Share

Jan 18, 2015

இலட்சியம்,கொள்கை,உறுதி
ஏ.வி.பி.ஆசைத்தம்பி தி.மு.கவில் விசேஷ அந்தஸ்தில் இருந்த தலைவர். எப்படியென்றால் அய்யாவோடு இவரை ஒப்பிட்டு திராவிட இயக்கத்தலைவர்களில் இவர் தான் “குட்டிப்பெரியார்” என்று அடையாளப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். 1977ல் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வின் ஒரே வேட்பாளர். மாநில சுயாட்சி பற்றிய கழக கொள்கை குறித்து அப்போது சோ கிண்டல். “வடசென்னையில் மட்டும் சுயாட்சி!”
குட்டிப்பெரியார் ஆசைத்தம்பியும் கண்ணதாசனும் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது ஸ்டுடியோ அதிபர் சுந்தரம்  நடத்திய பத்திரிக்கையில் இளைஞர்கள் கண்ணதாசனுக்கும், ஆசைத்தம்பிக்கும் ஐம்பது ரூபாய் சம்பளம் போட்டு வேலையை பெர்மணன்ட் ஆக்கியிருக்கிறார். உடனே ஆசைத்தம்பி கண்ணதாசனிடம் சொன்னாராம் “ நாம் இனி அய்யா, கட்சி, கொள்கை என்பதையெல்லாம் ஒதுக்கி விடவேண்டும்டா. பொழப்ப பாக்கணும்,குடும்பத்தை பாக்கணும்.முதலாளி நம் வேலையை நிரந்தரமாக்கி விட்டார். அவருக்குத்தான் இனி விசுவாசம். ”
கருணாநிதிக்கு அப்போதே அந்தஸ்து அதிகம். அவருடைய மாத சம்பளம் ஐநூறு ரூபாய்!

டி.வி. நாராயணசாமி பராசக்தியில் பண்டரிபாயின் சகோதரராக நடித்தவர். அதில் பகுத்தறிவு சுயமரியாதை லட்சியவாதியாக நடித்திருப்பார். இவர் எஸ்.எஸ்.ஆரின் உடன் பிறந்த சகோதரியின் கணவர். தி.மு.க நடிகர்கள் பட்டியலில் இவருக்கும்  இடமுண்டு.

1967ல் தமிழக ஆட்சியை கைபற்றிய தி.மு.க.! 1969ல் தி.மு.க தலைமையை கைபற்றி விட்ட கருணாநிதி 1964ல் கட்சியே வேண்டாம் என்று வெறுத்துப்போய் விட்ட நிலை என்றால் நம்ப முடியுமா?
சென்ற மாதம் தினமலர் வாரமலரில் படித்த விஷயம் இதுவரை கேள்விப்படாத விஷயம்.ஆச்சரியமாயிருந்தது. டி.வி நாராயணசாமி நூலில் இருந்து. 
1964ம் ஆண்டு. எஸ்.எஸ்.ஆர் வீட்டிற்கு நள்ளிரவில் கருணா நிதியும் அவர் மனசாட்சியான மாறனும் காரில் வருகிறார்கள். டி.வி. நாராயணசாமியை பார்த்தவுடன் கருணா நிதி ஓவென்று கதறி அழுகிறார். “அண்ணாத்துரை என்னை திட்டி விட்டார்.கட்சிக்கு உன்னால் ந ன்மை இருப்பது போல தீமையும் இருக்கிறது என்று ஏசிவிட்டார்’’
மாறன் ‘’ இனிமே சரிபட்டு வராது.”
எஸ்.எஸ்.ஆர் ஷூட்டிங் முடிந்து வருகிறார். சமாதானப்படுத்துகிறார். “ராஜினாமாவா? அதெல்லாம் நம்ம கிட்ட வேண்டாம்”
மாறன் “இல்லண்ணே... நாங்க கதை வசனம் எழுதிப் பொழச்சிக்குவோம். எங்கள விட்டுடுங்க.”
டி.வி.என் “ தம்பி.. நீங்க சின்னப்பையன். பேசாம விடுங்க”
மறு நாள் அண்ணாத்துரையை டி.வி.நாராயணசாமி சந்தித்து கருணாநிதி புண்பட்டுப் போயிருக்கும் விஷயத்தை சொல்கிறார். கட்சியே வேண்டாம் என்று வெறுத்துப்போய் விட்டார் என்பதை அறிந்த அண்ணாத்துரை அன்று மாலை தம்பிக்கு கடிதம் பகுதியில் கருணாநிதியைப்பாராட்டி எழுதுகிறார். அன்றோடு பிரச்னை தீர்கிறது!


இமயம் டி.வியில் வேல்முருகனுக்கு கொடுத்திருக்கிற பேட்டியில் 1994ல் வைகோ தன் அரசியல் வாழ்க்கைக்கு முடிவு கட்ட இருந்த விஷயம் பற்றி குறிப்பிட்டார். கட்சியில் மேல்மட்டத்தில் தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்கிறதால் அரசியலில் இருந்து ஒதுங்கி கலிங்கப்பட்டி போய் செட்டில் ஆகி விட தீர்மானித்தவுடன் அவர் மனைவிக்கு மிகுந்த ஆசுவாசம். “ ஊருக்கு போய்விடுவோம். நிம்மதியா இருப்போம்.” 
விடுதலைப்புலிகள் அரசியல், திராவிட அரசியல் எல்லாவற்றிற்கும் முழுக்கு என்று அர்த்தம்.

அன்றைய வைகோ நிலை எல்லோருக்கும் தெரிந்தது தான். கைதட்டல் கூட வைகோவிற்கு எரிச்சலாயிருந்திருக்கிறது. தி.மு.க.விலிருந்து விலக வேண்டாம். வீட்டில் கட்சிக்கொடி கூட பறந்துவிட்டுப்போகட்டும். அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவோம் என்று உறுதியாகத் தீர்மானித்திருந்த நேரத்தில் கருணாநிதி இவர் மீது கொலைப்பழி சுமத்துகிறார். அன்று ஆரம்பித்த தீவிர அரசியல் இன்று 21 வருடங்கள் ஓடி விட்டன என்று வேல்முருகனைப் பார்த்து சிரிக்கிறார் வைகோ.

http://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post_08.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/the-man-who-scared-indira-gandhi.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/1971.html

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_23.html
 
..............................................................No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.