Share

May 31, 2019

சௌந்தர் என்னை வரைந்திருக்கிறார்

லண்டனில் இருக்கும் சௌந்தர் என்னை வரைந்திருக்கிறார்.
என்ன ஒரு அன்பு!
அந்த நாள் இளைய ராஜநாயஹம்

..........

சௌந்தர் வரைந்துள்ள இன்னொரு சித்திரம்

இன்றைய R.P. ராஜநாயஹம்

...


”R.P.ராஜநாயஹம் கலை ஈடுபாடு ,பரந்தவாசிப்பு மட்டுமல்ல அரிய தகவல்கள் நிறைந்த சுவாரஸ்யமான ,ரசனைமிகுந்த, பல்துறை அனுபவ எழுத்துக்கு சொந்தக்காரர்.
புகைநுழையாத இடத்திலெல்லாம் புகுந்து வருவது போல ஆச்சர்ய அனுபவம் மிகும் எழுத்து.
அவர் வழி தனி வழி.
சில வருடங்களாக இவரது பதிவுகளை எப்போதும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வருகிறேன். தோழர் யமுனா ராஜேந்திரன் தனது பதிவொன்றில் "ராஜநாயஹம் எழுத்தாளர்களின் எழுத்தாளர் " என்று கூறியிருப்பது மிக உண்மை.
இன்று எனது முகநூல் நண்பராக இருப்பது பெரு மகிழ்ச்சி.”

- T. சௌந்தர்

May 30, 2019

கிருஷ்ணன் நம்பி எனும் குழந்தைமை கலைஞன்


தகவல் பிழை எழுத்தில் வந்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டாலும் அதையும் மீறி ஏற்படவே செய்கிறது.
கிருஷ்ணன் நம்பி ஆக்கங்களில் அவருடைய நீலக்கடல் முகவுரை இல்லை என்றே எனக்கு தோன்றியது. அதை கிருஷ்ணன் நம்பி பற்றிய பதிவில் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.
ஆனால் அந்த ’நானும் கடவுளும் அறிஞனும்’ என்ற முகவுரை காலச்சுவடு வெளியிட்ட கிருஷ்ணன் நம்பி ஆக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது என்பதை நம்பியின் தம்பி கிருஷ்ணன் வெங்கடாச்சலம் எனக்கு கவனப்படுத்தினார்.
என்னுடைய ‘ இலக்கியம், இசை, ஹாலிவுட் பதிவுகள்’ நூலை படித்து விட்டு தொலைபேசியில் பேசி அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். அவரை சந்தித்த போது என் தகவல் பிழை பற்றி சுட்டிக்காட்டினார்.
அதை உடனே ப்ளாக் பதிவில் திருத்தி விட்டேன். ஆனால் நூலில் இடம் பெற்றிருக்கிறது.
இது போல் சென்ற மாதம் என்னுடைய மற்றொரு தகவல் பிழை பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய பாடலொன்று ’நாளைய தீர்ப்பு’ படத்தில் இடம்பெற்றிருந்ததாக பி.பி.எஸ் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அந்த படம் ‘நாளைய செய்தி’ என்பதை அறியவந்தேன். இதையும் ப்ளாக்கில் திருத்தினேன்.
நம்பி எழுதிய முகவுரை சிறப்பான ஒன்று. எனக்கு ’குட்டி இளவரசன்’ பிரஞ்சு புனைவில் அந்த்வான் செந்த் எக்சுபெரி எழுதிய குட்டி முகவுரைக்கு ஈடான அற்புதமான ஒன்று.
’நானும் கடவுளும் அறிஞனும்’ படிக்கும்போதெல்லாம் நம்பி தான் சந்திரன் என்றும் சுந்தர ராமசாமி தான் சூரியன் என்பதாகவுமே எண்ணுவேன்.
மீண்டும் அந்த முகவுரையை இங்கே தருவதில் தவறில்லை.

கிருஷ்ணன் நம்பி ’நீலக்கடல்’ சிறுகதைத் தொகுப்புக்கு அந்த எழுதிய முகவுரை.
நானும் கடவுளும் அறிஞனும்
நான் உள்ளத்தாலேயே சிந்திக்கிறேன்; உணர்ச்சியாலேயே சிந்திக்கிறேன். என் புத்தி தன் போக்கில் இயங்கி, அதிலிருந்து அறிவின் சாரம் -அறிவு ரஸம் - ( ’ஸீரம்’) என் உள்ளத்தில் இறங்கி என் உணர்ச்சிகளில் கலக்கிறது. கவியின் அறிவுக்கேந்திரம் உணர்ச்சி தான். அறிஞனுக்கு உணர்ச்சி வேலைக்காரன் என்றால், கவிக்கு அறிவு வேலைக்காரன். அறிவின் தீட்சண்யம் கதிரவன் என்றால், உணர்ச்சியின் தீட்சண்யம் சந்திரன். சந்திரன் தண்மை நிறைந்தது; மென்மை நிறைந்தது. மக்கள் மனத்தில் கனவுகளையும், காதலையும் எழுப்பவல்லது. இன்பமயமானது; இனிமையானது. ஓ, அறிஞனே, நீ சூரியன். நீ உஷ்ணமானவன். உன் உஷ்ணம், உன் வெம்மை, அத்தியாவசியமானது எனினும், சக்தி வாய்ந்தது எனினும், நீ இன்பமானவன் அல்ல. உன் தழுவல் சுறுசுறுப்பை, உழைப்பை, செயலைத் தூண்டும் எனின், சந்திரனாகிய என் தழுவல் இன்பத்தை, கனவை, கவியை, போதையைத் தூண்டும். உனக்கு மாபெரும் வெற்றிகள் சித்திக்கலாம். ஆனாலும் உன் வெற்றியை ஒப்புக்கொள்ள எனக்குப் பிடிக்காது. சூரியனே சந்திரனுக்கு ஆதாரம் என்றாலும் சூரியன் சூரியன் சூரியன் தான்; சந்திரன் சந்திரன் தான்! நான் பலவீனமானவன் என்றாலும் நான் உன்னதமானவன். நான் கடவுளின் செல்லக்குழந்தை. நீ கடவுளின் போர்வீரன். உன்னைக் கண்டு நான் அஞ்சி ஓடக்கூடும் எனினும், நான் கடவுளின் மார்பில் கொடியாய்த் தவழக்கூடிய செல்ல மதலை. நீயோ கடவுளருகில் கம்பீரமாய் நிற்கவேண்டிய காவல் வீரன். நீ அழுதால் சினந்து சீறும் கடவுள், நான் அழுதால் என்னைத் தோளில் போட்டுத் தழுவுவான். முத்த வெள்ளம் சொரிவான். உன்னை அழைத்து, “ ஓ, போர் வீரா! ஓடிப்போய் இந்தப் பயலுக்குப் பாரிஜாத மலர்கள் பறித்து வா; ஓடிப்போ!” என்பான் ஈசன்.
கிருஷ்ணன் நம்பி பற்றி நகுலன் பிரமாதமாக சொல்லியிருக்கிறார்.
“நாஞ்சில் நாட்டிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் – ஒரு என்று சொல்வதை விட ‘ஒரே’ என்று சொல்லும் அளவுக்கு – ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஸ்ரீ கிருஷ்ணன் நம்பி”
’நம்பி ஓர் உண்மையான கலைஞன்’ என்பது நகுலனின் ஆணித்தரமான அபிப்ராயம். ‘ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நம்பியைப்போல் தோல்வி ( இது தோல்வி என்றால்) அடைவதையே நான் மதிக்கிறேன்’ என்றார்.
குழந்தைமை மனவார்ப்பு அற்புதமாக கொண்டிருந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி.
நீலக்கடல், விளையாட்டுத்தோழர்கள் போல எத்தனை குழந்தை கதைகள்.
நீலக்கடல் 1952ல் எழுதஆரம்பித்து அரைகுறையாக அப்படியே போட்டு விட்டு 1961ல் தான் முடித்தாராம்.
இதில் பாட்டி சொல்லும் கதை - பாலகிருஷ்ணன், பாலமுருகன், பிள்ளையார் கிட்டிப்புள் விளையாண்ட கதையை நான் ஸ்போக்கன் இங்க்ளீஷ் டீச்சராய் இருந்த போது குழந்தைகளுக்கு நான் ஆங்கிலத்தில் எப்போதும் சொல்லியிருக்கிறேன்.
மருமகள் வாக்கு, அவனும் ஒரு மரநாயும், தங்க ஒரு .. வருகை, போன்ற கதைகளெல்லாம் பெருஞ்சாதனை.
ஆதவன் மரணம் தந்த துக்கம் அளவிற்கு நம்பி அகாலமாய் இறந்திருக்கக்கூடாது என்ற தவிப்பும் எப்போதும் இருக்கிறது.

May 29, 2019

சுடுகாடுக்கு உள்ள போனா பொணம் தான் திரும்ப வராது.


”இது சுடுகாடுடா, உள்ள போனா வெளிய பொணமா தான் வரணும்”
 லாஜிக்கே இல்லாம
இது மாதிரி டயலாக் எப்படி எழுதறாங்க.

டி.வியில வேற இத பட விளம்பரத்தில ஃப்ளாஷ் பண்றாங்க.
சுடுகாடுக்கு உள்ள போனா பொணம் தான் திரும்ப வராது. மனுஷங்க சுடுகாட்டுக்குள்ள போனா பொணத்த எரிச்சிட்டு வீட்டுக்கு போய் குளிப்பாங்க. எதுக்கு சுடுகாட்டுக்குள்ள போனா பொணமா திரும்பி வரணும்.

May 27, 2019

தி.ஜாவின் ”தீர்மானம்”


சென்ற வாரம் கூத்துப்பட்டறையில் தினமும் ஒரு சிறுகதை தேர்ந்தெடுத்து உரக்க வாசித்து விரிவாக பேசினேன்.
தி.ஜானகிராமனின் ’தவம்’, ’பரதேசி வந்தான்’, ’தீர்மானம்’ அசோகமித்திரனின் ‘காந்தி’, ’கடன்’.
அடர்த்தியான கதைகள்.

தி.ஜானகிராமனைப்பற்றி, 

அசோகமித்திரனைப்பற்றி

நிறைய சொன்னேன்.

தி.ஜானகிராமனையும் அசோகமித்திரனையும் தான் எத்தனை முறை மறு வாசிப்பு செய்திருக்கிறேன். பிரமிப்பு விலகாத விசேஷமான அனுபவமாகவே ஒவ்வொரு முறையும்.
தி.ஜா ’தீர்மானம்’ கதையை வெள்ளிக்கிழமை வாசித்தேன்.
நான் கண் கலங்குவது, அழுவது எல்லாம் தனிமையில் தான்.
Sorrows find relaxation in solitude. Every man has his secret sorrows.
மற்றவர்கள் முன் இளகி கலங்குவதில்லை.
தீர்மானம் கதையை வாசிக்கும் போது அடக்க முடியாமல் விம்மினேன். கண்ணில் இருந்து நீர் வடிந்து விடாமல் இருக்க கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன். தொண்டை தழதழக்க மேலே வாசிக்க முடியாமல் நிறுத்தினேன்.

Charles Dickens, in his novel Great Expectation says
“We need never be ashamed of our tears.”

Shakespeare in Julius Ceasar “If you have tears, prepare to shed them now.
பத்து வயது விசாலம் எனும் சிறுமி தான் எப்பேர்ப்பட்டவள். தாயில்லா பிள்ளை. தந்தையுடன், அவருடைய சகோதரியின் பராமரிப்பில் இருப்பவள். அந்த அத்தை வாழாவெட்டியா, விதவையா?
ஆறு வயதில் விசாலிக்கு பால்ய விவாகம். அப்போது கணவனுக்கு இருபத்திரெண்டு வயது என்பது அவன் இப்போது அவளை அழைத்து வரச்சொல்லி இவள் வீட்டுக்கு வந்துள்ள கணவனின் உறவினர்கள் அவன் வயது இருபத்தாறு என்று சொல்வதிலிருந்து தெரிகிறது.
வந்திருப்பவர்கள் கணவனின் அண்ணா, பெரியப்பா, சித்தப்பா ஆகியோர். கணவனுக்கு அம்மா, அப்பா கிடையாது.
பத்து வயது குழந்தையை புகுந்த வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்திருக்கிறார்கள்.
குழந்தை தன் தோழி ராதையுடன் சோலி விளையாடக் காத்திருந்தவள்.
அப்பா வீட்டில் இல்லை. நான்கு வருடங்களுக்கு விசாலியின் திருமணத்தின் போதே அப்பாவுக்கும் கணவன் வீட்டார்க்கும் மனஸ்தாபம். உறவு கெட்டுப் போய் விட்டது.
அத்தை தன் சகோதரன் வரட்டுமே என்று தவித்து அங்கலாய்க்கிறாள் இப்போது.
கணவன் வீட்டாரோ பச்சை தண்ணீர் கூட இந்த வீட்டில் குடிக்கத் தயாராயில்லை. சாப்பிட வேண்டிய குழந்தை விசாலியை அழைத்துக்கொண்டு வண்டியில் கிளம்ப தயாராகிறார்கள்.
விசாலி உடனே தீர்மானிக்கிறாள். ’அத்தை, அப்பா கிட்ட நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடு.’
கணவன் வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமாகிறாள். என்ன ஒரு தீர்மானம்.
என்னால் மேலே உரக்க வாசிக்கவே முடியவில்லை. கண்ணை நீர் மறைக்கிறது. தொண்டையில் இருந்து குரல் வரவில்லை.
ஒரு வழியாக சில நிமிடங்கள் உறைந்து விட்டு நிலை கொண்டு மீண்டும் கவனமாக வாசித்து முடிக்க முயன்றும் சிரமமாகவே இருந்தது.
என்ன ஒரு கதை. எத்தனை முறை வாசித்த கதை.
எத்தனை வருடங்கள் கழித்து வாசித்தாலும் நெஞ்சை அடைக்கும் கதை.
இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் கதை. இது இப்ப தேவையா? என்றெல்லாம் விகார மூளைகள் விவாதம் செய்யட்டும்.
தி.ஜாவின் கதைகள் அந்த கால கட்டங்களின் வரலாற்று ஆவணங்கள். உன்னத மனத்தால் மட்டுமே இப்படி காட்சிப்படுத்த முடியும்.
………………………

May 26, 2019

முத்துசாமி நாடகங்களும், இளைய மகன் ரவியும்


தன் நாடகங்கள் இருபத்தொன்றையும் க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிடுவார் என்று தான் ந.முத்துசாமி நம்பியிருந்தார்.
அது சாத்தியப்படவில்லை.
அந்த நேரத்தில் சிங்கப்பூரில் இருக்கும் அவருடைய இளைய மகன் ரவி கை கொடுத்தார்.
முத்துசாமி நாடகங்கள் நூல் வடிவம் பெறுவதற்கு தேவையான முழு தொகையையும் ரவி தான் கொடுத்தார்.
இதை முத்துசாமி சார் என்னிடம் எப்போதும் நெகிழ்ந்து சொல்வார்.
பெரிய நிகழ்வாக நூல் வெளியீட்டு விழா நடத்தப்பட்டது.
Credit goes to Muthuswamy Ravi only.
அப்படி வெளி வந்த புத்தகத்தின் பிரதிகளை ந.முத்துசாமி இலவசமாகவே எவ்வளவு நூற்றுக்கணக்கான பேருக்கு கொடுத்திருக்கிறார் தெரியுமா?
ரவி இதிலிருந்து எந்த பெரிய லாபமும் பெற விரும்பவில்லை என்கிற மேன்மையான இயல்பும் தெரிகிறது.

May 25, 2019

பாராளுமன்ற உறுப்பினர் ரவி குமார்


ரவி குமார் பாராளுமன்ற வேட்பாளராக வெற்றி பெற்றதற்கு இன்று வாழ்த்து சொன்னேன்.

“ராஜநாயஹமா? எவ்வளவு பேருக்கு எப்படியெல்லாம் அந்த காலத்தில் உதவி செய்தவர் நீங்கள்” என்று நினைவு கூர்ந்தார்.
புதுவையில் 1989,90ல் நான் இருந்த போது எனக்கு சினேகிதமானவர் ரவி குமார்.
பாராளுமன்ற உறுப்பினராக அவர் சீரிய பணியாற்ற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

http://rprajanayahem.blogspot.com/2017/10/to.html

May 24, 2019

ந.முத்துசாமி எனும் உன்னத அதி மானிடன்


ந.முத்துசாமி எனும் உன்னத அதி மானிடன்

சென்ற வருடம் அக்டோபர் 24 தேதியில் முத்துசாமி மறைந்த போது ஏற்பட்ட துக்கம் வாழ்நாளில் காணாதது. நொறுங்கிய நிலை.

வேப்பிலை சாறு குடித்தால் இழப்பின் பெருந்துக்கம் குறையும் என்று பலமுறை குடிக்க வேண்டியிருந்தது.
ஒரு பெரியவர் ”இப்படி தாங்க முடியாத துயரம் ஆறு மாதம் வரை மனதை ரொம்ப வருத்தும். அதற்கு பிறகு நிவாரணம் உண்டு” என்றார்.

இன்று முத்துசாமி சார் இறந்து 7 மாதம் முடிந்து விட்டது.
துக்கம் கொஞ்சமும் நீங்கிய பாடில்லை. இழப்பின் துயரம் அகலவில்லை.
உதாரணப்படுத்திக்காட்டவே முடியாத அளவிற்கு, எவரோடுமே ஒப்பிட்டு காட்ட முடியாத ஒரு அற்புத மனிதர்
Muthuswamy's death leaves a heartache no one can heal.
His special face, his special smile ...

May 21, 2019

Full of Doubt


”எந்த கட்சியிலும் சேரமாட்டாய், கொள்கைகளே அபத்தம் என்கிறாய். ஜாதி சங்கத்திலும் ஈடுபட மாட்டாய். மதமும் முக்கியமில்லை. அடையாளங்கள் தேவையில்லை என்கிறாய்.
எனக்கு ஒரு பிரச்னையென்றால் என் கட்சி உடனே தலையிடும். போராட்டம் நடத்தியதை பார்த்தாய்.
தமிழ் நாட்டில் உள்ள நம் ஜாதி சங்கங்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறது.
பார் கவுன்சில் கூட எனக்கு சப்போர்ட் ஆக களம் இறங்கியது. சென்னை, மதுரை உட்பட எல்லா ஊர் வழக்கறிஞர்களும் கிளர்ந்தெழுந்தார்கள்.
ஏதோதோ படிக்கிறாய். அது தான் உன்னை சமூகத்திலிருந்து எந்த அளவுக்கு அன்னியமாக்கி விட்டது பார். எல்லாவற்றையும் சந்தேகிக்கிறாய். எதன் மீதும் பரவச பிடிப்பில்லை. உனக்கு நடந்திருப்பது Alieanation.”
ஒரு பிரமுகர் என்னைப் பற்றி இப்படி 1996ல் ஆதங்கப்பட்டார்.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் சொன்னது தான் அப்போது ஞாபகத்திற்கு வந்தது.
The fundamental cause of the trouble in the modern world today is that the stupid are cocksure while the intelligent are full of doubt.


May 20, 2019

தேர்தல் ஹேஸ்யம் - தமிழகம்


பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக இரண்டு கட்சிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது. தமிழகத்தில் பி. ஜே. பி க்கு கன்யாகுமரியே கை விட்டு போக நேரலாம்? தினகரன் கட்சிக்கும் மிக, மிக மோசமான நிலை தான்.ஆனால் தேர்தலில் ஆளும்கட்சி க்கெதிரான கழுத்தறுப்பில் முக்கிய பங்கு.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கட்சிகள் ஆளும் அதிமுக, திமுக, அமமுக என்று தெரிகிறது.
திமுக அறுவடை காரணமாக தேர்தலுக்கு பிறகு அதிமுக, அமமுக இணைப்பு பற்றி பலத்த வலியுறுத்தல் நிச்சயமாக உண்டு.

May 17, 2019

தேவதச்சனின் பொன் துகள்


தேவதச்சனின் துளிகள் தெறிக்கும் போதெல்லாம்
’ஆடு கீரையை மேய்வது போல இவர் வாழ்வின் வண்ண கணங்களை  மேய்பவர்’ என்று தோன்றும்.

சேதாரமின்றி பொன்னை நகையாக்கும் கலை தேவதச்சனுக்கு கைவந்திருக்கிறது.

”காற்று ஒரு போதும் ஆடாத மரத்தைப் பார்த்ததில்லை
காற்றில்
அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்
காட்டைத்தூக்கிக்கொண்டு அலைகின்றன

வெட்ட வெளியில்
ஆட்டிடையன் ஒருவன்
மேய்த்துக்கொண்டிருக்கிறான்
தூரத்து மேகங்களை
சாலை வாகனங்களை
மற்றும் சில ஆடுகளை!”


May 16, 2019

நெஞ்சில் ஊஞ்சலாடும் சிலவரிகள்


முழுக்க காட்சியாய் விரிகின்றது.
Visual treat.
ஐந்தாறு வருடங்களுக்கு முன் படித்தது.
போதனை இல்லை. பெரிய தத்துவமில்லை. மூளையை வருத்தும் சிக்கல் இல்லை.
அரசியல் இல்லை. எகத்தாளம் இல்லை. புத்திசாலித்தனம் துறுத்தவில்லை. வாசகன் சிந்திக்க வேண்டியதில்லை. கற்பனைக்கு வேலையிலலை. ரொம்ப எளிமை.
புதிர் கிடையாது.
ஆனாலும் மனதில் மனப்பாடம் செய்யாமலே ’பச்சக்’ என்று ஒட்டிக்கொண்டது.
அழகிய சிங்கரின் நண்பர் தானா இவர்? அவருடைய நண்பர் ஒருவர் எஸ்.வி.வேணுகோபாலன்.
எஸ்.வி.வேணுகோபாலன் எழுதியது.
தலைப்பு ‘விட்டுப்பிடித்தல்’
“ஒற்றைப் பனை
ஓங்கிய மலைத்தொடர்
பசேல் என்று வயல்கள்
எருமைகள் நீந்தும் சிலீர் தண்ணீர்க் குளம்
............எல்லாம்
அழைத்தும்
கோபம் குறையாத
குழந்தை மாதிரி
இரைந்த படி ஓடிக்கொண்டிருக்கிறது ரயில்
‘போ போ
நாளைக்கும்
இந்த வழி தானே
வரணும் நீ?’
என்றவாறு குடிசைக்குத்
திரும்புகிறாள்
ஆடு மேய்க்கும் சிறுமி”

May 15, 2019

ரெட்ட மாட்டு சாணியும், கல்யாண்குமார் கண்ணீரும்


மேட்டூர் அருகே காவேரி க்ராஸ் என்ற இடத்தில் ஷூட்டிங்.
ரெட்ட மாட்டுவண்டியோடு கதாநாயகன் பாலத்தை கடக்கிற சீன். ஷாட் ப்ரேக்கில் ரெண்டு மாடும் சாணி போட்டு விட்டது. அதை வெம்மை அடங்கு முன் அள்ளி நான் தான் அப்புறப்படுத்தினேன். அசிஸ்டண்ட் டைரக்டர்னா எல்லா வேலையும் செய்ய வேண்டும். காலையில் ஆறு மணிக்கு நிக்க ஆரம்பித்தால் ராத்திரி பன்னிரெண்டு மணின்னா கூட நின்னுக்கிட்டே தான் இருக்கணும்.
நல்ல உச்சி வெய்யில். நெஞ்சில் ஓர் ஆலயம் கதாநாயகன் கல்யாண்குமார் இந்த படத்தில் கதாநாயகனின் அப்பா ரோல்.
கதாநாயக நடிகருக்கு சிகரெட் ரோத்மன்ஸ் மெந்தால் மிஸ்ட் ஒரு நாளைக்கு ஐந்து பாக்கெட். கல்யாண்குமாருக்கு ஒரு ட்ரிபிள் ஃபைவ் சிகரெட் பாக்கெட். கதாநாயகன் ஒரு நாளைக்கு மொத்தம் நூறு சிகரெட் என்பதால் பற்ற வைத்து ஐந்தாறு இழுப்பு இழுத்து விட்டு சிகரெட்டை பாதியிலேயே கீழே போட்டு விடுவார். ஆனால் கல்யாண்குமாருக்கு ஒரு நாள் பூராவுக்கும் இருபது சிகரெட் தான் என்பதால் ஒவ்வொரு சிகரெட்டையும் ஒட்ட,ஒட்ட சிகரெட்டின் பஞ்சு வரும் வரை இழுப்பார்.

யாருக்கு சொந்தம் மாடர்ன் தியேட்டர்ஸ் படத்தில் கதாநாயகனா நடிச்சப்ப மொதலாளி டி.ஆர் சுந்தரம் முன்னாடியே சிகரெட்ட பத்த வைப்பேன்’ என்று கல்யாண்குமார் பழைய நினைவில் மூழ்கி விடுவார். வசதியெல்லாம் போய் அப்பா ரோல் செஞ்சப்ப அசதியில் இருந்தார்.
ரெண்டு மாட்டு சாணிய எடுத்து தூர போட்டுட்டு கைய தண்ணியில கழுவிட்டு வந்தப்ப, அந்த படத்தில் வில்லன் ரோல் செய்த நடிகர், அப்பா நடிகரிடம் “ராஜநாயஹம் ‘தேவன் கோவில் மணியோசை’ பாடல் பிரமாதமா பாடுறார்’’ என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
பி.மாதவன் முதல் முதலாக இயக்கிய படம்’தேவன் கோவில் மணியோசை’. அதில் கல்யாண்குமார் தான் கதாநாயகன். கூணனாக வருவார். சீர்காழியின் பாடல் “தேவன் கோவில் மணியோசை, நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை”.
கல்யாண்குமார் சிகரெட்டை ஒட்ட,ஒட்ட இழுத்து கீழே போட்டு விட்டு என்னிடம் அந்தப்பாடலை பாடச்சொல்லி வற்புறுத்தினார். நான் அந்த உச்சிவெய்யிலில் நின்று கொண்டு பாடினேன். எந்த பக்கவாத்தியமுமின்றி என் பாட்டு. சுற்றிலும் சில நடிகர் நடிகைகள்.
கல்யாண்குமார் உணர்ச்சி வசப்பட்டு விட்டார். எனக்கு இன்று நன்றாக நினைவில் இருக்கிறது. ‘இது ஆசைக்கிழவன் குரலோசை, இவன் அன்பினைக் காட்டும் மணியோசை’ வரியை மீண்டும் எடுத்து இரண்டாம் முறையாக நான் பாடிய போது
அந்தப் பெரியவர் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
டி.எஸ்.எலியட் சொன்னான் - An Oldman will not forsake the world which has already forsaken him.

May 14, 2019

சுகிர்தம், கனிவு, நேர்த்தி


கர்நாடக சங்கீத பாடல்களை கேட்கும் போது கண் கலங்கி அறியாமல் கண்ணீர் முத்து முத்தாய் உருளும்.
இது போல பழைய திரைப் பாடல்களை
இன்றைய தலைமுறையினர் பிரமாதமாக பாடுவதை கேட்கும் போது இயல்பாய் கண்ணீர் வருகிறது.
“அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி. என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி” பாடலை
விஜய் டிவியில் ஒரு பெண் பிள்ளை மிக அற்புதமாக பாடுவதை கேட்க வாய்த்த போது எழுந்த உணர்வலைகள்.
குரலின் சுகிர்தம், கனிவு, நேர்த்தி!
ஆண்டாளே..கோதை நாச்சியாரே.. ’ என் தட முலைகள் மானிடவர்க்கென்று பேச்சு படில் வாழ்கில்லேன்’ என்ற நீ
இந்த பாடலை இப்பெண் பாட கேட்க வேண்டும்.வைஷ்ணவம் இல்லை இதில் என்று உன்னால் ஒதுக்கவே முடியாது.


May 11, 2019

தாயின் பிணத்துடன் பச்சை பாலகர்கள்


அழகான ஒரு பேரிளம் தாயும், வயது வந்த பதின்பருவ மகளும் எதிர்ப்பட்டால் ஒரு பரவசமான வாலிப உற்சாக கமெண்ட்
“தாயும் சேயும் நலம்.”
தாய போல பிள்ள, நூல போல சேல
Like mother, like daughter.
பச்சை பாலகர்களை பரிதவிக்க விட்டு இறந்து போகிற பரிதாபமான தாய் பற்றிய கதை கு.அழகிரிசாமியின் “ இருவர் கண்ட ஒரே கனவு”

மாட்டு தொழுவில் ஐந்தாறு ஓலைகளை வைத்துக் கட்டிய மறைவுக்கு இந்தப்புறம் மாடுகளும், அந்தப்புறம் வெள்ளையம்மாளும் அவளுடைய ஆறு வயதும் ஐந்து வயதும் ஆன இரு பாலகர்களும் வசிக்கிறார்கள்.
கூலி வேலைக்கு செல்லும் பெண் அவள்.
தொழுவில் குடியிருக்க வெள்ளையம்மாள் தொழுவின் சொந்தக்காரர் வீட்டில் இலவசமாக வேலை செய்து வர வேண்டியிருக்கிறது. அப்படி அவள் அழைக்கப்படும் தினத்தில் கூலி வேலைக்கும் போக முடியாது.
அவள் இப்போது கூலி வேலைக்கு போக முடியாததற்கு காரணம் குளிர் காய்ச்சல் மட்டுமல்ல. உடுத்திக்கொள்ளக்கூட துணி இல்லாமல் போனதும் தான்.
பசியில் துடிக்கும் குழந்தைகள். வேலப்பன் வீட்டில் கிடைத்த கஞ்சியையும் தரைக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கிறது. பசி என்பதற்காக அடுத்த வீட்டில் கஞ்சி வாங்கிக் குடிப்பது கேவலம் என்று அவர்களுக்கு அம்மா சொல்லி வந்திருந்தாள்.
தொழுவை நோக்கி ஓடி வந்தார்கள். அம்மா கிழிந்து போன பழைய கோணியின் கந்தலைப் போர்த்திக்கொண்டு கிடந்தாள். கண்கள் பாதி மூடி உடம்பில் அசைவில்லாமல்.
அம்மா எத்தனையோ தடவை செத்துப்போகும் விளையாட்டை ஆடியிருக்கிறாள். அம்மா செத்துப்போகாதே அம்மா, செத்துப்போகாதே அம்மா என்று பிணத்தைப்போட்டு அடிஅடி என்று அடித்தார்கள். செத்துப்போகாதே என்று பாலகர்கள் ஓலம்.
லோர்க்காவின் நாடகம் “ Play without a title”.

In a small room, a woman died of hunger. Also,her two starving children were playing with the dead woman’s hands, tenderly, as if they were two loaves of yellow bread. When the night came, the children uncovered the dead woman’s breasts and went to sleep upon them while eating a can of shoe polish.
ஷூ பாலீஷை தின்று விட்டு இறந்த தாயின் முலையின் மீது படுத்து தூங்கிப்போகும் குழந்தைகள்.
இடைச்செவலாயிருந்தாலென்ன. ஸ்பெயினில் ஒரு ஊராய் இருந்தாலென்ன.

May 10, 2019

கு.அழகிரிசாமியின் தந்தை பற்றி கி.ரா


கு.அழகிரிசாமியின் அப்பா தன் காலத்தில் ஜோதிடம் தொழில் பார்த்தவர். 
என்னிடம் கி.ரா. அவருடைய விசித்திர ஜோதிடம் பற்றி நான் புதுவையில் இருந்த காலத்தில் வேடிக்கையாக விவரித்திருக்கிறார்.
கீழே கி.ரா எழுதியுள்ள விஷயம்
”வறுமை ஒழிக என்ற அவயம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு ”பொற்காலம்”. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் குடும்பத்தார், இனி இடைச்செவலில் பிழைக்க முடியாது என்று வண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள். அந்தப் புறப்பாட்டைப் பார்க்க முடியாமல் என் வீட்டினுள் கிடந்தேன். அழகிரிசாமி சென்னையில் சிரமதிசையில் இருந்தான். வண்டியில் எல்லோரும் ஏறிக்கொண்டார்கள். அழகிரிசாமியின் அப்பா மட்டும் ஏறமுடியாது என்கிறார். செத்தாலும் நா இங்கே தான் சாவேன். கோயமுத்தூருக்கு வரமாட்டேம் என்கிறார்.
என்ன செய்ய. யார் சொன்னால்க் கேட்பார் இவர்.
ஒரு ஊரில் ஒவ்வொருவருக்கும், இன்னார் சொன்னாத்தாம் இவர் கேட்பார் என்று உண்டு. கு.அ.வின் மாமா ஒருவர். அவருக்குத் தெரியும் நான் சொன்னால் அவர் கேட்பார் என்று. என்னைத் தேடி வந்து விட்டார்.
எழுந்து போனேன். கிட்டே போய் அவருடைய கைப்பிடித்தேன். அவருக்குப் பார்வை போயிருந்தது. எனது தொடுதலிலிருந்தெ என்னைத் தெரிந்து கொண்டார். ஒரு குழந்தை போல் அழுது கொண்டே ’நா போக மாட்டேன் ராஜு போக மாட்டேன். நீயும் போகச் சொல்லுவியா. அய்யோ, ஏங்குடும்பம் இப்பிடி ஆயிட்டதே தேவுடா.’
எப்படி அவரைச் சமாதானம் செய்ய; தெரியவில்லை.
மாமா, நீங்க மட்டும் எப்பிடி இங்கே இருக்க முடியும்.
“ஏம் எனக்கு நீ கஞ்சி ஊத்தமாட்டியா? ஒரு வேளை மட்டும்; அரை வகுத்துக்குப் போதும்”
சீனி மாமா சொன்னார்: “ராஜூ உமக்குக் கஞ்சியும் ஊத்துவார்; பொடிப்பட்டை செலவுக்கும் தருவார், சரி விடிஞ்சதும் ”மந்தை”க்குப் போகக் கையெப் பிடிச்சிக் கூட்டிட்டுப் போவாரா, நாளைக்குச் சட்டடியா படுத்துட்டா ஒம்மோட பீத்துணியை அலசிப் போடுவாரா!”
இது நகைச்சுவை இல்லையென்றாலும், அவ்ர் சொன்னது அங்கிருந்த அனைவரையும் முகம் திருப்பி ஒரு வகைச் சிரிப்பைத் தந்தது.
வயசாகிப்போன ஒவ்வொருவருடைய இறுதி நாள் கவலை அது.
இது தான் நேரம் என்று, சீனி மாமா தனது மாமனாரான கு.அவின் அப்பாவின் கையிலிருந்த கைத்தடியை வாங்கிக்கொண்டு அவரைக் குண்டுக் கட்டாகத் தூக்கி வண்டிக்குள் வைத்தார்.
என்னிடம் சொல்லிக்கொண்டு எல்லோரும் புறப்பட்டுப் போனார்கள். அவர்களை நான் பார்த்தது அது தான் கடேசி என்று அன்று நினைக்கவில்லை. அதுவே கடேசிக் காட்சியாக அமைந்து விட்டது.”
- கி.ராஜநாராயணன் “ வேதபுரத்தார்க்கு நூல்
( குமுதத்தில் தொடராக வந்தது)
அன்னம் வெளியீடு

May 9, 2019

கு.அழகிரிசாமி


”கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை தனித்தனியாக பத்திரிக்கைகளில் அவ்வப்போது படித்துப் பார்த்தபோது அவை அப்படி ஒன்றும் பிரமாதமானவையாகத் தோன்றவில்லை. ஆனால் சேர்த்து புஸ்தக ரூபத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கும் போது, சங்கீத ரஸிகர்கள் சொல்கிறார்களே அது போல் ‘ஐயோ!’வென்றிருக்கிறது. எப்படித்தான் இந்தச் சிறுகதையாசிரியர் இப்படியெல்லாம் எழுதினாரோ? என்றிருக்கிறது” என்று க.நா.சு 1959லேயே மலைத்துப் போயிருக்கிறார்.

நகுலன் “அழகிரிசாமியின் கதைகள் மனநிலைகளை நுணுக்கமாக விவரிப்பதிலும் சௌந்தரிய உணர்ச்சியின் பரிணாமத்தையும் உள் வளைவுகளையும் தாங்கியிருப்பதிலும் இவ்வளவு இருந்தும் பிரத்தியட்ச உலகின் தொடர்பு அறாமலிருப்பதிலும் நம்மைக் கவர்கின்றன, ஆனால் கு.அழகிரிசாமி கலையைப் புரிந்துகொண்டு அனுபவிப்பதற்கு வாசகனும் நுண்ணுணர்வு பெற்றவனாக இருக்கவேண்டும்.”
மேலும் நகுலன் 1961ல் சொன்னார் “ புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, இவர்களுடன் உடன் வைத்துப் பேசக்கூடிய தகுதி வாய்ந்தவர் கு.அழகிரிசாமி. சொல்லப்போனால் இக்குறிப்பிட்ட ஆசிரியர்களின் சாயை அழகிரிசாமியிடம் ஒரு நூதன ரூபமெடுத்திருக்கின்றன. இவர்கள் அனைவரிடமிருந்தும் தனித்து நிற்கும் ஒரு பண்பும் கலைத்திறனும் அவருடைய கதைகளுக்கு உண்டு. அவருடைய கதைகளை ஒருமுறைக்கு இரு முறையாக படிப்பவர்களுக்கு சௌந்தரிய உணர்ச்சி என்பதன் தனி அர்த்தம் தெளிவாக விளங்கும்.
கதைத்தொகுதிகளை இன்று மூன்றாவது முறையாகப்படிக்கும் போது வட்டமிடும் உணர்ச்சி என்னவென்றால் அவர் கதைகளில் காணப்படும் ஒரு நூதனமான ’நகைச்சுவை’. விளக்கமாகச் சொல்லப்போனால் அவருடைய கதைகளுக்கெல்லாம் அர்த்தம் கொடுப்பது ஒரு தனிவிதச் சிரிப்புத்தன்மை. ஆனால் அவரை நாம் ஒரு பொழுதும் ஒரு நகைச்சுவை ஆசிரியராகச் சாதாரணமான அர்த்தத்தில் கருத முடியாது. ஒரு மேல்நாட்டு ஆசிரியர் ஆனந்த பாஷ்பத்தின் அடித்தளத்தில் நாம் துக்கக் கண்ணீரின் உலர்ந்த சுவட்டைக் காணலாம் என்று சொன்னார். அந்த அர்த்தத்திலும் நாம் அழகிரிசாமியின் நகைச்சுவைக்கு வியாக்கியானம் அளிக்க முடியாது. இதைச் சற்று வார்த்தைகளில் விவரிப்பது கடினம் தான்.”
அழகிரிசாமி செய்த ஒரு சபதம் “குழந்தைகளை அடிக்க மாட்டேன். கம்ப ராமாயணத்தின் மீது சத்தியம்.”
அவருடைய பிள்ளைகள் அதிர்ஷ்டக்காரர்கள். சாரங்கன் தன் அப்பா கையால் அடிவாங்காத மகன். கம்பராமாயணத்தின் மீது சபதம்.

அழகிரிசாமிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர். He was having some strong likes and dislikes. மௌனியையும் லா.ச.ராவையும் சுத்தமாக பிடிக்காது. இவர்கள் இருவரும் எழுதியவை கதைகளாகவே தனக்குத்தோன்றவில்லை என்று கடுமையாக பேசினார்.
அழகிரிசாமி சிறுகதைகள் முழு புத்தகமாக பதிப்பாசிரியர் பழ அதியமான் அவர்களின் சீரிய முயற்சியில் காலச்சுவடு வெளியீடாக எட்டு வருடங்களுக்கு முன் வந்திருக்கிறது.


அழகிரிசாமியின் சில கதைகள் படித்து எவ்வளவு காலம் ஆனாலும் கூட சட்டென்று சிரமமின்றி நினைவின் மேலெழும்பி வரக்கூடியவை.
திரிபுரம், அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், அழகம்மாள், திரிவேணி, குமாரபுரம் ஸ்டேசன்,சுயரூபம் ஆகிய கதைகள். சில கதைகளை குறிப்பிடுவதால் கொஞ்சம் நல்ல கதைகள் தான் போல என்று யாருமே எண்ணி விட வேண்டாம்.
கி.ராவுக்கு அழகிரிசாமி எழுதிய கடிதங்கள் காட்டும் உலகம்.

கு.அழகிரி சாமி இசையறிஞர் விளாத்திகுளம் சுவாமிகளைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம் " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார்!"
இதே போல கு.அழகிரி சாமி ரசிகமணி டி.கே.சி யைப் பார்த்தவுடன் உடனே,உடனே சொல்லியிருக்கிறார் "அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார்!"
 1990ல் புதுவையில் ஒரு கட்டடத்தில் புத்தகக்கண்காட்சி. கி.ராவுடன் நான் உள்ளே நுழையும்போது செருப்பை வெளியே விட வேண்டியிருந்தது. உடனே கி.ரா
“இப்படி செருப்பை கழற்றி விட்டு செல்ல வேண்டியிருக்கும் போது அழகிரிசாமி என்ன செய்வான் தெரியுமா? ஒரு செருப்ப இங்கன போடுவான். இன்னொரு செருப்ப அங்கன போடுவான்.”
திருடு போய்விடக்கூடாது என்பதற்காக!
இப்படி அழகிரிசாமி பற்றி கி.ரா. நினைவில் இருந்து அள்ளித் தெளிக்கும் விஷயங்களை கேட்கும்போது அவரை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கம் தான் ஏற்படும்.

திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் அமுதன் அடிகள் என்னிடம் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை அங்கே ஒரு பிரபலத்திற்கு தந்துதவும்படி சொன்னார். ”புத்தகங்கள் திரும்ப கிடைக்கும். நான் பொறுப்பு” என்றார்.
அதன் படி அந்த மனிதர் என் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த அனைத்து அழகிரிசாமி சிறுகதை தொகுப்புகளையும் வாங்கிச்சென்றார்.
அவருக்கு அழகிரிசாமி கதைகள் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கிறதாம். ஒரே மாதத்தில் திருப்பித்தருவதாக சொன்னார்.ஆறு மாதமாக தரவேயில்லை.
அமுதன் தர்மசங்கடத்துடன் கையை பிசைந்தார். என்ன இந்த மனிதர் இப்படியிருக்கிறார் என்று வேதனைப்பட்டார்.
நான் மனந்தளரவில்லை. அவருடைய வீட்டுக்குப் போய் விட்டேன். அவருடைய மனைவி தான் இருந்தார். புத்தகத்தை திருப்பித்தர நினைவு படுத்தி விட்டு வந்தேன்.
ஒரு வாரம் கழித்து அவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வந்தார். முகம் விளங்கவில்லை. புத்தகங்களை திருப்பி கேட்டு அவரை அவமானப்படுத்தி விட்டதாக கருதுகிறார் என்பது அவர் முக விலாசத்தில் தெளிவாக தெரிந்தது. “நானெல்லாம் ரொம்ப கௌரவமானவன். ரோஷமானவன்.” என்று சொல்லி புத்தகங்களை திருப்பி தந்து விட்டு நன்றி சொல்லாமலே திரும்பிச் சென்று விட்டார்.