Share

Sep 14, 2017

க.நா.சுவுக்கு ராஜநாயஹம் கடிதம் – 1988ல் எழுதப்பட்டது


’முன்றில்’ பத்திரிக்கையில் அப்போது க. நா.சு ஒரு கட்டுரையில் போகிற போக்கில் ஒரு வரி எழுதியிருந்தார்.
“ஊரெல்லாம் விபச்சாரிகள் என்று தி.ஜானகிராமன் மாதிரி கதை எழுதி விடுகிறார்கள்”
நான் மனம் புண்பட்டுபோனேன். உடனே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவருடைய டெல்லி விலாசம், மைலாப்பூர் விலாசம் மற்றும் முன்றில் பத்திரிக்கை விலாசம் மூன்றிற்கும் கடிதத்தை போஸ்ட் செய்தேன். மா.அரங்கநாதனின் ‘முன்றில்’ பத்திரிக்கைக்கு க.நா.சு அப்போது கௌரவ ஆசிரியர்.
அந்த கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து சி.சு.செல்லப்பா, சிட்டி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், கி.ரா, ந.முத்துசாமி, கோணங்கி உள்பட அனேகமாக எல்லா எழுத்தாளர்களுக்கும், இலக்கிய சிறுபத்திரிக்கைகளுக்கும், குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம் பத்திரிக்கைகளுக்கும் பல பிரசுரகர்த்தாக்கள், பல்கலைக் கழகங்கள், பேராசிரியர்கள், வாசகர்கள் என்று ஒரு இருநூறு பேருக்கு மேல் அனுப்பி வைத்தேன்.
இந்த கடிதம் 01.12.1988 அன்று எழுதப்பட்டது. பதினைந்து நாட்களில் க.நா.சு மறைந்து விட்டார்.
க .நா. சு . மரண செய்தி வானொலியில் ஒலிபரபபான அந்த நிமிடமே மணிக்கொடி சிட்டி ஒரு கடிதம் எனக்கு உடனே ,உடனே எழுதி போஸ்ட் செய்துவிட்டார் . மறு நாள் எனக்கு கிடைத்தது .
சிட்டி எழுதியிருந்தார் .
"உங்கள் அற சினத்தின் விழைவு போல் க.நா.சு மறைந்து விட்டார் போலும் ."
குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை!
கோணங்கி சொன்னான் " க. நா. சு உன் கடிதத்தை படித்திருப்பார் . மேல போயும் உன்னை நினைச்சிகிட்டு தான் இருப்பார்.
……………………………………

01.12.1988
அன்பிற்கும் மரியாதைக்குமுரிய க.நா.சு அவர்களுக்கு ராஜநாயஹம் என்ற வாசகன் எழுதுவது.
“ ஊரெல்லாம் விபச்சாரிகள்” என்று எழுதும் இன்றைய எழுத்தாளர்களை தி.ஜானகிராமனோடு நீங்கள் எப்படி ஒப்பிட முடியும்? Hyperion to a satyr?
தி.ஜா. மறைந்த நவம்பர் மாதத்தில் நான் தி.ஜா. நினைவு மதிப்பீட்டு மடல் ஒன்று தங்களுக்கு அனுப்பியுள்ள வேளையில் நீங்கள் இப்படி சேற்றை வாரி இறைத்திருப்பது shock valueக்காகத்தானா? தி.ஜா நினைவு நாளை கொண்டாடவோ அஞ்சலி செலுத்தவோ முடியாவிட்டாலும் இப்படி சாணி எறிந்து ஏன் திருப்திப்படவேண்டும்.

’இலக்கிய சாதனையாளர்கள்’ என்ற நூலில் தி.ஜா பற்றி நீங்கள் கூறியுள்ளதைப் பாருங்கள் : “ ஜானகிராமனுக்கு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்த போது அவர் பெண்களை இழிவு படுத்தும் கதைகள் எழுதுகிறார் என்று ஒரு பெண் எழுத்தாளர் ஆர்ப்பாட்டம் செய்தது ஜானகிராமனின் கதைகளில் உள்ள Ironyக்கு ஈடான Irony என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பெண்களைப் பற்றி மிகவும் உயர்வாக வாழ்க்கையிலும் சரி, எழுத்திலும் சரி நினைத்தவர் அவர்.”
ஆம். வாழ்க்கையின் அபத்தங்களை பரிவுடன் அணுகிய எழுத்துக்கு சொந்தக்காரரான தி.ஜானகிராமனை பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் புரிந்து கொள்ளாதது வியப்பல்ல. ஆனால் இவ்வளவு காலம் கழித்து க.நா.சு இப்படி அவதூறு செய்வது வேதனை தான்.
விமரிசனம் செய்வதில் தங்கள் முரட்டுப் பிடிவாதம், குழப்பம், பாரபட்சம் தமிழ் இலக்கிய உலகில் அனைவரும் அறிந்தே இருக்கின்றனர்.
தி.ஜானகிராமனின் மோகமுள்ளைப் பற்றி ”தமிழில் வெளி வந்த நாவல்களில் சிறந்ததொன்றாக இந்த நாவலைக் கருத வேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. நாவல் கலை உன்னதங்கள் இதில் அதிகமாகவே தெரிகின்றன.. நாவல் கலையில் பொதுவாக அவர் பெறாத வெற்றியை அவர் நடை, மொழி என்பனவற்றில் கண்டார்” என்ற தங்களின் கூற்று ’நுகர்பவனுக்கு நாவல் கலை அம்சங்களில் நடையும், மொழியும் முக்கியக் கூறுகளல்லவா? என்ற எண்ணத்தை எழுப்ப வாய்ப்புண்டாகிறது’ என பு.சி.கணேசன் ‘ க.நா.சுவும் கைலாசபதியும்’ புத்தகத்தில் சொல்வது நினைவுக்கு வருகிறது.
’திறனாய்வுப் பிரச்னைகள்’ நூலில் க.கைலாசபதி கூறுகையில் “ விமர்சன முறையில் க.நா.சுவிற்கும் மற்றையோர் சிலருக்குமுள்ள நுணுக்கமான வேறுபாடும் நினைவிற்கொள்ள வேண்டியதாகும். உதாரணமாக கு.ப.ராவும் பெ.கோ.சுந்தரராஜன் என்ற சிட்டியும் 1937ல் வெளியிட்ட ‘கண்ணன் என் கவி’ என்னும் நூலின் முன்னுரையின் ஒரு பகுதியைக் குறிப்பிட்டு கு.ப.ராவும் சிட்டியும் பகுப்பாய்வுப் பண்புகளைத் துலக்கமாகக் கூறியுள்ளனர். நான் சொல்கிறேன். நீ கேட்டுக்கொள் அது தான் சரி என்னும் அசட்டு மமதை கு.ப.ரா, சிட்டி இருவரிடமும் இல்லை” என்று கூறியதையும் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
உங்களுடைய குழப்பமான தெளிவற்ற விமர்சனத்திறமை பற்றி வெங்கட் சாமிநாதன் நிறைய சொல்கிறார். உதாரணத்திற்கு ஒன்று. ‘சி.மணி டி.எஸ். எலியட் செய்ததை திரும்பச் செய்பவன். அதிலே என்ன இருக்கு’ என்று கேட்ட தாங்கள் வே.மாலி என்ற பெயரில் சி.மணி என்ற மினி மேதை எழுதிய கவிதைகள் பற்றி ‘இது யாரையா இது? நன்னாயிருக்கே’ என்ரு சிலாகித்தீர்கள். மேலும் வெ.சா. ’நடை’ பத்திரிக்கைக்காரர்களிடம் “ வே.மாலி சி.மணி தான் என வெளித்தெரியக்கூடாது. க.நா.சு காதுக்கு இது எட்டி விட்டால் வே. மாலி கவிதைகலைப் பற்றிய அபிப்ராயம் மாறி விடும்’ என்று எச்சரித்ததை ‘ஓர் எதிர்ப்புக்குரல்’ நூலில் ‘என்றும் வளைந்த வால்கள் எங்களது’ என்ற கட்டுரையில் படித்திருக்கிறேன்.
சுந்தர ராமசாமி க.நா.சுவின் விமர்சன முகத்தை எங்களுக்கு நன்கு X-ray எடுத்துக் காட்டியிருக்கிறார். ’க.நா.சுவை எனக்குப் பிடிக்கும்’ என்று சொன்ன நகுலனைக் கூட சு.ரா. சீண்டினார்.
மு.தளையசிங்கம் கூட ’வில்லை முறித்துப் போட்ட விதுரர்கள்’ என்று தரும் பட்டியலில் உங்களை சேர்த்திருப்பது உங்களுக்கு மிகவும் பொருந்தும்.
உங்களின் மற்றொரு குணம் பாரபட்சம்.
’ வ.ரா.என்றொரு உற்சாகி ’ கட்டுரையில் சிஷ்யர்கள் பட்டியலில் சிட்டியை தவிர்த்துள்ளது பாரபட்சம் தான். கு.ப.ரா பற்றி எழுதும்போது பி.ஸ்ரீ.ஆச்சார்யாவிற்கு பதில் கொடுக்க எழுதப்பட்ட ‘கண்ணன் என் கவி’யில் கு.ப.ரா.வுடன் சிட்டியும் இணைந்து பங்காற்றியதை மறைத்து எழுதியுள்ளீர்கள். மேலும் ந.சிதம்பர சுப்ரமண்யம், கி.ராமச்சந்திரன் பற்றியெல்லாம் எழுதிவிட்டு சிட்டியைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாதது prejudice தானே?
இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் முன்னுரையில் தற்கால இலக்கியகர்த்தாக்களை குறிப்பிடும்போது ஆதவனை ஒதுக்கியது இலக்கிய தீட்சண்யமிக்க செயல் தானா?
( இதே கேள்வியை சுந்தர ராமசாமியிடமும் கேட்க வேண்டியுள்ளது. ஆ.மாதவன் கதைகள் தொகுப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரைக்காக.)
ஐயா, நான் க.நா.சுவை அவமதிக்க எண்ணுபவனல்ல. நான் தங்களுக்கு அனுப்பிய தி.ஜானகிராமன் நினைவுக்கடிதமே இதனை நிரூபிக்கும்.
பூவை எஸ்.ஆறுமுகமோ அல்லது சு. சமுத்திரமோ உங்களைப் பற்றி கூறும் ஆவலாதிகளை நான் இந்தக் கடிதத்தில் எழுதி விடவில்லை.
’நவீனத் தமிழ் இலக்கியம் என்று கருதப்பட்டு வந்த பதரிலிருந்து உண்மையான கலைஞர்களை பொறுக்கி வைத்த முக்கியமான பணியை செய்தவர் க.நா.சு’ என்று சுந்தர ராமசாமியால் சிலாகித்து கூறப்படும் தாங்கள் இப்படி தி.ஜானகிராமன் என்ற இலக்கிய மகான் மீது சாணியடிக்கலாமா?
விமர்சகன் வேலை ரொம்ப risk ஆனது. நீங்களே ‘விமர்சனம் என்றால் என்ன?’ கட்டுரையில் குறிப்பிடுவது போல “ தன் அபிப்ராயங்களை மட்டும் விமர்சகன் சொல்கிறான் என்பதில்லை – தனது தத்துவ தரிசனத்திற்கே உரு தருகிறான். தன் இலக்கிய அறிவு பூராவையும் ரசனை பூராவையும் பணயம் வைத்து, காலம் செய்ய இருக்கும் காரியத்தை செய்து முடிக்கிறான்.”
விமர்சனம் பற்றிய தங்கள் கொள்கைக்கும் அதற்கு எதிர்மறையான நடைமுறை கொண்ட தங்களின் போக்குக்கும் உள்ள முரண்பாடு எல்லோருக்கும் கவலையளிக்கக்கூடியது.
Frailty! Thy name is Ka.Naa.Su alias S.Rajee.
……………………………………………………………







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.