Share

Oct 31, 2019

சங்கீத சௌபாக்யம்



எஸ் ஜி கிட்டப்பா யாரையும் குறிப்பிட்டு குருவாய் சொல்ல முடியாதவர்.

"ஏக சந்த கிராஹி "என்று அந்த காலத்தில் சொல்வார்கள்.

ரொம்ப ஆச்சரியம்.

தியாகராஜரின் சுத்த சீமந்தினி ராக "ஜானகி ரமணா "கீர்த்தனையை ஒரே தரம் கேட்டு விட்டு உடனே மேடையில் பாடியவர் கிட்டப்பா! இவர் பாடிய நாத சிந்தாமணி 'எவரனி ' பற்றி நான் 'சஹானாவும் தேவாம்ருத வர்ஷிணியும்' பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் .

அநேக கீர்த்தனைகளை பாடாந்தரமாக கேட்டு கற்றுகொண்டவர்.
விளாத்திகுளம்சாமிகளின் நண்பர் சங்கீத ஞானி மதுரை மாரியப்ப சுவாமி.
இவரிடம் அநேக கீர்த்தனைகள் பயின்று கிட்டப்பா பாடினார்.அற்பாயுளில் இருபத்தேழு வயதில் மறைந்த துர்பாக்யசாலி கிட்டப்பா.

மாரியப்ப சுவாமிகளின் ரசிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

இந்த மதுரை மாரியப்ப சுவாமிகள் பற்றி ஒரு முக்கிய தகவல். வயிற்று வலி வேதனையால் சொல்லொணா துன்பத்தை மாரியப்ப சுவாமிகள் அனுபவித்து துடித்திருக்கிறார் .

கடைசியில் திருச்செந்தூர் முருகனிடம் நேர்ந்து வேண்டிக்கொண்டார் . வயிற்று வலி குணமான வுடன் நேர்ச்சி கடன் செலுத்தினார்.

தன் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தினார்!

தன் சங்கீதத்தை ,பாடும் திறனை தியாகம் செய்திருக்கிறார்.

சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர் மாரியப்பசுவாமிகள்.

மாரியப்ப சுவாமிகள் வேறு.
திரைப்பட நடிகர் எம்.எம்.மாரியப்பா வேறு.  குழப்பிக்கொள்ளக் கூடாது.

தோடி சீத்தாராமையர் என்று ஒருவர். விளக்கம் தேவையில்லை.
தோடி யை அடகு வைத்து தன் கஷ்ட காலத்தில் பணம் பெற்று குடும்பம் நடத்தியிருக்கிறார்.அடகில் தோடி இருக்கும்போது கச்சேரியில் தன் பிரிய ராகம் பாடமாட்டார் . சங்கராபரணம் நரசய்யரும் இதே கதை தான். சங்கராபரணத்தை அடகு வைத்து விட்டு கச்சேரிகளில் சங்கராபரணம் பாட முடியாமல் தவித்திருக்கிறார்.

தியாகபிரும்மத்தின் சஹானா ராக கீர்த்தனை "கிரிபை" M.D.ராமநாதன் பாடியதை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டவே செய்யாது. அதோடு அப்போது ஏற்படும் ஆத்மீக அனுபவம் விசேசமானது.இந்த பாக்யம் போதுமே என ஒரு மனநிறைவு ஏற்படும்.

19 வது நூற்றாண்டில் வையச்சேரி மகா வைத்யநாத பாகவதர் இந்த சஹானா "கிரிபை" யை அனுபவித்து பாடுவாராம். ஒவ்வொரு கச்சேரியிலும் விரும்பி பாடும் வழக்கத்தை கொண்டிருந்தார். ரசிகர்களும் அவர் மறந்தாலும் ஞாபகப்படுத்தி கேட்டு மகிழ்வார்கள்.

ஒரு முறை பிச்சாண்டார் கோவில் சுப்பையர்
இந்த சஹானா கீர்த்தனையை பாடும்போது மகா வைத்யநாதர் கேட்டிருக்கிறார். நெகிழ்ந்து கண்ணீர் மல்க சுப்பையர் அவர்களை இவர் தழுவிக்கொண்டாராம்.

அதன் பிறகு எந்த கச்சேரியிலும் அந்த கீர்த்தனையை மகா வைத்யநாத பாகவதர் பாடியதே கிடையாது.
கிரிபை பாட சொல்லி பல சங்கீத ரசிகர்கள் விரும்பிகேட்கும்போதெல்லாம் மறுத்து விடுவாராம். "அது பிச்சாண்டார் கோவில் சொத்து " என்பதே அவர் பதிலாயிருந்திருக்கிறது.

தேவாம்ருதவர்ஷினி ராகம் மழையை வருவிக்கும் என்பது ஐதீகம். இந்த ராகத்தை நாத சிந்தாமணி என்றும் பெரியவர்கள் சொல்வார்கள்.

"எவரனி"தேவாம்ருத வர்ஷினி இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரபலமாயிருந்த வாக்கேயக்காரருமான ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர்( எழுத்தாளர் சிவசங்கரியின் தாத்தா ) ஒரு ரிகார்டிங் கம்பெனிக்காக பாடி பதிவாகியிருந்த சூழ்நிலையில்,
அப்போது இளைஞனாயிருந்த கிட்டப்பா பாடி அதே "எவரனி" யின் மற்றொரு பதிவை கேட்ட முத்தையா பாகவதர், கிட்டப்பாவின் பாட்டில்
சொக்கிப் போய் தன்னுடைய பதிவை உடனே நீக்கி கொள்ளும்படி ரிகார்டிங் நிறுவனத்திடம் அட்வான்சை திருப்பிகொடுத்து விட்டாராம்.
" கிட்டப்பா பாடியது தான் "எவரனி" –மிக பெருந்தன்மையோடு ஹரிகேச நல்லூர் பூரித்துப்போனார்.

அப்படி ஒரு காலம், அப்படிப்பட்ட சங்கீதப் பிறவிகள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.