Share

Oct 5, 2019

R.P.ராஜநாயஹம் பற்றி கி.ராஜநாராயணன்


கி.ராஜநாராயணன் நாட்குறிப்பிலிருந்து
கதை சொல்லி 15வது இதழ்,ஏப்ரல் 2004
கி.ரா.நாட்குறிப்பிலிருந்து
R.P.ராஜநாயஹத்திடமிருந்து இன்று திடீரென்று தொலைபேசியில் குரல் வந்தது.
எங்கெயிருந்து பேசுறீக?
திருப்பூரிலிருந்து.
திருப்பூருக்கு எப்பொப் போனீக ?
இப்போ திருப்பூரில தாம் இருக்கேன்.
திருச்சி என்ன ஆச்சி ?
திருச்சி என்னெக் கை விட்டுட்டது.

எனக்குப் பழக்கமானவர்களில் ராஜநாயஹம் முக்கியமானவர்.
சுவாரஸ்யமான ஆள்.பழகிவிட்டால் அவரை மறக்கவே முடியாது.அவர்
நம்முன் உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
பேச்சாளர்கள் என்றால் இவர்கள் தான் மெய்யான பேச்சாளர்கள். அரசியல்
கட்சிக்காரர்கள் இப்படி ஆட்களை ஏன் தங்கள் கட்சியின் முழுநேரப்
பேச்சாளர்களாக வைத்துக்கொள்ளவில்லை என்று கேட்கத்
தோன்றுகிறது!ஆனால் இந்த இவர்களுக்கு அரசியல் பேச வராது.
முழுப்பேச்சும் சமூகம் பற்றியது தான். அதுவும் முக்கியமாகத் தங்கள்
வாழ்க்கையில் நடந்த பிரச்னைகள், சம்பவங்கள்,தாங்கள் எப்படித் தோற்றோம் என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல அரசியல்காரர்களால்
முடியுமா? இவர்களால் முடியும். இந்தத் தோற்ற கதையைச் சொல்லுவதில்
தனம் குமாரசாமி என்று ஒரு நண்பர் இருக்கிறார்.அவரை யாரும் பீட்
பண்ணமுடியாது.அவரும் சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார். இது
சிரிக்க வைக்கும் சமாச்சாரம் இல்லை தான். ஆனாலும் என்ன செய்ய
முடியும்? நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே இருக்க முடியுமா?
சொல்லி அடுத்தவர்களையும் வருத்தப்பட வைக்க ஆரம்பித்தால், ”நாம்”
தூரத்தில் வருவதைப் பார்த்தாலே ஓட்டம்பிடிக்க ஆரம்பித்து
விடுவார்களே.
இவர்களை வாழ்க்கை ஓடஓட அடித்து விரட்டுகிறது,எங்கேயும்
எதிலும் தாக்குப் பிடித்து நிற்க முடியலை இவர்களால்.”காலா அருகில்
வாடா ஒன்னைக் காலால் எத்தி மிதிக்கிறேன்” என்கிற ஒரு தைரியம் தான்.
வாழ்க்கையால் இவர்களை அழவைக்க முடியவில்லை.
ராஜநாயஹம் சொல்லுகிறார்.இது நான் இப்போது இருவதாவது
இடம்.நாள் ஒன்றுக்குப் பதினாலு மணி நேரம் உழைக்கிறேன் என்கிறார்.
தேர்ந்த இலக்கியவாசகர்.கூட்டில் தேன் சேர்த்து வைத்திருப்பது போலப்
புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தார்.இசைஞானம் உண்டு.தேர்ந்த
இசைத்தொகுப்புகளைச் சேகரம் பண்ணி வைத்திருப்பவர்.புதுவையில்
இவர் இருந்த போது வாரம் ஒரு தடவை எங்களைப் பார்க்க வருவார்.
வந்தவுடன் நானும் கணவதியும் அவர் எதிரே உட்கார்ந்து அவர் பேச்சைக்
கேட்க ஆயத்தமாகிவிடுவோம்.அப்படி ஒரு பேச்சு.
ராஜநாயஹம் வீட்டில் அந்த அம்மையார் ( அவர் மனைவி ) வவ்வா மீனை
அருமையாகப் பொரித்து வைப்பார். அந்த மீனின் முட்களெல்லாம்கூட
முறுக்கு போல் தின்பதற்குப் பொருபொரு என்று சுவையாக இருக்கும்.
அப்படிச் சுவை எமக்குக் கிடைத்து அனேக வருடங்கள் ஆகி விட்டன.
கூட்டாகச் சேர்ந்து நண்பர்களோடு உண்டு பேசி சிரித்து மகிழ்வதைவிட
வேற என்ன இருக்கிறது? அந்தக் காலம் இனிவருமா?
............................
ராஜநாயஹத்திற்கு 1991ல்
கி.ரா எழுதிய கடிதமொன்றில்
”நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் நடையைக் கட்ட வேண்டியது தான்.”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.