Share

Aug 25, 2018

ராஜநாயஹம் எழுதுவது




ராஜநாயஹம் எழுதுவது
 வானில் நிலவு, நட்சத்திரங்களை மறைக்கும் மேகம் சிறகால் வருடுவது போல, பூச்சொரிதல் போல தூறலாய் பொழியும் சாரல்.

மீன் நீரில் நீந்தும் வழியை இதுவென்று எப்படி வகுக்க முடியாதோ, வானில் சிறகடிக்கும் பறவையின் பாதையை எப்படி நிர்ணயிக்க முடியாதோ அப்படித்தான் ராஜநாயஹம் வாழ்வும் எழுத்தும்.

 எழுத்தின் உள்ளடக்கம் பன்முகமாய் விரியும் தூரிகையின் வண்ண ஓவியமா?    
சீரான நீரோட்டம் காணாத நுரைத்துப் புடைக்கும் புனலா?
சிக்கலான இழைகளா? மணல் கோடுகளாய் பல் வேறு பத்திகள்.

 குளிர்ந்த பின்னிய மேகச்சடையின் சில மின்னல்கள் சிறு சிறு இடியுடன் எடுத்துக்கூறுவது தான் என்ன?

காலத்தின் அசுர உருவத்தை சிமிழில் அடைக்கும் முயற்சி தானா  என் எழுத்து?  நெகிழ்ந்த ’பாந்தவ்ய சிரிப்பு’ கூடிய வாக்கிய ஆலாபனையா?
நெஞ்சை அமுக்கி வலிக்கும் புண் தான் இந்த வார்த்தைகளின் அணிவகுப்பு. வீரிய வாசகம்.

பிரம்ம தண்டத்தை தலையில் வைத்தாற் போல சொல்லப்பட்ட ரிஷி வாக்கு இது என்ற பிரமை ஏதும் எனக்கில்லை. ஆனாலும் தழல் வீரம் காட்டும் உக்கிரம் இந்த என் சொல் சித்திரங்கள்.
ராகம் என்னவென்று கண்டுபிடிக்க சிரமமான சங்கீதம்.

வாழ்க்கையின் குரங்குத்தனத்திற்கு கட்டுப்பாடு இல்லையெனில் எழுத்தின் குரங்குத்தனத்திற்கும் அப்படியே தான்.

தன்முனைப்பு  அற்ற கவனக்குவிப்பு.

பரிச்சயம், பழக்கமில்லாதவர்களின் உணர்வுகளை சிராய்த்து காயப்படுத்தும் புதுமை.

சொல்வது என்ன என்பது முதல் தடவை முற்றாக புரிந்து விடுவதில்லை என்பதனாலேயே மீண்டும் படிக்க வேண்டியிருக்கிற எழுத்து.

எழுத்து என்பதே அவஸ்தை தான். சமூகத்திலிருந்து விலக்கப்படுதல் என்பதை விட விலகுதல். பிரிக்கப்படுதல் என்பதல்லாமல் பிரிதல். யதார்த்தவாதி வெகு ஜன விரோதி.
நகுலன் சொல்வது போல தனியாக இருக்கத்தெரியாதவன் எவனும் எழுத்தாளனே அல்லவே.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.