Share

Dec 15, 2016

’மா பசி’ ம.பொ.சி


1950களில் ம.பொ.சியின் தமிழரசு கழகம், அண்ணாத்துரையின் தி.மு.க இரண்டு கட்சிக்குமே தங்கள் பொது எதிரியாக அறியப்படும் காங்கிரஸை விட பரஸ்பரம் ஒரு துவேசம் இருந்திருக்கிறது. 

1946ல் தமிழரசு கழகத்தை ஆரம்பித்த ம.பொ.சி 1954 வரை காங்கிரஸில் இருந்தவர் தான்.

தமிழரசு கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் இரண்டுமே தமிழர் நலன் சார்ந்தே இயங்கியவை. இரண்டுமே சிறந்த மனிதர்களாக அடையாளம் கொண்டவர்களினால் சூழப்பட்டிருந்தன.
சிலம்புச்செல்வர் என்று ம.பொ.சிக்கு பேராசிரியர் ரா.பி.சேது பிள்ளை பட்டம் சூட்டினார்.
அறிஞர் என்று அண்ணாத்துரை கட்சிக்காரர்களால் கௌரவப் படுத்தப்பட்டார்கள்.
தமிழரசுக்கழகத்தில் கா.மு.ஷெரிப், கு.மா.பாலசுப்ரமணியம், கு.சா. கிருஷ்ணமூர்த்தி போன்ற திரை ஆளுமைகள் (கவிஞர்கள்) மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
கவிஞர் கண்ணதாசன் தி.மு.கவில் சிக்கிக்கொண்டார்.
ஏ.பி. நாகராஜன் தமிழரசு கழக ஆதரவாளர்.

1951ல் முதல் தி.மு.க மாநாட்டிலேயே புரட்சி நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் மேடையேறி விட்டார்.

நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் சம்பத், மேதை மதியழகன்.

என்.வி நடராசனுக்கு எதுவும் பட்டம் இருந்ததாகத்தெரியவில்லை.

சிந்தனைச் சிற்பி சிற்றரசு.

ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரல்லாதவராயிருந்தாலும் இன்னொருவர்- (தக்ஷ்ணாமூர்த்தி!)- கலைஞர் மு. கருணாநிதி என்று அறியப்பட்டார்.

பேருக்கு ஆசிரியராய் இருந்த Tutor -
’பேராசிரியர்’ அன்பழகன்.
குட்டிப்பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி.
இப்படி கலர் கதாநாயகன்களால் தி.மு.க ஜொலித்தது.
தமிழரசுக்கழகத்தில் ஜிகினாத்தலைவர்கள் யாரும் இல்லை போலும்.
முக்கிய வேற்றுமை தமிழரசு கழகம் கடவுள் நம்பிக்கை கொண்ட இயக்கம்.
தி.மு.க தலைவர் அப்போதெல்லாம் ‘ஒருவனே தேவன்’ பிரகடனம் செய்திருக்கவில்லை. திருப்பதிக்கு சென்ற சிவாஜிகணேசன் கட்சியிலிருந்து
நீக்கப்பட்டு “ தம்பி! எங்கிருந்தாலும் வாழ்க!” என்று ஆசீர்வதிக்கப்பட்டார்.
மாணவர்களிடையே அன்று தி.மு.க., தமிழரசு கழகம் இரண்டின் ஈடுபாடு பாதிப்பு இருந்திருக்கிறது.

மாயவரம் முனிசிபல் ஹைஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த ந.முத்துசாமி தி.மு.க. 

அவருடைய வகுப்புத்தோழர் கவிஞர் ஞானக்கூத்தன் தமிழரசு கழகம். 

இந்த அரசியல் சிறுவர்களான முத்துசாமியையும் ஞானக்கூத்தனையும் பிரித்திருக்கிறது. இருவரும் அந்த சின்ன வயதில் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால் நட்பு பாதிக்கப்பட்டிருக்கிறது.

முத்துசாமி அண்ணாமலை யுனிவர்சிட்டியில் இண்டர்மீடியட் படிக்கும் போது (1955- 1957) சிதம்பரத்தில் ஒரு தி.மு.க மீட்டிங்.
அண்ணாத்துரையுடன் தம்பித்தலைவர்களும் மேடையில்!
தம்பித்தலைவர்கள்!
ம.பொ.சிக்கு எல்லாவற்றையும் தானே செய்ய வேண்டும் என்ற ’மாபசி’! – இப்படித்தான் அன்று கிண்டலாக குறிப்பிடும் வழக்கம்.
மதராஸ் மனதே என தெலுங்கர்கள் சொன்ன போது அதை எதிர்த்து சென்னை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார்.
திருவேங்கடத்தை தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அப்போராட்டத்தால் தான் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்க போராடினார். குமரியும்
செங்கோட்டை( நெல்லை)யும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு, தேவிக்குளம் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

சிதம்பரம் தி.மு.க மேடையில் பேசிய தம்பித்தலைவர்கள் அனைவரும் ம.பொ.சியை கடுமையாக விமர்சித்து திட்டி பேசியிருந்திருக்கிறார்கள். கடைசியில் அண்ணா எழுந்திருக்கிறார். அவருடைய மேலான நல்ல விஷயங்கள் பற்றியெல்லாம் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு தம்பித்தலைவர்களைப்பார்த்து கேட்டிருக்கிறார்: ”இப்படிப்பட்ட நல்லவரை நீங்கள் தாக்குவது என்ன நியாயம்?”

உடனே அந்த மேடையிலேயே அத்தனை தம்பித்தலைவர்களும் தங்கள் அண்ணனிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ’அண்ணா! மன்னித்துக்கொள்ளுங்கள். ம.பொ.சியின் அருமை புரியாமல் பேசி விட்டோம்.’
ந.முத்துசாமி கல்லூரி மாணவராயிருந்த போது சிதம்பரத்தில் நடந்த இந்த அரசியல் பொதுக்கூட்ட நிகழ்வு இன்றும் பசுமரத்தாணி போல அவர் மனதில் நிறைந்திருக்கிறது.
1967ல் காங்கிரசை தமிழகத்தில் எதிர்ப்பதில் தி.மு.கவுடன் ராஜாஜியின் சுதந்திரா கட்சி கூட்டு சேர்ந்த போது ம.பொ.சியின் தமிழரசு கழகமும் இணைந்து நின்றது.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியின் ரசிகராக மாறினார். 
எம்.ஜி.ஆர் ஆட்சியில் எம்.ஜி.ஆர் அபிமானியாகி ம.பொ.சி தமிழக மேல் சபை தலைவராக இருந்தார்.
……………………………………..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.