன்னுடைய பார்வை முரண்பாடுகளை பரிசீலிக்க வேண்டும்.


’தன்னை நம்பி வந்த மனைவியை பட்டினி போட்டு விட்டு ஒருவன் இலக்கியம் படைத்தால் அந்த இலக்கியம் கறை படிந்த இலக்கியம்’ என்கிறார். முன்பொரு முறை பாரதி மீது பணக்கார பாலகுமாரன் இந்த மாதிரி ஒரு கமெண்ட் அடித்தார். இப்போது பிரபஞ்சன்.

பாரதி, புதுமைப்பித்தன் துவங்கி ஜி. நாகராஜன் வரை, கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றி முகம் சுளித்து தீர்ப்பிட யாருக்கும் இங்கே யோக்கியதை கிடையாது. கலைஞன் இவர்களுடைய சமூக, பண்பாட்டு மதிப்பீடுகளுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லாதவன். டேல் கார்னகி, எம்.ஆர்.காப்மயர் தியரிகளைப் போன்ற அபத்தங்களை  உளற வேண்டாம்.

வட்டார இலக்கியம் போலியானது என்பது சரி. இது குறித்த அபாய எச்சரிக்கையை முதலில் செய்தவர் வண்ண நிலவன்.  மானாவாரி பயிர், திவசம், கம்மங்கூழ் இப்படி சில   வார்த்தைகளோடு வறுமையை மிக்ஸ் பண்ணி ’ரெடிமேட்’ கரிசல் இலக்கியம் செய்வதை வண்ணநிலவன் சாடினார்.

கி.ராவின் இலக்கிய அந்தஸ்தை இது கேள்விக்குள்ளாக்காது. கி.ராவின் சாதனை ‘கதவு’ மட்டும் தானா? நாவலுக்கு என்று இருந்த வடிவத்தை உடைத்ததோடு தமிழின் முதல் சரித்திர நாவலையும் எழுதியவர் கி.ரா. சமீப காலங்களில் முழுக்க முழுக்க வட்டார வழக்கிலேயே கரிசல் காட்டு கடுதாசி கட்டுரை துவங்கி, தொடர்ந்து தன் மொழி நடையில் அவர் செய்து வரும் மரபு மீறல் புதிய முயற்சி. எந்த மொழி இலக்கியமானாலும் மரபு மீறல்களாலேயே வளமடைந்திருப்பது சரித்திர உண்மை.

கி.ராவிடம் ஆட்சேபகரமான விஷயங்களும் இல்லாமல் இல்லை. ஈசல் போல் கரிசல் எழுத்தாளர்கள் பெருகுவதைக் கண்டு அவர் புளகாங்கிதமடைவது ஏற்புடையதன்று. பூமணி, கோணங்கி விதிவிலக்கு.

மற்றொன்று ஆரம்ப காலத்தில் கி.ரா.வுக்கு ஏற்பட்டு விட்ட நகர வாசனையேயில்லாத கிராமத்து அப்பாவி என்ற பிம்பத்தை தொடர்ந்து காப்பாற்ற அவர் செய்யும் பிரயத்தனங்கள்!

புதுவையில் தன்னைப் பார்க்க வந்த ஒரு சினிமாக்காரன் கொடுத்த ‘கேக்’ பற்றி, பின்னர் அவனுக்கு எழுதிய கடிதத்தில் ‘அது என்ன பலகாரம்?’ என்று மிகையாக அதிசயப்பட்டு விசாரித்திருக்கிறார். அந்த நடிகனே இதை குமுதத்தில் எழுதி அவரை ரொம்ப இன்னொசண்ட் என்று புகழ்ந்திருந்தான்.

கி.ராவின் சமீபத்திய இலக்கிய முயற்சிகளை ஆபாசத்தின் எல்லை என்று பிரபஞ்சன் கடுமையாக தாக்குவது சரியா?
நக்கீரன் பத்திரிக்கையில் பிரபஞ்சன் அடித்த கூத்தை விட எதுவுமே ஆபாசம் கிடையாது.

‘மரப்பசு’ நாவல் குறித்த தன் அபிப்ராயமாக ‘தி.ஜானகிராமனுக்கு ஆயிரம் பெண்களோடு படுக்க ஆசை’ என்று எழுதிய வக்கிரம்,

எஸ்.வி.சேகர் ஏதோ ஒரு பத்திரிக்கையாசிரியரான போது, அலட்சியப்படுத்த வேண்டிய உப்பு பெறாத இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக்கொண்டு, மணிக்கொடி ஆசிரியர் பி.எஸ்.ராமையாவையும் ‘எழுத்து’ சி.சு.செல்லப்பாவையும், குமுதம் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அப்புச்சியோடு தோளோடு தோளாக நிறுத்தி வைத்து ‘இவர்களெல்லாம் பத்திரிக்கையாசிரியர்களாக இருந்த செந்தமிழ் நாட்டில் இன்று எஸ்.வி. சேகர் பத்திரிக்கையாசிரியரா? என்று புலம்பிய அபத்தம்,

’1989 இல் தி.மு.க.வின் சட்டசபைத் தேர்தல் வெற்றி, ஐயர்களின் தோல்வி’ என்று கொக்கரித்த எகத்தாளம்.
ஆக இந்த பேட்டை ரௌடித்தனம் தான் இன்று கி.ரா.வின் மேலேயும் நிர்த்தாட்சண்யமாக பாய்ந்திருக்கிறது.
கடைசியாக ‘Ego’ பற்றி பிரபஞ்சன் வருத்தப்படுவது வேடிக்கை தான். ஏனென்றால் இந்த கற்றோர் காய்ச்சல், வித்துவச் செருக்கெல்லாம் புலவர் பிரபஞ்சனிடமும் இருக்கிறது.
………………………………..




Sep 17, 2017

சாரு நிவேதிதாவின் முதல் நாவல் - ராஜநாயஹம் விமர்சனம் (1990)


’மேலும்’ இதழ் மே மாதம், 1990ல் பிரசுரமானது.

எக்ஸிஸ்டென்ஸியலிசமும் ஃபேன்ஸி பனியனும்
-    R.P.ராஜநாயஹம்

இந்த நாவலுக்கான முன்னுரையில் ‘ ஒரு நவீன இலக்கியப் பிரதி என்பது சமநிலையைக் குலைக்கக்கூடியதும், ஒழுங்கமைவைச் சிதைக்கக் கூடியதுமாக இருந்தே ஆக வேண்டும்’ என்பதாகவும் இவ்வகையான ‘ சமநிலையைச் சிதைக்கக் கூடியதான பலவித மொழியமைப்பையும் சொல்லாடல்களையும் கொண்டிருக்கக்கூடிய ஒரு இலக்கியப் பிரதி தத்துவங்களுக்கும் அறவியலுக்கும் எதிரான ஒரு கலகத்தை முன்வைக்கிறது என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது. இப்படி இந்தப் படைப்பை அறிமுகப்படுத்தும்போது ஏற்கனவே இந்த மாதிரி சமநிலையைச் சிதைத்து தத்துவத்துக்கும் அறவியலுக்கும் எதிரான கலகம் நடந்ததேயில்லையா என்ற கேள்வி எழுகிறது.

புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி ஆகியோர் தங்கள் காலத்தில் அந்நியப்பட்டுப் போய் தான் இயங்கியல் மாற்றம்  செய்தார்கள்.
கு.ப.ராவின் ‘சிறிது வெளிச்சம்’ கதை ஒழுங்கமைவை சிதைத்த இலக்கிய பிரதி தான். தி.ஜானகிராமன் மோகமுள்ளில் Adultryயோடு Fornicationஐயும் கொண்டு வருகிறார்.

புதுமைப் பித்தன் " புதிய நந்தன் ", "அவதாரம் " ஆகிய சிறுகதைகளில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் Homosexuality பற்றி எழுதியிருக்கிறார்.

கு.ப.ரா எட்டடி பாய்ந்தாரென்றால் கரிச்சான் குஞ்சு ‘பசித்த மானிடம்’ நாவலில் பதினாறடி பாய்ந்து Homo Sexuality பற்றி எழுதி ஒழுங்கமைவையும் சமநிலையையும் சிதைத்துக் கலகம் செய்துள்ளார்.

சம்பத் ‘ ஒரு சாமியார் ஜூவுக்குப் போகிறார்’ கதையில் இரண்டு பெண்களுக்கிடையிலான உரையாடலில் lesbianism தெளிவாகக் காண்பிக்கிறார்.
ஜி. நாகராஜன் தன்னுடைய ‘ மிஸ்.பாக்கியம் கதையில் lesbian rape (!) காட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கி கலகம் செய்தார்.

ஓரினப்புணர்ச்சி, பாலியல் வன்முறை போன்றவற்றிற்கு ராமகிருஷ்ணனின் ’கோணல்கள்’, சா.கந்தசாமியின் ‘தேஜ்பூரிலிருந்து’ என்று இப்படி கதைகளை காட்ட முடியும்.

ஈழ எழுத்தாளர் சாந்தனின் கதை ‘ நீக்கல்கள்’ masturbation சம்பந்தப்பட்டது.

Beastryக்கு கதை தமிழில் இருக்கிறதா? Zoophilia. கி.ராஜநாராயணனின் ‘கனா’ கதை இந்த வகையைச் சார்ந்தது என்று கொள்ளலாமா

மிகச் சமீபத்தில் பாதசாரி எழுதிய ’காசி’ மீட்சி 16வது இதழில் பிரசுரமானது. காசி என்னும் மன நோயாளி ராத்திரியில் தான் காணும் கனவில் புணர்கிற பெண்ணின் முகம் அவனுடைய தமக்கையினுடையது. Incest.

1984ம் ஆண்டு ‘ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு விமர்சனம்’ என்ற ஒரு சின்ன புத்தகம் சாரு நிவேதிதா எழுதியிருந்தார். ஜே.ஜே சில குறிப்புகளை கடுமையாக விமர்சிக்கையில் ஜே.ஜே ஏன் ஸாண்டவரி என்ற எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட் போல இல்லை என்று கேட்டு, அரவிந்தாட்ச மேனன் ஏன் சார்த்தர் மாதிரியில்லையே என அதிருப்தியுற்று, மாஸேதுங் அழுக்காகவும் குளிக்காமலும் இருந்ததை மிகவும் சிலாகித்து, ஜெனேயை விடவா ஜே.ஜே பெரிய கொம்பன் என்றெல்லாம் சாரு நிவேதிதா கொந்தளித்திருந்தார். இந்த விமர்சனக்கட்டுரையிலேயே, விரைவில் வெளிவரவிருக்கும் என் ‘எக்ஸிஸ்டென்ஸியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் என் நண்பன் மிஸ்ரா பற்றிய குறிப்புகளைக் காணலாம் என்று எழுதி இந்த நாவல் வெளிவர உள்ளதை ஆறு வருடம் முன்பே குறிப்பிட்டிருந்தார். அப்புறம் கணையாழியில் 1985ம் ஆண்டு எழுதிய ‘மொகலாயத் தோட்டம்’ சிறுகதையில் தான் முக்கால் வாசி எழுதியுள்ள நாவலையாவது எழுதிப்பார்க்கலாமா என்று ஒரு ஞாயிற்றுக்கிழமை யோசிக்கிறார்.


இந்த நாவலின் 91ம் பக்கத்தில் ’நானூற்றி முப்பத்தேழு பக்கங்கள் உள்ள நாவலை மாற்றி மாற்றி எழுதிய சூரியா துவக்கப் பகுதியைத் தவிர மற்றெல்லாப் பக்கங்களையும் எரித்து விட்டான். இப்பொழுது மிஞ்சியது இவ்வளவு தான்’ என்ற கிளிங்கோவிட்ஸின் குறிப்புமாக தன்னுடைய படைப்பு பற்றி இயன்ற மட்டும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

இந்த நாவலில் Autobiographical Elements அதிகம். நாவலின் துவக்கம் முகவுரை பகுதி சூர்யா – பாலா – நீரஜா ஆகிய இலக்கியவாதிகளுக்கிடையேயான பனிப்போரை விவரிக்கிறது. நகுலன் ‘நினைவுப்பாதை’, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே துவங்கி, சமீபத்தில் இதை மலிவாக்கி குமுதம் கிசு கிசு புறணி பாணியில் நீல பத்மநாபனின் ‘தேரோடும் வீதி’ என பலபேர் அவரவர் பாணியில் கையாண்ட சமாச்சாரம்.

சாரு நாவலின் அடுத்த பகுதியான இரண்டு அத்தியாயம் குடும்பம் ஒரு பாற்கடல் புராணம். ஆலகால விஷமும் அதிலே தான். அமிர்தமும் அதிலே தான் என்றார் லா.ச.ரா.
இங்கே சூரியாவின் குடும்பம் தாய் வழியும் தந்தை வழியும் விலாவரியாக விவரிக்கப்படுகிறது. ஆல கால விஷம் தன் அதிகம். சகட்டு மெணிக்கு சூர்யா குடும்பத்தாரின் கற்பை சூறையாடுகிறார் சாரு. ‘கற்பு’ என்கிற வார்த்தை சாரு நிவேதிதா முகம் சுழிக்கிற விஷயம். ‘ ஒரு முறை என்னை சந்திக்க வந்த போது என் நேர் பேச்சில் Saint என்ற பதம் வந்ததும் அவருக்கு ஒரு அருவருப்பான விஷயத்தைக் கேட்ட முகச்சுழிப்பு உண்டாயிற்று’ என்று பிரமிள் ‘திசை நான்கு; முதல் இதழில் குறிப்பிட்டிருந்தார். கற்பு என்ற வார்த்தைக்குப் பதிலாக Character Assasination எனச் சொல்லலாம்.

ஆனாலும் பாருங்க. ஒரு பெரிய அதிசயம். கிருஷ்ணசாமி நாயுடு பற்றியும் பார்வதி பற்றியும் ஒரு கிசு கிசு கூட இல்லை. அவர்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். கிருஷ்ணசாமி நாயுடு தன் இளமைப்பருவத்தில் ஏதாவது ஒரு கோயிலின் குருக்களின் குறியைச் சுவைத்ததாக, மோகனாவின் அம்மாவோடு உடலுறவு கொண்டதாக. பார்வதி தன் மகள் ஆர்த்தியை யாருக்குப் பெற்றாள், உஷா யாருக்குப் பிறந்தவள், மூர்த்திக்கு உண்மையான அப்பா யார் என்றெல்லாம் எழுதியிருக்கலாம் தான். ஆனால் பார்வதியும் கிருஷ்ணசாமி நாயுடுவும் கதாநாயகன் சூர்யாவின் பெற்றோர் என்பதால் ஒழுங்கமைவைச் சிதைக்காமல் ஒரு சமநிலைத் தோற்றத்தை இந்த விஷயத்தில் மட்டும் ஏற்படுத்தி இயங்கியல் மாற்றம் செய்யாமல் விட்டிருக்கிறார்.

சூர்யா சராசரியான ஆளாகத் தோன்றவில்லை. பாலாவுக்கு சூர்யா அணியும் ஃபேன்ஸி பனியன்கள் உறுத்தியுள்ளது. மிஸ்ரா பார்வைக்கு சூர்யா ஒரு ப்ரூஸ் லி பனியன் அணிந்த, அநியாயத்தை தட்டிக்கேட்கும் எம்.ஜி.ஆர். சூர்யாவோடு கொஞ்ச நாள் பழகும் கிரண் சூர்யாவின் சாயல் கமல்ஹாசன் போல் இருப்பதாக கூறுகிறாள். கிரணைப் பொருத்தவரை சூர்யா ஒரு Ultra modern casanova.

இந்தியா போன்ற நாட்டில் எக்ஸிஸ்டென்ஸியலிசம் பற்றிப் பேச என்ன தேவையிருக்கிறது. எக்ஸிஸ்டென்ஸியலிசமாவது மயிராவது என்ற கோபம்.

சாரு நிவேதிதாவின் உண்மை நண்பன் மிஸ்ரா கதையில் சூர்யாவின் நண்பனாக வந்து தாஸ்தயேவ்ஸ்கியைப் படித்து, பின் பைத்தியமாகி ஒரு கொலை செய்து ஜெயிலில் தற்கொலை செய்து கொள்கிறான்.

சூர்யா, பாலாவுக்கு எழுதும் பதில் கடிதம் – நீங்கள் பாதலேர் பற்றிய சார்த்தரின் ஆய்வைப் படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் Dandyism பின்னணி உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எழுதும் ஆசிரியர் Dandyism உளவியல் பின்னணி என்பதை உடைத்தே எழுதியிருக்கலாம். மற்றொரு உதாரணம் சிமோன் தி போவா – சார்த்தர் பற்றிய சம்பவம் எழுதப்பட்டுள்ள முறை குழப்பமாக உள்ளதோ?

உயர்தர இலக்கியத்துக்கு ஒரு வக்ரத்துவம் வேண்டும் என்று வலியுறுத்தி சம்ஸ்கிருத விமர்சகர் குண்டகர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லியிருக்கிறார்.

கடந்த சில வருடங்களில் மிகுந்த மன அவசமூட்டும் வாசிப்பு அனுபவம் சில புத்தகங்கள் மூலம் ( சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என்ற பேதமில்லாமல் ) கிடைத்திருக்கிறது. சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், இந்திரா பார்த்தசாரதியின் ‘ஏசுவின் தோழர்கள்,அசோக மித்திரன் ‘ஒற்றன்’, தி.ஜானகிராமன் ’நளபாகம்’, கி.ராஜநாராயணன் ‘கரிசல் காட்டு கடுதாசி’, ந.முத்துசாமியின் ‘நீர்மை’ சம்பத் ’இடைவெளி’, திலீப்குமாரின் மூங்கில் குருத்து, விமலாதித்த மாமல்லனின் முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள், ஆதவன் ‘முதலில் இரவு வரும்’, பிரமிள் ‘லங்காபுரி ராஜா’, கோணங்கி ‘மதினிமார்கள் கதை’. அந்த வரிசையில் சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஸியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ உறுதியாக இடம் பெறுகிறது என்பதில் எள்ளளவு சந்தேகமுமில்லை.

இந்த நாவலில் முரண்பாடு மிக்க வாழ்க்கையில், குடும்பச்சிக்கல்களின் பூதாகரமான கொடும் அமைப்பில் ஒரு அறிவி ஜீவி கேலிக்குரியவனாக, அற்பமாகிப் போகும் அவலத்தை சாரு சொல்ல விரும்புவதாகத் தெரிகிறது. ஆதவன் இந்த விஷயத்தை தன்னுடைய ‘என் பெயர் ராமசேஷன்’ நாவலில் அழகாகச்சொல்லியிருக்கிறார்.

இயங்கியல் மாற்றம் என்பது தமிழிலக்கியத்தில் மணிக்கொடி காலம் தொட்டு நடந்து கொண்டிருப்பது தான். இந்த நாவலை எழுதியவருக்கும், நாவலுக்கு முன்னுரை எழுதியவருக்கும் அந்த நம்பிக்கை இல்லை போல் தெரிகிறது. அறிவின் தளத்திலும் பூர்ஷ்வாத்தன்மை இருக்கிறது.

…………………………


Sep 14, 2017

க.நா.சுவுக்கு ராஜநாயஹம் கடிதம் – 1988ல் எழுதப்பட்டது


’முன்றில்’ பத்திரிக்கையில் அப்போது க. நா.சு ஒரு கட்டுரையில் போகிற போக்கில் ஒரு வரி எழுதியிருந்தார்.
“ஊரெல்லாம் விபச்சாரிகள் என்று தி.ஜானகிராமன் மாதிரி கதை எழுதி விடுகிறார்கள்”
நான் மனம் புண்பட்டுபோனேன். உடனே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவருடைய டெல்லி விலாசம், மைலாப்பூர் விலாசம் மற்றும் முன்றில் பத்திரிக்கை விலாசம் மூன்றிற்கும் கடிதத்தை போஸ்ட் செய்தேன். மா.அரங்கநாதனின் ‘முன்றில்’ பத்திரிக்கைக்கு க.நா.சு அப்போது கௌரவ ஆசிரியர்.
அந்த கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து சி.சு.செல்லப்பா, சிட்டி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், கி.ரா, ந.முத்துசாமி, கோணங்கி உள்பட அனேகமாக எல்லா எழுத்தாளர்களுக்கும், இலக்கிய சிறுபத்திரிக்கைகளுக்கும், குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம் பத்திரிக்கைகளுக்கும் பல பிரசுரகர்த்தாக்கள், பல்கலைக் கழகங்கள், பேராசிரியர்கள், வாசகர்கள் என்று ஒரு இருநூறு பேருக்கு மேல் அனுப்பி வைத்தேன்.
இந்த கடிதம் 01.12.1988 அன்று எழுதப்பட்டது. பதினைந்து நாட்களில் க.நா.சு மறைந்து விட்டார்.
க .நா. சு . மரண செய்தி வானொலியில் ஒலிபரபபான அந்த நிமிடமே மணிக்கொடி சிட்டி ஒரு கடிதம் எனக்கு உடனே ,உடனே எழுதி போஸ்ட் செய்துவிட்டார் . மறு நாள் எனக்கு கிடைத்தது .
சிட்டி எழுதியிருந்தார் .
"உங்கள் அற சினத்தின் விழைவு போல் க.நா.சு மறைந்து விட்டார் போலும் ."
குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை!
கோணங்கி சொன்னான் " க. நா. சு உன் கடிதத்தை படித்திருப்பார் . மேல போயும் உன்னை நினைச்சிகிட்டு தான் இருப்பார்.
……………………………………

01.12.1988
அன்பிற்கும் மரியாதைக்குமுரிய க.நா.சு அவர்களுக்கு ராஜநாயஹம் என்ற வாசகன் எழுதுவது.
“ ஊரெல்லாம் விபச்சாரிகள்” என்று எழுதும் இன்றைய எழுத்தாளர்களை தி.ஜானகிராமனோடு நீங்கள் எப்படி ஒப்பிட முடியும்? Hyperion to a satyr?
தி.ஜா. மறைந்த நவம்பர் மாதத்தில் நான் தி.ஜா. நினைவு மதிப்பீட்டு மடல் ஒன்று தங்களுக்கு அனுப்பியுள்ள வேளையில் நீங்கள் இப்படி சேற்றை வாரி இறைத்திருப்பது shock valueக்காகத்தானா? தி.ஜா நினைவு நாளை கொண்டாடவோ அஞ்சலி செலுத்தவோ முடியாவிட்டாலும் இப்படி சாணி எறிந்து ஏன் திருப்திப்படவேண்டும்.

’இலக்கிய சாதனையாளர்கள்’ என்ற நூலில் தி.ஜா பற்றி நீங்கள் கூறியுள்ளதைப் பாருங்கள் : “ ஜானகிராமனுக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போது அவர் பெண்களை இழிவு படுத்தும் கதைகள் எழுதுகிறார் என்று ஒரு பெண் எழுத்தாளர் ஆர்ப்பாட்டம் செய்தது ஜானகிராமனின் கதைகளில் உள்ள Ironyக்கு ஈடான Irony என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பெண்களைப் பற்றி மிகவும் உயர்வாக வாழ்க்கையிலும் சரி, எழுத்திலும் சரி நினைத்தவர் அவர்.”
ஆம். வாழ்க்கையின் அபத்தங்களை பரிவுடன் அணுகிய எழுத்துக்கு சொந்தக்காரரான தி.ஜானகிராமனை பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் புரிந்து கொள்ளாதது வியப்பல்ல. ஆனால் இவ்வளவு காலம் கழித்து க.நா.சு இப்படி அவதூறு செய்வது வேதனை தான்.
விமரிசனம் செய்வதில் தங்கள் முரட்டுப் பிடிவாதம், குழப்பம், பாரபட்சம் தமிழ் இலக்கிய உலகில் அனைவரும் அறிந்தே இருக்கின்றனர்.
தி.ஜானகிராமனின் மோகமுள்ளைப் பற்றி ”தமிழில் வெளி வந்த நாவல்களில் சிறந்ததொன்றாக இந்த நாவலைக் கருத வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. நாவல் கலை உன்னதங்கள் இதில் அதிகமாகவே தெரிகின்றன.. நாவல் கலையில் பொதுவாக அவர் பெறாத வெற்றியை அவர் நடை, மொழி என்பனவற்றில் கண்டார்” என்ற தங்களின் கூற்று ’நுகர்பவனுக்கு நாவல் கலை அம்சங்களில் நடையும், மொழியும் முக்கியக் கூறுகளல்லவா? என்ற எண்ணத்தை எழுப்ப வாய்ப்புண்டாகிறது’ என பு.சி.கணேசன் ‘ க.நா.சுவும் கைலாசபதியும்’ புத்தகத்தில் சொல்வது நினைவுக்கு வருகிறது.
’திறனாய்வுப் பிரச்னைகள்’ நூலில் க.கைலாசபதி கூறுகையில் “ விமர்சன முறையில் க.நா.சுவிற்கும் மற்றையோர் சிலருக்குமுள்ள நுணுக்கமான வேறுபாடும் நினைவிற்கொள்ள வேண்டியதாகும். உதாரணமாக கு.ப.ராவும் பெ.கோ.சுந்தரராஜன் என்ற சிட்டியும் 1937ல் வெளியிட்ட ‘கண்ணன் என் கவி’ என்னும் நூலின் முன்னுரையின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டு கு.ப.ராவும் சிட்டியும் பகுப்பாய்வுப் பண்புகளைத் துலக்கமாகக் கூறியுள்ளனர். நான் சொல்கிறேன். நீ கேட்டுக்கொள் அது தான் சரி என்னும் அசட்டு மமதை கு.ப.ரா, சிட்டி இருவரிடமும் இல்லை” என்று கூறியதையும் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
உங்களுடைய குழப்பமான தெளிவற்ற விமர்சனத்திறமை பற்றி வெங்கட் சாமிநாதன் நிறைய சொல்கிறார். உதாரணத்திற்கு ஒன்று. ‘சி.மணி டி.எஸ். எலியட் செய்ததை திரும்பச் செய்பவன். அதிலே என்ன இருக்கு’ என்று கேட்ட தாங்கள் வே.மாலி என்ற பெயரில் சி.மணி என்ற மினி மேதை எழுதிய கவிதைகள் பற்றி ‘இது யாரையா இது? நன்னாயிருக்கே’ என்ரு சிலாகித்தீர்கள். மேலும் வெ.சா. ’நடை’ பத்திரிக்கைக்காரர்களிடம் “ வே.மாலி சி.மணி தான் என வெளித்தெரியக்கூடாது. க.நா.சு காதுக்கு இது எட்டி விட்டால் வே. மாலி கவிதைகலைப் பற்றிய அபிப்ராயம் மாறி விடும்’ என்று எச்சரித்ததை ‘ஓர் எதிர்ப்புக்குரல்’ நூலில் ‘என்றும் வளைந்த வால்கள் எங்களது’ என்ற கட்டுரையில் படித்திருக்கிறேன்.
சுந்தர ராமசாமி க.நா.சுவின் விமர்சன முகத்தை எங்களுக்கு நன்கு X-ray எடுத்துக் காட்டியிருக்கிறார். ’க.நா.சுவை எனக்குப் பிடிக்கும்’ என்று சொன்ன நகுலனைக் கூட சு.ரா. சீண்டினார்.
மு.தளையசிங்கம் கூட ’வில்லை முறித்துப் போட்ட விதுரர்கள்’ என்று தரும் பட்டியலில் உங்களை சேர்த்திருப்பது உங்களுக்கு மிகவும் பொருந்தும்.
உங்களின் மற்றொரு குணம் பாரபட்சம்.
’ வ.ரா.என்றொரு உற்சாகி ’ கட்டுரையில் சிஷ்யர்கள் பட்டியலில் சிட்டியை தவிர்த்துள்ளது பாரபட்சம் தான். கு.ப.ரா பற்றி எழுதும்போது பி.ஸ்ரீ.ஆச்சார்யாவிற்கு பதில் கொடுக்க எழுதப்பட்ட ‘கண்ணன் என் கவி’யில் கு.ப.ரா.வுடன் சிட்டியும் இணைந்து பங்காற்றியதை மறைத்து எழுதியுள்ளீர்கள். மேலும் ந.சிதம்பர சுப்ரமண்யம், கி.ராமச்சந்திரன் பற்றியெல்லாம் எழுதிவிட்டு சிட்டியைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதது prejudice தானே?
இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் முன்னுரையில் தற்கால இலக்கியகர்த்தாக்களை குறிப்பிடும்போது ஆதவனை ஒதுக்கியது இலக்கிய தீட்சண்யமிக்க செயல் தானா?
( இதே கேள்வியை சுந்தர ராமசாமியிடமும் கேட்க வேண்டியுள்ளது. ஆ.மாதவன் கதைகள் தொகுப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரைக்காக.)
ஐயா, நான் க.நா.சுவை அவமதிக்க எண்ணுபவனல்ல. நான் தங்களுக்கு அனுப்பிய தி.ஜானகிராமன் நினைவுக்கடிதமே இதனை நிரூபிக்கும்.
பூவை எஸ்.ஆறுமுகமோ அல்லது சு. சமுத்திரமோ உங்களைப் பற்றி கூறும் ஆவலாதிகளை நான் இந்தக் கடிதத்தில் எழுதி விடவில்லை.
’நவீனத் தமிழ் இலக்கியம் என்று கருதப்பட்டு வந்த பதரிலிருந்து உண்மையான கலைஞர்களை பொறுக்கி வைத்த முக்கியமான பணியை செய்தவர் க.நா.சு’ என்று சுந்தர ராமசாமியால் சிலாகித்து கூறப்படும் தாங்கள் இப்படி தி.ஜானகிராமன் என்ற இலக்கிய மகான் மீது சாணியடிக்கலாமா?
விமர்சகன் வேலை ரொம்ப risk ஆனது. நீங்களே ‘விமர்சனம் என்றால் என்ன?’ கட்டுரையில் குறிப்பிடுவது போல “ தன் அபிப்ராயங்களை மட்டும் விமர்சகன் சொல்கிறான் என்பதில்லை – தனது தத்துவ தரிசனத்திற்கே உரு தருகிறான். தன் இலக்கிய அறிவு பூராவையும் ரசனை பூராவையும் பணயம் வைத்து, காலம் செய்ய இருக்கும் காரியத்தை செய்து முடிக்கிறான்.”
விமர்சனம் பற்றிய தங்கள் கொள்கைக்கும் அதற்கு எதிர்மறையான நடைமுறை கொண்ட தங்களின் போக்குக்கும் உள்ள முரண்பாடு எல்லோருக்கும் கவலையளிக்கக்கூடியது.
Frailty! Thy name is Ka.Naa.Su alias S.Rajee.
……………………………………………………………