Share

Jan 8, 2017

அம்மாபேட்டை கணேசன்


கணேசன் தோற்பாவை, தெருக்கூத்துக்கலைஞர். ஏட்டு கல்வி கிடைக்கப் பெறாதவர். ராவணன், துரியோதனன், கீசகன், வாலி என்று கூத்தில் நடிப்பவர்.

மணல் வீடு 27வது இதழில் இவருடைய பழைய பேட்டி ஒன்றை மறு பிரசுரம் செய்திருக்கிறார் ஹரி கிருஷ்ணன்.
அற்புதமான வட்டார வழக்கில் பதிவு செய்திருக்கிறார்கள்.


கணேசன் பேசுவதை நேரடியாக கேட்பது போல இருக்கிறது.

அவருடைய இயல்பான சொலவடைகள்.
-“ மேட்டு மேல நின்னுக்கிட்டு நொட்ட சொல்லிக்கிட்டிருக்கக்கூடாது.”
-“அன்ன நடை கத்துக்கப் போயி தன் நடையும் மறந்தாப்ல”
-”கரும்பு கட்டோடயிருந்தா எறும்பு என்னா செய்யும்.”
- “விருப்பத்துலவொரு காரியஞ்செஞ்சா விருத்தம் பாரம் தெரியாது”
- “ ஆட்டக்காரனுக்கு வவுத்துக்கு கஞ்சியில்லயின்னாலும் வாயி உபச்சாரம் தேவையாயிருக்குதே.”
- ”சாப்பாட்டுக்கு ஆறு ருசி! சதுருக்கு ஒம்போது ருசி”
- ”வித்தைக்கு சத்துரு வெசனம், ஆயிரம் வறும, சிறுமையிருக்கட்டும், வருத்தம் வாட்டமிருக்கட்டும். வெந்து நொந்து வேதனப்பட்டா சுண்டு வெரலு கட்ட வெரலு ஆவுமா? ”


”கண்ணுக்கு வெளிச்சமா வேசங்கட்டி தாளம், காலம், சுதி எசவோட பாட்டுப்பாடி, ஆட்டமாடி, புத்திக்கு ஒறைக்கிற கத சொல்றது தான் கூத்து.”

சினிமா நடிப்புக்கும் கூத்துல நடிக்கிற நடிப்புக்கும் வித்தியாசம் சொல்கிறார் : ”இவுத்த அம்மா பேட்ட ஆத்துல பொம்பளயொருத்தி பரிச தாட்டி படி ஏர்றத அம்பது தக்கம் எடுத்தாங்க. சினிமாக்காரனுங்க நடிப்பு திண்ணப் பள்ளியோடத்துல மணல்ல எழுதறமே அந்த மாதர அழிச்சி அழிச்சி எழுதறது, சிலேட்டம். குறி வெச்சி அம்பெய்யற மாதர கூத்துல நடிக்கறது சில மேல எழுத்து! சுத்திய நோங்கி தட்டனா மொண முறிஞ்சி மொக்கையாகிப் போவும். பொசான தட்டுனா அச்சுப் பதியாது. நேந்து நெரவி விசுவாசத்தோட பணிக்கச் செஞ்சா செல கண் தெறந்த சில்பமாவும்.”
பொம்மலாட்டக் கலைஞராகவும் இருந்தவராதலால் அனுபவமாக பேச்சில் வைராக்கியமாக “ நம்பள ஆட்டி வெக்கிறானே ஆண்டவன் அவங் கவுத்த கீழ போடாம இருந்தான்னா, என்னு ரத்தஞ் சுண்டற வரைக்கும் இந்த சூர வேசமாடுவன்.”

விருத்தம் – ஒவ்வொரு வேசத்துக்கும் உள்ள ஐதீகமான வரலாறு.
கந்தார்த்தம் – கத காரணமிங்கிறது முத்திப் பழுத்த கனியின்னா அதும்பட சாறுதான் கந்தார்த்தம்.
விடிய விடிய நடிக்கிற உங்களுக்கு அந்த வேசம் பற்றிய நெனப்பு மறந்து போவுமா? இல்ல கனவில, நடப்புல வந்து தொந்தரவு கொடுக்குமா?

கணேசன் பதில் : "எல்லா வேசத்துக்கும் அந்த சத்தி கிடையாது. ‘வாலி சுக்ரீவன் சண்ட’, அலங்காரம். வாலி உசுருடுற கட்டம். ராமன் கேக்கறாப்பல ‘வாலி! இப்பவொண்ணுங்கெட்டுப் போவல. ‘ம்’முன்னு ஒரு வார்த்த சொல்லு. உசுர குடுத்து உன்ன எழுப்பறன்’னு. அதுக்கு வாலி சொல்றான்,’ராமா நீ நாயம் அநியாயந்தெரியாதவன். எனக்குப் பொறன பொறந்த சின்ன பையன்! இத்தன நாளா வாலி! வாலி! வீர வாலின்னு பேரெடுத்தவன் உங்கிட்ட உசுரு பிச்ச வாங்கி குத்து பட்ட வாலின்னு சாவ எனக்கு பிரியமில்ல. எனக்கொரு யாசகம் கொடுக்கற யோக்கிதி உனக்கில்ல.ஓடிப்போயிரு தூர'ன்னு சொல்லிப்புட்டு தம்பிய கூப்புட்டு 'அவெனென்றா மனுச பூண்டு! உனக்கிந்த கிஷ்கிந்தாபுரிய மீட்டுகுடுக்கறது, மனசார நாங்குடுக்கறண்டா'ன்னு சுக்ரீவங்கையில நாட்ட ஒப்படைச்சிட்டு மண்ணு மேல சாயுது அந்த புண்ணியாத்துமா! நானு வாலி வேசங்கட்டிப்புட்டன்னா மாத்ரம் அவஞ்சாவ நெனச்சி, நெனச்சி மனசு மருவிக்கிட்டே கெடக்கும்."





’நீங்க பல வித்த கத்த வாத்தியாரு, தான் என்கிற மண்டகனம் உங்களுக்கில்லையா?’
வித்துவச் செருக்கு தனக்கு கிடையாது என்பதை கணேசன் சொல்லும் அழகு!
“ சேடக்கட்டி வயலடிச்சி, நாத்து நட்டு, பசுரு பச்சைக்கி பாதுகாப்பு பண்டி, வெளஞ்சத ராசிப்பண்டி பத்துசுரு பொழைக்கும்படி வெள்ளாம பண்டறானே அவங்கிட்ட இல்லாத வித்தையா?
அடுக்குல இருக்கறது அரிசியோ, ஆரியமோ உள்ளத கொண்டு பக்குவமா சாதங்கறி வெச்சி பசியாத்தறாங்களே பொண்டுங்க, அவிங்களுக்கு தெரியாத வித்தையா?
சொப்பு மொத! சூட்டடுப்பு கட!
எத்தன ஆயிரம் பண்டஞ் செய்யறாங்க செட்டிமாருங்க! அவிங்களுக்கு தெரியாத வித்தையா?
இதெல்லாம் நெனச்சிப்பாத்தா நம்ப கையி வெறுங்கையி.”


.............................................

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.