Share

Sep 22, 2017

வன்முறை


’குரங்கு பொம்மை’, ’துப்பறிவாளன்’ இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி ஒரு குறிப்பிட்ட காட்சி இடம்பெற்றுள்ளது. கொலை செய்வதோடு, கசாப்புக்கடையில் ஆடு அறுப்பது போல் துண்டு துண்டாக உடல் உறுப்புகளை அறுக்கிற மாதிரி காட்சி. உடம்பில் ரத்தக்கறைகளோடு இரு படங்களிலும் வெட்டுகிறவர்களை காட்டுகிறார்கள். வயலன்ஸ்.
பழைய படங்கள் சுப்ரமணியபுரம், பருத்திவீரன் இரண்டு படங்களிலும், மைனா படத்திலும் க்ளைமாக்ஸ் வன்முறை பயங்கரம். 
ரொம்ப காலமாகவே ரத்தக்களரியில் தமிழ் படங்கள்.
சிரிப்பு என்பதிலேயே கூட வன்முறை இருக்கிறது.
செந்திலை கவுண்டமணி அடிக்கும்போது தியேட்டரே சிரிக்கும். வடிவேலுவின் பெரும்பாலான காட்சிகளில் அவர் மற்றவர்களிடம் அடி வாங்குவார். பொறித்து எடுக்கப்படுவார்.அப்போது எப்படி சிரித்து ரசித்தார்கள்.

“ விழுந்து விழுந்து ஒருவன் சிரிக்கிறான் எனில் அதற்குப்பின் பதப்படுத்தப்பட்ட வன்முறை உள்ளது. நல்ல சந்தோஷமான மன நிலையில் ஒருவன் சிரிக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது.” – ஓவியர் மு. நடேஷ் சொல்வார்.

ஆமாம் ஆரோக்கியமான மகிழ்வில் சிரிப்பு தேவையேயில்லை.

"There is daggers in men's smiles"- Shakespeare in Macbeth. Donalbain is speaking to Malcom. Both are King Duncan's sons.
A man's smile can often be backstabbing and painful.

"One can smile and smile and be a villain."
- Hamlet
……………………….

நேற்று வளசரவாக்கம் ஆற்காட் ரோட்டில் ஒரு தள்ளுவண்டி கடைக்காரரிடம் இரண்டு நிலக்கடலை பாக்கெட் சுடச்சுட வாங்கினேன். ’ஆண்டாளே, ரங்கமன்னாரே, இவருக்கு அமோகமாக வியாபாரம் நடக்க வேண்டும்.’
ரொம்ப பிசியான அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை. அதில் எஸ்.ஆர்.எம் எஞ்ஜினியரிங் காலேஜ் கொழந்தங்க ஆறேழு பேர். அதில் ரெண்டு பெண் கொழந்தங்க. பக்கத்தில் ஏதோ கல்ச்சுரல் ப்ரோக்ராமுக்கு வந்தவர்கள்.
கடலைக்காரர் “ பாருங்க சார்.. பொம்பள பிள்ளங்க சிகரெட் குடிக்கிறாங்க”
எஞ்சினியரிங் படித்த கொழந்தங்க எல்லோரும் சிகரெட் பற்ற வைத்து இருந்தார்கள்.
பெண் கொழந்தங்க புகையை இழுத்து ஊதியவாறே பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த காட்சி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை எல்லாம் மிகவும் கவர்ந்து விட்டது. ஏழெட்டு கடை தள்ளி ஒரு பைக் மெக்கானிக் கடையில் இருந்து அந்த மெக்கானிக் கிளம்பி வந்து இந்த புகைக்காட்சியை ரசித்தார். அரைக்கண் போட்டு அங்கிருந்த எல்லோரும் பார்த்துக்கொண்டு தான் இருந்தார்கள். எல்லோர் வாயும் சிரிக்கிற பாவத்தில் அகன்று இருந்தன. பிசியான ட்ராஃபிக் உள்ள மாநகரச்சூழலிலும் எத்தனை கிராம மனங்கள்!
பொது இடங்களில் பெட்டிக்கடையில் சிகரெட் குடிப்பது கூட ஒரு வன்முறை. எல்லா பெட்டிக்கடைகளிலும் சிகரெட்டோடு நிற்கிறார்கள். பத்திரிக்கை, செய்தித்தாள் வாங்கப் போகிறபோது இந்தப் புகை ரொம்ப தொந்தரவாக இருக்கிறது.


”ஒரு சராசரி மனிதப்பிறவியிடம் இருக்கும்
இரண்டகமும் வெறுப்பும் வன்முறையும் அபத்தமும்
எந்த நாளும் எந்த ராணுவத்துக்கும்
வழங்கப்போதுமானது”
- சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி
( பெருந்தேவி மொழி பெயர்த்த ’கூட்டத்தின் மேதை’ என்ற கவிதையில்)

...........................................


http://rprajanayahem.blogspot.in/2016/03/blog-post_22.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.