Share

Oct 2, 2019

யானையும் அங்குசமும்


அப்பா எனக்கு எதையாவது தர மறுக்கும் போது என் அம்மா எப்போதும் சொல்வது
“ இவரு ஒருத்தரு. யானைய கொடுத்துடுவாரு. அங்குசத்த கொடுக்க மாட்டாரு.”
யானய சுலபமா குடுத்துடுவாரு. ஆனா அங்குசத்த கொடுக்க ரொம்ப யோசிப்பாரு.
இது நல்ல சொலவடை. இது உள்ளடக்கியுள்ள மனோதத்துவம் நுட்பமானது.
“Penny wise and Pound foolish.”
என் தகப்பனாரிடம் இந்த குணம் இருந்தது. மார்க்கெட் போனாலும் வீட்டுக்கே வரும் காய்கறி, பழக்காரிகளிடம் பேரம் செய்து தான் வாங்குவார்.
வேடிக்கையாக ஒரு வார்த்த சொல்வார் “ என்னம்மா இந்த வில. எங்க மொதலாளி ரொம்ப கோவக்காரரும்மா”
எப்போதும் பிரமிப்பாக பதில் வரும்.” என்னய்யா. ஒங்களுக்கு ஒரு மொதலாளியா? இத நான் நம்பனுமா? நீங்க தான் மொதலாளின்னு எனக்கு தெரியாதா?”
இப்படி காய்கறி பேரம் செய்யும் அப்பாவிடம் மிகப் பெரிய தொகையை பலரும் சுலபமாக வாங்கி விட்டு தராமல் ஏமாற்றி விடுவார்கள். நல்ல பிசினஸ் ஸ்கீம்னு வாயாலேயே எவன் லட்டு சுட்டாலும் அல்லது எழுத்தாலே விளக்கி ஸ்பைரல் பைண்டிங் பண்ணின ப்ராஜெக்ட காட்டி, ’இவ்வளவு இன்வெஸ்ட் பண்ணா இவ்வளவு சம்பாரிக்கலாம்’ என்று எவன் சொன்னாலும் நம்பி பெருந்தொகையை தூக்கி கொடுத்து ஏமாந்து விடுவார்.

என் கிட்ட கணக்கு பாப்பாரு. ஊரில உள்ளவன் கிட்ட தூக்கி குடுத்து ஏமாறுவார்.

பணம் வாங்கியவன் பற்றி அவன் இத வச்சி கள்ளக்கணக்கு சொல்லி என்ன ஃப்ராடுக்கும் தயாராயிருக்கான்னு, திறன் தன்மை கொண்ட அப்பா சுலபமா கொஞ்ச நாள்ள கண்டு பிடிக்கும் போது விஷயம் கை மீறிப்போயிருக்கும். வேதனையோடு சொல்வார். “He is upto anything. சேலய முள்ளுல போட்டுட்டோம், கவனமா எப்படி எடுக்கறதுன்னு பாக்கணும்.லட்சக்கணக்குல machineryல கமிஷன் அடிச்சிட்டான்றத கண்டு பிடிச்சிட்டேன்.”
நானும் அப்பாவும் செயத தொழிலில், technocratக்கும் பங்கு கொடுத்து விட்டார். அவன் தான் பேப்பர்ல ஸ்கீம் காமிச்சவன். ஃபாக்டரி ஆரம்பித்த பின்பு ப்ரொடக்சன் போது தான் அவனுக்கு வேலை.
உழைத்ததெல்லாம் நான். அப்பா செய்த தவறால் அவனுக்கு அந்த காலத்தில் மாதம் இரண்டாயிரம் சம்பளம் ஒரு வேலை செய்யாமல் தண்டமாக கொடுக்க வேண்டியிருந்தது.
அதில் அவன் ஊரில் இருந்து சம்பளம் வாங்க வரும்போது,சாப்பாடு சாப்பிட்ட கணக்கு வேறு. சென்னைக்கு மிஷின் விஷயமா போயிருந்தப்ப சாப்பிட்ட கணக்கு இப்படி. அசைவ சாப்பாடு முப்பது ரூபாய்க்கு சாப்பிட முடியும். அப்பவே lunch bill இருநூறு ரூபாய்ம்பான்.
’லஞ்ச்சுக்கே இருநூறு ரூபாயா?’
“ நான் நல்லா சாப்பிடுவேங்க. ஒங்க பணத்துக்கு நான் துரோகம் செய்ய மாட்டேங்க. ஏங்க ஒரு தந்தூரி சிக்கன், பட்டர் மட்டன், ஒரு தலக்கறி, மூளை, மட்டன் பிரியாணி, ரைஸ் மீல்ஸ் இவ்வளவும் ஒரு நல்ல ஓட்டல்ல சாப்பிட்டா எரனூறு ரூபா வராதுங்களா. நான் நல்லா சாப்பிடுவேங்க. உங்க காசுக்கு துரோகம் செய்ய மாட்டேன் பாத்துக்கங்க.”


தூக்க சுகம் எனக்கு அவ்வளவாக கிடையாது.
அப்பா படுத்தவுடன் அடுத்த நிமிடமே எந்த கவலையும் மறந்து நிம்மதியாக தூங்கி விடுவார். அந்த சுகத்திற்கு நிறைய விலை கொடுப்பார்.
பஸ்ல தூக்கத்தில ஐம்பதாயிரம் பணத்த அப்பா (1970களில்)தொலச்சிருக்கார்.

....


யானைக்கு அங்குசம் அதை அடக்க பயன் படும் ஆயுதம்?
’சுளுந்தீ ’ நாவலில் முத்துநாகு சொல்வது: ”ஆனைஅங்குசத்திற்கெல்லாம் கட்டுப்படும் என்பதெல்லாம் பொய்.”
”இதுகள காட்டிலிருந்துப் பிடிச்சு வந்து ஆனைக் கொட்டாரத்தில கட்டி வச்சு, ஒரு ஆள் மட்டுமே அதுகளுக்கு தண்ணி மட்டுமே கொடுப்பான். ஆனனையிடம் போனவனின் உடம்பு வாடைய வைச்சு, இவன் தனக்கு வேண்டப்பட்டவனாக முடிவு செய்யும். தண்ணி வச்ச ஆள் மூனாவது நள் ஒரு சவலம் கரும்ப கொடுப்பான். கரும்புச்சுவையில ஆனை மயங்கி மாவூத்தனுடன் நெருக்கமாகி அவன் சொன்னதெல்லாம் கேட்கும். ஆனை அங்குசத்திற்கெல்லாம் கட்டுப்படும் என்பதெல்லாம் பொய்”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.