Share

Aug 7, 2018

Miracles Just happen


மதியமும் இல்லாத மாலையும் இல்லாத மயக்க பொழுதில் சின்மயா நகர் பஸ் ஸ்டாப்பில் நான். பஸ் வரவில்லை. ஷேர் ஆட்டோ எதிலும் இடம் இல்லை.
ஒரு ஸ்கூட்டர் இளைஞனிடம் லிஃப்ட் கேட்டேன். உடனே அவர் நிறுத்தினார். நான் இரைஞ்சலாக ’பஸ் வரவில்லை’ என்று விளக்கமுனையுமுன்னே “ நீங்கள் ராஜநாயஹம் சார் தானே?” என்று முகம் மலர்ந்தார்.”உங்களை படிக்கும் வாசகன் நான்”
“எப்படி என்னை அடையாளம் கண்டீர்கள்?”
”உங்களை தொடர்ந்து படிப்பவனுக்கு அது சிரமமான விஷயம் இல்லை”
ஸ்கூட்டரில் ஏறிக்கொண்ட பின் தெரிய வந்தது - அவர் பெயர் சாமிநாதன் ராமசாமி. திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். நாளை அவர் எடுக்க இருக்கும் ஷார்ட் ஃப்லிம்க்காக கிண்டியில் ஆர்ட் டைரக்சனுக்காக செலவு செய்துள்ள நிலை. நாளை ஷூட்டிங் கேன்சல் ஆனால் நிறைய நஷ்டம். அந்த நிலையில் அது விஷயமாக அலையும் நிலையில் எனக்கு லிஃப்ட் கொடுக்கிறார். எனக்கு கவலை கூடி விட்டது.
’ இந்த ஷூட்டிங் பிரச்னை இல்லாவிட்டால் உங்களை ஆலப்பாக்கம் வந்து வீட்டிலேயெ விட்டிருப்பேன். ’ என்று வேதனையோடு வருத்தப்பட்ட்டார். நான் அவரைத் தேற்றி என்னை ஆற்காட் ரோட்டில் என்னை இறக்கி விட்டால் போதும் என்றேன்.
வேம்புலிஅம்மன் கோவில் வரை நடந்து வந்தேன். பஸ் கிடைக்கவில்லை. ஷேர் ஆட்டோ ஒன்றில் கூட ஏறவே முடியவில்லை.
ஒரு டாக்ஸி வந்து நின்றது. போரூரா சார் என்று அதில் இருந்த மூன்று இளைஞர்கள் கேட்டனர். ”நான் ஆலப்பாக்கம் போக வேண்டும். ஹோண்டா ஷோ ரூம் அருகில் இறங்கிக்கொள்கிறேன்.” என்றேன். கதவை திறந்து ’ஏறுங்க சார்’ என்று ஒரு இளைஞன் சொன்னான். “ நீங்க புண்ணியம் நிறைய செய்திருப்பீர்கள். சரிதானே.” என்றான். என்னிடம் வார்த்தையில்லை.
”சாருக்கு ஏசியை போடு” 
கார் விண்டோக்களை ஏற்றினார்கள் இருவர்.

Miracles never cease in this world!

வளசரவாக்கம் தாண்டி ஹோண்டா ஷோ ரூம் அருகில் இறங்கி ரோட்டை குறுக்கே தாண்டி ஆலப்பாக்கம் ரோட்டில் நுழைந்தேன்.
பால் வாங்குவது, ரொட்டி வாங்குவது, தக்காளி,பச்சை மிளகாய், தேங்காய், முட்டை வாங்குவது எல்லாம் இவ்வளவு சவாலான விஷயமா?!
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
மு.கருணாநிதி மரண செய்தி வெளியிடப்படுமுன்னரே வீட்டுக்குள் நுழைந்தேன்.

......................................





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.