Share

Oct 31, 2009

குழந்தையும் காலமும்

புதுமைப் பித்தன் கதையொன்றில் ஆற்று நீரில் தன் கால்களை விட்டு விளையாடும் குழந்தை ஒன்று . வானில் சூரியன் தவிப்பான் . குழந்தையின் பாததரிசனம் வேண்டி. குழந்தையின் பாதங்கள் எப்போது நீரில் இருந்து வெளிவரும் என ஏங்கும் சூரியன். அவ்வளவு சுலபமாய் கிடைத்து விடுமா குழந்தையின் பாத தரிசனம் என புதுமைப்பித்தன் கேட்பார்.வெங்கட் சுவாமிநாதன் துவங்கி பலரும் இந்த 'புதுமைப் பித்தன் பன்ச் ' பற்றி மிகவும் சிலாகித்து எழுதியிருக்கிறார்கள்.
காலச்சக்கரம் சுற்றியது.காலம் நகர்கிறது , காலம் போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஓடியது. காலம் ஓடிவிட்டது. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற காலம் Cliché கள் நாம் வாசித்து ,கேட்டு சலித்தவை தான்.
சமீபத்தில் முகுந்த் நாகராஜனின் கவிதை பரவசம் தந்தது
"தயங்கித் தயங்கி
அம்மாவின் கைப்பிடித்து
மெதுவாகப் படி இறங்குகிறது
குழந்தை
சீராகப் போய் கொண்டிருந்த
காலம்
சற்று தயங்கித் தயங்கி
முன்னகர்கிறது "

.....................

பெரியவர்கள் உலகில் உழைக்க உகுக்கப்படும் சிறுவர் சிறுமிகளின் labour பற்றி பிரச்சார சத்தமில்லாத கவிதை ஒன்று -
"தீப்பெட்டியைத் திறந்து
பார்த்தேன்
அத்தனையும் பிஞ்சுக்கரங்கள் "
மறைந்த கந்தர்வன் கவிதை ????
சுஜாதா கூட குழந்தைத்தொழிலாளி பற்றி ஒரு கவிதை முன்னர் எழுதியிருக்கிறார் .
அதில் ஒரு வரி இன்னும் மறக்க முடியவில்லை . ஏனென்றால் வெளியூர் போக நேரும்போது அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிட வேண்டியிருப்பதால் .
" ஹோட்டலில் சாப்டவுடன் இலை எடுப்பாய் "

Oct 30, 2009

உலகத்தின் தன்மை

சில நாட்களுக்கு முன் அருந்ததி ராய் சொல்லியிருக்கிறார் : “In a way, what the muslims were to the BJP, the Maoists are to the Congress.”

பாரதி பாஞ்சாலி சபதத்தில் :" ஊரை ஆளும் முறைமை- உலகில் ஓர் புறத்திலும் இல்லை.''


Arundhati Roy has alleged that because of 'economic interests' in mineral – rich States, the government and establishment actually needs a war. It needs an enemy. And so in a way what the Muslims were to the BJP, the Maoists are to the Congress.

செம்மைதீர் அரசியல் அநீதி!

புதுமைப் பித்தன் தன்னுடைய " சாப விமோசனம் " கதையில் : "உலகத்தின் தன்மை என்ன,இப்படி விபரீதமாக முறுக்கேறி உறுத்துகிறது. "

ந.பிச்சமூர்த்தி "காவல் " சிறுகதையில் :"கண்ணில் விழுந்த தூசி போல் சதா வாழ்வு உறுத்திக்கொண்டே இருக்கிறது."

....

ஈரோட்டில் அடாவடித்தனம் பண்ணிய ராஜாவை மாவட்டச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அவருடைய அப்பா பெரியசாமியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டார் முதல்வர். என்னே நீதி பரிபாலனம்!

....

நோபல் பரிசு பெற்ற தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கர்நாடக சங்கீத ரசிகர் .U.S., அல்லது U.K. என எங்கே இருந்தாலும் சரி, விஞ்ஞான விரிவுரைக்காக மட்டுமே அல்லாமல் கர்நாடக சங்கீதம் கேட்பதற்காகவே இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்திருக்கிறார்.

நல்ல செய்தியும் பத்திரிகைகளில் பார்க்க கிடைக்கின்றன.

எந்தரோ மகானுபாவலு! அந்தரிக்கி வந்தனமு!

ஒரு சுவாரசியமான சங்கீத செய்தி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு தெரிந்திருக்கும்!

' சந்ததம் பாஹிமாம் சங்கீத சாமளே ' என்கிற முத்துச்சாமி தீக்ஷிதர் கீர்த்தனையை பிரிட்டிஷ் தேசிய கீதத்தின் மெட்டிலே தீக்ஷிதர் அமைத்திருக்கிறார்!

...........

டோனி பிளேர் அடுத்த ரவுண்டு செய்திகளில் அடி பட வாய்ப்பு கிடைக்கலாம் போலிருக்கிறது .'ஐரோப்பிய ஜனாதிபதி' எனும் ஒரு புதிதாய் உருவாக்கப்படபோகும் பதவி விஷயத்தில் 'Front-runner' இவர் தானாம். அல்லது வேறு யாராவது அந்த பதவியில் அமரப் போகிறாரா?

Oct 29, 2009

பின்னிய மேகச்சடை

திஜானகிராமன் மோகமுள் நாவலில் :" நிலவொளியில் வெண்மை பூண்ட மேகங்கள் கப்பல் கப்பலாக விம்மிக் கொண்டிருந்தன. வில்லடித்த பஞ்சுப் படலம் ஒன்றின் மீது சந்திரன் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது,வலையில் படாமல் ஓடுவது போல."

எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் கவிஞர்களைப் பற்றி சிலாகித்து சொன்ன வார்த்தைகள்-
" காலக்கறையானால் அரிக்கப்படாத பூமரங்கள் கவிஞர்கள். நிழலும் நறுமணமும் நல்கும் இத்தருக்கள் தான் வறண்ட நம் சமூக வாழ்வின் அரிய செல்வங்கள்."

கவியுள்ளம் பெறுவதற்கு ' உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு வேண்டும். உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு கூட வேண்டும் ' என்பார் பிரமிள். 'புட்டிகுடியையும் குட்டி அடியையும் அவுத்து அவுத்துக் காட்டிவிட்டால் கவிதை ஆகுமா?' என ஆவேசமாக கேட்டவர் அவர் .

நிலவு.அதைச்சுற்றி மேகங்கள் .இதை இரவில் பார்க்கிறார் பிரமிள்.
"நிலவை மழித்தான் தேவ நாவிதன்
சிகையாய் முகில்கள் வானில் விரிந்தன "


இது தான் உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு!



எஸ் வைத்தீஸ்வரன் : 'வானம் கட்டுப்பாடற்று பெற்றுத்திரியவிட்ட
மேகங்கள், பொல்லாவாண்டுகள். நினைத்த இடத்தில்,கவலையற்று,நின்று தலையில் பெய்துவிட்டு,மூலைக்கொன்றாய் மறையுதுகள் வெள்ளை வால்கள் !'

சுக்கிரத்தவிப்பு!

சாதாரண உண்மைகளை ஒரு சரியான தலைப்பு கொடுத்துக்கூட நல்ல கவிதையாக்கிவிட முடியும் . புரட்சி என்ற தலைப்பில் ராஜசுந்தரராஜன் எழுதிய கவிதை அப்படி ஒரு கவிதையை உருவாக்கியது . அந்த 'புரட்சி ' என்ற தலைப்பு இல்லாவிட்டால் அது கவிதையே அல்ல என்றாகி விடும் .
புரட்சி
மேகத்தில் இருந்து
மழை மட்டுமல்ல
மின்னலும் பிறக்கும் .

இது உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு !




..

Oct 27, 2009

குருதத்

தமிழ்பட தயாரிப்பு செலவுகள் மிக கடுமையாக உயரே போயிருப்பது குறித்து நடிகர்,தயாரிப்பாளர் பாலாஜி தான் இறப்பதற்கு முன் ஜெயா டி வி பேட்டியில் தார்மீக ஆவேசத்துடன் கண்டனம் தெரிவித்திருந்தார். கேரவன், கதாநாயகன் சம்பளம், ஆடம்பர படப்பிடிப்பு செலவுகள் குறித்து கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தார் . இதே ஜெயா டி வி யில் தான் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது பஞ்சு அருணாச்சலமும் இந்த அதிருப்தியை வெளியிட்டார்.

குருதத் பற்றி ஒரு செய்தி நம் Princely,luxuriousகதாநாயக நடிகர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். 'பியாசா' கதாநாயகன் குருதத்.

ஒருமுறை ஒரு ஷூட்டிங் செட்யூல் நடக்கும்போது குருதத் அதற்கு செல்லமுடியவில்லை. ஏனென்றால் அவரிடம் இரண்டே இரண்டு பேன்ட் தான் இருந்த நிலை. அதில் ஒன்று மிகவும் அழுக்காக இருந்தது. இன்னொன்று லாண்டரியில் இருந்தது.

குரு தத் பற்றி எழுத ஆசை தான். ஆனால் அபத்தப் பின்னூட்டங்கள் பற்றிய பயம் காரணமாக இத்துடன் நிறுத்துகிறேன் . ஏனென்றால் ஒரு எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரத்திடம் " குருதத் கதாநாயகனாக நடித்த பல படங்களின் இயக்குனரும் அவரே தான் " என்றேன் . உடனே அவர் " நம்ம ஊரு பாக்யராஜ் , பாண்டிய ராஜன் மாதிரி தானே!" என பதிலடி கொடுத்து விட்டார் .
இந்த எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரர்கள் பனங்கொட்டையை கரடி முட்டை என்பார்கள்.

.......

குருதத்துடன் 'பியாசா ' , 'காகஸ் கே பூல்' , ஆகிய படங்களில் நடித்த ஹிந்தி நடிகை வகிதா ரஹ்மான் தமிழ் படங்களில் கூட அதற்கு முன் நடித்திருக்கிறார் . எம்ஜியார்,பானுமதி,பி.எஸ். வீரப்பா நடித்த ' அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் .

ஜெமினி கணேஷ், அஞ்சலி தேவி, எஸ்.வி. சுப்பையா நடித்த ' காலம் மாறிப்போச்சு ' படத்தில் " ஏரு பூட்டி போவாயே ! அண்ணே சின்னண்ணே !" என்ற பாட்டுக்கு நடனம் ஆடி அப்போது பிரபலமாய் ஆனவர் வகிதா ரஹ்மான். இவர் செங்கல்பட்டு ,தமிழ்நாட்டில் பிறந்த பெண் . ஆனால் இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்,ராஜமுந்திரியை சேர்ந்தவர் என்றே பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். நானும் அப்படி குழம்பித்தான் தவறுதலாக எண்ணிக்கொண்டு இருந்திருக்கிறேன்.

பாரதி மணி said...
இது சுயதம்பட்டமல்ல.

குருதத் எனும் மாமேதையுடன் பழகியிருக்கிறேன் என்பதில் எனக்குப்பெருமை.

அறுபதுகளில் தில்லிக்குவரும் குருதத்தை போய் பார்ப்பேன். என் ஆபீஸ் தொலைபேசி எண் அவரது டைரியில் இருந்தது.

ஒருதடவை, அவர் யமுனை நதியில் மீன் பிடிக்க ஆசைப்பட்டார். தெரிந்த நண்பர்கள் மூலமாக விலையுயர்ந்த தூண்டில், மண்புழு சகிதம் அதிகாலையில் ஓக்லாவுக்கு போனோம். தான் பிடித்த மீனை ஹோட்டலுக்கு கொண்டுவந்து, அசோகா ஹோட்டல் பெங்காலி Chef-இடம் அவைகளை எப்படி சமைக்கவேண்டுமென்று சொல்லிக்கொடுத்தார். அவர் மட்டுமே அவைகளை சாப்பிட்டார். ஏனெனில் நான் ஒரு Pure Vegetarian! Not even an 'Egg'itarian!!

தன் ஸ்டேட்டஸுக்கு குறைந்த நண்பர்களிடம் எப்படி பழகவேண்டுமென்பதை மறைந்த தமிழ்நாட்டு நடிகர்கள் அவரிடம் கற்றுக்கொண்டிருக்கவேண்டும்!
Tuesday, 27 October, 2009

Oct 26, 2009

ஷண்முகப்ரியன்

R.P.ராஜநாயஹம் பதிவுகள் பற்றி

ஷண்முகப்ரியன் said... எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் உங்கள் பக்கத்தில் வந்து நிலைத்து விட்டேன்,சார்.என்னைத் தூண்டிய,எனக்குள் எந்த ஆர்வத்தினையும் தூண்டாத இரண்டு எதிர் முனைகளிலும் உங்களது எழுத்தின் பாணி என்னை ஆட்கொண்டது. ஆழமில்லாத இடம் எனக் காலை வைத்தால் ஆளையே விழுங்கிவிடும் ஆழத்தோடு ஓடும் நதி போல உங்களை நம்பிப் படிக்க முடியவில்லை!பரவசமான நன்றிகள்,நண்பரே. Friday, 23 October, 2009


ஷண்முகப்ரியன்-நான் ஒரு திரைப்பட எழுத்தாளன்! இயக்குனர்! வெற்றிவிழா, சின்னத்தம்பி பெரிய தம்பி, பிரம்மா போன்று 30 படங்களை எழுதியதும், ஒருவர் வாழும் ஆலயம் போன்று நான்கு படங்களை எழுதி இயக்கியதும் எனது அனுபவங்கள்.=================================கரையிலிருக்கும் கடவுளைப் பற்றி கவலைப்படாமல் எனது நெஞ்சக் கோவிலின் புனிதநதி எந்த நேரமும் ஓடிக் கொண்டே இருக்கிறது.... என் வாழ்க்கையைப் போலவே.....

Oct 22, 2009

நாமக்கல் சேஷையங்கார்

நாமக்கல் நரசிம்ம ஐயங்காரின் பிரதான சிஷ்யன் சேஷையங்கார். இவர் திருக்குருங்குடியை சேர்ந்தவர் . ராமநாதபுரம்,கோயம்புத்தூர் ,சென்னை போன்ற ஊர்களில் சேஷையங்கார் வாழ்ந்தார். அவர் குருநாதர் ஊர் இவர் பெயருடன் சேர்ந்து நாமக்கல் சேஷையங்கார் என்றே அறியப்பட்டார் . வாத்தியார்களுக்கேல்லாம் வாத்தியார் என அந்தக்கால வித்வான்கள் நாமக்கல் சேஷையங்கார் பற்றி குறிப்பிடுவார்கள். இவர் மச்சினியும் வளர்ப்பு மகளுமாகிய எம் .எஸ் சௌந்தரம் பெற்ற மூத்த மகள் சியாமளா பாலகிருஷ்ணன் . பத்மாசுப்ரமணியத்தின் மூத்த அண்ணா தான் பாலகிருஷ்ணன்.


நாமக்கல் சேஷையங்காரின் சிஷ்யர்களில் பிரதானமானவர் சித்தூர் வி நாகய்யா.
நாகய்யா பற்றி ... எம். எஸ் . சுப்புலக்ஷ்மிக்கு ஜோடியாக ' மீரா ' படத்தில் நடித்தவர். புஷ்பவல்லிக்கும் ஒரு படத்தில்(கோரகும்பர் ) ஜோடியாக நடித்தவர் . அந்த புஷ்பவல்லி -நாகய்யா படத்தில் ஒரு சின்ன ரோல் ஜெமினி கணேசன் செய்திருக்கிறார். பின்னால் 1960களிலும் 1970களின் ஆரம்பத்திலும் அப்பா ரோல்,மாமனார் ரோல்களிலும் சாமியார் ரோல்களிலும் தமிழ் படங்களில் வந்து இடைவேளைக்கு முன் அல்லது படம் முடியுமுன் பெரும்பாலும் செத்துப்போவார் பாவம் . ஒரு பெரியவர் சொன்னார் . ஒரு படம் செகண்ட் ஷோ போயிருக்கிறார் . அந்த படத்தில் நாகய்யா இடைவேளையின் போதோ , அதன் பின்னரோ , என்ன எழவோ நாகய்யா இருமி அழுது கண்ணீர் விட்டு,நடுங்கும் குரலில் உருக்கமாக பேசிவிட்டு வழக்கம்போல செத்துப்போயிருக்கிறார் . படம் முடிந்து வீட்டுக்கு வந்து இரண்டரை மணி போல இந்த பெரியவர் தூங்கிவிட்டு காலை ஏழு மணிக்கு எழுந்து தினசரியைப் பிரித்தால் மூன்றாம் பக்கம் சின்ன புகைப்படத்துடன் " பத்மஸ்ரீ வி நாகய்யா மரணம் " என்று செய்தி சின்ன அளவில். செய்தி படித்த பெரியவருக்கு அதிர்ச்சி கிஞ்சித்தும் இல்லை . வருத்தமும் கொஞ்சம் கூட இல்லை . ஒரு ஐம்பது படத்திலாவது நாகய்யாவின் மரணத்தைப் பார்த்து சலித்திருந்த தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு யாருக்குமே இது செய்தியாக அப்போது சலனமேதும் ஏற்படுத்தவே இல்லை . ஆனால் நாகய்யா பன்முக ஆற்றல் நிறைந்தவர் . திரை இசைப் பாடல்களில் கூட இவர் சொந்தக்குரலில் பாடிய " திருமுருகா என ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம் " இன்றும் கேட்கக்கிடைக்கும். இப்போது தி நகர் பனகல் பார்க்கில் சிலையாக இன்று நிற்கிறார்!

நாமக்கல் சேஷையங்காரிடம் வைஜயந்தி மாலாவின் அம்மா வசுந்தரா இசை பயின்றிருக்கிறார் . டைகர் வரதாச்சாரியாரின் சிஷ்யன் பிரபல நடிகர் ரஞ்சன் கூட நாமக்கல் சேஷையங்காரிடம் பாடம் பயின்றவர் தான். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இவரிடம் வந்து பல கீர்த்தனைகளை பாடம் கேட்டிருக்கிறார் .
நாமக்கல் சேஷையங்கார் அவர்களின் குருநாதர் நரசிம்ம ஐயங்கார் வீட்டுக்கு உஸ்தாத் அப்துல் கரீம்கான் கூட வந்து சங்கீத சர்ச்சைகளில் ஈடுபட்டிருக்கிறார் .

1955 ல் ஒரு நாள் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து மாலை நேரம் சந்தியாவந்தனம் , காயத்திரி, ராம ஜெபம் செய்து விட்டு கண் மூடிய நிலையில் பிரார்த்தித்த நிலையில் நாமக்கல் சேஷையங்கார் அமர்ந்திருக்கும்போது ,கோதுமைக்கஞ்சி இவருக்காக இவர் வீட்டு மாமி ( எம் .எஸ் . சௌந்தரத்தின் மூத்த சகோதரி ) எடுத்து வந்தபோது இவர் உயிர் பிரிந்தது .

நேர்மையான வாழ்க்கை சேஷையங்காரிடம் இருந்தது . ரொம்ப ஆச்சாரமான வாழ்வு வாழ்ந்திருக்கிறார் .

Oct 21, 2009

இடைவெளி சம்பத்


இடைவெளி நாவல் எழுதிய  எஸ்.சம்பத் நாராயணன் 42வயதில் மூளை ரத்தநாளச்சேதத்துக்கு ஆளாகி 1984 ல் மறைந்து விட்டார் . தன் எழுத்துக்களில் முதன் முதலாக புத்தகவடிவம் பெற்ற ' இடைவெளி ' நாவலை முழு புத்தகமாய்ப் பார்ப்பதற்கு முன்னர் மறைந்து விட்டார்.


தன் திறமைகளுக்குரிய கவனிப்பு தனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இவருக்கும் இருந்தது . 'அம்மாவுக்கு ' நாவல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆதவனும் சம்பத்தும் கல்லூரியில் இந்திராபார்த்தசாரதியின் மாணவர்கள். இந்திரா பார்த்தசாரதி பள்ளியில் படிக்கும்போது தி.ஜானகிராமனின் மாணவர.
சம்பத் மறைந்து மூன்றே வருடத்தில் 45வயதில் 1987ல் ஆதவன் மறைந்தார். தி.ஜாவுக்கும் 1982 ல் 62வயது தான். சாகிற வயசா ?

இடைவெளி - சாவு பற்றிய சம்பத்தின் ஆழ்ந்த தவம். ' சாவு என்னை ஈர்த்தவிதம் -' கடைசியாக எல்லாம் போய்விடுகிறது . இதற்கு என்ன செய்வது? தற்கொலைத்தனமான இந்த எண்ணம் எனக்கு ஒரு மகத்தான உண்மையை உணர்த்தி விட்டது. இடைவெளி நாவல் - ஒரு ஆன்மாவின் கைதேர்ந்த அறிவின் சத்திய சோதனை. விவரிக்கமுடியாத சிக்கல்களைக் கொண்ட பிரபஞ்சம், ஏதோ ஒரு கனிவில், மனிதனிடம் காட்டும் ஞானப் பிச்சை. '

சம்பத் அவரே சொல்வது போல அடிப்படை விஷயங்களில் உழல்பவர்.

சாவு என்பது இடைவெளி . வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை.
எதிராளி தோற்றுப்போனால் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் சாவிடம் மட்டும் ஏன் இந்த வெறி போகவே இல்லை . இது நாள் வரை தன்னுடைய தன்மையை மரணம் உணர்த்திக்கொள்ளாமலே இருந்திருக்கிறது. குறைந்த பட்சம் அதற்கு ' போர் ' அடிக்கவில்லை. எப்போதுமே ஜெயிப்பது விடலைத்தனமான காரியம் இல்லையா?

காந்தி முழத்துண்டுடன் நின்று குண்டுகளை வெறும் மார்பில் வாங்கிக் கொண்டார் . காந்தி வெறும் உடம்புடன் நின்றது தான் அவருடைய அத்தனை கால தற்காப்புக்கும் காரணம். வெறும் உடம்பில் சுடுவது என்பது அவ்வளவு ஈசியான காரியமா ? வெறும் உடம்போடு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன் என்ற மனிதனை !

கம்யுனிஸ்ட் கடவுளை நம்பினா அவன் சமுதாயத்துக்கே பயங்கரமானவன் .

இப்படி இடைவெளி நாவலில் படித்த விஷயங்கள் இன்றும்
மறக்கமுடியவில்லை .

டெல்லியிலேயே வளர்ந்த சம்பத் சென்னைக்கு வந்த பின் மவுண்ட் ரோடு குறித்து சில வார்த்தை சொல்கிறார் :' மவுண்ட் ரோடு - மதராசின் கனாட் ப்ளேஸ்.இதுவும் இதனுடைய மூஞ்சிகளும் ! எப்படி ,எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம் . வளர்ந்த நிலையில் இங்கு இருக்கக்கூடாது .

இந்த நாவல் பற்றி சொல்ல சம்பத் நாவலில் ஒரு இடத்தில் எழுதும் வார்த்தைகளையே சுட்ட வேண்டியுள்ளது ." எண்ண ஓட்டங்களுக்கு, பெரிய எண்ண ஓட்டங்களுக்கு ஒரு பூ மணப்பின் குணம் உண்டு . அதை யாருமே அசட்டை செய்து விட முடியாது ."

பூமியில் விளைவது எல்லாமே மனிதனுக்கு சொந்தம், எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்ற காலம் வராதா என பகல் கனவு கண்ட சம்பத்.

சம்பத் தின் இடைவெளி நாவல் நூறு பக்கங்கள் தான் . நாவலில் வாமன அவதாரம்! க்ரியா வெளியிட்ட இந்த நாவல் (August,1984) அதன் பிறகு இன்னும் மறுபிரசுரம் செய்யப்படவே இல்லை.

அந்த காலத்தில் டெல்லியில் சம்பத் ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு நாவல் எழுதி கையெழுத்துப் பிரதியாக இ . பா.விடம் படிக்க கொடுத்திருக்கிறார் . சில நாளில் இ .பா படித்தவுடன் அவர் வீட்டிற்கு போகிறார் . இ .பா நாவல் பற்றி " Rambling ஆ இருக்குடா . நல்லா எடிட் பண்ணனும் ." என்று வெராண்டாவில் சொல்லிவிட்டு வீட்டினுள்ளே போயிருக்கிறார் . சம்பத் ஆயிரம் பக்க நாவலின் கையெழுத்துப் பிரதியை நெருப்பு வைத்துக்கொளுத்தி விட்டார்!" டே டே .. ஏண்டா " இபா பதறிப் போய்க்கேட்டிருக்கிறார். " குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனி எதற்கு ?" என்று சாவகாசமாக சம்பத் சொன்னாராம்.

இன்று சம்பத் எழுதி வாசகர்களுக்கு இந்த இடைவெளி நாவல் தான் மிஞ்சியிருக்கிறது. கணையாழியில் அருமையான இரண்டு குறுநாவல்கள் எழுதினார். '' சாமியார் ஜூவிற்கு போகிறார் '' அடுத்து " பணம் பத்தும் செய்யும் " என்ற குறுநாவல் .
கசடதபற வில் 'கோடுகள் ' என்ற சிறுகதை . ' இடைவெளி ' என்ற தலைப்பிலேயே கூட ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . அவர் சிறுகதையொன்றில் திஜாவின் மூத்த மகன் சாகேத ராமன் ஒரு பாத்திரமாக வந்திருக்கிறார் .

ஜி . நாகராஜனின் படைப்புக்கள் தொகுக்கப்பட்டது போல சம்பத்தின் படைப்புகளும் தொகுக்கப்பட்டால் நல்லது .ரொம்ப சொற்பமாகத்தான் எழுதினார் . அவர் மொத்தப்படைப்புகளும் கூட ஒரு சிறு நூல் அளவுக்குத்தான் வரும் .

Oct 20, 2009

கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே

புதுமைப்பித்தனின் "கடவுளும் கந்தசாமியும் " சிறுகதையில் கந்தசாமியிடம் கடவுள் எச்சரிக்கையுணர்வுடன் சொல்வார் :" உங்களிடமெல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம், உடன் இருந்து வாழ முடியாது "

கந்தசாமி இதற்கு கடவுள் முகத்தில் அடித்தாற்போல பதில் சொல்வார் ." உங்கள் வர்க்கமே அதற்குத்தான் லாயக்கு."

பிரபலமான தேவதேவன் கவிதை ஒன்று

"காட்சியளிப்பதே தன் கடமையென உணர்ந்தவராய்

எழுந்தார்

துயர் குழப்பமிக்க இவ்வுலகில்

தன் கடமை என்னவென்ற வெகு

யோசனைக்குப் பின் கடவுள் "

என்ன தான் எச்சரிக்கையாகவும் கௌரவ பிரக்ஞையுடனும் கடவுள் இருந்தாலும் அவரை டென்சன் ஆக்காமல் மானிட ஜன்மங்கள் இருப்பதில்லை . சமீபத்திய ஆனந்தவிகடன் ஒன்றில் 'யூத்து கூத்து' பகுதியில் ஒரு ஜோக் .

" கடவுள் எப்போ டென்சன் ஆவாரு "

" கல்யாணம் ஆகாத பொண்ணு கர்ப்பமாகி வயிறு ஊதிபோய் நிற்கும்போது அவங்க வீட்டிலே " ஐயோ கடவுளே ! இப்படி பண்ணிட்டியே !" ன்னு புலம்புறப்ப தான் "

....

ஊருக்கு சொல்லுமாம் பல்லி!கழனியில் விழுமாம் துள்ளி ! - இது சொலவடை .

பல்லி விழும் பலன் என்று சோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதி உண்டு . " பல்லி தலையில் விழுந்தால் மரணம் " - இப்படி பீதி கிளப்பும் பலன்கள் !

வாலிழந்த பல்லியைப் பார்த்து பிரமிள் எது கவிதை எனக்கேட்டு எழுதிய கவிதை .

"கவிதை -

இறக்கத்துடிக்கும் வாலா?

உயிரோடு மீண்ட உடலா ?"

சுவரில் நிற்கும் பல்லி ஏன் அசையாமல் நிற்கிறது . சுவற்றையே தான் தான் தாங்கி சுமந்துகொண்டிருப்பதாய் பல்லி நினைக்குமாம் . தான் அசைந்தால் சுவர் விழுந்து வீட்டில் உள்ள மனிதர்கள் செத்து விடக்கூடாதே என்று ஆடாமல் அசையாமல் நிற்குமாம்!செருக்கு!நினைப்புக்கார பல்லி!

சுவற்றில் உள்ள பல்லியை பாப்லோ நெருடோ தன் கவிதையில் கூறுகிறார் :
“ A Drop of Crocodile on the wall”

மாம்பழத்தைப் பிழிந்தால் துளித்துளியாக மாம்பழச்சாறு தான் வரும் . திராட்சையைப் பிழிந்தால் துளித்துளியாக திராட்சைச்சாறு கிடைக்கும். ஆனால் கவிதைக்கனி பிழிகையில் வெளிவரும் சாறு அப்படியல்ல . -பல்லி A Drop of Crocodile ஆகிப் போகிறது.

Oct 18, 2009

சில கோணங்கி ராகங்கள்

எம் .எஸ் பாடிய ' இகனைன ' கீர்த்தனை .கர்நாடக சங்கீத ரசிகர்களுக்கு பரிச்சயமானது . திருப்பதி நாராயணசுவாமி இயற்றியது . புஷ்பலதிகா ராகம் . இந்த புஷ்பலதிகா ராகத்தில் தூரன் இயற்றிய கீர்த்தனை 'புவன மோகன '. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் ' பவ்பாச ' கீர்த்தனை கூட உண்டு . இந்த புஷ்பலதிகா ராகம் ஒரு பச்சோந்தி ராகம் . சில சமயம் ஸ்ரீராகம் போல தோன்றும் . (எந்தரோ மகானுபாவலு ஸ்ரீராக பஞ்சரத்ன கீர்த்தனை எல்லோரும் கேட்டிருப்பார்கள் ) புஷ்பலதிகா பாடும்போது கொஞ்ச நேரத்தில் மத்யமாவதி ராகம் மாதிரியும் தோன்றும் .( மத்யமாவதி என்றதும் ஊத்துக்காடு " ஆடாது அசங்காது " தியாகய்யரின் "அடிகி சுகமு '' கீர்த்தனை , புரந்தர தாசரின் " பாக்யதலக்ஷ்மி " கீர்த்தனை எல்லாம் Music lover நினைவில் எழும் ) புஷ்பலதிகா ஆலாபனை கேட்டால் மணி ரங்கு ராகம் போல தோன்றும் .( மணி ரங்கு ராகம் என்றதும் வேதநாயகம் பிள்ளையின் " சித்தம் இரங்கி" கீர்த்தனையாய் இருக்குமோ என்று ரசிகர் குழம்ப நேரலாம் .)

தர்மவதி பாடும்போது வித்துவான் உஷாராக இருக்க வேண்டியிருக்கும் . " அம்பா ப்ரோவவே" தர்மவதி ராகம் . மைசூர் வாசுதேவாச்சாரியாரின் " பஜன செயராதா " தர்மவதி ராக கீர்த்தனை . தர்மவதி தடுக்கி விழுந்தால் கல்யாணி ராகமாகி விடும் .

ரீதி கௌளை ராகத்தை சாரீர வளம் உள்ளவர்கள் தான் பாட முடியும் . சாரீர வளம் இல்லாதவர்கள் தப்பித்தவறி பாடினால் ஆனந்த பைரவி வந்து நிற்கும் . இல்லாவிட்ட்டால் ஸ்ரீ ரஞ்சனி வந்தாலும் வந்து விடும் . என்ன காரணம் என்றால் ரீதிகௌளை ஆரோகணத்தில் மத்யமத்திலிருந்து நிஷாதத்திற்கு Quantum Jump செய்ய வேண்டும் . ஒரே தாவாக தாவ வேண்டும் .

மதுரை மணிஅய்யர் குரலில் ரீதிகௌளை பாபநாசம் சிவனின் 'தத்வமறிய தரமா'.

செம்மங்குடி பாடிய ரீதிகௌளை டாக்டர் சுப்பராய சாஸ்திரி இயற்றிய " ஜனனி ".

ரீதிகௌளை கீர்த்தனைகள்

ஊத்துக்காடு இயற்றிய ' என்ன புண்ணியம் '

தியாகய்யரின் ' ஜோ ஜோ ஜோ ராமா '

பாலமுரளியின் ஒரு சினிமாப்பாட்டு ரீதிகௌளையை கொஞ்சம் ஞாபகப்படுத்தும் .

" சின்னக்கண்ணன் அழைக்கிறான். ராதையை,பூங்கோதையை, அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி "

பிழையான தகவல்கள்

வெகுசனப்பத்திரிக்கைகளில் எழுதப்படும் விஷயங்கள் படிக்கும்போது 'இது தவறாக எழுதப்பட்டிருக்கிறதே' என பலமுறை தோன்றும் .ஆனால் வாசகர் கடிதம் எழுதும் பழக்கம் கிடையாது . அப்படி சமீபத்தில் படித்த பிழையான தகவல்கள் இரண்டு பற்றி .

மதுரை சோமுவின் குரல் நாதஸ்வரம் பேசுகிற விசயங்களை பாட்டில் காட்டும் குரல் . தோடி ராகம் அத்தாரிடி சோமு தான் . நினைத்தவுடன் சோமு பாடிய எந்த கீர்த்தனையும் காதில் ஒலிக்க ஆரம்பித்து விடும் . சோமு பாட்டு ஜீவனுள்ளவை.

இவருடைய குருநாதர் சித்தூர் சுப்ரமணிய பிள்ளை . சோமு தெலுங்கு கீர்த்தனைகள் உச்சரிப்பு சரியில்லாவிட்டால் கடுமையாக குருகுலத்தில் கண்டித்தவர் . இவர்-சித்தூர் சுப்ரமணிய பிள்ளை - நாயுடு இனத்தை சார்ந்தவர் ! தன்னுடைய குரு காஞ்சிபுரம் நைனாபிள்ளை மீது மிகுந்த பக்தி காரணமாக அவருடைய பெயரில் உள்ள பிள்ளை - ஜாதிப் பெயரை தன் பெயரில் இணைத்துக்கொண்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . அது என்னவாயிற்று இன்று என்றால் குமுதம் வார இதழில் இசைவேளாளர் ஜாதி பற்றிய கட்டுரையில் இசைவேளாளர் பிரபலங்கள் பட்டியலில்தவறாக இவரையும் மதுரை சோமு ,நைனாப் பிள்ளையோடு சேர்த்துவிட்டார்கள் !

குருநாதர் பெயரில் அவருடைய சொந்த ஊர் நாமக்கல் இருந்தது என்பதற்காக அவருடைய சிஷ்யர் ஒருவர் , (வேறு ஊர்க்காரர்) தன் பெயரோடும் நாமக்கல்லை இணைத்துக்கொண்டது கர்நாடக சங்கீத உலகில் அந்தக்காலத்தில் நடந்திருக்கிறது .

....

அலேக் நிர்மலாவின் கணவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா . இவர் நடித்த 'ஜாக்பாட் ஜாங்கோ' டப்பிங் படம் முப்பத்தைந்து வருடங்கள் முன் தமிழ்நாட்டில் பிரபலம் . அலேக் நிர்மலா ' இலந்தப் பயம் ' பாட்டு 'பணமா பாசமா ' (1968 )படத்தில் இடம் பெற்று இவரை பிரபலமாக்கியது . இவருக்கு அப்போதே கல்யாணமாகி பத்து வயதில் பெண் குழந்தை இருந்தது. ஒரு மகனும் கூட.அப்போது தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவும் ( அவருக்கும் கூட திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில் )அலேக் நிர்மலாவும் திருமணம் செய்து கொண்டார்கள்.

தினமலர் வாரமலர் இதழ் ஒன்றில் ' கந்தசாமி ' விக்ரம் படம் பற்றி கலைப்புலி தாணு பேட்டி கொடுத்திருக்கிறார் . அதில் கந்தசாமி படம் பற்றிய பெட்டி செய்தி குறிப்புகளில் ஒன்று . கந்தசாமி படத்தில் விக்ரம் உடன் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா சி .பி . ஐ . ஆபீசராக நடித்திருக்கிறார் என்பது . இது சரிதான். தமிழ் படத்தில் கிருஷ்ணா நடிப்பது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் . இது பிழையான தகவல் . அவர் நாற்பது வருடங்களுக்கு முன் பணமா பாசமா வெளி வந்த அதே 1968வருடத்தில் வந்த 'குழந்தைக்காக ' என்ற தமிழ்ப் படத்தில் பேபி ராணிக்கு அப்பாவாக ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

Oct 16, 2009

தவறறு முயற்சி??

அர்ஜெண்டினா பெண் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் தாஜ் மகாலைப் பார்த்து ரசித்து விட்டு எல்லோரையும் போல அதன் முன் நின்று நேற்று சந்தோசமாக புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார் .தினமலரில் இன்று பார்த்தேன் . இப்படி பல நாட்டு அதிபர்கள் , பிரதமர்கள் , மந்திரிகள் யாராயிருந்தாலும் இந்திய விஜயத்தின் போது தாஜ் மகாலுக்கு வந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள் . டார்க் ப்ரௌன் பேன்ட் , ஆஷ் கலர் ஷர்ட் போட்டுக்கொண்டு பில் கிளிண்டன் கூட எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போதும் நினைவில் நிற்கிறது.

காதலர்களின் சின்னம்,உலக அதிசயம் தாஜ்மகால் அளப்பரிய பெருமுயற்சியின் சாதனை என கருதப்படுகிறது .ரஷ்யாவிலிருந்து அந்தக் காலத்தில் குருச்சேவ் வந்த போது அவருக்கு பெருமையாக தாஜ்மகாலைக் காட்டியபோது அவர் முகம் சுண்டிப்போய் விட்டது ." அய்யோய்யோ ! ச்சே ! இந்த நினைவுச்சின்னத்தை நிர்மாணிக்க மேற்கொண்ட கடும் முயற்சியில் எத்தனை அடிமைகள் உயிரை விட்டார்களோ " என்று நொந்து நூடுல்ஸ் ஆகிப்போய்விட்டார்.

நம் நாட்டு உலக அதிசயம் தவறறு முயற்சி அல்ல என்கிற யதார்த்தமும் பலரால் சுட்டப்பட்டே வருகிறது.எவ்வளவு வரிப்பணம் மக்களிடம் இருந்து நிர்பந்தமாக பிடுங்கப்பட்டிருக்கும், கொள்ளையடிக்கப்பாட்டிருக்கும் .உலக அதிசயங்கள் பலவற்றின் பின்னும் இப்படித்தான் .

ராஜ ராஜ சோழன் தஞ்சைப்பெரிய கோவிலை கட்டும் முயற்சியின் போது பல தேவதாசிகளை நரபலி கொடுத்திருக்கிறான் என்பது சரித்திரம் .

Oct 15, 2009

அமடியூஸ்

1984 ல் வந்த ஹாலிவுட் படம் Amadeus. One of the greatest movies of all time.

அமடியூஸ் என்று தான் உச்சரிக்க வேண்டும்.

இசைக்கலைஞன் மொசார்ட்!Amadeus Mozart !
கதைநாயகன் மொசார்ட் அல்ல. 
சாலியரி என்ற அவனுடைய Contemporary.

The movie of Salieri's life, through which Mozart played an integral part, is told in flashback mode. மர்ரே ஆப்ரகாம் தான் சாலியரி. மொசார்ட் ஆக டாம் ஹல்ஸ். 

மர்ரே ஆப்ரகாம் நடிப்பு தான் படத்தின் விஷேசம்.
 டாம் ஹல்ஸ் நடிப்பும் சாமானியமானது அல்ல. 


மொசார்ட் பற்றி நினைத்தாலே டாம் ஹல்ஸ் முகம் தான் நினைவில் இப்போது வருகிறது. 
A tremendous performance !

அமடியூஸ் படம் திறமை,பொறாமை இவை இரண்டிலிருந்து துளிர்க்கும் சோகம் பற்றியது. மொசார்ட் பற்றி புஷ்கின் எழுதிய சிறுகதையின் அடிப்படையில் இந்த படம் உருவானது.
அமடியூஸ் படத்தின் keynote சாலியரி சொல்லும் இந்த "Looks and talent don't always go together"வசனம் தானே!
(நாகேஷ் திருவிளையாடலில் அரை வேக்காடு தருமியாக நடிக்கும்போது சிவாஜியைப் பார்த்து பதற்றத்துடன் சொல்வது : 'நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன். என் புலமையைப்பற்றி உனக்குத்தெரியாது!')
மொசார்ட் என்ன மனிதன் ?! இவனைப் போன்ற அற்பனுக்கு கடவுள் ஏன் இப்படி அபூர்வ இசைத்திறமையை தரவேண்டும் என்பது தான் அரண்மனையின் இசைக்கலைஞன் சாலியரியின் மன உளைச்சல் .

மொசார்ட் பற்றி அவன் மனைவியின் சலிப்பு - ஊதாரிப்பயல் !" “Money simply slips through his fingers. He spends more than he earns.”
மொசார்ட் தன்னைப்பற்றி சொல்வது : I am a vulgar man, my music is not.


ஒரு அற்ப ஜந்துவை ஏன் கடவுள் அபார இசை அறிவைத்தந்து தன்னை விட மகத்தானவனாகச்செய்திருக்கிறார்."Why does God not give me talent? Why Mozart? Why does God love him, but not me?"  

சாலியரி பாத்திரத்தை மர்ரே ஆப்ரகாம் தவிர வேறு யாராலுமே அத்தனை அற்புதமாக நடித்துக்காட்டியிருக்க முடியாது .
ஒரு நிறைவு பெறாத , முழுமை பெறாத
Requiem மொசார்ட்டின் மகத்தான சாதனையாக சரித்திரம் காட்டியிருக்கிறது.
  The film gives us snippets of some of the real gems in the Mozart canon: the great C Minor Mass, the Requiem and "Don Giovanni". 

A must see film for all! 

பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியும்,பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன் பகுதியும் வியன்னா நகரமும் ,உடைகளும் , கட்டிடங்களும் பார்க்க கண் கோடி வேண்டும்.

படம் ஆரம்பிக்கும்போது முப்பத்திரெண்டு வருடங்களுக்கு முன் ( அதாவது 1791 )தான் மொசார்ட்டை கொன்றதற்காக மனம் வருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சாலியரி பைத்தியக்காரனாக மன நோயாளியாக (1823)மருத்துவமனையில். 

எல்லா மன நோயாளிகளையும் போல சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அதிகமாகி படம் முடியும்போது "Mediocrities everywhere. I absolve you all!" என எல்லோரையும் பார்த்து போப் போல தன்னைப் பாவித்துக்கொண்டு பாவமன்னிப்பு தருவது Irony.

இதற்கு 2 வருடம் கழித்து வெளிவந்த வந்த ஷான் கான்னரி(சீன் கானரி என்று தான் இங்கே சொல்வார்கள் ) நடித்த
The name of the Rose படத்திலும்( உம்பர்டோ ஈக்கோ வின் நாவல் ) மர்ரே ஆப்ரகாம் ஒரு நல்ல ரோலில் நடித்திருந்தார். 

ஷான் கான்னரியை ஜேம்ஸ் பாண்டாக மட்டுமே பார்த்தவர்கள் இந்த The name of the Rose படத்தை எப்படியாவது பார்த்து விடவேண்டும்.
இந்த படமும் திகில், சஸ்பன்ஸ் படம் தான்!

...........................................................................................................................



மொசார்ட் படம் பற்றிய மூன்று பின்னூட்டங்கள் 

Vee said...
நல்ல திரைப்படம். 3 முறை பார்த்தேன். எல்லா நடிகர்களும் ரசிக்கும்படி நடித்திருந்தனர் (including Jeffrey Jones who acted as the emperor. 'Well. There it is') I like the quote "Looks and talent don't always go together" from that film.
Thursday, 15 October, 2009

Anonymous said...
நல்ல படம், இசையை தவிற மற்ற அனைதிலும் அவனது கவனம் இருப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த கடைசி நாடகத்தை எழுதும் காட்சிகள் வரை. அந்த காட்சிகளிலும் கூட பந்தை சுற்றிவிட்டு பிடிக்கும் நேரத்தை மனதிலே கணக்கிட்டு ஒரு அடித்தலும் திருத்தலும் இல்லாமல், மனதிலே வாசித்து எழுதிய இசை தான் அவரது இசை என்றும் சொல்லும் போது. இந்த மாபெரும் கலைஞன் அற்ப ஆயுசில் போனானே என்று தோன்றாத மனம் இருக்காது.தந்தையின் ஆவியை காட்டி அவனை பயம் புகுத்தியதின் விளைவில் கடைசியாக எழுதிய இசையில் சாவிற்கு மொசார்ட்டு கொடுக்கும் இசை அளப்பரியதாக அமையும் போக்கை பார்த்து அந்த பொறாமைக்காரன் மேலும் பொறாமை கொள்ளும் போது நமக்கும் வலிக்கும். அற்புதமான படம், படத்தின் இசை அமோகம், அத்தணையும் மொசார்ட்டின் இசைகளே அசத்தலாக அமைந்த படம் இந்த படம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று.

பனிமலர்

Sunday, 18 October, 2009
பிரேம்ஜி said...
Imagine it! The cathedral..all Vienna sitting there.His coffin..Mozart's little coffin in the middle.And then..in that silence..music!A divine music bursts out over them all.A great mass of death.Requiem mass for Wolfgang Mozart.Composed by his devoted friend..Antonio Salieri.What sublimity!What depth!What passion in the music!Salieri has been touched by God at last..and God forced to listen.Powerless to stop it!I,for once,in the end,laughing at Him!இந்த படத்தில் எனக்கு மிக பிடித்த காட்சி.அந்த பாத்திரத்தை மர்ரே தவிர வேறு யாரும் செய்திருக்கவே முடியாது.மிக அற்புதமான நடிப்பு.In Fact,என் வலைப்பூவின் முதல் பதிவே அமடியூஸ் படத்தின் திரை பார்வை தான்.

உங்கள் தளத்தை விரும்பும் வாசகன்,
பிரேம்ஜி
Sunday, 18 October, 2009


Oct 13, 2009

Coterie -inner circle

பெரிய பிரபலமோ,சின்ன பிரபலமோ எந்த பிரபலத்தை
சுற்றியும் ஒரு Coterie அதாவது inner circle-( இவர்கள் பிரபலத்தை வசியப்படுத்தும் அபார சக்தி படைத்தவர்கள்) உண்டு.
பிறர் அந்த பிரபலமான நபரை நெருங்கி விட சாமானியமாகஅனுமதித்துவிடமாட்டார்கள். Possessiveness! தங்களுடைய இடம் பறி போய்விடக்கூடாதே! அவர்கள் பிரபலத்தின் குடும்பத்தாராக இருக்கலாம். அந்த பிரபலம் குடும்பம் , பாசம் உள்ளவராக இருக்கும் பட்சம்! (கருணாநிதியை சுற்றியுள்ள குடும்பத்தார் போல )அல்லது குடும்பத்தைக் கூட,கட்சிக்காரர்களைக்கூட நெருங்க விடாதவர்களாக இருக்க நேரிடலாம். (ஜெயலலிதாவை சுற்றியுள்ள மன்னார்குடி சசிகலா கும்பல் போல )பைபிளில் ஒரு எச்சரிக்கை வாசகம் : " உன்னுடைய வீட்டில் ஒரு அந்நியனை நுழையவிட்டால் அவன் உன் உறவினனையும் அன்னியனாக்கி விடுவான் "

காக்கைகள் கூட்டம் என்று வெளியிலிருப்போர், இவர்கள் பற்றி சொல்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் பிரபலத்தை சுற்றியிருக்கும்போது அந்த குடும்ப உறுப்பினர்களைச்சுற்றி காக்கைகள் இருக்கும் .

நெருக்கியடித்துக்கொண்டு மேலுலகில் வாழும் முப்பத்து முக்கோடி தேவர்கள் நாராயணனை பூலோக வாசிகள் தொழுவதற்கு சாமானியமாக விடமாட்டார்களாம் .தொழுதுவிட்டால் வைகுண்டம் போகும் வாய்ப்பு பூலோகவாசிகளுக்கும் கிடைத்து நெருக்கடி அதிகரித்து விடும்!
Pollutionபயம் .அதோடு தேவர்களை விட பெரியவர்களாகி விடுவார்களே! தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கமாட்டான் என்று சொலவடை . ராமனை சரணடைய விபீஷணன் வந்த போது கூட வானரங்கள் ( தேவர்களின் வாரிசுகள் ) விபீஷணனை சேர்த்துக்கொள்ளவே கூடாது என எதிர்த்தனவாம் !
தேவர்கள் பற்றிதேவேந்திரன் பற்றியெல்லாம் ஏன் சிலாக்கியமாக எதுவுமே இல்லை . அசுரர்களை விட மேலானவர்கள் தேவர்கள் ...?!?...



தியாகய்யருக்கு அந்த பதட்டம் அதிகம் . அவருடைய பைரவி ராக கீர்த்தனை -
"உபச்சாரமு ஜேசே வாருன்னா ரனி
மரவகுரா "

'உனக்கு உபச்சாரம் பண்ண நிறைய பேர் இருக்கிறார்கள் . அதனால் என்னை மறந்து விடாதேடா ராமா
அனுமன் ,தம்பிமார் , சீதை உன்னோடு இருப்பது உறுதி என்பதால் மற்றவர் எதற்கு என்று என்னை மறந்து விடாதேடா ராமா '
இந்த பாட்டில் தொனிக்கும் அந்த பதட்டம்.

தியாகய்யர் அந்த Coterie யை ப்பற்றி ,அவர்கள் ராமன் அருகிருந்து செய்யும் பூஜை புனஷ்காரங்களை சிலாகித்துக்கூட புல்லரிப்பாக கரகரபிரியா ராகக்கீர்த்தனை " பக்கல நிலபடி" என்று அவர்களையும் கொஞ்சம் புகழ்ந்து பாடுகிறார் . ராமனுடனான தன் உறவுக்கு இவர்களால் பங்கம் வந்து விடக்கூடாதே!








Oct 12, 2009

பூனைக்கண்

பூனைக்கண் புவனேஸ்வரி கைது விவகாரம் தினமலர் - நடிகர் சங்கம் பிரச்னையாக நீண்டு நிற்கிறது.

வேடிக்கைஎன்னவென்றால் சில வருடங்களுக்கு முன் விஜயகுமார் குடும்பம் பற்றி வெளிப்படையாக இதே பாணியில் அவதூறாக பேட்டி கொடுத்தவர் ராதா ரவி. இப்போது நடிகர் சங்க பொதுச்செயலாளராக அவரும் ஓநாய் கண்ணீர் வடித்துள்ளார். இன்னொரு வினோத வேடிக்கை இதில் பாதிக்கப்பட்ட ஷகிலா பற்றி சினிமாப்படங்களில் அவதூறாக ஜோக் அடித்தவர் விவேக் . அவர் தான் எல்லோரையும் தூண்டி விட்டுப்பின் மேடையிலும் சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்குன்னு குதித்திருக்கிறார் .
Double Standard !

நடிகர் சங்க கூட்டத்தில் காமெடியன் ரஜினி காந்த் !வக்காலத்தாக துக்ளக்தனமாக "ரெண்டு வேளை சோத்துக்காக இப்படி சோரம் போகிறார்கள் '' என்று அரிய உண்மையை,யாரும் அறியமுடியாத உண்மையை சொல்லிஅருளியிருக்கிறார்.எதற்காக இதை இந்த இடத்தில் சொல்லவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களே நடிகர் சங்கத்தில் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

கொஞ்ச நாள் முன் ஜூனியர் விகடனில் எல்லா கதாநாயக ,நாயகி பற்றியும் அந்தரங்க விஷயங்களை வெளிச்சமாக்கி"இவர் தான் உங்க ஹீரோ " தொடர் கட்டுரை பூனை பெயரில் வெளியானது .நடிகர் நடிகைகளின் வாழ்க்கை Erotic ஆனது தான் என்பதன் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த தொடரை வைத்து ஜூனியர் விகடன் சர்குலேசன் எகிறியது .

சில வருடங்களுக்கு முன் குமுதம் பத்திரிகையில் 'பதக்கூர் ஸ்ரீநிவாசலு ' நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்கள் பற்றி விலாவாரியாக எழுதிய தொடர் கூட சர்குலேசனை அதிகரிக்க செய்தது .

'கிசு ,கிசு ' விஷயங்களில் தங்களைப்பற்றி எழுதவேண்டும் என்று ஏங்கிய இயக்குனர்கள் , நடிகர் ,நடிகைகள் , தயாரிப்ப்பாளர்களும் உண்டு.

மீடியாக்கள் அடாவடி என்பது ஊரறிய தெரியக்கிடக்கிற விஷயம்.

மீடியாக்களால் விரட்டப்பட்டு ,துரத்தப்பட்டு , தப்பிக்க பல பிரயத்தனங்கள் செய்து தோற்றுப்போய் சலித்துப்போனவர் இங்கிலாந்து இளவரசி டயானா. கடைசியில் பாரிசில் ஹோடேலில் இருந்து வெளியேறி பத்திரிகை ,டி .வி ஊடகங்களின் கழுகு பார்வை , நாய்ப்பாய்ச்சல் விரட்டல் எல்லாவற்றையும் மீறி காரில் ஏறி காதலனுடன் பறந்தபோது விபத்திற்குள்ளாகி உயிர் விட்ட டயானாவின் கோர மரணம் பற்றி ஒரு ஆங்கிலப்பத்திரிக்கை வெளியிட்ட தலைப்பு செய்தி :
The Pursuit is over! Diana has come home!

காந்தியார் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது :
I believe in EQUALITY for every one except REPORTERS and PHOTOGRAPHERS.

மனோதர்மம்

நாதசுர சக்கரவர்த்தி டி. என்.ராஜரத்தினம் அவர்கள் கச்சேரி சுதந்திரமாக செய்ய விரும்புவது வழக்கம் . மனோதர்மப்படி நாக ஸ்வரம் அவர் விரும்பிய கீர்த்தனைகளை வெளிப்படுத்தும் . கச்சேரியில் சீட்டு எழுதி அனுப்புவதை அவர் ரசிக்க மாட்டார் . ராமேஸ்வரத்தில் ஒருமுறை ஒருவர் தோடி ராஜரத்னத்திடம் " 'மகுடி ' வாசிக்க சொல்லி அனத்தினார் . வித்துவான் கொஞ்ச நேரம் சட்டை செய்யாமல் இருந்து பார்த்தார் . மனோதர்மப்படி தான் விரும்பிய கீர்த்தனைகளை வாசித்துக்கொண்டிருந்தார் . ' மகுடி ' அனத்தல் அதிகமாகியது . உடனே நாகசுரத்தை மகுடி கேட்ட ரசிகரிடம் கொடுத்து அவரையே மகுடி வாசித்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டார் !

பாலமுரளி கிருஷ்ணா மேடையில் கச்சேரியில் உட்கார்வார் . ரசிகர்கள் சீட்டுகள் பல மேடைக்கு பறக்கும். இந்த பாடல் பாடுங்க .. அந்த பாடல் பாடுங்க ..தொண்டையை லேசாக செருமுவார். சுற்றுமுற்றும் பார்த்து விட்டு சொல்வார் :

“Lend thy ears! This is Balamurali music! Don't ask for this and that. Lend thy ears! ”

இதை ஏன் சொல்லவேண்டியிருக்கிறது எனில் எனக்கும் இப்படி விருப்பசீட்டுகள், அனத்தல்கள் வருகின்றன! இவரைப்பத்தி எழுதுங்க .. அவரைப்பத்தி எழுதுங்க ..அதைப்பத்தி எழுதுங்கன்னு ..இதைப்பத்தி எழுதுங்க ..

Don't annoy continually or chronically.

Oct 10, 2009

Four comments- Applause!

Applause – Enjoy it; but never quite believe it!

Audiences applaud even when the play is GOOD!



Applause 1
Tilakar Marudu.M. said...
Dear Gabie!

Two days before, i met my long time friend, your great Admirer, Ramachandran Arumugam, He talked and talked and talked about you and your blog. We really enjoyed talking about your American college life incidents. Have a nice time Gabie, and convey our warmest regards to your life parner and beautiful sons.

Tilakar Marudu. M.

...............................................


Applause 2

arumugam said...
Dear RP Rajanayahem,

I never miss reading your blogs.

it has become one of my every day duties..not to be missed!

I was overjoyed to know that Tilak whom I met recently after 20 long years is your good friend...We spent a lot of time talking about you..I really admire and wonder at your vast knowledge and experiences..At the same time I have also felt that you have been deprived of your righteous and deserving place in the society.. Something is terribly wrong somewhere...

Anyway sir.. I am at least happy now that you have your blog and it is THE NUMBER ONE BLOG..in terms of its contents... this I am sure is the majority of theblog visitors opinion..I wish sir...you all the best and my humble respects.

arumugam ramachandran
Wednesday, 07 October, 2009

..........................................


Applause 3

Kannan said...
Sir,

The degree of your reading is unfathomable. So is your experience in various spheres of life. Ordinary mortals like me can't ever dream of having such knowledge and wisdom.

We are fortunate even to know of someone like you. Keep up your good work.

Sincerely,

N.Ramakrishnan

Saturday, 10 October, 2009.

..............................


Applause 4

Krishnan said...
RPR sir

your blog is a veritable cornucopia of interesting information on all things under the sun.

Keep posting, I am glued to your posts.
Friday, 09 October, 2009

Oct 9, 2009

Carnal Thoughts-25


In the twinkling of an eye
- The Merchant of Venice.
கண் அடிப்பது என்பது காமத்தின் பிரதான சமிக்ஞை . ஆயிரமாயிரமாண்டு மரபுத்தொடர்ச்சியின் காம வெளிப்பாட்டுக்கான குறியீடு .
'காதல் விழிக் குறிப்பு' -குயில் பாட்டில் பாரதி.
திருவள்ளுவர் காமத்துப் பாலில் ' அவள் கண்ணடித்தாள்'என்பதை சொல்லும் விதம் " ஒரு கண் சிறக்கணித்தாள் "
கலவி செய்யும்போது வெளிப்படும் ' ஆ .. .. யம்மா .. ஐயோ ..ஹா .. ஹம்மா ..ராட்சசா ..ராட்சசி ..' என்ற சொற்கள் அப்போது தரும் பொருள் என்ன ? '' பாதி நடுக்கலவியிலே காதல் பேசி ..'' என்று பாரதி கூறுவது அனிச்சையாக வெளிப்படும் இந்த வார்த்தைகளைத்தானா ?!
'பல்லு போன பசு ஒன்று பசும்புல்லை நக்கி சப்பி ,சப்பிப் பார்ப்பதைப் போன்ற முடிவில்லா அறுசுவை தான் காமம் 'என சங்கக் கவிதை சொல்லும் .
கலவியின்பத்தை விட ஊடல் இனிமையானது - வள்ளுவன் வாக்கு " காமம் புணர்தலின் ஊடல் இனிது ''
கண்ணடித்தல் , பாதி நடுக்கலவியிலே காதல் பேசுவது , ஊடல் இவையெல்லாமே கலவியின்பத்தின் Sister concerns.

"the beast with two backs" meaning intercourse in Shakespeare's play Othello.
உடலுறவு என்பது ரெண்டு குண்டி கொண்ட மிருகம் - "the beast with two backs"ஷேக்ஸ்பியர் கண்டுபிடித்த Phrase!

Iago tells Brabantio:
Your daughter Desdemona and Othello are now making the beast with two backs.

மகமாயி - வேஷ்டி

சாதாரணமா இந்த நவீன யுகத்தில் ஏழ்மையில் உள்ள ரொம்ப சுமார் பெண்களைப் பார்த்தால் "அட்டு பிகர் " என்று விவரிக்கிற காலம் இது .


முகத்தில் அம்மைத்தழும்பு. ஒரு ஏழைப்பெண் . இவள் பெயர் பார்வதி . இவளைப்பற்றி ந .சிதம்பர சுப்பிரமணியம் " என்று வருவானோ " என்ற சிறுகதையில் விவரிக்கும் அழகு : " லக்ஷ்மியின் அருள் அவளிடம் விழவில்லையானாலும் மகமாயி யின் கருணை அவள் மேல் விழுந்து முகத்தில் அநேக இடங்களில் பதிந்திருந்தது ."


வீட்டில் அறைக்குள் சூரிய வெளிச்சம் விழுவதும் பின் மறைவதும் சாதாரணம் தான் . இதை ந .பிச்ச மூர்த்தி ' வலி ' சிறுகதையில் எப்படி விவரிக்கிறார் :


கண்ணுக்கு எதிரே வெள்ளைத்துணி பறந்தது .... ஒன்றுமில்லை . எதிர்ப்புரத்து சன்னல் வழியாக சூரியன் நுழைந்து சுவரில் வெள்ளைத்துணியைக் கட்டிக்கொண்டிருந்தான் ...


( கொஞ்ச நேரங்கழித்து )


சூரியன் கட்டிய வெள்ளை வேஷ்டி சுவரில் பாதியும் தரையில் பாதியுமாகக் கிடந்தது .


(இன்னும் நேரங்கழித்து )


கீழே புரண்ட துணியை சூரியன் எடுத்துக் கொண்டு போய் விட்டான் .



Oct 8, 2009

கவி கா.மு.ஷெரிப்

மந்திரி குமாரிபடத்தில் எஸ்.ஏ.நடராஜன் மலைமேலே மாதுரி தேவியிடம் பாடும் பாடல் " வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்" -திருச்சி லோகநாதன் குரல் கொடுத்த பாட்டு!இந்த பாடலை எழுதியவர் கவி கா.மு.ஷெரிப் .
'டவுன் பஸ் ' படத்தில் கண்ணப்பா -அஞ்சலிதேவி வாயசைத்து நடித்த "பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமோ ? துயரம் நிலை தானா ? உலகம் இது தானா ?" பாடலை எழுதியவரும் கவி கா.மு.ஷெரிப் தான்.
எஸ்.எஸ்.ஆர் நடித்த பாடல்கள் " ஏரிக்கரை மேலே போறவளே பொன்மயிலே! என்னருமை காதலியே என்னைக்கொஞ்சம் பாரு நீயே "
" பணம் பந்தியிலே ! குணம் குப்பையிலே ! இதை பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதன் இல்லே !" - எழுதியவர் கா.மு.ஷெரிப் .
சிவாஜி கணேசனுக்கு கா.மு.ஷெரிப் எழுதிய பாடல்கள்
"வாழ்ந்தாலும் ஏசும்,தாழ்ந்தாலும் ஏசும் -வையகம் இது தானடா "
" பாட்டும் நானே ! பாவமும் நானே !"

சினிமாப்பாடல் எழுதியவர் தான் என்றாலும் இவர் ஒரு Man of principles.
யாராவது கொஞ்சம் பெரிய மனுஷன் பழக்கம் இருந்தா அதை வைத்து எப்படி
Exploit
பண்ணலாம்னு தவிக்கிற உலகம் இது . மந்திரிகுமாரி படத்தினால் கருணாநிதி ,எம்ஜியார் , பாட்டெழுதிய ஷெரிப் ...எவ்வளவு காலப்பழக்கம்!



ஒரு முறை கருணாநிதி முதல்வராய் இருந்த போது கவி கா .மு .ஷெரிப்பின் மனைவி பார்க்கப்போயிருந்தார் . B.E. படித்த தங்கள் மகனுக்கு, அப்போது வேலையில்லாததால் கோபாலபுரத்திற்கு போயிருக்கிறார் .கருணாநிதி அன்போடு வரவேற்று உபசரித்திருக்கிறார் . மகனுக்கு வேலை வேண்டும் என்று கேட்ட தாயைப் பார்த்து சொன்னாராம் : " நான் சிபாரிசு பன்றதை கவிஞர் விரும்பவே மாட்டார் . சிபாரிசு செஞ்சா ரொம்ப வருத்தப்படுவார் .அவரிடம் ஒரு கடிதம் வாங்கிட்டு வந்தீங்கன்னா நான் சிபாரிசு பன்றேன் "
இந்த அம்மா வீட்டுக்கு வந்து கணவரிடம் நடந்ததை சொன்னாராம் ." ஏன் நீ அங்கே போனே ?"ன்னு கடுமையா கோபப்பட்டிருக்கிறார் கா .மு .ஷெரிப். " அவர் முதல்வர் பதவி வகிக்காத போது மட்டும் தான் நானே அவரைப் பார்ப்பேன் . நீ இப்படி செய்யலாமா ? பையன் அவனா வேலை தேடிக்கட்டும்"என்றாராம் !
"பூவாளூர் சந்தையிலே ஒங்க பொட்டி யோட என் பொட்டி ஓரசிக்கிச்சே .. ஞாபகம் இல்லையா !"ன்னு ஈ ன்னு இளிச்சி ஈசிண்டு உறவு கொண்டாடி ஓட்டப்பார்க்கிற உலகத்திலே இப்படி ஒரு பைத்தியக்கார பிரகிருதி !

எம்.வி.வெங்கட்ராம்

"ஹிந்துவாகிய நான் ஊழை நம்புகிறவன்; பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாகத்தான் நான் தமிழ் எழுத்தாளனாகப் பிறக்க நேர்ந்தது "
- 'என் இலக்கிய நண்பர்கள்' நூலில் எம்.வி.வெங்கட்ராம்

" மோகமுள் " நாவலில் எம்.வி.வெங்கட்ராம் ஒரு கதாபாத்திரமாகவே வருவார் .பாபுவின் கல்லூரித்தோழனாக!
திஜா மோகமுள்ளில் எம்விவி பற்றி : "பேசாமலேயே விழியால் நட்பைச் சுரக்கும் உள்ளம். என்னிடம் மட்டும் இல்லை. எல்லோரிடமும் இப்படித்தான்.எந்த மனிதனிடமும் வெறுப்போ ,கசப்போ தோன்றாத,தோன்ற முடியாத மனது இவனுக்கு. வியாபாரத்தில் எப்படி இவன் முன்னுக்கு வரப் போகிறானோ? யோகியின் உள்ளம் இவனுக்கு. அதை மறைப்பதற்காகக் கடை வைத்திருக்கிறானோ? இன்னும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்காக,எல்லாவற்றையும் ஒரேயடியாக ஒரு நாள் உதறி எறிந்துவிட்டுப் போவதற்காக வைத்திருக்கிறானா, புரியவில்லை."

அசோகமித்திரன் " மானசரோவர் " நாவலில் மணிக்கொடி எழுத்தாளர் கி.ராமச்சந்திரனை " கோபால் " என்ற அற்புதமான கதாப்பாத்திரமாக உருவாக்கியிருந்தார் . ( மானசரோவர் 'சத்யன்குமார்' பாத்திரம் இந்தி நடிகர் திலீப்குமார்!)

ஒரு பிரபல எழுத்தாளரை இன்னொரு பிரபல எழுத்தாளர் தன் நாவலில் கதா பாத்திரமாக்கியது - அமெரிக்க பெண் எழுத்தாளர் கேத்தி ஆக்கர் எழுதிய
“Blood and Guts in High school” நாவலில் பிரஞ்சு எழுத்தாளன் ழான் ஜெனே ஒரு முக்கிய பாத்திரம் !


மௌனியின் கதைகள் பலவற்றை எம்.வி .வி திருத்தி செப்பனிட்டிருக்கிறார்.
இவருக்கும் மௌனி க்குமான இலக்கிய சர்ச்சை ஒன்று அந்த காலத்தில் ரொம்ப பிரபலம்.
எம்.வி வெங்கட்ராம் தான் எழுத்தாளனாக இல்லாமலிருந்தால் பெரிய கோடீஸ்வரன் ஆகியிருக்க முடியும் என்று சொல்வார் .
அவருடைய "வேள்வித்தீ " " நித்தியகன்னி"
நாவல்கள் அவருக்கு இலக்கிய அந்தஸ்தை கொடுத்தன . ஆனால் அவர் கடைசி காலத்தில் எழுதிய " காதுகள் " நாவல் அவருடைய அமர சாதனை என சொல்லப்பட வேண்டும் .
எம்.வி.வி அவருடைய மத்திய வயதில் வினோத வியாதி ஒன்றிற்கு ஆளாக நேர்ந்தது . அவர் காதுகளில் படு ஆபாசமான வார்த்தைகள் ஒலிக்க ஆரம்பித்தன. இந்த ஹிம்சையிலிருந்து அவர் மீள முடியவே இல்லை . அதை " காதுகள் '' நாவலாக்கினார் . அந்திம காலத்தில் அவர் காதுகள் டமார செவுடு ஆகி , பிறர் பேசுவதை கேட்க மிகவும் சிரமப்பட்டார் என்பது Irony .


வாழ்வில் பெருந்துயர் சூழ்ந்து எதிரிகளால் புதையுண்டு மீண்டும் , மீண்டும் தான் உயிர்த்தெழுந்தவன் என்றும் வெங்கட்ராம் எழுதியுள்ளார் .




Oct 7, 2009

அந்திம காலம்

எழுத்தாளர் சுஜாதா தான் மறைவதற்கு சில வருடங்களுக்கு முன் தன் அந்திம காலம் பற்றிய துக்கத்தை வெளிப்படுத்தினார் :" நீண்ட வாழ்வின் இறுதியில் உள்ள சோகங்கள் சற்றே துருத்தி நிற்கின்றன.வானவில் கனவுகள் நிறமிழந்து விட்டது தெரிகிறது."

" மீனோட்டம் " சிறுகதை தொகுப்பு முன்னுரையில் லா.ச.ரா வாழ்க்கையின் மாலையில் தான் இருப்பதாக குறிப்பிட்டு விட்டு ' மாலை என்ன ..அந்தியே வந்தாச்சு " என்பார் . இப்படி சொன்னது லா.ச.ரா இறப்பதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்னரே !

இளமையில் உலகின்பக்கேணியில் மூழ்கி முக்களித்த பின் அந்திம காலம் தரும் துயரம். ' அந்தி ' என்ற தலைப்பில் ஆதவன் ஒரு அருமையான கதை எழுதியிருக்கிறார் . முதுமை மரணம் பற்றி ' கழுகு ' என்ற கதை தி .ஜானகிராமன் எழுதியிருக்கிறார். முதுமையின் வக்கிரம் பற்றி 'பாயசம் ' என்ற கதை, 'அவலும் உமியும்' குறுநாவல் எழுதியிருக்கிறார் . முதுமையின் அவலம் " விளையாட்டு பொம்மை '' என்ற திஜாவின் அபூர்வமான சிறுகதை.

பிராயமான காலத்தில் பிரகாசிக்கும் கூர்ந்த ஊடுருவும் புத்தி சக்தி கடைசியில் எப்படியெல்லாம் மழுங்கி விடுகிறது .

இந்திரா பார்த்தசாரதியின் 'வெய்யில் 'மறுபக்கம் ' என்று திரைப்படமானது .


பைரனின் Youth and Old age கவிதை.

பல எழுத்தாளர்கள் கடைசியில் வயதான காலத்தில் குருவிமுட்டைகளை போடடுத்தளளுவார்கள் . மழுங்கிய எழுத்து .
கடைசி காலம் தன் தோல்விகள் பற்றி அசை போடும்போது தான் காணாத வெற்றிகளை தன் புத்திரன் காணவேண்டும் என மனித மனம் ஏங்கும் . ஒருவர் தன்னை மற்றவர் ஜெயிக்கவேண்டும் என்று விரும்புவது தன் மகன் விஷயத்தில் தான் . " புத்ராத் இச்சேத் பராஜயம் "

ஆர்தர் ரைம்போ நல்ல இளமையில் இருக்கும்போதே முதுமை பற்றி கவிதை எழுதிவிட்டான் - நாகார்ஜுனன் மொழிபெயர்ப்பு :
புறப்பாடு
"போதும்
பார்த்தாகி விட்டது .
எல்லாவிதமும்
சந்தித்தாகி விட்டது
பார்வையதை .
போதும் .
நகரங்களின்
மாலையின்
கதிரவனின்
சந்தடி போதும் எப்போதுமாக .
போதும்
அறிந்தாகிவிட்டது
வாழ்க்கையின் நிறுத்தம் பல
ஓசை பல
பார்வையும்

இனி புறப்பாடு ."

இக்கட்டான சோகமான நிலையை ,பரிதவிப்பான நிலையை
Moment of Calvary என சொல்வார்கள் . முதுமைக்கால மன நிலையே,மரணத்தை மட்டுமே எதிர்கொள்ளும் நிலையே Moment of Calvary தானே .

Oct 6, 2009

நடிகை விஜயகுமாரி



நடிகை விஜயகுமாரி பேட்டி சமீபத்தில் கலைஞர் டி வி யில் பார்க்க நேர்ந்தது . இளமை இவரிடம் எப்படி இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அவர் காலத்து சரோஜா தேவியை விட இப்போது ரொம்ப அழகாக தெரிகிறார். கே ஆர் விஜயா தொப்பையும் ,தோற்பையுமாக கழன்று போய்விட்டார் .பின்னால் வந்த ஜூனியர் நடிகை 'கலர்' காஞ்சனா இப்போது முழுக்கிழவி . ராஜஸ்ரீ யும் உருக்குலைந்து போன நிலை . இவ்வளவு ஏன் இவர் கதாநாயகியாய் நடித்த ஜீவனாம்சம் படத்தில் அறிமுகமான லக்ஷிமியை இப்போது கமலின் ' உன்னைப்போல் ஒருவன் ' படத்தில் காண சகிக்கவில்லை.
இன்று கடந்த சிலவருடங்களுக்கு முன் வந்த நடிகைகளே எத்தனை பேர்
குண்டி, கை,நெஞ்சி,மூஞ்சி சுருங்கி வத்திப்போய் அல்லது ஊதிப்பெருத்து யாளி போல விகாரமாக தோற்றமளிக்கிறார்கள்.
ஆனால் விஜய குமாரி அப்படியே இளமையுடன் இருக்கிறார்!




'எங்க வீட்டுக்காரர் ' என்று எஸ் .எஸ் . ஆர் பற்றி இன்னமும் குறிப்பிடுவது சோகம் தான் . அவர் எப்போதோ முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இவரை விட்டு விட்டு தாமரை செல்வி என்ற பெண்ணை மணந்து பிள்ளை குட்டி என்று ஒதுங்கி விட்டார் . அல்லது விஜயகுமாரி ஒதுங்கிகொண்டதால் மூன்றாவது திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார் என்று கூட சொல்லலாம்.
இலட்சிய நடிகருடன் வாழ்வு கசந்து பிணக்கு ஏற்பட்டதை, பின்னால் பிரிவு தவிர்க்கமுடியாதது என்பதை அவருடைய தலைவர் சி.என். அண்ணாத்துரையிடம் நேரில் தான் விளக்கியதைப்பற்றி அந்த காலத்தில் ஒரு பேட்டியில் நடிகை விஜய குமாரி கூறியிருந்தார் .
விஜயகுமாரி மகன் ரவி நடிகர் விஜயகுமார் மூத்த மகளை (மஞ்சுளா மகள் அல்ல)திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார் .

நிம்மதி இல்லை என்று நடிகைகள் எப்போதும் சொல்வதை டி வி பேட்டியில் விஜயகுமாரி அடிக்கடி சொன்னார் .'தலையில் குத்து ,முதுகில் குத்து , நெஞ்சில் ஏகப்பட்ட குத்து 'என்று அதை அப்படி தன் கையால் குத்தி செய்து காட்டினார். பிரச்னைகள் !The intray is never finished. யாருக்குமே தான் உயிர் உள்ளவரை!

சினிமாவில் செயற்கைத்தனம் , நாடகத்தனம் விஜயகுமாரியிடம் உண்டு. இயல்பாக துருதுருப்பு ,படபடப்பு அதிகம் உள்ளவர் என்பதால் கொஞ்சம் மிகை நடிப்பு . பத்மினி கூட கொஞ்சம் மிகையாகத்தான் நடிப்பார்.
பூம்புகார் படம் பற்றியும் கண்ணகி சிலைக்கு மாடல் தான் தான் என்பதிலும் விஜயகுமாரிக்கு மிகுந்த பெருமிதம்.


இவர் பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர் . ஸ்ரீதர் " கல்யாண பரிசு ".
கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் முதல் படம் " சாரதா " விஜயகுமாரி படங்களில் மாஸ்டர் பீஸ்!
பி . மாதவன் முதல் படம் " மணியோசை " யில் விஜயகுமாரி தான் கதாநாயகி .
ஆரூர் தாஸ் இயக்கிய முதல் படம் "பெண் என்றால் பெண் " படத்திலும் நடித்துள்ளார்.
அன்று பேட்டி கொடுக்கும்போது அவர் நினைவில் வர மறுத்த படம் "ஜீவனாம்சம் ". மல்லியம் ராஜகோபால் இயக்கிய முதல் படம் . அதிலும் இவர் கதாநாயகி .
இன்னொன்று இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெயர் அப்போது படங்களின் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது .

சாரதா ,
சாந்தி ,
ஆனந்தி ,
பவானி
போன்ற படங்கள்.
கற்பகமும் இவருக்கு வந்தது தான் . ஆனால் எஸ் எஸ் ஆர் தனக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கற்பகமாக விஜயகுமாரி நடிக்க அனுமதி தரமுடியும் என்று பிடிவாதம் பிடித்ததால் கே.ஆர். விஜயா என்ற நடிகை கற்பகமாக தமிழ் திரையில் அறிமுகமானார் !
கே எஸ் ஜி " இந்த விஜயா இல்லாவிட்டால் இன்னொரு விஜயா " என்று சவால் விட்டு கே ஆர் விஜயாவை நடிக்க வைத்தார்.

இலட்சிய நடிகை என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள விஜயகுமாரி கொடுத்த விலை இப்படி மிக அதிகம்.

சாவித்திரி , சரோஜாதேவி , பத்மினிபோன்றவர்கள் பிறமொழியில் இருந்து தமிழுக்கு வந்து அளப்பரிய சாதனை புரிந்தார்கள் . அவர்களிடையே தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகை விஜயகுமாரி ஓரளவு சாதனை புரிந்தவர்.


மனோரமா எப்போதும் தமிழக முன்னாள் இந்நாள் முதல்வர்களுடனான தன்னுடைய rapport பற்றி பெரிதாக சொல்லிக்கொள்வார் . ஆனால் விஜயகுமாரி தான் இப்படி பெருமைப்பட்டுக்கொள்ளும் முதல் தகுதி கொண்டவர் . வி . என் .ஜானகி யின் கிச்சன் கேபினட் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் . எஸ் .எஸ் .ஆர் அவர்களின் அப்போதைய அரசியல் ,சினிமா அந்தஸ்து காரணமாக அண்ணாத்துரை , கருணாநிதி , ஜெயலலிதா அனைவரும் இவர் வாழ்வில் முக்கியமானவர்கள்.
பல வருடங்களுக்கு முன் மணியனின் 'இதயம் பேசுகிறது ' வாரப் பத்திரிகையில் இவர் தன் வாழ்க்கை தொடரை பரபரப்பாக எழுதினார் . அப்போது அவர் நெஞ்சில் ,தலையில் ,முதுகில் விழுந்த குத்துகள் பற்றி நிறைய குறிப்பிட்டார் . பகீரங்கமாக.
அவற்றில் ஒன்று : எஸ் . எஸ் .ஆர் எடுத்த மணிமகுடம் திரைப்படம் பற்றியது . வெளிப்புற படப்பிடிப்புக்கு கொடைக்கானல் சென்ற எஸ் . எஸ் .ஆர் . இவரை அந்தப்படத்தில் நடித்த போதும் சென்னையில் ஒதுக்கி விட்டு விட்டு அந்த படத்தில் நடித்த ஜெயலலிதாவுடன் சென்றார் என்கிற விஷயம்.




Oct 1, 2009

Nobleness


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக
(23 March, 1947 to 6 April,1949) இருந்தவர்.அப்போது அவருடைய மந்திரிசபையில் மூன்றே மந்திரிகள் தான்.
(பக்தவத்சலம், அவினாசிலிங்கம் செட்டியார், TSS.ராஜன்)

இப்போதெல்லாம் எல்லா மாகாணங்களிலும் பன்னிப்படை மாதிரி.


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அன்றைக்கு அவர் தங்கியிருந்த T .V .ஸ்டேசன் பக்கத்துலே கூவம் ஹவுஸ் வீட்டுக்கு அரசாங்கக் காரை உபயோகப்படுத்தாமல் நடந்தே வீட்டுக்கு வந்தார். இந்த அதிசய நிகழ்வை அந்த தெருவே ஆச்சரியத்தில் வியந்து போய் பார்த்தது.
நேர்மை, நாணயம் நம்மிடத்திலிருந்து தான் வரணும்னு ஓமந்தூரார் சொல்வாராம். சொன்னது மட்டுமல்ல . அப்படியே வாழ்ந்து காட்டியவர்.

....................



ஈ . எம் . எஸ் . நம்பூதிரிபாட் . முன்னாள் கேரளா முதல்வர். அவருக்கு பல்வலி . திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார் . துணைக்கு அவருடைய மருமகள் . க்யூவில் நிற்கிறார் ஈ .எம் .எஸ் . டாக்டரைப் பார்ப்பதற்காக. விஷயத்தை கேள்விப்பட்ட தலைமை டாக்டர் பதறிப் போய் ஓடி வந்து முன்னாள் முதல்வரிடம் க்யூவில் நிற்கவேண்டாம் என்று மன்றாடி , உள்ளே வர அழைக்கிறார் . இவர் மறுத்து விட்டார் . ஒரு மணி நேரம் க்யூவில் நிற்கும்படியாகிறது . பிறகு தான் பல்வலிக்கு சிகிச்சை பெறுகிறார் . இது நடந்தது மார்ச் 18,1998 அன்று . அவர் மரணமடைவதற்கு இரண்டே நாள் முன்னதாகத்தான் இந்த சம்பவம் .
..................


ராஜாஜி முதல் அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாச விளைவுகள் . மந்திரிகள் உடனே கஜதுஜபதாதிகளோடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிளம்ப யத்தனித்த போது ' நீங்கள் யாரும் போகவேண்டாம் . உங்களை வரவேற்கவும் , வசதி செய்து தரவும் , பாதுகாப்பு அளிக்கவும் தான் அதிகாரிகள் கவனம் செலுத்த முடியுமே தவிர ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அல்ல ' என்று தன் சக அமைச்சர்களுக்கு தடை உத்தரவு விதித்து விட்டார் ராஜாஜி . அமைச்சர் பெருமக்கள் வராததால் மிச்சமாகும் பணத்தைக்கொண்டு , கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குத் தாராளமாக,சிறப்பான உதவிகளை செய்யமுடியும் என்று மூதறிஞர் முடிவு செய்தார் .