Share

Aug 13, 2018

நக்கீரனில் ராதாரவி கர்ஜனை


ராதாரவியின் ’கர்ஜனை’ நக்கீரன் தொடர். நூறு வாரங்கள் தாண்டி விட்டது. நான் சமீபத்தில் ஒரு இருபது வாரங்களாகத்தான் பார்க்கிறேன். நல்ல சுவாரசியமான சினிமா அனுபவங்கள்.
விஜயகாந்த், டி.ராஜேந்தர், பிரபு, கார்த்திக், சந்திரசேகர் இன்னும், இன்னும் பலர் படங்களில் இவர் நடித்திருப்பதைக் குறிப்பிட்டு அவையெல்லாம் வெற்றிப்படங்கள் என்கிறார் ராதாரவி. ரொம்ப பூரிப்புடன் இப்படிசொல்கிறார்.
அந்த படங்கள் ஒன்று கூட நான் பார்த்ததில்லை. தமிழில் ஓரளவு நல்ல படங்களாக தேர்ந்து எடுத்து பார்த்தவன் நான். கமல் படங்கள் மீது தான் அதிக விருப்பம். முக்கிய உலகப்படங்கள், ஹாலிவுட் படங்கள் இப்படி கவனம் இருந்ததால் ராதாரவி நடித்திருக்கிற அந்த வெற்றிப் படங்கள் நான் பார்த்ததில்லை.
ஒன்று தெரிகிறது. அன்று தமிழின் நல்ல தரமான படங்களில் ராதாரவிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்போது திரையுலக சூழல் மாறியுள்ளதால் மிஸ்கின் படத்தில் கூட அவரால் நடிக்க முடிந்திருக்கிறது.
ராதாரவியின் சினிமாவுலக அனுபவங்கள் படிப்பதில் ஒரு ஆபத்து இருக்கிறது. ராதாரவி நடித்த இந்த மாதிரி படங்கள் தான் கடந்த காலத்தில் தமிழின் சிறந்த படங்கள் என்று ஒரு கத்துக்குட்டி நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
ராதாரவி பல படங்களில் தன் நடிப்பைப் பற்றி பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக அப்படியொன்றும் பாத்திரஙகளை கையாண்டவரில்லை. மெருகூட்டியவரும் அல்ல.
எம்.ஆர்.ராதாவின் திறன் மிக்க நடிப்பு வேறு. ராதாரவி நடிப்பு வேறு.
எம்.ஆர்.ராதா சீரியஸ் ரோல் செய்யமாட்டார். ஆனால் எம்.ஆர்.ஆர்.வாசு குணச்சித்திர நடிப்பிலும் முயற்சித்தார்.
ராதாவின் வக்கிர நடிப்பை அவருக்கு பின் வெளிப்படுத்தியவர்கள் வில்லன் சத்யராஜும், மணிவண்ணனும் தான். மணிவண்ணன் என்ன பிரமாதமான ஃபார்மில் இருந்தார்.
வில்லன் நடிப்பில் கூட ரகுவரன், பிரகாஷ்ராஜ் தரத்திற்கு, அருகில் ராதாரவி நிற்க முடியுமா?

ராதாரவியின் நக்கீரன் கட்டுரையில் சுவாரசியத்திற்கு குறைவில்லை. பல செய்தி புத்தம்புதியவை.
காதலிக்க நேரமில்லை படத்தில் ஆரம்ப காட்சி. ’என்ன பார்வை, உந்தன் பார்வை’ பாட்டில் வரும் அந்த Open top Convertible car! சிவப்பு நிற இம்பாலா செவர்லெட் டூரர் கார் எம்.ஆர் ராதாவுடையதாம். அவரிடம் கேட்டுப் பெற்று இயக்குனர் ஸ்ரீதர் பயன் படுத்தியிருக்கிறார்.
இந்த காரில் எம்.ஆர்.ராதா வைக்கோல் போர் ஒரு முறை ஏற்றியிருக்கிறார். ஆனால் அதை வைத்து உலவும் பிரபல வதந்தி கட்டுக்கதை. வைக்கோல் போர் வேண்டும் என்று மனைவி கேட்டுக்கொண்டதால் அவசரத்திற்கு காரில் ஏற்றியிருக்கிறார். வேறு Motive எதுவும் கிடையாது என்ற உண்மை ராதாரவி மூலம் தெரிய வந்திருக்கிறது.
கருணாநிதி உட்பட டணால் தங்கவேலு வரை எல்லோரையுமே ராதாரவி பாசத்துடன் அப்பா என்றே சொல்கிறார்.
டி.எஸ்.பாலையாவை பெரியப்பா என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவர் எம்.ஆர்.ராதாவை விட ஏழு வயது இளையவர். ( நான் தான் பாலையா நூற்றாண்டின் போது தமிழ் இந்து பத்திரிக்கையில் 2014ல் அவருக்கு அஞ்சலி கட்டுரை எழுதியவன்.)
ஜுனியர் பாலையா தமிழ் சினிமாவில் ராதாரவிக்கு சீனியர். ஆனால் ராதா மகன் யோகக்காரர். அவருக்கு சினிமாவுலகிலும் அரசியலிலும் நல்ல அந்தஸ்து கிடைத்தது.
........................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.