Share

Jan 19, 2017

பிரபஞ்சன்


பிரபஞ்சனின் ‘ ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்’ தொகுப்பை எத்தனையோ தடவை வாசித்தவன் நான். ’ஆண்களும் பெண்களும்’ தொகுப்பு, ‘முட்டை’ நாடகம்….

’இயல்பான கதியிலிருந்து பிறழ்ந்து விட்ட இன்றைய வாழ்க்கையில் மகா உன்னதங்களான பொறிகளை காண்கிறேன். அதனை பதிவதே என் எழுத்து’ என்பதே இவரது பிரகடனம்.

புதுவையில் நான் இருந்த போது பிரபஞ்சனுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
தி.ஜானகிராமனுக்கு நினைவு மதிப்பீட்டு மடல் நான் வெளியிட்டிருந்தேன். புதுவை பல்கலைக்கழகத்தில் இதன் காரணமாகவே ஒரு தி.ஜா கருத்தரங்கம் நடந்திருந்தது.
தி.ஜா எழுதி என்னிடமிருந்த அத்தனை புத்தகங்களும் கருத்தரங்க அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.


அப்போது சென்னை வாழ்வுக்கு ஒரு சின்ன ப்ரேக் விட்டு புதுவையில் பிரபஞ்சன் இருந்தார். புதுவை பல்கலைக் கழகத்தில் நாடகத்துறையில் அவருக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் வேலை போட்டுக் கொடுத்திருந்தார்.

அன்று நாடகத்துறைக்கு தலைவர் இந்திரா பார்த்தசாரதி. கே.ஏ.குணசேகரன், அ.ராமசாமியும் நாடகத்துறை ஆசிரியர்களாக இருந்தார்கள்.
முன்னதாக 1989 துவக்கத்தில் நக்கீரனில் “ தி.ஜா. ஆபாச எழுத்தாளர். இன்று தமிழில் இருக்கிற ஆபாச வக்கிரத்திற்கெல்லாம் ஜானகிராமன் தான் காரணம். ஆல் இந்தியா ரேடியோவில் உயர் பதவி வகித்தவர் என்பதால் மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர். அவருக்குபல பெண்களோடு படுக்க ஆசை. அதனால் தான் ‘மரப்பசு’ நாவல் எழுதினார்” – இப்படி கடுமையாக சாடி எழுதியிருந்தார்.

நாடகத்துறைக்கு இ.பாவை நான் பார்க்க போயிருந்த போது ”இப்ப பிரபஞ்சன் வந்திருந்தார். ’ராஜநாயஹத்துக்கு என் மேல் கோபம் இருக்கும்’னு சொன்னாரே’ன்னு சொன்னார். அ.ராமசாமியும் அப்போது அங்கிருந்தார்.
அப்போது நான் பிரபஞ்சனை சந்தித்திருக்கவேயில்லை.
அடுத்த நாளே புதுவை நாடகத்துறையிலேயே பிரபஞ்சனை பார்த்தேன். அதன் காரணமாக ஒரு Instant,temporary friendship.

ஜானகிராமன் பற்றிய அவதூறு பற்றி பிரபஞ்சனிடம் நான் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவர் சொன்ன ஒரு விஷயம். “ ராஜநாயஹம், எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படும் போது நான் எப்போதும் இரவில் தி.ஜாவின் மோகமுள் நாவலை எடுத்து படிக்க ஆரம்பிப்பேன். தூங்காமல் முழு இரவும் விடிய,விடிய முழு நாவலை படித்து முடித்து விடுவேன்.”
மேலும் சொன்னார்: என்னுடைய எழுத்தில் நிறைய ஜானகிராமனின் வார்த்தைகளை பயன்படுத்துவேன். உதாரணத்திற்கு “ எட்டுக்கண்ணும் விட்டெறியாப்ல”
எனக்குள் நான் மனதிற்குள் கேட்டுக்கொண்டேன் “இவ்வளவு சொல்லும் இவர் ஏன் ஜானகிராமனை அப்படி கடுமையாக நக்கீரனில் தாக்கி எழுதினார்?’’

ஒரு மாலையில் என் வீட்டிற்கு பிரபஞ்சன் வந்திருக்கிறார். அன்று என் வீட்டில் பூரி சாப்பிட்டார். கிளம்பும்போது அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா அரை கிலோ பாக்கெட் கொடுத்தேன்.

ஒரு தேர்ந்த எழுத்தாளன் பத்திரிக்கையில் வேலை செய்யும்போது –
முப்பது வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் பிரபஞ்சன் மூன்று வாரப்பத்திரிக்கைகளில் வேலை பார்த்த போது காண நேர்ந்தவை.

’குங்குமம்’ பத்திரிக்கையில் பிரபஞ்சன் வேலை பார்த்த காலத்தில் அந்தப் பத்திரிக்கை அவருக்கு அதில் கதை எழுத வாய்ப்பே தரவில்லையாம்.

’குமுதம்’ பத்திரிக்கையில் தான் தினமும் காண நேர்ந்த விஷயமாக ஒன்றை குறிப்பிட்டு சொன்னார்.
எஸ்.ஏ.பி. காரை விட்டு இறங்கும்போதும், காரில் கிளம்பும் போதும் கார் கதவை திறப்பதற்கு ரா.கி.ரங்கராஜனுக்கும் ஜ.ரா.சுந்தரேசனுக்கும் தினமும் போட்டி நடக்கும். சில நாட்களில் எப்படியும் ரா.கி.ரங்கராஜன் கார் கதவை திறந்து விடுவதில் ஜெயிப்பார். மற்ற நாட்களில் ஜ.ரா.சுந்தரேசன் ஜெயித்து விடுவார்.

அன்றைய ’ஆனந்த விகடன்’ பற்றிய பிரபஞ்சனின் தவிர்க்க முடியாத ஒரு வரி : ’பிராமண – அ பிராமண அரசியல்’


தினமும் புதுவை நாடகத்துறைக்கு செல்வேன். பிரபஞ்சனுக்கு வேலை அங்கு முடிந்தவுடன் கிளம்பி நேரே நேரு ஸ்ட்ரீட்.
அவர் அடிக்கடி டீ சாப்பிடுவார். சிகரெட் நிறைய பிடிப்பார். நான் இருக்கும்போது அவரை செலவழிக்க விட்டதில்லை.

ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய இரண்டு வரி, நான்கு வரி கடிதங்கள் அவ்வப்போது வரும். தன் மன உளைச்சல், சோகங்கள் பற்றி கவிதை போல அதில் இருக்கும். அந்த கடிதங்களை ஏனோ எனக்கு காட்டியிருக்கிறார்.
அங்கிருந்த லோக்கல் எழுத்தாளன் ஒருவர், இன்று பெயர் கூட நினைவில்லை - எனக்கு பெரிய அறிமுகம் இல்லாத நிலையிலும், பிரபஞ்சனும் அந்த பெண் எழுத்தாளரும் ஆரோவில் போயிருந்தார்கள் என்பதை gossip ஆக என்னிடம் சொன்னார். நான் அதை பிரபஞ்சனிடம் சொன்னேன். பதிலாக பிரபஞ்சன்“பாருங்கள்! ஒரு எழுத்தாளரே இப்படி பேசுகிறார்.”

நக்கீரனில் அந்த நேரத்தில் “ திராவிட இயக்க மாயை” பற்றி தொடர் எழுதிக்கொண்டிருருந்தார். புதுச்சேரி தி.மு.க காரர்களுக்கு இதனால் பிரபஞ்சன் மீது அதிருப்தி.
புதுவை திமுக மேலிடத்திலிருந்து ஆள் மூலம் சொல்லியனுப்பினார்கள். “கொஞ்சம் பாத்து எழுதச்சொல்லுங்க”

லா.ச.ராவுக்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்த போது(1990) பிரபஞ்சன் என்னிடம் சொன்னார்: ’’இந்த வருடமே எனக்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்திருக்க வேண்டியது தான். ஆனால் லா.ச.ராவுக்கு வயசாயிடுச்சி. சீக்கிரம் செத்துடுவார். உயிரோட இருக்கும்போதே கொடுக்கணுமே.அதனால அவருக்கு கொடுக்கிறோம்னு சொன்னாங்க”
லாசராவுக்கு கொடுத்த பின் ரொம்ப சீக்கிரமே இவருக்கும் கூட அந்தக்காலத்திலேயே சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.


பிரபஞ்சனுக்கும் அவருடைய அப்பாவுக்கும் பேச்சு வார்த்தை அப்போது கிடையாது. பாண்டிச்சேரியில் பழைய காலங்களில் சாராயக்கடை, கள்ளுக்கடை நடத்தியவர்கள் எல்லோருக்கும் அபிமான தாரங்கள் இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் பிரபஞ்சனின் அப்பா செய்யவில்லை. இந்த விஷயம் இவரை மிகவும் பாதித்திருக்கிறது. அதனால் அப்பா பற்றி ‘ மகாநதி’ என்று ஒரு நாவல் அப்போது எழுதிக்கொண்டிருந்தார்.


1980களில் தமிழ் சிறுகதைகள் பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டியிருப்பதால் என்னிடம் இருந்து பத்து வருடங்களில் முதல் சிறுகதைகள் தொகுப்புகள் பன்னிரெண்டு சிறுகதை தொகுப்புகள் கேட்டு வாங்கினார். புதுவையை விட்டு நான் நிரந்தரமாக கிளம்பிய போது அந்த புத்தகங்களை திருப்பித் தருவார் என நம்பினேன். ஆனால் அவர் தரவில்லை. தான் திருச்சிக்கு வந்து அந்த புத்தகங்களை தந்து விடுவதாகவும், இப்போது அவற்றை படித்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
தன் மனைவி வீட்டிற்கு என்னை சாப்பிட அழைத்து வரச்சொன்னதாக சொன்னார். எனக்கு விருந்து சாப்பிடும் மன நிலை இல்லை. மறுத்து விட்டேன். பிரபஞ்சன் மனைவி இன்று மறைந்து விட்டார். நான் பார்த்ததேயில்லை. அவர் மறைந்து விட்டார் என்பதை அறிய வந்த போது பிரபஞ்சன் தன் வீட்டுக்கு அழைத்த விஷயம் நினைவுக்கு வந்தது.

என்றென்றைக்குமாக அந்த புத்தகங்களை நான் இழக்கும்படியாகிவிட்டது. திருப்பித்தரவேயில்லை.அந்த காலம் இது பற்றி பிரபஞ்சன் மீது கோபம் இருந்தது. ந.முத்துசாமியின் “ நீர்மை” சிறுகதைகளும் அவற்றில் ஒரு புத்தகம்.


புதுவையிலிருந்து திருச்சி போன பிறகு கணையாழியில் இவர் கொடுத்த பேட்டிக்கு எதிர்வினையாக நான் எழுதியதில் “ இந்த வித்துவச் செருக்கு, கற்றோர் காய்ச்சல் எல்லாம் புலவர் பிரபஞ்சனிடமும் இருக்கிறது” என்று முடித்திருந்தேன். அதை பிரசுரித்த போது அதற்கு தலைப்பு “ புலவர் பிரபஞ்சன்” என்றே கொடுத்து கணையாழியில் பிரசுரித்திருந்தார்கள்!


’ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை’ காலச்சுவடில் பிரசுரமாக இருந்த நிலையில் ஜெயமோகனுக்கு ஆதரவாக அதை எதிர்த்தவர்களில் பிரபஞ்சனும் ஒருவர்.
என் மீது பிரபஞ்சனுக்கு கோபமும் அதிருப்தியும் என்பதை காலச்சுவடு கண்ணன் தெரிவித்திருந்தார்.
அப்போது ஜெயமோகன் கடந்த ஏதோ ஒரு வருடத்தில் ’பிரபஞ்சன் படைப்புகள்’ பற்றிக்கூட ஒரு கருத்தரங்கம் நடத்தியிருந்த நிலை. பிறகு?


தீராநதி முதல் இதழில் ” தமிழில் தி.ஜானகிராமனை மிஞ்ச ஆளேயில்லை” என்று பிரபஞ்சன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
இது பற்றி சுந்தர ராமசாமியிடமும் நான் போனில் பேசியிருக்கிறேன்.
அவரும் பிரபஞ்சன் “ தி.ஜானகிராமனை மிஞ்ச யாருமே இல்லை” என்று சொல்வதை உறுதிப்படுத்தி சொன்னார்.
 தி.ஜா பற்றிய இந்த அபிப்ராய மாற்றம் எனக்கு  சந்தோஷத்தை தந்தது.


திருப்பூரில் குமாரசுவாமி கல்யாண மண்டபத்தில் ஒரு இலக்கியக்கூட்டம். அதில் கலந்து கொள்ள பிரபஞ்சன் வந்திருந்தார். நான் இலக்கியக்கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்திருந்தேன். பிரபஞ்சனை நீண்ட காலத்திற்கு பின் சந்திக்கவும் அப்போது விருப்பமுமில்லை.

இப்போது விகடன் தடத்தில் ஜெயமோகன் சிறுகதை எழுத்தாளர்கள் பட்டியல் கட்டுரையில் பிரபஞ்சனின் பெயர் விடுபட்டிருந்தது. தெளிவான நிராகரிப்பு! சரி. சுந்தர ராமசாமி சொன்னதைப்போல் இலக்கிய உலகில் நேற்றைய நண்பன் தானே இன்றைய பிரதம விரோதி. இரண்டு பேருக்கும் முட்டிக்கொண்டது போலிருக்கிறது.


சென்னைக்கு நான் வந்த பிறகு சென்ற வருடம் அடையாறில் நடந்த ஒரு நாடகத்திற்கு ந.முத்துசாமியுடன் சென்றிருந்தேன். அங்கே பிரபஞ்சனை பார்க்க வாய்த்தது. 26 வருடத்திற்குப் பிறகு தற்செயல் சந்திப்பு. நானே வலிய சென்று அறிமுகம் செய்து கொண்டு கேட்டேன் “ தெரிகிறதா என்னை!” பிரபஞ்சன் “தெரிகிறது. புத்தகமெல்லாம் எனக்கு கொடுத்தீர்களே” ஒரு இரண்டு நிமிடங்களுக்கு மேல் என்னிடம் பேச அவருக்கு விஷயமில்லை. மற்றவர்களை நோக்கி நகர்ந்தார்.
நாடகம் முடிந்த பின் மீண்டும் போய் விடைபெறும் முகமாக “ நான் ராஜநாயஹம்” என்றேன். ”தெரியுமே” என்றார் அந்த எழுத்தாளர்.

......................................................................

http://rprajanayahem.blogspot.in/2015/12/blog-post_20.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_3967.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/2016/06/blog-post.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.