Share

Dec 21, 2016

சி.மணி ஒரு மேதை


ந.முத்துசாமி மிகவும் மதித்துப்போற்றும் படைப்பாளிகள் மௌனி, சி.மணி ஆகிய இருவர் தான். ஒரு தற்செயல் ஒற்றுமை மௌனியின் இயற்பெயர் கூட மணி!

இலக்கிய உலகில் முத்துசாமியின் உற்ற நண்பர் கவிஞர் சி.மணி தான்.
இளமைக் காலத்தில் பார்த்து பழகியவுடன் சி.மணி உலக அளவில் பிரபலமாகி நிச்சயம் நோபல் பரிசு வாங்குவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாக இன்றும் கூறுவார். அவருக்கு தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவேயில்லையே. 

சி.மணி ஒரு கவிதையில் அடக்கமாக எழுதினார்- ’நானொரு மினி மேதை.’
“ A great man is always willing to be little.” மணி ஒரு முழுமையான மகத்தான மேதை. 

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இண்டர் மீடியட் படிக்க சேர்ந்த போது மாணவ நண்பர் தாமோதரன் புருவத்தை உயர்த்தி சொல்லியிருக்கிறார்.”மூன்று பைத்தியங்கள் இங்கே வந்திருக்கின்றன.”
அந்த மூவர் சி.மணி, வி.து.சீனிவாசன், வெங்கடேசன்.
அன்று துவங்கிய நட்பு முத்துசாமி வாழ்நாளில் மறக்கமுடியாதபடி ஆகியிருக்கிறது.

சி.சு.செல்லப்பாவுக்கு சி.மணியின் நெடுங்கவிதைகள் பிடிக்கவேயில்லை.
க.நா.சு அப்போது சி.மணியின் கவிதைகளைப் பார்த்து உதட்டைப்பிதுக்கி விட்டார்.
உன்னத கவிஞன் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறான்.
1969ல் ”நடை” பத்திரிக்கை முதல் இதழில் சி.மணி சிறிய கவிதைகள் வே.மாலி என்ற புனைபெயரில் எழுதினார். ந.முத்துசாமியின் “காலம் காலமாக” நாடகம், ஞானக்கூத்தனின் ஐந்து கவிதைகள் பிரசுரமாகியது.
நடை இதழ்களில் வே.மாலியாக சி.மணி கவிதை எழுதிய போது ஒரு வேடிக்கை. சி.மணியின் கவிதைகளை அலட்சியப்படுத்திய க.நா.சு வுக்கு வே.மாலியின் கவிதைகள் மிகவும் பிடித்துப்போய் விட்டது. “ யார்யா இந்த வே.மாலி. யார் இவன்? ரொம்ப நன்னா எழுதுறானே!” என்று விசாரித்திருக்கிறார்.
வெங்கட் சாமினாதன் அப்போது நண்பர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார்: ”சி.மணி தான் வே.மாலி என்கிற விஷயம் க.நா.சுவுக்குத் தெரிந்து விடக்கூடாது. தெரிந்தால் மாலியின் கவிதைகள் விஷயத்தில் பல்டி அடித்து விடுவார்!”

நான் 1983ம் ஆண்டு மார்ச் 27ந்தேதி க்ரியாவில் சி.மணியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று அங்கு அவருடன் எஸ்.வி.ராஜதுரையையும், க்ரியா ராமகிருஷ்ணனையும் சந்தித்தேன். புதையல் போல அங்கே இருந்த பழைய ’நடை’, ’கசடதபற’ ’பிரக்ஞை’ இதழ்களை வாங்கினேன். சி.மணியின் “ வரும் போகும்” கவிதைத் தொகுப்பு வாங்கிய போது சி.மணி அதில் கைழுத்திட்டு தந்தார்.
சி.மணி இன்று இல்லை. ஆனால் அவருடைய முக்கிய மொழிபெயர்ப்பு ஒன்று பற்றி சொல்ல வேண்டும்.
சுய மேம்பாடு பற்றிய தத்துவ விளக்கங்களை “ Fourth way” என விவரித்து குர்ஜீஃப்  (George Gurdjief) அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
 ”இந்த நான்காம் வழி”யை தன் பிரசங்கங்களிலும், எழுத்திலும் குர்ஜீஃப் சீடர் உஸ்பென்ஸ்கி ( P.D.Ouspensky) மேலெடுத்துச் சென்றார்

உஸ்பென்ஸ்கி மறைந்து பத்தாண்டுக்குப் பின் அவருடைய மாணவர்கள் 1957ம் ஆண்டு புத்தகமாக பிரசுரித்தார்கள்.
இந்த “Fourth Way” நூலை பிரமாதமாக மொழிபெயர்த்திருக்கிறார் சி.மணி.
சேலத்தில் அவருடைய மனைவியிடம் இந்த மொழி பெயர்ப்பு இருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் ராயல்டி தொகை எதிர்பார்க்கிறார்.
இது உடனே தமிழில் புத்தகமாக வெளி வரவேண்டிய முக்கிய நூல். அந்த நூல் வெளியிடப்படுவது சி.மணிக்கு மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.
சி.மணியின் உயிர்த்தெழுதலாக அந்த மொழிபெயர்ப்பு அமையும்.

.............................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.