Share

Feb 18, 2017

சட்டியில் இருப்பது அகப்பையிலே


சபாநாயகர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்காதது மிகப்பெரிய துயரம். ரகசிய வாக்கெடுப்பு அவசியம் என்று ஒரு எதிர்கட்சி தலைவர் கேட்கும் போது அதை ஏன் மறுக்க வேண்டும்.
பாரபட்சமே உன் பெயர் தான் தனபாலா? 
ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஸ்டாலின் இன்று சட்டசபையிலும் வெளியிலும் நடத்திய கிழிந்த சட்டை மிகை நாடகம் அவருடைய தந்தையின் கல்லக்குடி போராட்ட நாடகத்தையும், 1989ல் முன்னதாக ஜெயலலிதா சட்டசபையில் திட்டமிட்டு வம்பிழுத்து அதனால் விளைந்த நிகழ்வுகளைக் காட்டி நடத்திய துயிலுரியப்பட்ட திரௌபதியாக நடத்திய சோக வேஷத்தையும் ஞாபகப்படுத்தியது.

மொத்தத்தில்….விரிவாக, விளக்கமாக அல்லது ரத்தினச்சுருக்கமாக சொல்வது என்றால்
ஸ்டாலின் தும்பிக்கய தரையில ஊனி நாலு காலயும் மேல தூக்கி சங்கு சக்கரமா சுத்தினார்! தனபால் மரத்துல வால தொங்கப்போட்டு ஊஞசலாடி விட்டார்!

ஒன்று நிச்சயம். தி.மு.க ஒரு சட்டம் ஒழுங்கு கிளர்ச்சி செய்ய நல்ல வாய்ப்பு.

கவர்னர் இப்படி எடப்பாடியை ஆட்சியமைக்க விட்டிருக்கவே கூடாது.
ரகசிய வாக்கெடுப்புக்கு கவர்னர் உடனே உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் உடனே, உடனே தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்ய வேண்டும்.

ஜனாதிபதி ஆட்சி நடக்கும்போது சில வேடிக்கைகள் நடக்கும்.
மக்கள் செல்வாக்கு சுத்தமாக இல்லாத தமிழக பி.ஜே.பிக்கு தங்களது ஆட்சி வந்து விட்ட பிரமை ஏற்படும் தான். பொன்.ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி ஆட்சியில் தன்னை தமிழக முதல்வராக உணர்வார். தமிழிசை, ஹெச்.ராஜா போன்றோர் தங்களை மந்திரிகளாகவே பாவித்து விடுவர்.

எது எப்படியோ?மறு தேர்தல் நடத்தினால் தி.மு.கவிற்கு முழுக்க சாதகமானது என்பதோடு ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்பதிலும் சந்தேகமேயில்லை.

ஓபிஎஸ், இ.பி.எஸ் எல்லாம் முதல்வராகும்போது ஸ்டாலினுக்கென்ன குறைச்சல்? தங்காத்து!

இவர்களை விட, சசிகலாவை விட, தினகரனை விட  ஆயிரம் மடங்கு ஸ்டாலின் மேலானவர்!

வேற வழியென்ன இருக்கிறது. சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்.

வீட்டில யார் நல்ல பிள்ளை என்ற கேள்விக்கு பதில்: ”கூரையில கொள்ளிக்கட்டைய வச்சி விளையாடுறானே!அவன் தான் நல்லவன்!”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.