Share

Jan 25, 2015

V.S.ராகவன்





“அம்மா! குருவி கூடு கட்ட ஆசைப்படலாம் தப்பில்ல. ஆனா வீடு கட்ட ஆசப்படக்கூடாதும்மா....வீடு கட்ட ஆசப்படக்கூடாது.“
சினிமாவில் பணக்காரப்பையனை காதலிக்கும் தன் மகளைப்பார்த்து  தலையை ஆட்டி ஆட்டி இப்படி வி.எஸ்.ராகவன் சொல்வார்.

 சினிமாவுலகில் நாகேஷிற்கு இருந்த நெருங்கிய நண்பர்.

 ஆயிரக்கணக்கில் படங்களில் நடித்திருக்கிறார். இப்போது கூட இன்றைய படங்களில் கூட (இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?)  தலையைக்காட்டியவர்.
ஹேராம் துவங்கி பலவருடங்களாக இப்படி தலையை காட்டிக்கொண்டே தான் இருந்தார். தலையை ஆட்டி ஆட்டி வசனங்கள் பேச பெரிய வாய்ப்பு கிடைத்ததாக தெரியவில்லை.

பி.ஆர் பந்துலுவின் "கர்ணன்" - அதில் விதுரன்.

அந்தக்காலத்தில் 'காதலிக்க நேரமில்லை'யில் பாலையாவின்  நண்பனாக, 'பட்டணத்தில் பூதத்தில் வி.கே.ராமசாமியின் பார்ட்னராக இவர் நடித்தவர்.
பணமா பாசமாவில் ஏழை அப்பா, இரு கோடுகளில் சரியான வில்லனாக,  ‘நூற்றுக்கு நூறு’ படம்  இப்படி இவரை நினைத்துப்பார்க்க முடியும்.
எம்.ஜி.ஆர் “சங்கே முழங்கு” - இவர் சாகும்போது தான் “நாலு பேருக்கு நன்றி.அந்த நாலு பேருக்கு நன்றி” பாட்டு.
“உழைக்கும் கரங்கள்” படத்தில் வி.எஸ்.ராகவன் சீரியசாக நடித்தார். இவருடைய சீரியஸ் எக்ஸ்ப்ரஸன்ஸ் பார்த்தால் சிரிப்பு வரும்.


 “நினைவில் நின்றவள்” படத்தில் சோ இவருக்கு அண்ணன். 
சோ சொல்லி நாகேஷ் இவரிடம் வேலை கேட்டு வருவார். 
 நாகேஷ்:“ஏம்ப்பா உமாபதி இருக்கானா?”
வி.எஸ்.ராகவன்: நான் தான் உமாபதி.
இப்படி சொன்னவுடன் நாகேஷின் ஸ்லாப்ஸ்டிக் பதற்றம்.
 நாகேஷ்: வேலை வேண்டும்.
வி.எஸ்.ராகவன் : இந்த எக்ஸ்போர்ட் அண்ட் இம்போர்ட் கம்பெனிய ஆரம்பிச்சவுடன நான் மொதல்ல எதை எக்ஸ்போர்ட் பண்ணென் தெரியுமா? ஒழுங்கு, நாணயம். இது ரெண்டுமே ஒங்கிட்ட இல்ல. நீ போகலாம். உனக்கு இங்க வேல இல்ல.
இந்த நேரத்தில் சோ  நுழைவார். “கரெக்டா சொன்னீங்க. இந்த மாதிரி பசங்களுக்கெல்லாம் வேலை கொடுக்கக்கூடாது. அவன் மூஞ்ச பாருங்க!”
வி.எஸ்.ராகவன் சோவிடம் : “அவனுக்கென்னடா ராஜா மாதிரி இருக்கான்.”
சோ: “நீங்க சொல்றத பாத்தா இவனுக்கு நம்ம கம்பெனியிலயே வேலை போட்டுக்கொடுத்துடுவீங்க போல இருக்கு. அதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.”
சோவின் வார்த்தைகளுக்கு 
நாகேஷின் எரிச்சலான சோக முகபாவம் - ச்சீ.. பச்சத்துரோகி.
வி.எஸ்.ராகவன் நாகேஷைப்பார்த்து ‘யூ ஆர் அப்பாயிண்டட்!’
சோ : “நீங்க சொல்றத பாத்தா மேனேஜர் வேலையே போட்டுக்கொடுப்பீங்க போல இருக்கு. அதுக்கு நிச்சயமா நான் ஒத்துக்கவே மாட்டேன்.”
வி.எஸ்.ராகவன் நாகேஷிடம் “ நீ தான் இனிமே இந்த கம்பெனிக்கு மேனேஜர்.”
சோ: “நான் இங்க இருக்க மாட்டேன். வெளிய போறன். இப்ப இவன் என் பின்னாடி வந்தா எனக்கு கெட்ட கோபம் வரும்.”
வி.எஸ்.ராகவன் நாகேஷிடம் : “இவன் பின்னாடியே போ”


அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இவரும் செந்தாமரையும் நடித்த காட்சி ஷூட்டிங்கில் இடையில் இவரிடம் பேசினேன். 
அப்போது இவர் திருமணமாகாத பிரம்மச்சாரி என்பதாக ஒரு தவறான தகவல். அவரிடம்  நான் “ ஏன் சார் நீங்க கல்யாணம் பண்ணிக்கல”. அதிர்ச்சியாகி வி.எஸ்.ராகவன் கண்ணை விரித்து நிமிர்ந்து பார்த்து “ எனக்கு பொண்ணு எதுவும் பாத்திருக்கீங்களா?  நான் கல்யாணமானவன். இரண்டு பையங்க எனக்கு!”  

இவரும் நாகேஷும் பிரமீளாவும் சிங்கப்பூரில் ஒரு கலை நிகழ்ச்சியில் போட்ட நாடகத்தின் காஸெட் என்னிடம் இருந்தது.
அதில் ஓட்டை இங்க்லீஷ் பேசும் நாகேஷும் வி.எஸ்.ராகவனும்!
வி.எஸ்.ராகவன் “ குட் வார்னிங்க். குட்வார்னிங்க்.”
பிரமீளா :  நீங்க வந்தா மார்னிங் கூட எனக்கு வார்னிங் தான். எங்க ஒரு வாரமா ஆள காணோம்.
“ பாம்பே போயிருந்தேன். எனக்குப்பிடிக்கல ”

“அப்புறம்.”
“ த சீரியாஸிட்டி ஆஃப் த சிச்சுவேசன் வாஸ் சோ டேண்ஜரபிள். ஐ தாட் இட் ஷுட் பி ஃபர்காட்டட். தேர்ஃபோர் ஐ வாஸ் ரிட்டர்ன்ட் ஃப்ரம் பாம்பே யெஸ்டர்டே.”
 நாகேஷ் அப்போது இவரை அடிக்க வருவார். 
 நாகேஷ் : ஏய்யா. காலியா இருந்த வீட்டில இப்படியா அசிங்கம் பண்ணுவே. இதில சுருட்டு வேற.
வி.எஸ். ராகவன்: போர்டை பாத்துட்டுத்தான் போனேன். டாய்லட்னு போட்டுருந்துச்சு.
நாகேஷ்: அய்யோ..அய்யோ.. அடப்பாவி. டூ லெட்னு போர்டு போட்டுருந்தேன்.
வி.எஸ்.ராகவன் ஓடி விடுவார்.
பிரமீளா : என்ன சாப்பிடுறீங்க.

நாகேஷ் : லாங்க் ஃப்ரூட் சாப்பிட்டுட்டுத்தான் வர்றேன்.

பிரமீளா : லாங்க் ஃப்ரூட்டா?
நாகேஷ்: அதாம்மா பனானா! இப்ப தான் பனானா சாப்பிட்டு வர்றேன். பனானா லெதரை உரிச்சி சாப்பிட்டுட்டு..
பிரமீளா : பனானாக்கு ஏதுங்க லெதரு...
 நாகேஷ்: என்னம்மா?! லெதர் இல்லாம ஏதும்மா பனானா!?
 பிரமீளா: உங்களுக்கு எத்தன குழந்தங்க.
 நாகேஷ் : போத் மை சன்ஸ் ஆர் பாய்ஸ்.  இந்த தேர்ட் டாட்டர் தான் கேர்ளா போயிடுச்சி.
இப்போது இதெல்லாம் ‘கடி’ போலத்தெரியலாம்.
லைவ்வாக ரிக்கார்ட் செய்யப்பட்ட கேஸட். சிங்கப்பூர் ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸும் ஆரவாரமும் ரொம்ப அதிகமாய் பதிவாகியிருந்தது.
இந்த வசனங்களை நான் வி.எஸ்.ராகவனிடம் அப்போது பேசிக்காட்டிய போது பரவசமாக “கேஸட்டா வந்திருக்கா?! எனக்குத்தெரியாதே!” என்றார்.





........................................


1 comment:

Note: Only a member of this blog may post a comment.