Share

Oct 29, 2009

பின்னிய மேகச்சடை

திஜானகிராமன் மோகமுள் நாவலில் :" நிலவொளியில் வெண்மை பூண்ட மேகங்கள் கப்பல் கப்பலாக விம்மிக் கொண்டிருந்தன. வில்லடித்த பஞ்சுப் படலம் ஒன்றின் மீது சந்திரன் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது,வலையில் படாமல் ஓடுவது போல."

எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் கவிஞர்களைப் பற்றி சிலாகித்து சொன்ன வார்த்தைகள்-
" காலக்கறையானால் அரிக்கப்படாத பூமரங்கள் கவிஞர்கள். நிழலும் நறுமணமும் நல்கும் இத்தருக்கள் தான் வறண்ட நம் சமூக வாழ்வின் அரிய செல்வங்கள்."

கவியுள்ளம் பெறுவதற்கு ' உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு வேண்டும். உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு கூட வேண்டும் ' என்பார் பிரமிள். 'புட்டிகுடியையும் குட்டி அடியையும் அவுத்து அவுத்துக் காட்டிவிட்டால் கவிதை ஆகுமா?' என ஆவேசமாக கேட்டவர் அவர் .

நிலவு.அதைச்சுற்றி மேகங்கள் .இதை இரவில் பார்க்கிறார் பிரமிள்.
"நிலவை மழித்தான் தேவ நாவிதன்
சிகையாய் முகில்கள் வானில் விரிந்தன "


இது தான் உள்ளதை உள்ளத்தில் வாங்கி உயிரூட்டும் சுக்கிரத்தவிப்பு!



எஸ் வைத்தீஸ்வரன் : 'வானம் கட்டுப்பாடற்று பெற்றுத்திரியவிட்ட
மேகங்கள், பொல்லாவாண்டுகள். நினைத்த இடத்தில்,கவலையற்று,நின்று தலையில் பெய்துவிட்டு,மூலைக்கொன்றாய் மறையுதுகள் வெள்ளை வால்கள் !'

சுக்கிரத்தவிப்பு!

சாதாரண உண்மைகளை ஒரு சரியான தலைப்பு கொடுத்துக்கூட நல்ல கவிதையாக்கிவிட முடியும் . புரட்சி என்ற தலைப்பில் ராஜசுந்தரராஜன் எழுதிய கவிதை அப்படி ஒரு கவிதையை உருவாக்கியது . அந்த 'புரட்சி ' என்ற தலைப்பு இல்லாவிட்டால் அது கவிதையே அல்ல என்றாகி விடும் .
புரட்சி
மேகத்தில் இருந்து
மழை மட்டுமல்ல
மின்னலும் பிறக்கும் .

இது உள்ளதுக்கு அப்பால் ஆழ்ந்து எரியும் சூரியத்தகிப்பு !




..

3 comments:

  1. கவிதையைப் பற்றிய அருமையான விவரிப்பு சித்திரங்கள்.. மிக்க நன்றி!

    ReplyDelete
  2. ’பின்னிய மேகச்சடை’ தலைப்பே கவிதை.

    ஆழ்ந்த உடல் உறவின் பின் வரும் மொனநிலையினை ஒத்தது(கவனமாக படிக்கவும்)(உங்களுக்கு இல்ல சார் மத்தவங்களுக்கு) பிரமிளின் கவிதைகள்.

    சில நகுலனின் கவிதைகளும்.

    தேவதச்சனும் இனிமை.

    //" காலக்கறையானால் அரிக்கப்படாத பூமரங்கள் கவிஞர்கள். நிழலும் நறுமணமும் நல்கும் இத்தருக்கள் தான் வறண்ட நம் சமூக வாழ்வின் அரிய செல்வங்கள்//
    இதில் என்னையும் வலிய சேர்த்துக்கொள்கிறேன்.(கவிஞன் + ஓவியன்)

    சகிச்சுக்குங்களேன்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.