Veeranmani Balamurugan
வீரன்மணி பாலமுருகன் :
எழுத்தாளரும் கூத்துப்பட்டறையின் மாஸ்டர்களில் ஒருவருமான பன்முக கலைஞர் R.P. ராஜநாயஹம் அவர்கள் கலைஞர் முரசு தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வழங்கி வரும் "சினிமா எனும் பூதம்" தொடர் நூறு அத்தியாயங்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உண்மையில் வியப்பளிக்கிறது.
பொதுவாக பெரும்பாலான சின்னத்திரை நிகழ்வுகள் சில வாரங்கள் ஒடினாலே சலிப்பு மிகுந்து விடும் அதை தொகுப்பவருக்கும் ஒரு வித ஆயாசம் வந்து விடும்.
ஆனால் நான் முன்பே பல முறை சொன்னது போல் R.P.ராஜநாயஹத்தின் அனுபவ சுனை வற்றுவதே இல்லை. அவருக்கு தீர்ந்து போகாமல் சொல்லிக்கொண்டே இருக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
முதலில் ஒரு பார்வையாளனாக வாசகனாக அவருக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் என் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் உள்ளபடியே மகிழ்கிறேன்.
அவரின் இணையப்புத்தக பக்கங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் வாசகர்கள் பின் தொடர்கிறார்கள். அதே போல் அவரது பதிவை அஃதே போல் திருடவும் அப்படி திருடி தனது எழுத்துக்குள் எங்காவது சொருகவும் செய்பவர்கள் அநேகம்.
நான் இந்த முக நூலில் முகம் பதித்த நாள்முதலாய் அவரின் பல்வேறு வகைமையிலான பதிவுகளை விடாது வாசித்து வருகிறேன். நினைவுகளை புதுப்பித்துக்கொள்ளவும் புதிய ஒன்றை ஸ்பரிசிக்கவும் சுவாரஸ்யங்களில் தோய்ந்து எழவும் அவரது எழுத்துக்கள் எனக்கு பயன்படு பொருள்கள் ஆகியிருக்கின்றன.
பொதுவாக இலக்கியம், தத்துவம், எழுத்து என்று வருகையில் அதற்கான அங்கீகாரமாக தரப்படும் விருதுகள் கவிதை சிறுகதை அல்லது நாவல் எனும் புள்ளியில் நிலைகொண்டு சுருங்கி விடுகிறது உண்மையில் இது ஒரு தேக்கநிலை மட்டுமல்ல அபத்தமும் கூட.
புனைவு அபுனைவு எனும் போது இங்கு புனைவுகளுக்கே வரவேற்பு அதிகமாக இருக்கிறது இந்த முன் முடிவுகள் எழுத்துலகின் தீர்க்க இயலா இளம்பிள்ளை வாதமாக நிலை பெற்று விட்டது.
அபுனைவுகள் எனும் தத்ரூபங்களுக்கும் அதை ஆக்குபவனுக்கும் இங்கு எந்த பெருமிதமும் அங்கீகாரமும் இல்லை. மேலை நாடுகளில் அச்சு மற்றும் இணைய ஊடக இலக்கிய செயல்பாடுகளில்
R. P. ராஜநாயஹம் போன்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள்; பெரிதான சமூக அந்தஸ்தை பெறுகிறார்கள்.
இந்நிலை இங்கு எப்போது மாறப்போகிறது என்பதற்கு
எந்த விடையும் இல்லை.
ஆனால் எது குறித்தும் அலட்டிக்கொள்ளாத அல்லது அந்த நிலையை கடந்து விட்ட
R.P. ராஜநாயஹம் தனது வாசகர்களுக்காக எழுதுகிறார் எழுதிக் கொண்டே இருக்கிறார். ஆம் எழுதிச்செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும்.
....
https://m.facebook.com/story.php?story_fbid=6377774879011592&id=100003374305971&mibextid=UyTHkb
https://m.facebook.com/story.php?story_fbid=3762008217345950&id=100006104256328&mibextid=UyTHkb
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.