Share

Sep 17, 2017

சாரு நிவேதிதாவின் முதல் நாவல் - ராஜநாயஹம் விமர்சனம் (1990)


’மேலும்’ இதழ் மே மாதம், 1990ல் பிரசுரமானது.

எக்ஸிஸ்டென்ஸியலிசமும் ஃபேன்ஸி பனியனும்
-    R.P.ராஜநாயஹம்

இந்த நாவலுக்கான முன்னுரையில் ‘ ஒரு நவீன இலக்கியப் பிரதி என்பது சமநிலையைக் குலைக்கக்கூடியதும், ஒழுங்கமைவைச் சிதைக்கக் கூடியதுமாக இருந்தே ஆக வேண்டும்’ என்பதாகவும் இவ்வகையான ‘ சமநிலையைச் சிதைக்கக் கூடியதான பலவித மொழியமைப்பையும் சொல்லாடல்களையும் கொண்டிருக்கக்கூடிய ஒரு இலக்கியப் பிரதி தத்துவங்களுக்கும் அறவியலுக்கும் எதிரான ஒரு கலகத்தை முன்வைக்கிறது என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது. இப்படி இந்தப் படைப்பை அறிமுகப்படுத்தும்போது ஏற்கனவே இந்த மாதிரி சமநிலையைச் சிதைத்து தத்துவத்துக்கும் அறவியலுக்கும் எதிரான கலகம் நடந்ததேயில்லையா என்ற கேள்வி எழுகிறது.

புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி ஆகியோர் தங்கள் காலத்தில் அந்நியப்பட்டுப் போய் தான் இயங்கியல் மாற்றம்  செய்தார்கள்.
கு.ப.ராவின் ‘சிறிது வெளிச்சம்’ கதை ஒழுங்கமைவை சிதைத்த இலக்கிய பிரதி தான். தி.ஜானகிராமன் மோகமுள்ளில் Adultryயோடு Fornicationஐயும் கொண்டு வருகிறார்.

புதுமைப் பித்தன் " புதிய நந்தன் ", "அவதாரம் " ஆகிய சிறுகதைகளில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் Homosexuality பற்றி எழுதியிருக்கிறார்.

கு.ப.ரா எட்டடி பாய்ந்தாரென்றால் கரிச்சான் குஞ்சு ‘பசித்த மானிடம்’ நாவலில் பதினாறடி பாய்ந்து Homo Sexuality பற்றி எழுதி ஒழுங்கமைவையும் சமநிலையையும் சிதைத்துக் கலகம் செய்துள்ளார்.

சம்பத் ‘ ஒரு சாமியார் ஜூவுக்குப் போகிறார்’ கதையில் இரண்டு பெண்களுக்கிடையிலான உரையாடலில் lesbianism தெளிவாகக் காண்பிக்கிறார்.
ஜி. நாகராஜன் தன்னுடைய ‘ மிஸ்.பாக்கியம் கதையில் lesbian rape (!) காட்டி அதிர்ச்சிக்குள்ளாக்கி கலகம் செய்தார்.

ஓரினப்புணர்ச்சி, பாலியல் வன்முறை போன்றவற்றிற்கு ராமகிருஷ்ணனின் ’கோணல்கள்’, சா.கந்தசாமியின் ‘தேஜ்பூரிலிருந்து’ என்று இப்படி கதைகளை காட்ட முடியும்.

ஈழ எழுத்தாளர் சாந்தனின் கதை ‘ நீக்கல்கள்’ masturbation சம்பந்தப்பட்டது.

Beastryக்கு கதை தமிழில் இருக்கிறதா? Zoophilia. கி.ராஜநாராயணனின் ‘கனா’ கதை இந்த வகையைச் சார்ந்தது என்று கொள்ளலாமா

மிகச் சமீபத்தில் பாதசாரி எழுதிய ’காசி’ மீட்சி 16வது இதழில் பிரசுரமானது. காசி என்னும் மன நோயாளி ராத்திரியில் தான் காணும் கனவில் புணர்கிற பெண்ணின் முகம் அவனுடைய தமக்கையினுடையது. Incest.

1984ம் ஆண்டு ‘ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு விமர்சனம்’ என்ற ஒரு சின்ன புத்தகம் சாரு நிவேதிதா எழுதியிருந்தார். ஜே.ஜே சில குறிப்புகளை கடுமையாக விமர்சிக்கையில் ஜே.ஜே ஏன் ஸாண்டவரி என்ற எக்ஸிஸ்டென்ஸியலிஸ்ட் போல இல்லை என்று கேட்டு, அரவிந்தாட்ச மேனன் ஏன் சார்த்தர் மாதிரியில்லையே என அதிருப்தியுற்று, மாஸேதுங் அழுக்காகவும் குளிக்காமலும் இருந்ததை மிகவும் சிலாகித்து, ஜெனேயை விடவா ஜே.ஜே பெரிய கொம்பன் என்றெல்லாம் சாரு நிவேதிதா கொந்தளித்திருந்தார். இந்த விமர்சனக்கட்டுரையிலேயே, விரைவில் வெளிவரவிருக்கும் என் ‘எக்ஸிஸ்டென்ஸியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் என் நண்பன் மிஸ்ரா பற்றிய குறிப்புகளைக் காணலாம் என்று எழுதி இந்த நாவல் வெளிவர உள்ளதை ஆறு வருடம் முன்பே குறிப்பிட்டிருந்தார். அப்புறம் கணையாழியில் 1985ம் ஆண்டு எழுதிய ‘மொகலாயத் தோட்டம்’ சிறுகதையில் தான் முக்கால் வாசி எழுதியுள்ள நாவலையாவது எழுதிப்பார்க்கலாமா என்று ஒரு ஞாயிற்றுக்கிழமை யோசிக்கிறார்.


இந்த நாவலின் 91ம் பக்கத்தில் ’நானூற்றி முப்பத்தேழு பக்கங்கள் உள்ள நாவலை மாற்றி மாற்றி எழுதிய சூரியா துவக்கப் பகுதியைத் தவிர மற்றெல்லாப் பக்கங்களையும் எரித்து விட்டான். இப்பொழுது மிஞ்சியது இவ்வளவு தான்’ என்ற கிளிங்கோவிட்ஸின் குறிப்புமாக தன்னுடைய படைப்பு பற்றி இயன்ற மட்டும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

இந்த நாவலில் Autobiographical Elements அதிகம். நாவலின் துவக்கம் முகவுரை பகுதி சூர்யா – பாலா – நீரஜா ஆகிய இலக்கியவாதிகளுக்கிடையேயான பனிப்போரை விவரிக்கிறது. நகுலன் ‘நினைவுப்பாதை’, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே துவங்கி, சமீபத்தில் இதை மலிவாக்கி குமுதம் கிசு கிசு புறணி பாணியில் நீல பத்மநாபனின் ‘தேரோடும் வீதி’ என பலபேர் அவரவர் பாணியில் கையாண்ட சமாச்சாரம்.

சாரு நாவலின் அடுத்த பகுதியான இரண்டு அத்தியாயம் குடும்பம் ஒரு பாற்கடல் புராணம். ஆலகால விஷமும் அதிலே தான். அமிர்தமும் அதிலே தான் என்றார் லா.ச.ரா.
இங்கே சூரியாவின் குடும்பம் தாய் வழியும் தந்தை வழியும் விலாவரியாக விவரிக்கப்படுகிறது. ஆல கால விஷம் தன் அதிகம். சகட்டு மெணிக்கு சூர்யா குடும்பத்தாரின் கற்பை சூறையாடுகிறார் சாரு. ‘கற்பு’ என்கிற வார்த்தை சாரு நிவேதிதா முகம் சுழிக்கிற விஷயம். ‘ ஒரு முறை என்னை சந்திக்க வந்த போது என் நேர் பேச்சில் Saint என்ற பதம் வந்ததும் அவருக்கு ஒரு அருவருப்பான விஷயத்தைக் கேட்ட முகச்சுழிப்பு உண்டாயிற்று’ என்று பிரமிள் ‘திசை நான்கு; முதல் இதழில் குறிப்பிட்டிருந்தார். கற்பு என்ற வார்த்தைக்குப் பதிலாக Character Assasination எனச் சொல்லலாம்.

ஆனாலும் பாருங்க. ஒரு பெரிய அதிசயம். கிருஷ்ணசாமி நாயுடு பற்றியும் பார்வதி பற்றியும் ஒரு கிசு கிசு கூட இல்லை. அவர்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். கிருஷ்ணசாமி நாயுடு தன் இளமைப்பருவத்தில் ஏதாவது ஒரு கோயிலின் குருக்களின் குறியைச் சுவைத்ததாக, மோகனாவின் அம்மாவோடு உடலுறவு கொண்டதாக. பார்வதி தன் மகள் ஆர்த்தியை யாருக்குப் பெற்றாள், உஷா யாருக்குப் பிறந்தவள், மூர்த்திக்கு உண்மையான அப்பா யார் என்றெல்லாம் எழுதியிருக்கலாம் தான். ஆனால் பார்வதியும் கிருஷ்ணசாமி நாயுடுவும் கதாநாயகன் சூர்யாவின் பெற்றோர் என்பதால் ஒழுங்கமைவைச் சிதைக்காமல் ஒரு சமநிலைத் தோற்றத்தை இந்த விஷயத்தில் மட்டும் ஏற்படுத்தி இயங்கியல் மாற்றம் செய்யாமல் விட்டிருக்கிறார்.

சூர்யா சராசரியான ஆளாகத் தோன்றவில்லை. பாலாவுக்கு சூர்யா அணியும் ஃபேன்ஸி பனியன்கள் உறுத்தியுள்ளது. மிஸ்ரா பார்வைக்கு சூர்யா ஒரு ப்ரூஸ் லி பனியன் அணிந்த, அநியாயத்தை தட்டிக்கேட்கும் எம்.ஜி.ஆர். சூர்யாவோடு கொஞ்ச நாள் பழகும் கிரண் சூர்யாவின் சாயல் கமல்ஹாசன் போல் இருப்பதாக கூறுகிறாள். கிரணைப் பொருத்தவரை சூர்யா ஒரு Ultra modern casanova.

இந்தியா போன்ற நாட்டில் எக்ஸிஸ்டென்ஸியலிசம் பற்றிப் பேச என்ன தேவையிருக்கிறது. எக்ஸிஸ்டென்ஸியலிசமாவது மயிராவது என்ற கோபம்.

சாரு நிவேதிதாவின் உண்மை நண்பன் மிஸ்ரா கதையில் சூர்யாவின் நண்பனாக வந்து தாஸ்தயேவ்ஸ்கியைப் படித்து, பின் பைத்தியமாகி ஒரு கொலை செய்து ஜெயிலில் தற்கொலை செய்து கொள்கிறான்.

சூர்யா, பாலாவுக்கு எழுதும் பதில் கடிதம் – நீங்கள் பாதலேர் பற்றிய சார்த்தரின் ஆய்வைப் படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் Dandyism பின்னணி உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று எழுதும் ஆசிரியர் Dandyism உளவியல் பின்னணி என்பதை உடைத்தே எழுதியிருக்கலாம். மற்றொரு உதாரணம் சிமோன் தி போவா – சார்த்தர் பற்றிய சம்பவம் எழுதப்பட்டுள்ள முறை குழப்பமாக உள்ளதோ?

உயர்தர இலக்கியத்துக்கு ஒரு வக்ரத்துவம் வேண்டும் என்று வலியுறுத்தி சம்ஸ்கிருத விமர்சகர் குண்டகர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லியிருக்கிறார்.

கடந்த சில வருடங்களில் மிகுந்த மன அவசமூட்டும் வாசிப்பு அனுபவம் சில புத்தகங்கள் மூலம் ( சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என்ற பேதமில்லாமல் ) கிடைத்திருக்கிறது. சுந்தரராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், இந்திரா பார்த்தசாரதியின் ‘ஏசுவின் தோழர்கள்,அசோக மித்திரன் ‘ஒற்றன்’, தி.ஜானகிராமன் ’நளபாகம்’, கி.ராஜநாராயணன் ‘கரிசல் காட்டு கடுதாசி’, ந.முத்துசாமியின் ‘நீர்மை’ சம்பத் ’இடைவெளி’, திலீப்குமாரின் மூங்கில் குருத்து, விமலாதித்த மாமல்லனின் முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள், ஆதவன் ‘முதலில் இரவு வரும்’, பிரமிள் ‘லங்காபுரி ராஜா’, கோணங்கி ‘மதினிமார்கள் கதை’. அந்த வரிசையில் சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஸியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ உறுதியாக இடம் பெறுகிறது என்பதில் எள்ளளவு சந்தேகமுமில்லை.

இந்த நாவலில் முரண்பாடு மிக்க வாழ்க்கையில், குடும்பச்சிக்கல்களின் பூதாகரமான கொடும் அமைப்பில் ஒரு அறிவி ஜீவி கேலிக்குரியவனாக, அற்பமாகிப் போகும் அவலத்தை சாரு சொல்ல விரும்புவதாகத் தெரிகிறது. ஆதவன் இந்த விஷயத்தை தன்னுடைய ‘என் பெயர் ராமசேஷன்’ நாவலில் அழகாகச்சொல்லியிருக்கிறார்.

இயங்கியல் மாற்றம் என்பது தமிழிலக்கியத்தில் மணிக்கொடி காலம் தொட்டு நடந்து கொண்டிருப்பது தான். இந்த நாவலை எழுதியவருக்கும், நாவலுக்கு முன்னுரை எழுதியவருக்கும் அந்த நம்பிக்கை இல்லை போல் தெரிகிறது. அறிவின் தளத்திலும் பூர்ஷ்வாத்தன்மை இருக்கிறது.

…………………………


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.