Share

Dec 2, 2016

தங்க கட்டுப்பாடு


தங்க கட்டுப்பாடு வந்து விட்டதா? என்று ஒரு வரி
கவிஞர் கலாப்ரியா ஃபேஸ்புக்கில் பார்த்தேன்.
எனக்கு பழைய ஞாபகம். என் தகப்பனார் மத்திய சுங்க இலாகா அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் அவரை ஒவ்வொரு விதமாக குறிப்பிடுவார்கள். பழனியில போயில இன்ஸ்பெக்டர்.
போயில = புகையிலை! புகையிலைக்கு வரி.

திருச்சியில தங்கக் கட்டுப்பாடு இன்ஸ்பெக்டர். நாகையில கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர்.
மதுரையில் சென்ட்ரல் எக்ஸைஸ்.
பின்னால் இந்த ஊர்களிலெல்லாமே ப்ரமோஷனில் சூப்ரண்ட் ஆகவும் இருந்தார்.


 தங்கக்கட்டுப்பாடு அதிகாரியாக இருந்த போது
 1967ல் ’எம்.ஜி.ஆர் சுடப்பட்டார்- எம்.ஆர் ராதா சுட்டார்.’ தினத்தந்தி தலைப்பு செய்தி. அடுத்ததாக அதே முதல் பக்கத்தில் பெரிய அளவில் தங்கம் பிடிபட்ட செய்தி.
என் தகப்பனாரின் தங்க வேட்டை பற்றிய பரபரப்பான செய்தி. ”தங்கம் பிடிபட்டது. சுங்க இலாகா அதிகாரி கைப்பற்றினார்”. 

 Morarjibhai Desai's Gold control!
அன்று ஒரு வேளை எம்.ஜி.ஆர் சுடப்பட்டிருக்காவிட்டால் இந்த தங்கம் பிடிபட்ட செய்தி தான் திருச்சி தினத்தந்தியில் தலைப்பு செய்தியாயிருந்திருக்கும் என்று பேச்சு!

நாங்கள் 1966ல் திருச்சியில் குடியிருந்த தெருவிற்குள் ஒரு நாள் அப்போது நிறைய தங்கத் தொழில் செய்யும் வியாபாரிகள் நுழைந்தார்கள். என் அப்பா வீட்டிற்கு வெளியே ஈசி சேரில் உட்கார்ந்திருந்தார். அப்பா அந்த கூட்டத்தைப் பார்த்து சத்தமாக
 ‘ யாரும் தெருவிற்குள் நுழைய வேண்டாம். திரும்பிப் போய் விடுங்கள். நாளை ஆஃபீஸ் வாருங்கள்” என்று சொன்னார். ஆனால் அவர்கள் “சார்! சார்!” என்று இறைஞ்சிக்கொண்டே முன்னேறினார்கள். அப்பா “ திரும்பிப்போயிடுங்க” என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொன்னவுடன் தயங்கியவாறு வெளியேறிப்போனார்கள். 

 என் பெற்றோர் திருமணத்திற்கு தாலி செய்த ஆசாரியையே திருச்சியில் கைது செய்ய நேர்ந்த போது  அப்பா தேம்பி அழுதார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.