Share

Apr 8, 2024

செந்தாமரை

கோபிச்செட்டிப்பாளையம் லாட்ஜ். 
காலை நேரத்தில் மேலே இருந்து
 கீழே டீக்கடையை எட்டிப்பார்த்து 
பிஸியான பிரபல நடிகர் செந்தாமரை சத்தமாக 
" டேய் ஒரு டீ குடுத்து விடுடா, டேய்"
கீழேயிருந்து டீக்கடைக்காரர் அதே தோரணையில் மிக சத்தமாக மேலே இவரைப் பார்த்து உடன் பதில் 'அடி'
 " ஸ்ட்ராங்கா வேணுமாடா, இல்ல லைட்டா டீ வேணுமாடா, ஏன்டா"

யாராயிருந்தாலும் டேய் என்று அதட்டலாக மீசையை நீவியவாறே தான் ஜபர்தஸ்தாக தன்னை காட்டிக்கொள்வார் செந்தாமரை.

"டேய் அலெக்ஸ்" என்று வாகினி ஸ்டுடியோவில் இயக்குநர் மகேந்திரனை செந்தாமரை கூப்பிட்டதை பார்த்திருக்கிறேன்.
அப்படி கூப்பிடும் போது அதை பலரும் கவனிக்கும்படி தான் 'டேய்' சொல்வார் 
மகேந்திரன் அப்போது ஜானி வரை இயக்கியிருந்த நேரம்.
மகேந்திரனுக்கு 1960களிலேயே செந்தாமரை நெருக்கமானவர். 

மகேந்திரன் எழுதிய 'இரண்டில் ஒன்று' நாடகம் செந்தாமரை காவல் துறை அதிகாரியாக நடித்து நூற்றுக் கணக்கான தடவை மேடையேற்றப்பட்டது. பின்னர் இதே நாடகம் 'தங்கப்பதக்கம்' என்று சிவாஜி கணேசன் நடிக்க மேடையேறி மிகவும் பிரபலமாகி 'தங்கப்பதக்கம்' சினிமாவானது.

 ரொம்ப தாமதமாக மெட்டியில் தான் இவருக்கும், மகேந்திரன் தன் ரத்த சொந்தம் ராஜேஷுக்கும் ( ராஜேஷின் அத்தான் மகேந்திரன். அத்தை மகன் )வாய்ப்பு கொடுத்தார்.

டேய் என்று மகேந்திரனை கூப்பிட்ட போது சரியான பட வாய்ப்பின்றி தான் செந்தாமரை இருந்தார். ஆனாலும் பந்தாவாகத் தான் டேய் சொன்னார். அவருடைய இயல்பு.

வி. எஸ். ராகவனும் செந்தாமரையும் நடித்த போலீஸ் ஸ்டேஷன் காட்சி படப்பிடிப்பு அடையார் திரைப்பட கல்லூரியில் நடைபெற்ற போது ஷூட்டிங்கில் பார்த்தேன்.
செந்தாமரை இன்ஸ்பெக்டராக மீசையை தடவிக் கொண்டு அசிஸ்டன்ட் டைரக்டரிடம் 
"டேய் பிரபாகர். என்னடா டயலாக் வாசிக்கிற. உச்சரிப்பே சரியில்ல. 
நான் தமிழ் வாத்தியார்டா" 

 வி.எஸ். ராகவனுடன் பேசினேன். ஆனால் செந்தாமரையிடம் பேசத் தோன்றவில்லை.

ராஜேஷ் "அந்த ஏழு நாட்கள்" படத்தின் மூலம் பிரமாதமான வரவேற்பு பெற்றவர். இன்று வரை அவருக்கு பிடித்த படமாக சொல்வார். 
"மெட்டி"யை தனக்கு பிடிக்காத படமாக வெளிப்படையாக என்னிடம் ராஜேஷ் சொல்கிறார்.

செந்தாமரை அசதியாக இருந்த சமயத்தில் ராஜேஷிடம் " டேய் ராஜேஷ், பாக்யராஜ் கிட்ட சொல்லுடா. படமில்லாம இருக்கேன்"

ராஜேஷ் இவருக்கு வாய்ப்பு தரச்சொல்லி
பாக்யராஜிடம் கேட்டிருக்கிறார். 

பாக்யராஜ் எவ்வளவு பேர் வாழ்க்கையில் சிறப்பான மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறார்.

"தூறல் நின்னு போச்சி" செந்தாமரை கண்ட பசுமையான வாய்ப்பு. அதன் பிறகு தான் பல பொன்னான வாய்ப்புகள்.

நியூமராலஜி ஜோதிடம் பார்த்து  
பெயரை எப்படி எந்த எண்ணில் மாற்ற வேண்டும் என்று பலருக்கும் சொல்லிக் கொண்டிருந்தார்.
குமுதம் இதழில் நியூமராலஜி ஜோதிடம் பற்றி தொடர் எழுதினார்.

நன்றாக நினைவிருக்கிறது.
1992ல் ராசுக்குட்டி டப்பிங் ஏ.பி.என். டப்பிங் தியேட்டரில் நடந்து கொண்டிருந்தது.

இரண்டு நடிகர்கள் மரணச் செய்தி பற்றி தகவல் கேட்க நேர்ந்தது. 
ஒருவர் செந்தாமரை. 
இன்னொவர் பழம் பெரும் நடிகர்
 எம். கே. முஸ்தபா. 
ஒரே நாளில் தான் 
இருவருமே மறைந்தார்கள்.

https://www.facebook.com/share/p/QKuGG7YVxi29c23r/?mibextid=oFDknk

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.