2009 post
சுகந்தி சுப்பிரமணியன்
சுப்ரபாரதி மணியன் வீட்டிற்கு ஒரு முறை ஈரோடு நாங்கள் இருவரும் சென்று விட்டு திருப்பூர் திரும்பிய போது அவர் அழைத்து சென்றிருந்தார் .
அங்கே அவர் துணைவி சுகந்தி என்னிடம்
" அய்யா, என் கணவர் உங்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். எனக்கு தமிழ் கற்று கொடுங்கள் அய்யா " என்று கேட்டார். ஐந்து வயது குழந்தையாக தோன்றிய சுகந்தி யை மனபாரத்துடன் நான் பார்த்த போது இருபது வருடங்களுக்கு முன் அவருடைய "புதையுண்ட வாழ்க்கை ' கவிதை நூலை பற்றி புதுவையில் நடத்திய கருத்தரங்கம் நினைவில் நிழலாடியது.
சுப்ரபாரதி மணியன் உள்ளே சமையல் அறைக்கு சென்ற போது சுகந்தி " அய்யா, உங்கள் பேனாவை எனக்கு தாருங்கள் அய்யா" என குழந்தை கேட்பது போல கேட்டார் . நான் உடனே அவரிடம் கொடுத்தவுடன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். அதன் பின் சுப்ரபாரதி மணியனும் நானும் பேசுவதை ஆர்வத்துடன் சுகந்தி ஜன்னலில் பார்த்துக்கொண்டிருந்தார்.
அன்று சுப்ரபாரதி மணியன், சுகந்தி, இரு மகள்கள் இவர்களை எண்ணி மிகுந்த வியாகுலம் அனுபவித்தேன்.
சென்ற மாதம் மறைந்த சுகந்தி சுப்பிரமணியன் அவர்களுக்கு மார்ச் 15 தேதியன்று திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தில் அஞ்சலியுரை நிகழ்த்தினேன்.
மரணம் சுகந்திக்கு பரிபூரண விடுதலை தான். அவர் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு நீரில் இருந்து வெளிவந்த மீன் போல சொல்லணா துயரத்தை அனுபவித்த பெண்மணி. கணவருக்கு, மகள்களுக்கு பாரமாக வாழ நேர்ந்த துர்பாக்கியசாலி. இவர் கணவர் சுப்ரபாரதி மணியன் சிலுவை சுமந்திருக்கிறார் என நான் சொல்வேன். தன் மனைவியின் மனநோய் அவருக்கு ஏற்படுத்திய உளைச்சல், அவமானம், வேதனை குறித்து ஒரு போதும் முணுமுணுப்போ, பல்கடிப்போ எப்போதும் அவரிடம் இருந்து கேட்க நேர்ந்ததில்லை.
இரண்டு பெண் பிள்ளைகள். தாய் சிலையாகி போன நிலையில் மணியனே பிள்ளைகளுக்கு தாயுமானவர். சுகந்தியின் புதையுண்ட வாழ்க்கையை மீட்டு விட தளரா நம்பிக்கையோடு மீண்டு எழுதலின் ரகசியம் என்று தன்னால் செப்பனிடப்பட்ட சுகந்தியின் கவிதைகளுக்கு பெயர் வைத்தார்.
காலச்சுவடு பத்திரிகையில் அம்பையும், உயிர்மையில் கவிஞர் சுகுமாரனும் அஞ்சலி கட்டுரை எழுதியுள்ளனர். சுகுமாரனின் அஞ்சலி சிறப்பாக வந்திருந்தது.
காலச்சுவடு அம்பை அஞ்சலி ...?
'நாச்சார் மட விவகாரம்' சிறுகதை சுந்தர ராமசாமிக்கு, கண்ணனுக்கு எப்படிப்பட்ட அவமானத்தை தந்தது என்பதை நான் நன்கறிவேன். சு. ரா இது பற்றி என்னிடம் போனில் மிகுந்த துக்கத்துடன் சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவிருக்கிறது. கண்ணனும் தன் மன உளைச்சலை என்னிடம் சொல்லியிருக்கிறார்.
சு ரா இறந்த பின் ஜெகம் பிராடு தூங்காம, பேலாம, சாப்பிடாம எழுதுன இருநூறு பக்க புத்தகத்தில் சு ரா வின் ஆளுமை எந்த அளவுக்கு சிதைக்கப்பட்டு விட்டது என்று கண்ணன் என்னிடம் தொலைபேசியில் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார். சொல்லப்போனால் அந்த புத்தகம் பற்றி கண்ணனும் நானும் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்துக்கொண்டோம் . ஏனென்றால் என்னைப்பற்றியும் ரொம்ப அவதூறாக, சுந்தர ராமசாமியோடு ஜெகம் பிராடுக்கு மனஸ்தாபமே ஏதோ என்னால் தான் என அதில் அந்த ஆசாமியால் எழுதப்பட்டிருக்கிறது.
அந்த ஜெகம் பிராடு இணைய தளத்தில்கூட சுகந்தி பற்றி சில தேவையில்லாத விஷயங்கள் எழுதப்பட்டுள்ளது.
சரி. இப்போது அம்பை அஞ்சலி என்ற பெயரில் சுப்ரபாரதி மணியனுக்கும் அவருடைய இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் எப்பேர்ப்பட்ட அவமானத்தையும், மன உளைச்சலையும் உண்டு பண்ணியிருக்கிறார் என்பதை கண்ணன் உணர்ந்திருந்தால் காலச்சுவடில் இதை பிரசுரித்திருப்பாரா?
தனக்கு வந்த கஷ்டம் மற்றவர்களுக்கு வரலாகாது என்பது கண்ணனுக்கு பொருட்டில்லையா? அம்பையின் அஞ்சலியில் நாச்சார் மட கூறுகள் இல்லையா? அடுத்தவங்க குடும்பத்தில் தலையிட அவசியமில்லை என்று எழுதிக்கொண்டே அம்பை என்னவெல்லாமோ எழுதியிருக்கிறார். இது போன்ற விஷயங்களை காலச்சுவடு ஆசிரியர் எடிட் செய்ய வேண்டாமா?
......
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.