Share

Jun 19, 2024

ஞானப் பழத்தைப் பிழிந்து

அப்பா சென்ட்ரல் எக்ஸைஸில் பழனியில் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்தார். அப்படி போஸ்ட் இருந்தது. அப்புறம் திருச்சியில் நான் ஆறாம் வகுப்பு படிக்கிற சமயம் அப்பா கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் ஆனார். 
அப்புறம் பல வருடம் கழித்து மதுரையில் சூப்ரண்ட் ஆஃப் கஸ்டம்ஸ்.

பழனியில்  அப்பா அடையாளம் 
'போயிலை இன்ஸ்பெட்டர்'. 
புகையிலைக்கு வரி போடுவதால்.

வேலை கடுமை. இருபது மைல் சைக்கிளில் அநேகமாக தினமும் போக வேண்டும். பிறகு பழனி திரும்பி வர வேண்டும். பல இரவுகள் காட்டுப் பகுதியில் படுத்திருந்திருக்கிறார்.
அப்படி தூங்கும் போது திடீரென்று விழித்துப் பார்த்தால் தலைக்கு மேலே நல்ல பாம்பு படமெடுத்துக் கொண்டு.

சென்ட்ரல் ஆஃபிஸில் இருந்த சிப்பாய்                          சவட முத்து மாமாவின் சிரித்த முகம் இன்றும்  நினைவில்.
சரவணன் சவட முத்துவின் தந்தை.

அப்பா காலை பல ஊருக்கு போய் புகையிலை குடோன்களை செக் செய்து வரி போட்டு விட்டு மதியம் ஆஃபிஸ் வந்தால் அஸிஸ்டண்ட் கலெக்டர் விசிட். தாமதமாக இரவில் வீட்டுக்கு வந்தார்.

சாப்பிடும் போதே " டேய் தொர, தூங்கிடாதே. நம்ம ரெண்டு பேரும் ஜாலியா கே.பி. சுந்தராம்பாள் கச்சேரிக்கு போவோம்.ஆச்சி பாட்டு நல்லா இருக்கும்"

லிட்டில் ஃபளவர் கான்வென்ட்டில் இரண்டாம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன்.
மார்கழி பனி.
தலைக்கு கம்பளி குல்லா வைத்து ஸ்வெட்டர் போட்டு விட்டு அம்மா அனுப்பி வைத்தாள்.
சைக்கிளில் முன்னால் அமர்ந்து அப்பாவுடன்.

வெள்ளை சேலையில் பாட்டி சுந்தராம்பாள் பாடினார். பரவசத்தில் அப்பா.

பசுமையாக ஞாபகம்.
 'ஞானப் பழத்தைப் பிழிந்து' பாடும் போது எலுமிச்சை பழத்தை 
தன் முன் நீருடன் இருந்த டம்ளரில் சுந்தராம்பாள் பிழிந்தார்.
ரசிகர்கள் கரகோஷம். டம்ளரை எடுத்து பருகினார். நீண்ட நேர கைத்தட்டல் அடங்கியவுடன் ஆச்சி  சிரித்த முகத்துடன் பாடலை தொடர்ந்தார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.