Share

Jan 26, 2017

நாட்டிய பேரொளி பத்மினி


திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா-பத்மினி-ராகினி.
திருவிதாங்கூர் சகோதரிகள் நாட்டிய நடிகைகள்.

லலிதாவும் ராகினியும் சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும்
லலிதா வில்லியாகவும் ராகினி சிரிப்பு நடிகையாகவும் தான் பிற்காலத்தில் அறியப்பட்டார்கள்.
பத்மினி கதாநாயகியாக கொடி கட்டினார்.


பரதநாட்டியக்கலைஞர் என்பதால் அதன் சாதக பாதகங்கள் தூக்கலாக அவருடைய நடிப்பில் தெரிந்தது. மிகை நடிப்பில் ஒரு தேர்ந்த நளினம் கூடவே இசைந்திருந்தது.

எம்.ஜி.ஆருக்கு சரோஜா தேவி, ஜெமினி கணேசனுக்கு சாவித்திரி என்பது போல சிவாஜிக்கு மிகவும் பொருந்திய ஜோடி பத்மினி. ரசிகர்களை அந்தக்காலத்தில் கவர்ந்த ஜோடி சிவாஜி- பத்மினி.

பராசக்தி வந்த அதே வருடம் என்.எஸ்.கே இயக்கிய ’பணம்’ வெளியானது. அதிலேயே சிவாஜிக்கு ஜோடி பத்மினி!
”குடும்பத்தின் விளக்கு, நல்ல குடும்பத்தின் விளக்கு” உடுமலை நாராயண கவி பாடலை பாடும் பத்மினி சிவாஜியுடன்.
கிட்டத்தட்ட சிவாஜியின் திரையுலக துவக்க காலமே பத்மினியுடன் தான் ஆரம்பித்திருக்கிறது. பராசக்தி கதாநாயகி பண்டரிபாயை சிவாஜிக்கு பொருத்தம் என்று எப்படி சொல்ல முடியும்.



தொடர்ந்து பத்மினி திருமணத்திற்கு முன் இல்லற ஜோதி, எதிர்பாராதது, அமரதீபம், தெய்வப்பிறவி, புனர்ஜென்மம் ஆகிய படங்கள் சிவாஜியுடன்.
கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்” ஆஅ ஆஅ ஆ...
இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆருடன் மதுரை வீரன், மன்னாதி மன்னன், ராணி சம்யுக்தா
ராஜா தேசிங்கு எம்.ஜி.ஆர் தான் என்றாலும் பத்மினிக்கு ஜோடி எஸ்.எஸ்.ஆர்.
என்.டி.ஆர் இணையாக ‘சம்பூர்ண ராமாயணம்’
ஜெமினியுடன் வஞ்சிக்கோட்டை வாலிபன், வீர பாண்டிய கட்டபொம்மன், மீண்ட சொர்க்கம்
வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினி - வைஜயந்தி மாலா போட்டி நடனம்!

எல்லா நடிகைகளையும் போல திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு டாக்டர் ராமச்சந்திரனுடன் அமெரிக்கா போய் விட்டு, சுவற்றில் அடித்த பந்து போல சினிமாவுக்கு திரும்பி வந்தார்.
’காட்டுரோஜா’ பாடல் பத்மினிக்கு “ ஏனடி ரோஜா, என்னடி சிரிப்பு, எதனைக் கண்டாளோ? அன்று போனவள் இன்று வந்து விட்டாள் என்று புன்னகை செய்தாளோ?”

திருமணத்திற்கு பின் நடித்த முக்கியமானவை ’சித்தி’, ’பேசும் தெய்வம்’, ’இருமலர்கள்’, திருவருட்செல்வர் ’தில்லானா மோகனாம்பாள்’, வியட்னாம் வீடு.

’மன்னவன் வந்தானடி’, ’மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன’ ’நலம் தானா உடலும் உள்ளமும் நலந்தானா’ பாடல்கள் அவரை மிகவும் கனப்படுத்தின.


’வியட்னாம் வீடு’ படத்தில் முதிய பெண்ணாக நடித்த பத்மினி ராஜ்கபூரின் ’மேரா நாம் ஜோக்கர்’ படத்தில் செக்ஸியாக நடித்தார். ஒரு நடிகை அன்று தன் கொங்கைகளை காட்டுவது அசாதாரண நிகழ்வு.

எம்.ஜி.ஆர் வெளியேற்றம் காரணமாக தி.மு.க உடைந்து அ.தி.மு.க தோன்றிய போது அப்போது தி.மு.கவிலிருந்த
எஸ் எஸ் ஆர் ஒரு அறிக்கை விட்டார்.
" அன்றைய தினம் 'ராஜா தேசிங்கு' படத்தில் என்னுடன் திருமதி பத்மினி அவர்கள் நெருங்கி நடிக்கக்கூடாது என்பதற்காக எம்ஜியார் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா?"

துக்ளக் சோ ராமசாமிக்கு இந்த மாதிரி விஷயம் கிடைத்தால் நையாண்டிக்கு கேட்க வேண்டுமா ?
" எஸ் எஸ் ஆர் சார் ! கேட்கவே பதறுகிறதே.நெஞ்சு கொதிக்கிறது. இப்படியெல்லாம் அநியாயமா ? எப்பேர்ப்பட்ட அநீதி இது? இதையெல்லாம் இந்த நாடு மறந்தால் இந்த நாட்டிற்கு விமோசனம் ஏது? இந்த நாடு நன்றி கொன்ற நாடு ஆகிவிடாதா ?" என்று செமையாக கலாய்த்திருந்தார்.



சிவாஜி ஏன் பத்மினியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி இன்றும் திரை ரசிகர்களால் கேட்கப்படுகிறது.

அ.முத்துலிங்கமும் அபத்தமாக இந்த கேள்வியை பத்மினியிடமே கேட்டிருக்கிறார். ’சிவாஜி கள்ளர் நான் நாயர். எப்படி கல்யாணம் செய்து கொள்ள முடியும்?’ என்று பத்மினி பதில் சொன்னாராம்.

சிவாஜி வேற ஜாதி, பத்மினி வேற ஜாதி என்பதெல்லாம் ஒரு காரணமா?
சுலபமாக அ.முத்துலிங்கம் உட்பட எல்லோரும் மறக்கிற விஷயம்.

பத்மினியோடு நடிக்க ஆரம்பிக்கும் போதே சிவாஜி திருமணமானவர். பராசக்தி ரிலீஸாவதற்கு முன்னரே சிவாஜி-கமலா திருமணம் சுவாமி மலையில் நடந்து விட்டது.

ரசிகப் பெருமக்களின் பொதுப்புத்தி - கமலாம்மாவுக்கு எப்படியாவது பத்மினியை சக்களத்தியாக்கி விட துடித்தார்கள்.

ரத்னமாலா கணேசன்?
 சினிமாவில் திருமணமானவர்கள் புதுக்கல்யாணம் செய்து கொள்வதேயில்லையா?
 எம்,ஜி.ஆர் – பத்மினி பற்றிய எஸ்.எஸ்.ஆர் முக்கோண Crush கமெண்ட்?
’ஜிஸ் தேஷ் மென் கங்கா பெஹ்த்தி ஹை’ராஜ்கபூர்?

................................



அசோகமித்திரன் எழுதிய சிறுகதை “ போட்டியாளர்கள்”

‘போட்டியாளர்கள்’ - ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் கதாநாயகிகளாக நடித்த வைஜயந்தி மாலா,
( அழகான இளவரசி)
பத்மினி ( அழகான பிரஜை) இருவரை வைத்து எழுதப்பட்டது.

பத்மினி வீட்டில் படத்திற்கான டான்ஸ் ரிகர்சல்.ஹிந்தி நடிகர் ராஜ்கபூர் கூட இந்தக் கதையில் வருகிறார். ( ’ஜிஸ் தேஷ் மென் கங்கா பெஹ்த்தி ஹை’ படத்தில் இருவரும் அந்த கால கட்டத்தில் நடித்துக்கொண்டிருந்தனர்!)

டான்ஸ் ரிகர்சலின் போது Sound Assistant ஆக வரும் இளைஞனின் விரசமான நடவடிக்கை அதிர்ச்சியேற்படுத்துகிறது.
ஒரு நடிகை என்றில்லை.எந்தப்பெண்ணுமே ஒருவன் பார்க்கின்ற பார்வையின் நோக்கத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.அந்நியனின் பார்வையில் விரசமும் வேட்கையும் பெண்ணை அவமானப்படுத்துகிற விஷயம்.
  அந்த சௌண்ட் அசிஸ்டண்ட் பலர் முன்னிலையில் நடிகையின் குடும்பத்தார் கூட இருக்கின்ற நிலையில் Masturbation என்கிற அளவிற்கு மிகவும் ரசாபாசமாக நடந்துகொள்கிறார்.

ஒரு திரைப்பட நடிகை இளமையழகை மூலதனமாக்கி தன்னுடைய ‘நிழல்பிம்பம்’பலரையும் தவிதவிக்கச் செய்வதில் தான் தொழில் வெற்றி அடங்கியுள்ளது என்பதை நன்கறிந்தவள் தான் என்றாலும் கூட, பகிரங்கமாக தன் நிஜ உடல் விரச வேட்கை,பார்வை நடவடிக்கைகளால் காயப்படும்போது இவளுடைய பெண்மைக்கு ஏற்படும் மன உளைச்சல்,வேதனையின் நுட்பமான துயர பரிமாணம் பரிபூர்ணமாக பதிவாகியுள்ள கதை தான் ‘போட்டியாளர்கள்’.

..................................................

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/.../carnal-thoughts-5.html

  

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.