நிர்ப்பந்த கவித
‘காடு வரையும் போது மரங்களை வரையாதே’ இப்படி கவித படிக்க நேர்ந்தது.
இதை விரித்து இன்னும் எழுதலாமே.
‘ கடல் வரையும் போது அலைகளை வரையாதே’
‘வானத்தை வரையும் போது மேகங்களை வரையவே வரையாதே’
‘கவிதையெழுத வார்த்தைகளை பயன்படுத்தாதே’
‘கதை எழுதும் போது கதா பாத்திரங்களே இல்லாமல் பார்த்துக் கொள்’
'ஓவியம் வரையும் போது வண்ணங்களை பயன்படுத்தாதே'
...
முன்னர் வெளி வந்து கொண்டிருந்த விகடன் தடத்தில்
'கவிதையின் கையசைப்பு' கட்டுரையில் வாஸ்கோ போபோ என்பவர் எழுதிய செர்பிய கவிதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. ’ஆங்கில மூலத்தால்’ இருந்து தானே?
மௌனியின் ’சாவில் பிறந்த சிருஷ்டி’ எப்போதோ எழுதப்பட்டு விட்டது. அதை படித்து விட்டவர்கள் நாம். இந்த சிறுகதையை பெங்க்வின் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலக சிறுகதைகளில் சேர்த்திருக்கிறது.
இந்த கவிதையில் பிரமிக்க என்ன இருக்கிறது?
’முன்னொரு காலத்தில் ஒரு கதை இருந்தது
அதன் முடிவு, கதை
தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.
அதன் தொடக்கம் கதையின் முடிவுக்குப்
பின்பே வந்தது.
தங்கள் சாவிற்குப் பிறகு
கதையின் நாயகர்கள்
கதைக்குள் வந்தார்கள்
தங்கள் பிறப்பிற்குப்
பிறகு வெளியேறிப்போய் விட்டார்கள்.”
இதே முறையில் பல கவிதைகள் எழுதலாம் போல் இருக்கிறது. சலிப்பான கவிதை முறைமை.
'முன்னொரு காலத்தில் ஒரு ஓவியம் இருந்தது
அதன் கடைசி தீற்றல், ஓவியம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிட்டது.
அதன் முதல் வரி வடிவம் ஓவியம் முடிக்கப்பட்டதற்கு
பின்பே வந்தது.
தாங்கள் அழிக்கப்பட்டதற்கு பிறகு
ஓவியத்தின் நிழல் பிம்பங்கள்
ஓவியத்திற்குள் வந்தன.
பிம்பங்கள் வண்ணத்தில் பிறப்பிக்கப்பட்ட
பிறகு வெளியேறிப் போய் விட்டன.'
இதை இசை, சிற்பம் இவற்றை வைத்தும் எழுதிப்பார்க்கலாம்.
ஏன் சினிமா பற்றி கூட
’அந்த திரைப்படம் கடைசி சீனில் கடைசி ஷாட்டுக்கு முன்னரே
தொடங்கி விட்டது.
முதல் ஷாட் ஷுட் பண்ணும்போதே முடிந்து விட்டது’
மண்டையில் மரம் முளைக்காத வரை எழுதிப்பார்க்கலாம். அல்லது மண்டையில் மரம் முளைத்தபின்னும் பிடிவாதமாக எழுதிப்பார்க்கலாம்.
....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.