Share

Jun 20, 2024

ராஜநாயஹம் தழல் வீரம் - ராஜா ஹஸன் பார்வை


தழல் வீரம் - கட்டுரைத் தொகுப்பு ஆசிரியர்:             R.P. ராஜநாயஹம் 
ஜெய்ரிகி பதிப்பகம்- பெங்களூரு கிடைக்குமிடம் யாவரும் பப்ளிஷர்ஸ் பக்கங்கள் :272
விலை: Rs.300
அலைபேசி: 86438 42772
----------------------------------------------------------------------
ராஜா ஹஸன் பார்வை 

Raja Hassan 

R.P.ராஜநாயஹம்  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியச் சூழலில் இயங்கி வருபவர். ஆங்கில இலக்கியம், தத்துவம் ,அரசியல், சினிமா, கலை, படைப்பாளிகளுடன் நட்பு என  இவர் எழுதிக் குவிக்காத தகவல்கள் இல்லை.

 தன்னுடைய எழுத்தை இதுவரை யாரும் கை கொள்ளாத பாணியில் தனித்துவமாக சிறப்பான எழுத்து நடையில் ஞாபக அடுக்குகளின் குண நலன்களோடு எழுதுபவர்.

அனைத்திற்கும் மேலாக நகைச்சுவை இழையோடும் எழுத்துகள் ..எழுத்தின் அழுத்தத்தை கூட்ட அல்லது குறைக்க வல்லவை. 'தழல் வீரம்' என்ற இந்த கட்டுரைத் தொகுப்புகள்..  இவரது பரந்துபட்ட எழுத்துகளில் ஒரு பானை சோறு எனலாம். ராஜநாயஹம் யார் என அறிவதற்கு இந்த கட்டுரைத் தொகுப்பு கட்டியம் கூறுகிறது என்பேன்.

இத்தொகுப்பின் கட்டுரைகள் எந்தவித பாசாங்கும் இன்றி நேரடியாக எழுதப்பட்டுள்ளன .கெட்ட வார்த்தைகள் தனது படைப்பில் வருவதை குறித்து R.P.ராஜநாயஹம் அவற்றின் ஆதி அந்தங்கள், இந்த கூச்சம் எதனால் வருகிறது ?என்று இரண்டு பக்கங்களில் ஆராய்ந்து எழுதியுள்ளார்.

அபார நினைவாற்றல்... ஒன்றிலிருந்து ஒன்று தாவிச் செல்லும் தகவல் பறவை ராஜநாயஹம் எழுத்துகளில் பறந்து கொண்டிருக்கிறது.

தமிழ் இலக்கியச் சூழலில் பலராலும் அறியப்படாத படைப்பாளர்களான கிருஷ்ணன் நம்பி, சார்வாகன், கோபி கிருஷ்ணன், சம்பத் போன்றவர்களைப் பற்றி மிகச் சிறந்த அனுபவங்களையும் அவர்தம் படைப்புகள் குறித்த விமர்சனங்களையும் தொகுப்பில் ராஜநாயஹம் இணைத்திருப்பது மிகவும் சிறப்பு .
குறிப்பாக கிருஷ்ணன் தம்பியின் "தங்க ஒரு கதை "பற்றிய அவரின் விவரிப்பு மிகவும் அருமை.

ஆங்கில எழுத்தாளர் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆசிரியர் குஷ்வந்த் சிங் குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் இதுவரை எங்கும் கேள்விப்பட்டிராதவை. அவருக்கும் அவரது மனைவிக்கிடையிலான பிரச்சனைகள்,மண வாழ்வில் குறுக்கிட்ட பிரபல அரசியல்வாதிகள், அதிகாரிகள் என வெளிப்படையாக குஷ்வந்த் சிங் எழுதி இருப்பவை பற்றி தழல் வீரத்தில் ஆசிரியர் மூலமாக காண்கிறோம்.

கிருஷ்ணமேனன் லண்டனில் ரெஸ்டாரன்ட்களில் சர்வராக வேலை பார்த்து பின்னர் அதே லண்டனில் இங்கிலாந்தின் இந்தியத் தூதராக ஆகி இந்திய எம் பி ஆகி நேருவின் அமைச்சரவையில் இந்திய ராணுவ மந்திரியாகி ....சினிமாவாக எடுத்தால் கூட சற்று மிகையாகவே தெரியும் கதைகளை மிகச் சுருக்கமாக விளக்கி இருப்பது மிகவும் சிறப்பு. ("அவ்வப்போது ஆபாசம் தான் அரியணையில் அமர்கிறது.. அவ்வப்போது அரியணையே ஆபாசத்தின் மேல்")

கி.ராஜநாராயணன் அனுபவங்கள் குறித்து ராஜநாயஹம் தனி புத்தகமே எழுதலாம் அந்த அளவுக்கு கிராவுடனான சந்திப்புகள்.. உரையாடல்கள் நிறைய உள்ளன. ஒரு பானை சோற்றுப் பதமாக கிரா குறித்த கட்டுரைகளில் இருவருக்குமான உறவு, வாத்ஸல்யமான நட்பு... வாசிக்கும் நம்மை நெகிழச் செய்கிறது.
 
'நீட்டி முழக்கி, கூறியது கூறல் இவரிடம் இல்லை.
 பத்து வரிகளிலேயே ஒரு கட்டுரையை முடித்திருக்கிறார்..

 இவரது எல்லா கட்டுரைகளிலுமே இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு என அந்த எழுத்து தாவுதல் இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது...!

Quotes.. ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது.

தன் எழுத்திற்கான கச்சாப்பொருளை ராஜநாயஹம் எங்கே கண்டடைந்திருப்பார் ? என நினைக்கையில் அனைத்துமே அவரது மூளையில் பதிவான நினைவு அடுக்குகளின் தொகுப்புகள்.. அவற்றை இழை இழையாக உலக திரைப்படங்கள், உலக இலக்கியங்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், தமிழின் ஆகப்பெரும் எழுத்தாளர்கள், திரை ஆளுமைகள், இசை பற்றிய பதிவுகள் ...தன் அனுபவத்திலிருந்து ராஜநாயஹம் எடுத்தாண்டிருப்பது .... வாசகனை வியப்பில் ஆழ்த்துகிறது.

சாரு நிவேதிதாவின்,
" எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும்"  படைப்பு குறித்து ஆசிரியர் பகிர்ந்திருக்கும் தகவல்கள் மிகவும் சிறப்பு ❤️.

'ஊட்டியில் தளைய சிங்கத்திற்கு நடந்த தொழுகை 'அவசியம் வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை. கடந்த 2002 ல் படைப்பாளிகளுடன் கருத்தரங்கம் ஊட்டியில் நடைபெற்றது. அவற்றின் நிகழ்வுகளை ஆசிரியர் விவரித்து இருக்கும் விதம் மிகவும் அருமை.

சுந்தர ராமசாமியின் 'அழைப்பு' கதையில் ஒருவரி,' நினைவின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பிழைகளின் அவமானம்'. என்ற மேற்கோளுடன் அந்தக் கட்டுரை முடிகிறது. 

நடிகர் ஏவிஎம் ராஜன் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி  மத போதகராக இருக்கும் நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன்பே இயேசு கிறிஸ்துவை பற்றி அவர் ,திரைப்படத்தில் கூறியதை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டு எழுதி இருப்பது எவ்வளவு பெரிய நினைவாற்றலுடன் ராஜநாயஹம் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை புலப்படுத்துகிறது.

தழல் வீரத்தில் இதைப் போன்று மிசா ராமசாமி, மோத்தி,  சிலராமன் போல பல ஆளுமைகள் வந்து செல்கிறார்கள். இந்த சம்பவங்களின் தொகுப்பை ஆசிரியர் சுவாரசியமாக அளித்ததே இப் புத்தகத்தின் அழகு.

மதுரை அமெரிக்கன் கல்லூரி காலகட்ட நினைவுகள் அப்போதைய நிகழ்வுகளை  அந்த வட்டார வழக்கிலேயே பகடியுடன் வழங்கி இருப்பது.. ராஜநாயஹத்தின் கட்டுரைகள் இப்படித்தான் இருக்கும் என்ற படிநிலையைத் தகர்த்து,' எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரியான எழுத்து வகை' என அறிகிறோம்.

தழல்வீரத்தின் கட்டுரைகள் திரும்பத் திரும்ப வாசிக்க வைக்கின்றன. 

கட்டுரைகளை ஒவ்வொரு முறை வாசிக்கும் பொழுது மனக்கண்ணில்  நாம் உணரும் சித்திரங்கள் ... அவை நமக்குத் தரும் சிலிர்ப்பான வாசிப்பனுபவம் இந்நூல் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. 

அனைத்து துறைகளைப் பற்றியும் தமிழில் நகைச்சுவையுடன் சுவாரசியமாக சுருக்கமாக கூறும் இந்த 'தழல்வீரம்'  அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூல்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.