Share

Oct 29, 2012

பெங்களூரு பி.கணேஷ் ஈமெயில்


Ganesh B's profile photo

Ganesh B

வணக்கம் சார்!

உங்கள் bloga தொடர்ந்து படிச்சிட்டு இருக்கேன்! 
எத்தனை எத்தனை மனிதர்கள், எவ்வளவு சுவாரஸ்யமான அனுபவங்கள், அத்தனையும் பாதுகாப்பா உள்ள வச்சு அசை போடுற உங்க வாழ்க்கை மாதிரி ஒரு வாழ்க்கை கிடைக்கனும்னு நான் ரொம்ப பேராசைப் படுறேன் சார்! 

உங்களையே திரும்பத் திரும்பப் படிக்கிறேன்! எல்லா எழுத்தாளர்களையும், அவுங்க படைப்புகளையும் உங்கள் எழுத்த, அறிவ, அனுபவத்தை அளவுகோல்களா வச்சு அளவிட்டு பார்க்குது என் சிறிய மூளை! அதனால் உங்களைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு மற்ற எழுத்துக்கள் புடிக்கல (யாரையும் நான் குறைச்சு மதிப்பிடல, அதற்கான அருகதையும் எனக்கு இல்ல, உங்க எழுத்தின் சுயம், சுத்தம், அதோட வாசனை எங்க தேடியும் கிடைக்கல!) எங்கே சுத்தினாலும் கடைசியா உங்கள்ட தான் வந்து நிக்கிறேன்! 

உங்கள பார்க்க திருப்பூர் வரனும்னு ரொம்ப நாளா நானும் என் மைத்துனன் பாலாஜி (இளம் எழுத்தாளராக முற்படுபவர்) பிளான் போட்டு வச்சுருக்கோம்! ஆனா முந்தாநாள் பேஞ்ச மழைல நேத்து முளைச்ச காளான்கள் நாங்க, எந்த இலக்கிய அறிவும் கிடையாது சார்! எங்க வெள்ளந்தியான அன்ப உங்களுக்கு எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியல! உங்கள பாக்கணும் சார்! உங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறோம்!


நான் உங்க ப்ளாக் ல கமெண்ட் போட்டதே கிடையாது சார்! ஒவ்வொரு வாசிப்பிற்குப் பிறகும் வாயடைச்சுப் போறது தான் காரணம்! நாலு கவிதை எழுதிட்டா தான் ஒரு பெரிய எழுத்தாளனு நெனைச்சு வீணாப் போகாம, ஒரு எழுத்தாளனாக எப்படிப் பட்ட வாசிப்புகள் இருக்கணும்? கண்ணோட்டம் எப்படி இருக்கணும்? எப்படி எழுத்துல நேர்மை இருக்கனும்னு? என்னை மாதிரி எத்தனையோ பேர் உங்களை படிச்சு தெரிஞ்சிப்பாங்க சார்! தொடர்ந்து எழுதுங்கள், உங்களிடம் இருந்து விழும் விதைகள் பல நல்ல நேர்மையான எழுத்தாளர்கள உருவாக்கட்டும்!
 நீங்க நல்லா இருக்கனும் sir!

அன்புடன்

கணேஷ், 

HCL பெங்களூர்



Oct 28, 2012

Catcher in the rye

J.D.Salinger's Catcher in the rye




 ஜான் லென்னனை சுட்டுக்கொன்றவன் அப்போது படித்துக்கொண்டிருந்த புத்தகம் -Catcher in the rye
 முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பினார்! சுட்டவன் கையில் இருந்ததும் இந்த Catcher in the rye நாவல் தான்!
ஜே.டி.சாலிஞ்சர் எழுதிய ஒரே நாவல். 1951ல் வெளி வந்தது.லட்சக்கணக்கில் இன்னும் விற்றுத்தீரும் நாவல்.
There is a marvellous peace in not publishing என்பார். I write for myself and my own pleasure!
அமெரிக்க நாவல் ரொம்ப பிரபலமாகும்போது திரைப்படம் ஆகாமலிருந்ததுண்டா? அது இந்த நாவல் தான்! ’நாவலின் நாயகனாக நான் தான் நடிக்கமுடியும்’ என்று எழுதியவர் பிடிவாதம் பிடித்தால் என்ன தான் செய்ய முடியும்?

ஹோல்டன் கால்ஃபீல்ட் கதை நாயகன். மெண்டல் ஹாஸ்பிடலில் சிகிச்சை
பெறுகிறவன்.


Dont ever tell anybody anything.If you do, you start missing every body.

கால்ஃபீல்ட் மாசிலா குழந்தைமையின் இனிமையான உலகில் இருக்க விரும்புபவன்.ஆனால் பெரியவர்களின் வேஷம் நிறைந்த குரூர உலகை கண்டு பயப்படுபவன்.An Icon for teenage rebellion.

To be a Catcher in the rye means to save children from losing their innocence.
 கால்ஃபீல்ட் செங்குத்தான மலையுச்சியில் விளிம்பின் அருகே விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் காவலனாக தன்னைப் பாவிக்கும் ஒரு பதின்பருவத்தான். அவனுடைய வேலை மலை விளிம்பின் அருகே அதல பாதாளத்தில் விழுந்து விடாமல் குழந்தைகளை கவனமாக காப்பாற்றுவது. அதல பாதாளத்தில் குழந்தை விழுந்து விடும் முன் பிடித்துக்கொள்வது தான்.
 


1950 காலத்தையொட்டி நிகழ்கிற கதை.ஹோல்டன்  கால்ஃபீல்ட் மூன்று பள்ளிகளில் ஃபெயில் ஆகி நான்காவதாக பதினாறு வயதில்  பென்சி ப்ரெப் ஸ்கூலில் சேர்ந்தவன்.
 I have left schools and places I didn't even know I was leaving them.

I dont even know what I was running for- I guess I just felt like it.
In my mind, I'm probably the biggest sex maniac you ever saw.


ஜே.டி.சாலிஞ்சர் வாழ்க்கையில் நடந்த ஒரு காதல் பற்றி சொல்ல சார்லி சாப்ளினினுடைய  மாமனார் பற்றி சொல்ல வேண்டும். யூஜின் ஓ நீல் என்ற அமெரிக்க நாடகாசிரியர். புலிட்சர் விருது,நோபல் பரிசு வாங்கியவர்.
(The Reds (1981) படம்.வாரன் பீட்டி இயக்கி கதாநாயகனாக நடித்தார்.இதில் யூஜின் ஒநீல் கதாபாத்திரத்தை ஜாக் நிக்கல்சன் செய்தார்.)

 

இந்த யூஜின் ஒநீல் மகள் ஊனா ஓ நீல் தான் சாலிஞ்சரின் காதலி. ஊனா ஒநீலுக்கு நீண்ட கடிதங்கள் சாலிஞ்சர் எழுதியிருக்கிறார். 1941ல்  நூல் விட்டுக்கொண்டிருந்தார்சாலிஞ்சர்.ஆனால் சார்லி சாப்ளினை விதி வசமாக ஊனா ஓநீல் சந்திக்க நேர்ந்த பிறகு விதி விளையாடியது. சார்லி சாப்ளின் வாழ்வில் நடந்த  நான்காவது திருமணம் இந்த ஊனா ஒநீலோடு தான்!

 Oona Oneil - 1943.jpg
நான்காவது திருமணமா என்று ஏளனமாக எண்ணி விடக்கூடாது. இந்த திருமணம் தான் சாப்ளின் சாகும் வரை நிலைத்து நின்றது.(1943-1977) அது மட்டுமல்ல. இந்த ஓநீல் மூலம் சாப்ளினுக்கு எட்டு குழந்தைகள். இதில் முதல் மகள் 1965ல் வந்த டாக்டர் ஷிவாகோ படத்தில் ஷிவாகோவின் மனைவி டோன்யா வாக நடித்த ஜெரால்டைன் சாப்ளின்.

...............................



Oct 26, 2012

நடிகரான இசையமைப்பாளர்


உயிர் என்று ஒரு படம் 1971ல் வெளிவந்தது. முத்துராமன்,சரோஜாதேவி,லட்சுமி,நாகேஷ் நடித்த படம்.
பி.ஆர்.சோமு இயக்கத்த்தில்.அந்தப்படம் ரொம்ப சொற்ப நாளில் தயாரிக்கப்பட்டது.
படத்தின் துவக்கத்தில் டைரக்டர் சோமு ஃபுல்சூட்டில் வந்து ஒரு குளோபை உருட்டியவாறு
 ”இறைவன் படைக்கும்போது மனிதனுக்கு கையை கொடுக்க மறக்கலாம்.காலைக்கொடுக்க மறக்கலாம்.கண்ணைக்கொடுக்ககூட மறக்கலாம்.ஆனால் எதைக்கொடுக்க மறந்தாலுமஆண்டவன்  ஒன்றை மட்டும் கொடுக்க மறப்பதே இல்லை. அது உயிர்!உயிர்!உயிர்!” (டைட்டில் ஆரம்பம்!)

பி.ஆர் சோமு அதற்கு முன் தெய்வசங்கல்பம்(1969) ஏ.வி.எம்.ராஜன் ,விஜயகுமாரி, முத்துராமன் நடிப்பில் இயக்கியவர்.

உயிர் படத்திற்குப்பிறகு எங்கள் குலதெய்வம், அழைத்தால் வருவேன், ராஜா யுவராஜா, சர்வம் சக்தி மையம் தாயே நீயே துணைபோன்ற படங்கள் இயக்கியவர்.

உயிர் படத்திற்கு ஆறு பாடல்கள்.இரண்டு பேர் இசையமைப்பாளர்கள் என்று தீர்மானித்து  அந்த இரண்டு இசையமைப்பாளர்களுக்கும் மூன்று மூன்று பாடல்கள் என்று முடிவாகியிருக்கிறது.அந்த இசையமைப்பாளர்கள் ராஜையாவும் ரமணாஸ்ரீதரும்.

ராஜையா அந்தப் பட வாய்ப்பை அவரே துறந்தாரா அல்லது ஏதேனும் அரசியலோ தெரியவில்லை. அப்போது அப்படி தட்டிப்போன வாய்ப்பு அன்னக்கிளியில் 1976ல் கிடைத்து இளையராஜா ஆனார்!

ரமணாஸ்ரீதர் தனி இசையமைப்பாளராக ’உயிர்’படத்தில்அறிமுகமானார்.

’தண்ணீரில் ஏதடி நெருப்பு,இதை தாங்காமல் ஏனிந்த தவிப்பு’

”தனிமையிலும் நாணமா மைவிழியில் ஜாடையா பூமுகத்தை ஏன் மறைத்தாய் நான் வரையும் பொன்னோவியமே”

இந்த சௌந்தர்ராஜன் பாடல்கள் இந்தப்படத்தில் தான்!

இன்னொரு சுவையான தகவல்.கமல்ஹாசன் இந்தப்படத்தில் டான்ஸ் அசிஸ்டண்ட்.
கமல் போட்ட ஸ்டெப்ஸ் பார்த்து முத்துராமன் மிரண்டு போய் “ என்னப்பா கமல்! நான் என் வயசுக்கு நீ போடுற ஸ்டெப்பெல்லாம் போடமுடியுமா?’ என்றாராம்.

இந்த ரமணாஸ்ரீதர் வேறு வாய்ப்புகள் இல்லாமல் மெல்லிசைக்கச்சேரிகள் செய்து வந்தார். இவரிடம் சுவாரசியம் என்னவென்றால் சிவாஜி பாடல்களை சிவாஜியை இமிடேட் செய்து பாடுவார்.எம்.ஜி.ஆர் பாடல்களை எம்ஜிஆர் ஆக்சனில் பாடுவார்.

திருவையாற்றுக்காரரான ரமணி தீவிரமான சிவாஜி கணேசன்ரசிகர்!

பின்னால் ரமணி தன் பெயரை விஜய் ரமணி என்று மாற்றிக்கொண்டார். ’யாகசாலை’ என்று ஒரு படத்தில்  இசையமைத்து ரமணியே பாடிய பாடல்-
” ஒரு ரோசாப்பு சிரிக்கிறது! புது ராசாவை நினைக்கிறது!”
அந்தக்கால ‘சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு,மத்தாப்பு சுந்தரி ஒருத்தி ஒயிலாட வந்தாளாம்” பாட்டோடு ஒப்பிடப்பட்டது.
விஜய் ரமணியாக  விஷேசமாக இவர் சாதிக்காத நேரத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது.

1980ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் இரண்டே தொகுதிகளை மட்டும் கைப்பற்றும்படியாகிவிட்டது. வெற்றியை மட்டுமே அதுவரை பார்த்து வந்த எம்.ஜி.ஆருக்கு தமிழகத்தில் சிவகாசி,கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இரண்டே தொகுதிகளே கிடைத்தது.பெரும் சரிவு!

உடனே தமிழகத்தில்  எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் ஒரு முக்கியத்திருமணம் நடந்தது. அந்தத்திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வருகிறார்.மெல்லிசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கச்சேரியைப்பார்க்க உட்கார்கிறார்.மேடையில் ரமணி பாடகர்.
எம்.ஜி.ஆர் பாணியில் ஆக்சனுடன் பாடியிருக்கிறார்.
’என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’

 ரமணி கைகளை ஆட்டி பாடியதைப்பார்த்து  எம்.ஜி.ஆர் புன்சிரிப்போடு ரசித்திருக்கிறார்.

‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது!

நான் ஒரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலி தான் என போகப்போக காட்டுகிறேன்
போகப்போக காட்டுகிறேன்!’

சரம் சரமாக எம்.ஜி.ஆர் பாடல்களை அவர் முன்னேயே ரமணி பாடியிருக்கிறார்.

எம்.ஜி,ஆர் மேடையேறி
‘’ என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் நான்  
மன அமைதியை இழந்திருந்தேன். இன்று ரமணி என் படப்பாடல்களைப் பாடி என்னை சந்தோசப்படுத்தி விட்டார்! எனக்கு ரொம்ப ஆறுதலாயிருந்தது.அவருக்கு என் வாட்சை அன்பளிப்பாக தருகிறேன்.” என்று கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை க் கழட்டி விஜய் ரமணிக்கு கொடுத்து விட்டார்!
இப்படி எம்.ஜி.ஆர் எத்தனையோ பேருக்கு வாட்சைக்கழட்டிக்கொடுத்திருக்கிறார்.

....

”ஓரம்போ!ஓரம்போ!ருக்ம்ணி வண்டி வருது”  ராஜையாவுடன் ரமணி அந்தக்காலத்தில் கச்சேரியில் பாடிய “கண்ணம்மா!கண்ணம்மா!” தான்!

சினிமா சான்ஸ் பற்றி ரமணி சொன்னது இன்னும் மறக்கமுடியவில்லை.
“தம்பி!சினிமாவில நாளைக்கு வா நாளைக்கு வான்னு சொல்லியே கொன்னுடுவானுங்க!”


ரமணி பின்னால் எம்.எஸ்.வி, இளைய ராஜாவிடம் இசையமைப்பில் உதவியாளராக பணிபுரிந்தார்.
சில பாடல்களும் பாடியிருக்கிறார்.
அவருக்கு நடிகராக புனர்ஜென்மம் வாய்த்தது.  ராகவேந்தர்!
சிந்துபைரவியில் இவர் நடிகர்களின் பாணியில் பாடும் குணவிசேசத்தை கே.பாலச்சந்தர் பயன்படுத்திக்கொண்டார்.வைதேகி காத்திருந்தாள் படம் இவரை நடிகராக நிலைநிறுத்தியது. கமல் ஹாசனின் “ விக்ரம்” படத்தில்!

நடிகர் ராகவேந்தராகத்தான் இவரை இன்று தெரியும்.
பாடகி கல்பனாவின் தந்தை!

..........


http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_6.html


Oct 24, 2012

Bootlegging clash


மீண்டும் குமுதம்  தன் கைவரிசையை காட்டிவிட்டது!
என்னுடைய  டி.எஸ்.பாலையா பதிவிலிருந்து முதல் பாராவை சுனில் கேள்வி பதிலில் எடுத்துப்போடப்பட்டுள்ளது.
இதோ என் செப்டம்பர் 17ந்தேதி பதிவில் முதல் பாரா!


SEP 17, 2012


டி.எஸ்.பாலையா

’சதி லீலாவதி’(1936) எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.
அந்தப் படத்தின் கதாநாயகன்
எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா,
கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ’சதிலீலாவதி’ தான்.

 இன்று கடைக்கு வந்திருக்கும் 31-10-2012 தேதியிட்ட குமுதத்தில் சுனில் கேள்வி  பதிலில் கீழ்கண்டவாறு

டி.எஸ் பாலையா நடித்த முதல் படம் எது?

சதி லீலாவதி தான் அவர் நடித்த முதல் படம்.டி.எஸ்.பாலையாவிற்கு மட்டுமல்ல.எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு, எம்.கே.ராதா ஆகியோருக்கும் சதிலீலாவதி தான் முதல் படம்.

....

சுந்தர ராமசாமி சொல்வார்.
காண்டாமிருகத்தை ஈர்க்குச்சியால் காயப்படுத்த முடியாது.
இந்த வார்த்தைகள் தான் இங்கே நானும் வேதனையோடு குறிப்பிட வேண்டியிருக்கிறது.முரட்டுத்தோல்!என்ன ஒரு சுரணையற்ற தன்மை.
காண்டாமிருகம் சைவம் தான்.ஆனா ஆளக்கொன்னுடும்!

ஏழை சொல் அம்பலம் ஏறாது என்ற தைரியம் தான் குமுதம் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்ளக்காரணம்.

என்ன ஒரு பூர்ஷ்வாத்தனம். என்ன ஒரு பேட்டை ரௌடித்தனம்.

.....

Factual errors குமுதத்தில் வருவது பற்றி ஏற்கனவே நான் எழுதியிருக்கிறேன்.

சென்ற வார குமுதம் (24.10.2012 தேதி) பேசும் படம் பகுதியில் சிவாஜி,சாவித்திரி,ஜெமினி.சந்திரபாபு,ஜெயல்லிதா,சந்தியா,
கண்ணதாசன்,ஏ.எல்.எஸ்,
சின்ன அண்ணாமலை,ராஜசுலோசனா ஆகியோரை உள்ளடக்கிய புகைப்படம் 1973ல் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு ஐந்தாறு வருடங்களுக்கு முந்தைய புகைப்படம் அது! எந்த வருடம் என்று சொல்லமுடியாவிட்டாலும் அந்த படம் 1973க்கு ஐந்தாறு வருடங்களுக்கு முந்தையது.

ஜெமினிகணேசனும் சாவித்திரியும் 1973ல் எல்லாம் சேர்ந்திருக்கவில்லை.
அவர்கள் 1969ல் பிரிந்து விட்டார்கள்.

சிவாஜி ,நெஞ்சிருக்கும் வரை (1967), அல்லதுகலாட்டாகல்யாணம்(1968)நடித்துக்கொண்டிருந்த காலமாயிருக்க வாய்ப்பு உண்டு.சத்தியமாக வசந்தமாளிகை(1972) நடித்து முடித்த, எங்கள் தங்கராஜா(1973) காலத்தை ச்சேர்ந்த சிவாஜி இந்தப்புகைப்படத்தில் இல்லவே இல்லை! அப்போதெல்லாம் காது வரை கிருதா இருக்கும்!

சந்திரபாபு இறந்த தினம் 08-03-1974. புகைப்படத்தில் ’தட்டுங்கள் திறக்கப்படும்’(1966)நடித்துக்களைத்த சலிப்பு த்தான் தெரிகிறது.சந்தியா எப்போது இறந்தார் என்று தெரிந்தால் 1973ல் இந்தப்புகைப்படத்தில் அவரது ஆவி தான் நின்றிருக்கமுடியும்.

ஆனந்த விகடனில் ப.திருமாவேலன் எழுதியுள்ள் விஷயம்.
ஜெயலலிதா தான் கருணாநிதிக்கு மரியாதை கொடுப்பதில்லை.ஆனால் எம்.ஜி.ஆர் ரொம்ப மரியாதை கொடுத்தார் என்ற அர்த்தத்தில் இப்போது அடிக்கடி சொல்லப்படுகிறது.
ஆனால் மேடையில் எம்.ஜி.ஆர் எப்போதும் ”கருணாநிதி” என்று பெயர் சொல்லி தாக்கித்தான் பேசிக்கொண்டிருந்தார். சட்டசபையில் கருணாநிதியைபி.ஹெச்.பாண்டியன் “ நீ ஒரு கொலைகாரன்” என்று ஏக வசனத்தில் பேசிய போதும்,கருணாநிதியை  சட்டசபையில் பொன்னையன் அடிக்கவே பாய்ந்தபோதும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டிக்கவே இல்லை.
ஆண்டவனே என்று எம்.ஜி.ஆர் கருணாநிதியை மட்டுமல்ல, திருச்சி லோகநாகனின் மாமியார் சி.டி.ராஜகாந்தத்தைக்கூடத்தான் விளித்துப் பேசுவார்!
அவரோடு 1940களில்  அறிமுகமான பலரையும் எம்.ஜி.ஆர் உரையாடும்போது ’ஆண்டவனே’ என்று தான் விளிப்பார்.

இன்று ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல,எம்.ஜி.ஆருக்கும் அன்று மிக நன்றாகத் தெரியும். ’கருணாநிதி மீதான கடும்எதிர்ப்பு அரசியல்’ மட்டுமே தான் அதிமுகவின் மூலதனம் என்பது.

இதையெல்லாம் சொல்லவேண்டியிருக்கிறது! என்ன செய்ய? What you don't know can't hurt you! Ignorance is Bliss!


http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_07.html

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_17.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_13.html

http://rprajanayahem.blogspot.in/2009/12/black-white.html

http://rprajanayahem.blogspot.in/2012/06/ka.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_30.html

Oct 21, 2012

நடிகையர் திலகம் சாவித்திரி


கேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான்!
எப்போதும் நான் பொது இடங்களுக்கு செல்லும்போது சாவித்திரி போல ஒரு பெண் தென்படுகிறாரா என்று தேடுவேன். தேடிக்கொண்டே தான் இருக்கிறேன்.இன்னும் சாவித்திரி போன்ற அச்சு அசலாக இன்னும் ஒரு பெண்ணை பார்க்க வாய்க்கவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ நிராசைகள்!என்னுடைய சாவித்திரி பாசமலர்,பாதகாணிக்கை,காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் செழிப்பான சாவித்திரி.




சாவித்திரிக்கு சிவாஜி போலவே ஒவ்வொரு காலகட்டத்திலும் உடல் அமைப்பில் மாறுபாடு  உண்டு.
தேவதாஸ்,மிஸ்ஸியம்மா,மாயாபஜார் சாவித்திரி ஒரு வகை அழகு.

களத்தூர் கண்ணம்மா,பாசமலர், பாவமன்னிப்பு, பாதகாணிக்கை, காத்திருந்த கண்கள் போன்ற படங்களில் வரும் சாவித்திரி வேறு வகை அழகு.

அப்புறம் பூஜைக்கு வந்த மலர் படத்தில் வரும் குண்டு சாவித்திரி.

திருவருட்செல்வர் படத்தில் ’ஊதிப்பெருத்த’ சாவித்திரி.

பின்னால் மலையாளப்படம் ’சுழி’ சாவித்திரி.

அப்புறம் அம்மா கதாபாத்திரங்களில் மெலிந்த ஒல்லி சாவித்திரி

அமிதாப் பச்சன் கூட இப்போது சாவித்திரி பற்றி குறிப்பிட முடிகிறது. ரேகா தன் சோட்டி மம்மி பற்றி சிலாகிக்கிறார்.

சாவித்திரி மட்டுமே அனைத்து நடிகைகளிலிருந்தும் வித்தியாசமானவர்! நடிகைகள் அனைவரிலும் மேலான திறமை கொண்டவர் தான் சாவித்திரி.

பத்மினி,சரோஜாதேவி,தேவிகா இந்த வரிசையில் முதலிடம் சாவித்திரிக்குத் தான்.

வேற்று மொழிப்பெண்கள் தமிழ் திரையில் அன்று நிகழ்த்திய கண்ணிய சாதனை மகத்தானது. முழுக்க ஹீரோ நடிகர்களின் ஆக்கிரமிப்பின் காலத்தில்,ரசிகப்பெருமக்களும் அந்த நடிகர்கள் பற்றிய பிரமிப்பில் இருக்கின்ற நிலையில்,  பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த அன்றைய சாவித்திரி,பத்மினி,சரோஜாதேவி,தேவிகாவெல்லாம் உயர்ந்த கலாபூர்வ நளினத்தை வெளிப்படுத்தினார்கள்.

சாவித்திரி தன் துணை யாரென்று ஆரம்ப காலத்திலேயே,16 வயதிலேயே தேர்ந்தெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்திருக்கிறார்.அதிலும் சாஸ்திரப்படி இரண்டாவது மனைவி அந்தஸ்தில், சம்பிரதாய வரிசைப்படி மூன்றாவது தாரமாக வாழ்க்கைப்பட்டவர்.ஜெமினி கணேசனுக்கு அப்போது 32 வயது!

(படிப்பதற்கே தலை சுற்றுகிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.)

சில வருடங்கள் ரகசியமாக அந்தத் திருமணத்தைப் பேணிக்காக்கவேண்டிய சூழ்நிலை வேறு! தலைமறைவுத் தாம்பத்தியம்.இதற்கு அவருடைய வளர்ப்பு தகப்பன் சௌதுரி மட்டும் காரணமல்ல.ஆனால் ஜெமினிகணேசன் காந்தர்வத்திருமணம் ( எவ்வளவு யோசித்தும் வேறு வார்த்தை கிடைக்கவில்லை.) செய்து கொண்ட பிரபல நட்சத்திரம் புஷ்பவல்லியும் தான் காரணம்.முதல்மனைவி பாப்ஜி அமைதியாக வேடிக்கை பார்த்தாலும் கூட புஷ்பவல்லி கடுமையான குரோதத்தை சாவித்திரி மீது காட்டினார்.
தான் ஓட்டி வந்த காரை இவர் மீது ஏற்றிக் கொல்லத்துணிகிற ஆவேசம்,துவேசம் புஷ்பவல்லிக்கு இருந்தது.

1952ல் மனம்போல் மாங்கல்யம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் சாவித்திரிக்கு திருமணம். ஏற்கனவே ஜெமினி கணேசனுக்கு1951செப்டம்பர் 22ல் புஷ்பவல்லியோடு தொடர்பு ஏற்பட்டு விட்டது.புஷ்பவல்லிக்கு 1954ல் ரேகாவும் 1955ல் ராதா என்ற பெண்ணும் பிறந்த நிலையில் அந்த வருட கடைசியில் Gemini-Pushpavalli relationship ended abruptly. 1956ல் தான் சாவித்திரியுடன் ஜெமினி திருமண உறவு வெளித்தெரிந்தது.

இவ்வளவிலும் சாவித்திரியின் நடிப்புத்திறமை ஜ்வலித்த மாயம் தான் பெரிய விஷயம். Director’s delight என்றே பெரிய இயக்குனர்கள் வாய்விட்டுச்சொன்னார்கள்.பிரமிக்க அடிக்கிற நேர்த்தியான நடிப்பு.

An angel’s graceful performance!

தெலுங்கு தமிழ் திரையுலகங்களில் கதாநாயக தேவேந்திரர்களின் இந்திராணியாக சாவித்திரி எட்டுக்கண்ணும் விட்டெரிய வலம் வந்தார்.

நிர்மலமான அழகுமுகம் கொண்ட சாவித்திரி.
பெண்மையின் மொத்த சாரமும் இயைந்து ஊறிய ஈர மென்மை.

எந்த ஹீரோ நடித்தாலும்,படத்தின் பெரும்பகுதியையும் ஹீரோ ஆக்கிரமித்தாலும் சாவித்திரி தன் விஷேச நடிப்பால் புறந்தள்ளி விட்டார்.

காதல் காட்சிகளில் vulgarity,obscenity எதுவும் காணமுடியாது. வேட்டைக்காரனில் எம்.ஜி.ஆருடன் காதல் காட்சி பற்றி கொஞ்சம் முணுமுணுப்பு இருந்தது.

சாவித்திரி தெலுங்குப்பெண்.ஆனால் தமிழ் பேசுவது ரொம்ப கச்சிதம். Accent and Diction பிரமாதம். சிவாஜி கணேசனுக்கு இணையாக ஏன் இன்னும் கூடிய அளவில் தமிழ் உச்சரிப்பு சிறப்பாகவே இருக்கும்.ஆனால் சிவாஜி ஒரு தெலுங்குப் படத்தில்(பெம்புடு கொடுகு) நடித்தபோது “Ganesan’s Telugu pronunciation is horrible” என்று அங்கே ஒரு பத்திரிக்கையில் (Kinema, Dec 1953 issue)எழுதினார்கள். நடிகர் திலகத்தை விட நடிகையர் திலகம் எத்தகைய திறமை வாய்ந்தவர்!
சார்லி சாப்ளின் போலவே சாவித்திரியும் Left hander!சாவித்திரியின் நடிப்பைப் பற்றி விளக்கக்கூட ஒரே வார்த்தை-'Perfect'.

சாவித்திரியின் கண்கள் பேசிய கதைகள்! முக பாவங்களின் உணர்ச்சிகள்!

சரோஜாதேவி தனக்கு கிடைத்த வாய்ப்புகளால் சாவித்திரியை மிஞ்சி விடமுடிந்தாலும் அவருடைய திறமையான நடிப்பை நெருங்க முடிந்ததில்லை.

நடிகையாக சாவித்திரியின் சாதனைகள் பற்றி எழுதி உணர்த்தி விட சாத்தியமில்லை. The greatest actress ever born and ever to be born!
ஆறு படங்கள் இயக்கியவர்.ஜெமினி,வாணிஸ்ரீ யுடன் நடித்த ’குழந்தையுள்ளம்’,(’முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு,துயில் கொண்டதே இன்பத்தேனுண்டு’ என்ற ஆரம்பகால எஸ்.பி.பி பாடல் இந்தப்படத்தில் தான்!)சிவாஜியுடன் இவர் நடித்த’பிராப்தம்’ (பி.சுசிலா டிஎம்எஸ் பாடிய ’சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்.முடிவே இல்லாதது.எங்கே சென்றாலும் தேடிகிடைக்கும் இனிய சுகம் இது’)இரண்டு படங்களும் சாவித்திரியே இயக்கியவை தான்.
1969ல் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் பிரிந்து விட்டார்கள்.
Even though unforgiving, never

Against thee shall my heart rebel
                                 -Byron


சாவித்திரி தமிழில் எடுத்த ’பிராப்தம்’ படமும் தெலுங்கில் எடுத்த ’விண்ட சம்சாரம்’படமும் இவர் பொருளாதாரத்தை சிதைத்து வாழ்வு தடம்புரளக்காரணமாகிவிட்டது.
தெலுங்கில் சாவித்திரியுடன் அக்கினேனி நாகேஸ்வரராவ்,ஜமுனா நடித்து வெற்றி பெற்ற படம் ’மூக மனசுலு’.இதைத்தான்  சாவித்திரி தமிழில் 1969ல் படப்பிடிப்பை துவங்கி சிவாஜி,சந்திரகலாவும்  நடிக்க ’பிராப்தம்’ என்ற பெயரில் தானே கதாநாயகியாக நடித்து,தயாரித்து இயக்கினார்.
’பிராப்தம்’ படம்  இரண்டு வருடம் தயாரிப்பில் இருந்ததால் வட்டி எகிறி விட்டது.சிவாஜி படங்கள் சில அந்த நேரத்தில் சரியாக ஓடாததால் வினியோகஸ்தர்கள் இந்தப் படவெளியீட்டில் ஒத்துழைக்கவில்லை.அதனால் படம் படுதோல்வி கண்டது.

தமிழில் சிவாஜி பத்மினி நடித்த ’வியட்நாம் வீடு’ படம் தான்தெலுங்கில்1970ல் துவங்கி ரீமேக்காகி ’விண்ட சம்சாரம்’ என்ற பெயரில் சாவித்திரியும் ஜக்கையாவும் நடித்து வெளியானது.

பிராப்தம், விண்ட சம்சாரம் இரண்டு படங்களுமே ஒரே நாளில் 1971ல் வெளியாகிய படங்கள். துரதிர்ஷ்டங்கள் எப்போதுமே தனியாக வருவதேயில்லை!

ரு மனுஷியாக saint என்று தான் சொல்லவேண்டும். சொத்துக்களை இழந்து,ஹபிபுல்லா ரோடு பங்களாவை இழந்து, அண்ணா நகர் வீட்டில் இருந்த போதுகூட அவர் செய்த உதவிகள் பற்றி தெரிய வரும்போது ஆச்சரியம் தான் மிஞ்சுகிறது.

ஒரு ரசிகர். தினமும் நூறு ரூபாய் மணியார்டர் சாவித்திரிக்கு செய்து வந்தவர்.திடீரென்று ஒரு நாள் தன் தொழிலில் நொடித்துப்போய் சாவித்திரியைக் காண வந்து தன் நிலையை சொல்கிறார். 6000 ரூபாய் இருந்தால் மீண்டும் பிசினசை துவங்கமுடியும். வீட்டில் உள்ள தன் ஷீல்டுகள் எல்லாவற்றையும் ஒரு சேட்டுக்கடையில் விற்று 10000 ரூபாய் அந்த ரசிகருக்கு கொடுத்தவர்.

அண்ணாநகர் வீட்டுக்கு இவருடைய பழைய டிரைவர் ஒருவரின் மகள் வருகிறார்.தன்னுடைய விலையுயர்ந்த சேலையை எடுத்து வீட்டு முன் இருக்கிற ரிக்‌ஷாக்காரனிடம் கொடுத்து விற்று வரச்சொல்லி,கிடைக்கும் பெருந்தொகையான பணத்தை அந்தப்பெண்ணின் திருமணச்செலவுக்கு கொடுக்கிறார்.
பெண் தெய்வம் சாவித்திரி!

எம்.ஜி.ஆருடன் மஹாதேவி,வேட்டைக்காரன்,பரிசு ஆகிய படங்கள். சந்திர பாபு தயாரித்து இயக்கி, வாழ்க்கையைப் பாழாக்கி, முடியாமல் நின்று போன ’மாடி வீட்டு ஏழை’யில் கூட எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி தான்.

சிவாஜியோடு ஜோடியாக அமரதீபம்,வணங்காமுடி,அன்னையின் ஆணை, காத்தவராயன் துவங்கி,ரத்தத்திலகம்,கை கொடுத்த தெய்வம், நவராத்தி்ரி, திருவிளையாடல் தாண்டி பிராப்தம் வரை சாவித்திரி!

ஜெமினி கணேசன் தான் சாவித்திரிக்கு மிகப்பொருத்தம் என்று இன்றும்

”யார் யார் யார் அவள் யாரோ ஊர்பேர் தான் தெரியாதோ” “காலங்களில் அவள் வசந்தம்” காற்று வந்தால் தலை சாயும் நாணல்” போன்ற பாடல்கள் சாட்சி சொல்கின்றன.

பாசமலர் படம் ரிலீஸ் அன்று எல்லாம் உனக்காக என்று ஒரு படமும் வெளியானது. அதில் சிவாஜியின் ஜோடி சாவித்திரி. ஆனால் அண்ணன் தங்கையாக பாசமலரில் வந்தவர்கள் அதே நேரத்தில் இதில் ஜோடியாக நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை.


சாவித்திரியின் Rash car driving பற்றி இப்போதும் பலர் நினைவில் வைத்திருக்கிறார்கள்.அவருடைய குடிப்பழக்கம்....
மிகத்தேர்ந்த நடிகை சொந்த வாழ்க்கையில் வேஷம் போடத்தெரியாதவராயிருந்திருக்கிறார்!
அவருடைய அம்மா சுபத்ராம்மா,அக்கா மாருதி ஆகியோரை புகைப்படங்களாக பார்க்கும்போது அவர்கள் சாவித்திரியின் பேரழகுக்கு உறை போடக்காணமாட்டார்கள் என்று உடனே தோன்றுகிறது. சேற்றில் செந்தாமரை தான்.
ஒன்றரை வருடங்கள் கோமாவில் கிடந்து சாவித்திரி இறக்கவேண்டியிருந்திருக்கிறது.அப்போது 46 வயது.
சில மரணங்கள் ஆறாத துயர வடுக்களை ஏற்படுத்தி விடுகின்றன.
ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
ஆனாலும் வழியென்ன தாயே!

இந்திய அரசாங்கம் 08-03-2009ல் ஒரு தபால்தலை சாவித்திரிக்கு வெளியிட்டது.இந்த விஷேச கௌரவம் இந்தி நடிகை தேவிகாராணி,மீனாகுமாரிக்கும் கூட கிடைத்திருக்கிறது.
.......

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_29.html

Oct 18, 2012

1971 இடைத்தேர்தலில் தமிழகம்


1967ல்காங்கிரஸுக்கு தேர்தல் சின்னம் இரட்டைக்காளை மாடுகள்.

காளைமாட்டுச் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று
1967 பொதுத்தேர்தலில் பிரச்சாரம்.

”ஆயிரம் வரிகள் விதித்தவரே! அண்ணாவை சிறையில் அடைத்தவரே!

அறுபத்தியேழில் சூரியன் உதிக்குது!

நில்! நில்! நில்! காளைமாடே நில்! நில்!”

வாழ்க்கைப்படகு படத்தில் ”ஆயிரம் பெண்மை மலரட்டுமே! ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே” பாடலின் மெட்டு.

அப்போதைய தமிழக முதல்வர் பக்தவத்சலம்.

திமுக கோஷம் - பக்தவத்சலக்குரங்கே! பதவியை விட்டு இறங்கு!

உதயசூரியன் தான் உதித்தது!

”படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்” என்ற காமராஜர் தன் சொந்த ஊரில் தோற்றுப்போனார்.

51 இடங்கள் காங்கிரசுக்கு.

பரங்கி மலை தொகுதியில் நின்ற குண்டடிபட்ட எம்.ஜி.ஆர் தான் படுத்துக்கொண்டே ஜெயித்தார்.

அண்ணாத்துரையின் தி,மு.க அரியணையேறியது.

திமுக நடத்திய உலகத்தமிழ் மாநாடு.

அண்ணனுக்கும் ஓர் சிலை வைத்த போது

”ஆள் காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார் எம் அண்ணா! ஆனணயிடுகிறார் என்றெண்ணியிருந்தோம்.
ஐயகோ! இன்னும் ஓராண்டே வாழப்போகிறேன் என்று ஓர் விரல் காட்டியது இன்றல்லவோ புரிகிறது.” என்று கருணாநிதி கதறியழுதார்.

திமுகவின் தலைவரானார்.அடுத்த முதல்வரானார்.

ஜனாதிபதி தேர்தலில் இந்திராவின்‘மனசாட்சி ஓட்டு’ யுக்தி காரணமாக சஞ்சீவரெட்டி தோற்று வி.வி.கிரி ஜெயித்ததில் காங்கிரஸும் இண்டிகேட் சிண்டிகேட் என்று உடைந்தது.

1971ல் அண்ணனை இழந்த தம்பிகள் இடைத்தேர்தலை சந்திக்கும்போது

இந்திராகாந்தியின்இண்டிகேட் காங்கிரசுடன் கூட்டு.

தமிழகத்தைப்பொறுத்தவரை அது சிண்டிகேட் என்ற ஸ்தாபன காங்கிரஸ் தான்.1967ல் திமுகவுடன் கூட்டு போட்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சி இப்போது ஸ்தாபன காங்கிரஸுடன் கூட்டு.

இங்கே  சின்னவயது கருணாநிதியை எதிர்த்து
மூதறிஞர் ராஜாஜியும் பெருந்தலைவர் காமராஜரும் ஓர் அணியில்!

காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் வெற்றி பற்றி சந்தேகமில்லை என்ற நிலை தான்.
சுதந்திரா கட்சி ஹண்டே பற்றி குறிப்பிடாமல் இருக்கக்கூடாது.சட்டசபையில் அவர் அப்போது கதாநாயகன். 
பெரியாருக்கு வீரமணி போல ராஜாஜிக்கு அப்போது டாக்டர் ஹண்டே!
திமுக எதிர்ப்பு பிரச்சாரத்தில் அவர் முன்னிலை வகித்தார். இந்தப் பிரச்சார சமயத்தில் எரியீட்டி என்ற திமுக நாளேட்டில் “இங்கே தமிழகத்தில் ஹண்டேக்களும் புண்டேக்களும் இருக்கமுடிகிறதென்றால் அது எங்கள் சகிப்புத்தன்மையாலும்,பெருந்தன்மையாலும் தான்.” என்று எழுதப்பட்டது.


எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் வெறி பிடித்த ரசிகர் கூட்டம். இந்த தேர்தல் கூட இந்த இருவருக்குமான கௌரவப்பிரச்னை என்ற நிலை.

சிவாஜி கணேசன் “ நடிப்பில் சந்திப்போமா? வீரத்தில் சந்திப்போமா?” என்று எம்.ஜி.ஆருக்கு பகீரங்க சவால் விட்டார்.

எம்.ஜி.ஆர் இதற்கு பதில் சொன்னார்.

” தம்பி கணேசன் நடிப்பில் சந்திப்போமா? என்று என்னைப் பார்த்துக்கேட்கிறார்.நடிப்பில் என்னுடைய பாணி வேறு.அவருடைய பாணி வேறு என்பது அனைவருக்கும் தெரியும்.ஏன் என் தம்பிக்கே தெரியும்.பின் ஏன் என்னை அவர் நடிப்புக்கு சவால் விட்டுக் கூப்பிடவேண்டும்.ஒரு வேளை ’சிவந்த மண்’ படத்தில் இவரை விட நண்பர் முத்துராமன் சிறப்பாக நடித்திருப்பதாக எல்லோரும் சொல்கிறார்களே! அதனால் சிவாஜிக்கு தன் நடிப்பில் சந்தேகம் வந்து விட்டது போலும்!

வீரத்தில் சந்திப்போமா என்று கேட்கிறார்! ஐயோ பாவம்!”

கடலலையெனத்திரண்டிருந்த கூட்டத்தின் சிரிப்பும் ஆரவாரமும் அளவிடமுடியாதபடி நீண்ட நேரம் நீடித்தது.


’தங்கச்சுரங்கம்’ படத்தில் சிவாஜிக்கு வில்லனாக நடித்த ஓ.ஏ.கே தேவர் திமுக மேடையொன்றில் “ கணேசா! நீ முதலில் என்னுடன் நடிப்பில் மோதிப்பார்.’ என்று சவால் விட்டார்.
கலர் கதாநாயகன் ரவிச்சந்திரன் அப்போது தி.மு.கவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த கதை இன்று பலருக்கு தெரியாது.

 நாகப்பட்டினத்தில் சிவாஜி பிரச்சாரம் செய்தபோது "நாகப்பட்டினத்துக்குத்தான் என் இரண்டு பெண்ணையும் கொடுத்திருக்கிறேன்" என்றார்.
இதற்கு நடிகர் எஸ்.ஏஅசோகன் "ஊருக்கே பொண்ணைக் கொடுத்துட்டாரா?" எனப்பேசி சிவாஜியின் பகையை சம்பாதித்தார்.

கருணாநிதி பேசிய ஒரு கூட்டத்தில் ஒருவர் “ தேர்தல் பிரச்சாரத்தில் வரம்பு மீறி ஸ்தாபன காங்கிரசார் அநாகரிமாக கலைஞரை விளக்குமாற்றுடன் ஒரு பெண் கோபமாக பார்த்து சண்டைக்கு வருவது போல படம் வரைந்திருக்கிறார்கள்” என்று வேதனைப்பட்டார். அதற்கு கருணாநிதி மேடையில் சொன்னார். ”காங்கிரசார் சித்திர எழுத்தில் ஆர்வம் கொண்டவர்கள். அந்தப்பெண் இந்த கருணாநிதியிடம் திமுக ஆட்சியின் நான்காண்டு கால சாதனைகளை விளக்குமாறு கேட்கிறாள்.மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் என்னவெல்லாம் நன்மை செய்யப்போகிறீர்கள் என்று விளக்குமாறு கேட்கிறாள்.அண்ணனை இழந்த தம்பிகள் இந்த தேர்தலில் மீண்டும் வென்று சரித்திரம் படைக்கும்போது மக்கள் வாழ்வில் ஏற்படப்போகும் மறுமலர்ச்சியைப்பற்றி அன்போடு விளக்குமாறு கேட்கிறாள்.”

கருணாநிதி பேசிய மற்றொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் எதிரே ஒரு சுவரில் “ பாரு பாரு நல்லாப்பாரு திமுக ஆட்சியின் அலங்கோலத்தைப் பாரு!” என்று பட்டியல் போட்டு எழுதியிருந்தார்கள்.

கருணாநிதி அதைப் பார்த்து விட்டு தன் கண்ணாடியைக் கழற்றி துடைத்து மீண்டும் முகத்தில் பொருத்திக்கொண்டு தன் விசேஷமான கரகரத்த குரலில் சொன்னார்: ”பாரு பாரு! நல்லாப் பாரு!
51 இந்தத்தேர்தலில் 15 ஆகுதா இல்லையான்னு பாரு!”

1971 தேர்தலில் திமுக அமோகவெற்றி பெற்றபோது ஸ்தாபன காங்கிரஸுக்கு 15 இடங்கள் தான் கிடைத்தது!

வாக்குச்சீட்டில் ரஷ்ய மை பயன்படுத்தப்பட்டிருந்தது என்ற புரளியை கண்ணியத்துடன் நாகரீகமாக, படுதோல்வி அடைந்த நிலையிலும் பெருந்தலைவர் காமராஜர் புறந்தள்ளினார்.ஜிகினா அரசியல் அறியாத உத்தமத்தலைவன்!
எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் இணைந்து கண்ட மாபெரும் வெற்றி இது.
1972ம் வருடம் முடியுமுன்னே இருவருக்கும் பிரிவு வந்து அரசியல் காட்சிகள் மாற ஆரம்பித்து விட்டன.

எது எப்படியோ! ஒரு விஷயத்தில் அதன் பின் எந்த மாற்றமும் இல்லை என்றாகிவிட்டது.தமிழக அரசியல் கருணாநிதியை மட்டும் மையம் கொண்டதே தான். ’கருணாநிதி எதிர்ப்பு’ என்ற ஒரு குறுகிய வட்டம்! இதைத் தாண்டி ஒரு உன்னத ’அரசியல் சித்தாந்தம்’ எதுவும் வாய்க்கவில்லை என்பது பெரும் துரதிர்ஷ்டம்.
http://rprajanayahem.blogspot.in/2012/10/the-man-who-scared-indira-gandhi.html

Oct 17, 2012

இரண்டு நடிகர்கள்

Nov 22, 2008
டவுன் பஸ் கண்ணப்பா

பட்டபடிப்பு முடித்திருந்த நேரம். கோரிபாளையம் அமெரிக்கன் கல்லூரி முன் உள்ள கடைகளுக்கு முன் எப்போதும் கலகலப்பாக கூடி பேசிகொண்டிருப்போம். என் க்ளாஸ் மேட் அருண் தான் ஒரு புது நண்பன் ஒருவனை காட்டினான்.

"மலைச்சாரலில் இளம் பூங்குயில் அதன் மார்பினில் ஒரு ஆண் குயில் " என்ற பாடலை அந்த புது நண்பன் அழகாக பாடினான்.

அருண் சொன்னான்." மாப்பிள்ளை ! இவனோட அப்பா சினிமா நடிகராம்டா " என்றான். அந்த நண்பனிடம் "யார் உங்க அப்பா ?" -கேட்டேன்.

'என் என் கண்ணப்பா !' - புது நண்பன் பதில் .

"அடடே 'டவுன் பஸ்'கதா நாயகன். கே சோமு படம். பி என் வசனம் எழுதினார் .அஞ்சலி தேவி தான் அதில் உங்க அப்பா கண்ணப்பா வுக்கு ஜோடி. இருவருக்கும் பாட்டு 'பொன்னான வாழ்வே மண்ணாகி போச்சே. உலகம் இது தானா துயரம் நிலை தானா' "

அந்த நண்பன் முகம் பிரகாசமாகியது.

நான் தொடர்ந்தேன்." ''தேவகி ' படத்தில் எம் ஜி யார் மனைவி வி என் ஜானகியோடு கதாநாயகனாக கண்ணப்பா நடித்தவர் " என்று ஏனைய நண்பர்களிடமும் சொன்னேன்.

'எஸ் எஸ் ஆர் நடித்த 'தெய்வத்தின் தெய்வம் ' படத்தில் இரண்டாவது கதாநாயகன். சிவாஜி படம் கப்பலோட்டிய தமிழனில் சிதம்பரனாருக்கு தேசாந்திர தண்டனை கொடுத்தவுடன் பைத்தியமாகி விடும் சிதம்பரனார் தம்பி. ரத்ததிலகத்தில் சாவித்திரி கணவனாக வரும் சீனாக்கார ராணுவ அதிகாரி ' இப்படி நான் அடுக்கி கொண்டே போகும்போது அந்த புது நண்பன் ( பெயர் இப்போது மறந்து விட்டது.) கண்கள் கலங்கி விட்டது.

" இவ்வளவு நாளும் நான் எங்கப்பா சினிமா நடிகர் என்று சொன்னால் யாருக்குமே புரியவில்லை. என்னை ஏளனமாக பார்த்தவர்கள் உண்டு. ' என்னமோ சொல்றான். யாருன்னே புரியலே ' என்பார்கள். நீங்கள் தான் சார் எங்க அப்பா பற்றி இவ்வளவு சொல்லியிருக்கிறீர்கள் . இப்படி நான் சொன்னவுடன் இவ்வளவு விவரமாக எங்க அப்பா பற்றி நீங்கள் தான் பேசியிருக்கிறீர்கள் ! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.நம் வயதில் யாருக்குமே என் அப்பா பற்றி எதுவுமே தெரியவில்லை."

கமல், ரஜினி காலம்.கண்ணப்பா பற்றி யாருக்கு தெரியும்!

அன்று வீட்டில் அவர் அப்பா என் என் கண்ணப்பா விடம் என்னை பற்றி மாய்ந்து மாய்ந்து சொல்லியிருக்கிறார்.
கண்ணப்பா தன் வீட்டுக்கு என்னை விருந்து சாப்பிட அழைத்திருக்கிறார். மதுரை கே கே நகரில் வீடு. அதற்கு மறுநாள் மதியம் கண்ணப்பா மகனுடன் அவர் வீட்டுக்கு போனேன். கண்ணப்பா வுக்கு ஒரு ஆண், ஒரு பெண் இரண்டு பிள்ளைகள். பெண் கல்லூரியில் படித்துகொண்டிருந்தார். கண்ணப்பா, அவர் மனைவி இருவரும் என்னை அன்போடு உபசரித்தார்கள்.

பழைய ஆல்பங்களை கண்ணப்பா எடுத்து காட்டினார். எனக்கு பழைய போட்டோ ஆல்பங்கள் பார்ப்பது என்றால் கொள்ளை விருப்பம்.

ஒரு போட்டோ வில் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில் கண்ணப்பா, சிவாஜி கணேசனும் பன்னிரண்டு வயது சிறுவர்களாக, அதே புகைப்படத்தில் வேட்டி கட்டிய இளைஞனாக எம் என் நம்பியார். இன்னும் "சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா "சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன். பல நடிகர்களை பார்த்து அவர்கள் பெயரை குறிப்பிட்டு நானே அடையாளம் காட்டியது கண்ணப்பா வுக்கு திகைப்பு !

கண்ணப்பா அப்போது ஸ்பெஷல் நாடகங்கள் போட்டுகொண்டிருந்தார்.

 .............................................
 

Nov 24, 2008


ரஞ்சன்

ரஞ்சன் அமெரிக்காவில் இறந்தார் .



ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார் .பரதம் நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் பயின்றார்.
இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலை கழகத்தில் M.Litt பட்டம் பெற்றார்.
ஏரோப்ளேன் ஓட்டுவார் !



ஏரோப்ளேன் ஓட்டுவது போல நடிக்கும் நடிகர்களை தான் பார்த்திருக்கிறோம்.
நாற்பதுகளில் திரைப்பட பரபரப்பான நடிகர்.Action King!
மங்கம்மா சபதம்(1943) படத்தில் வைஜயந்தி மாலாவின் தாயார் வசுந்திரா தேவி யுடன்.
சந்திரலேகா(1948) வில் வில்லன்.
கத்தி சண்டை பிரமாதமாக போடுவார்.
அந்த காலத்தில் தமிழ் நவீன இலக்கிய வாசகர் .
ஹிந்தி படங்களில் நடித்தார்.

பின்னால் 'நீலமலை திருடன் ' (1957)படத்தில் நடித்தார்.அஞ்சலி தேவி ஜோடி .
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா !தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா " டி எம் எஸ் பாட்டு குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார்.

இன்றைக்கு அறுபது வயதுடையவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் சினிமா பற்றிய பேச்சில்
'எம்ஜியாருக்கும் ரஞ்சன் னுக்கும் கத்தி சண்டை வைத்தால் யார் ஜெயிப்பார்கள்' இது பற்றி எப்போதும் சூடான விவாதம். ஒரு அறுபது வயதுக்காரர் சொன்னார் இதை !

நீலமலை திருடன் படத்தில் அஞ்சலி தேவியிடம் காதல் காட்சியில் ரஞ்சன் பேசும் ஒரு வசனம்-
" நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா ? நாக்கை அறுத்து போட்டுட்டு பாயாசத்தை குடிச்சு பாரு ன்னு சொல்ற மாதிரி இருக்கு! மூக்கை அறுத்து போட்டு ரோசா பூவை மோந்து பாருன்னு சொல்ற மாதிரி இருக்கு!"
காதல் வசனம் !!