Share

Feb 26, 2017

சினிமாவில் நடிக்க ஆசைடாக்டர் சங்கரன் ’பவுனு பவுன் தான்’ படத்தில் தலை காட்டியிருக்கிறார்.
பாக்யராஜுக்கு இவர் அறிமுகமாகி நண்பராக வாய்ப்பு கிடைத்ததால் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் நடிக்கிற ஆசை இவரை பிடித்துக்கொண்டது.

ராசுக்குட்டி படத்தில் கதாநாயகி ஐஸ்வர்யாவுக்கு அப்பாவாக நடிக்க ஒரு வாய்ப்பு.
சேலத்திலிருந்து தன் சொந்தக்காரில் மேட்டூர் வந்து விட்டார். இரவில் அங்கே படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்த இரு லாட்ஜிலும் அவருக்கு அந்த நேரத்தில் அறை ஏதும் இல்லை.

”பரவாயில்லை. காரில் படுத்துக்கொள்கிறேன். காலையில் எனக்கு வெஸ்டர்ன் டாய்லட் இருந்தால் தான் வசதி. இதற்கு மட்டும் ஒரு ரூமில் உள்ளவர் என்னை அனுமதித்தால் போதும். தயவு செய்து அதற்கு மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்.”
ரோட்டில் காரை நிறுத்தி அதில் படுத்துக்கொண்டார். அதிகாலையில் நான் தங்கி இருந்த அறையின் கதவை வெஸ்டர்ன் டாய்லட்டுக்காக தட்டினார்!
……………………………..


எழுத்தாளர் சுந்தர ராமசாமிக்கு ஜான் ஆபிரஹாமின் அக்ரஹாரத்தில் கழுதை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆசை இருந்தது. ஆனால் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. எம்.பி.சீனிவாசன் தான் நடித்தார்.

”படச்சுருள்” இதழ் ஒன்றில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி எழுதிய கட்டுரையில் ’அக்ரஹாரத்தில் கழுதை’ பாண்டி பஜார் ராஜகுமாரி தியேட்டரில் மட்டும் ஒரே ஒரு நாள் ஓடியது என்ற தகவலை குறிப்பிட்டிருந்தார்.

சுந்தர ராமசாமி 2002ல் கூட ஏதோ ஒரு மலையாளப்படம் ஒன்றில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக என்னிடம் சொன்னார்.
நான் ’என்ன வேடம், சார்’
சு.ரா. ’கதாநாயகியின் அப்பா வேடம்’
எனக்கு இந்த பதில் திருப்தி தரவில்லை என்பதை முகக்குறிப்பால் உணர்ந்த சுந்தர ராமசாமி தொடந்த வார்த்தைகள் “ ராஜநாயஹம்! வழக்கமான அப்பா ரோல் இல்லை. நல்ல வித்தியாசமான கதாபாத்திரம்.”
அந்த மலையாளப் படம் வெளி வந்ததா? தெரியவில்லை.

………………


இரண்டாம் உலகப்போரைப் பற்றிய ‘ த லாங்கஸ்ட் டே’ படம் தயாரானபோது போரில் ஜெனரல் ஐசனோவராக பங்கேற்றிருந்தவர் அமெரிக்க அதிபர் ஐசனோவராகியிருந்தார். அமெரிக்க அதிபராக அவருக்கு எட்டாவது ஆண்டு..

அப்போது ( 1953 ஜனவரி முதல் 1962 ஜனவரி வரை ஐசனோவர் அமெரிக்க அதிபர் ) ஜெனரல் ஐசனோவராக அதிபர் ஐசனோவரையே நடிக்க வைக்கலாமா என்று ஒரு யோசனை படக்குழுவுக்குத் தோன்றியது.

‘ நானே நானாக நடிக்கிறேனே ‘ என்று ரொம்ப ஆர்வத்துடன் அமெரிக்க அதிபர் ஐசனோவரே ஹாலிவுட் படத்தில் நடிக்க ‘சான்ஸ்’ கேட்ட அதிசயம் நடந்திருக்கிறது!
பலத்த ஆலோசனைக்குப் பிறகு ‘ஜனாதிபதி ஐசனோவரை இரண்டாம் உலகப்போர் காலத்து ஜெனரல் ஐசனோவராக மேக்கப் மூலமாக மாற்றுவது இயலாத காரியம் ‘ என்று முடிவு எடுக்கப்பட்டு ஐசனோவராக நடிக்கிற ‘சான்ஸ்’ நிராகரிக்கப்பட்டுவிட்டது.
சினிமாவில் நடிக்க ஒரு யோகம் வேண்டுமே!
POOR EISENHOWER!

1962 ம் ஆண்டு வெளியான ‘ த லாங்கஸ்ட் டே’ படத்தில் ஹென்ரி க்ரேஸ் என்ற ஆர்ட் டைரக்டர் ஒருவர் ஜெனரல் ஐசனோவராக நடித்திருந்தார்.
ஹென்ரி க்ரேஸ் நடிகரல்ல என்றாலும் ஐசனோவரைப் போலவே இருந்தார் என்பதால் அந்தப் பாத்திரம் அவருக்கு கிடைத்தது.

……………………………………

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_29.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_14.html

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_13.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_24.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_6.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.