Share

Aug 30, 2018

கோணங்கியும் முருகபூபதியும் மொட்டையும்


பத்து நாட்களுக்கு முன் இருக்கலாம். ஒரு வெள்ளிக்கிழமை கோணங்கியின் தம்பி ச.முருகபூபதி கூத்துப்பட்டறைக்கு வந்திருந்த போது சந்தித்தேன்.

பல வருடங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோணங்கி என்னிடம் 
“இவன் என் தம்பிடா. பாண்டிச்சேரி நாடகத்துறையில் படிக்கிறான்” என்று அறிமுகப்படுத்தியிருக்கிறான்.


ஒரு பத்திரிக்கையில் அப்போது என்னைப்பற்றி அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், மணிக்கொடி சிட்டி, புதுவை முன்னாள் துணை வேந்தர் சொன்ன விஷயங்கள் பிரசுரமாகியிருந்தது. அதன் நகல் ஒன்றை கோணங்கியிடம் கொடுத்தேன். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவனை சந்தித்த போது என்னிடம் சொன்னான். “ என் தம்பி கிட்ட அதை கொடுத்தேன். அவன் சொன்னான் ‘இந்த ஆளை இவங்க நல்லா மொட்டை அடிச்சிருக்காங்க.’
உண்மையில் ஜாம்பவான்கள் என்னைப்பற்றி சொன்ன விஷயங்கள் பற்றி விளக்குவது என்றால் ஒவ்வொன்றுமே ஒரு சிறுகதை போல விரியும்.
ஆனால் கோணங்கி இப்படி மட்டையடி தான் அடிப்பான். 


கோணங்கிக்கு நான் எவ்வளவோ செலவழித்திருக்கிறேன். அப்படி பார்த்தால் என்னை மொட்டையடித்தது என்றால் அதில் பிரதான இடம் கோணங்கிக்கு உண்டு தான்.
Invariably, a taker and not a giver. Precisely, Konangi is a sponger.

திருப்பூரில் இருந்த நாட்களில் ஒரு முறை நான் போன் பேசிய போது கோணங்கி சொன்னான் “தமிழ்நாட்டில ஒருத்தன் திருப்பூருக்கு போயிட்டான்னா அவன் அகதின்னு தான் அர்த்தம். ராஜநாயஹம் நீ அகதி ஆயிட்டியேப்பா.”

இப்படி என்னிடம் பல சலுகைகள் அனுபவித்த ஒருவர் பேசுவது எரிச்சலாக இல்லையா என்றால் இல்லை.  இல்லவே இல்லை


ஒரு பத்திரிக்கையில் சில மாதங்களுக்கு முன் படித்தேன். தனுஷ்கோடியில் கோணங்கி தன் அம்மாவை நினைத்து கதறி அழுததாக.

‘என் பிள்ளை அழுங்குரல் கேட்குதே’ என்று கடலம்மையாய் அலைகள் தவித்திருக்கும் வாசக ஷற்புத்திரரே.
”சிருஷ்டியின் எண்ணற்ற மாய உருக்கள் தோற்றத்திலும் மொழியிலும் வடிவமாகக் கூடுகிறதே” என்பான் கோணங்கி.
”அம்மா மறைந்துலவும் இந்நாட்களில் நைந்து போன ஹிருதய பூமியில் வளரும் மரத்தைப் பாதுக்காக்கவே அகதிப்பறவைகளின் உதிர் இறகுகளோடு திரிந்து கொண்டிருக்கிறேன்” என்பவை ச.முருகபூபதியின் வரிகள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.