Share

Oct 28, 2014

இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதியின் தன்மானம்
- R.P.ராஜநாயஹம்
................................................................






























   புதுவையில் என் வீட்டிற்கு எதிர் வீட்டில் துணைவேந்தர் கி .வேங்கிட சுப்பிரமணியன் குடியிருந்தார்.அல்லது அவர் வீட்டுக்கு எதிர் வீட்டு மாடியில் நான்!
ஒரு நாள் துணைவேந்தர் வீட்டில் இருந்து வெளியே இருவருடன் வந்து சத்தமாக பேசிகொண்டிருந்தார்.
நான் ஜன்னல் வழி பார்த்தேன்.
கே பால சந்தரும் நடிகை வைஜயந்தி மாலாவும்! பாலச்சந்தர் ரொம்ப உற்சாகமாக பேசிகொண்டிருந்தார் .
பதினைந்து நிமிடம் வெளியே அவர்கள் நிற்க நேர்ந்தது.அவர்களின் கார் வந்த பின் இருவரும் சென்றார்கள். தெருவில் பலரும் வீடுகளில் இருந்து வெளியே வந்து வேடிக்கை பார்க்கும்படி பாலச்சந்தரும் நடிகை வைஜயந்தி மாலாவும் காத்திருக்க வேண்டியிருந்தது.
மறு நாள் மாலை லாஸ் பேட்டை போய் கிராவை பார்த்த போது இந்த விஷயத்தை சொன்னேன்.
கிரா 'உங்களுக்கு விஷயமே தெரியாதா ?' ஆச்சரியமாக கேட்டார் .
' நாடகத்துறை இயக்குனர் இந்திரா பார்த்தசாரதி பல்கலை கழகத்தின்
' டீன் ' ஆகியுள்ளார்.
அந்த பதவிக்கு அவரை அமர்த்த சில நடைமுறைகள். அது சம்பந்தமாக அவருக்கு போன் செய்து துணைவேந்தர் சொன்னாராம் " உங்களை இன்டெர் வியூ செய்ய சினிமா இயக்குனர் கே. பாலசந்தரும், அகில இந்திய நடிகை வைஜயந்தி மாலாவும் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். உடனே கிளம்பி வாருங்கள் . "
இந்திரா பார்த்தசாரதி என்ன பதில் சொன்னாராம் தெரியுமா?
" கே.பாலசந்தரும் நடிகை வைஜயந்தி மாலாவும் என்னை இன்டெர் வியூ செய்து தான் இந்த பதவி எனக்கு கிடைக்கும் என்றால் அந்த பதவியே எனக்கு வேண்டாம்."
"நீங்கள் தான் பல்கலைக்கழக டீன் என்பது முடிவான விஷயம்.இது சும்மா ஒரு பார்மாலிடி ." துணை வேந்தர் இவரை சமாதானப் படுத்தியிருக்கிறார்.
இந்திரா பார்த்தசாரதி உறுதியாக வர மறுத்து விட்டாராம். துணை வேந்தர் என்ன செய்வார்? சினிமா பெருந்தலைகளான பாலசந்தரையும் வைஜயந்தி மாலாவையும் சமாளிக்க வேறு எதோ சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்!'
இந்திரா பார்த்த சாரதி பல்கலை கழக 'டீன் ' ஆகிய கதையின் பின் உள்ள சுவாரசியத்தை கிரா சொல்லி முடித்தார்.
இந்திரா பார்த்தசாரதியை நான் சந்தித்த போது நடந்த விஷயங்களை ஊர்ஜிதம் செய்தார்.


வெங்கட் சுவாமிநாதன்  நாற்பது வருடங்களுக்கு முன் சொன்னார்
"பாமரத்தனத்துக்கு கௌரவமான கலைபூச்சு தான் ஜெயகாந்தனும்,
கே பாலசந்தரும்! "



ஒரு நாட்டுக்கு இந்திய தூதராக செல்லக்கூடிய அளவு தகுதி படைத்தவர் இந்திரா பார்த்த சாரதி. எந்த சமரசத்திற்கும் தன்னை ஆட்படுத்தி கொள்ளதாவர்.
ஒரு மிக சிறந்த எழுத்தாளரை இன்டெர் வியூ செய்ய சினிமாக்காரனுக்கு - கே பாலசந்தருக்கு, நடிகை வைஜயந்தி மாலாவுக்கு என்ன யோக்யதை இருக்கிறது.
இந்திரா பார்த்தசாரதியின் 'ஏசுவின் தோழர்கள் 'நாவல் ஒன்றின் முன் பாலசந்தரின் அத்தனை படங்களும் சேர்ந்தாலும் அற்பமானவை தான்.
பல்கலை கழக நடைமுறைகள் எவ்வளவு கேலிகூத்தானது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
கலைமாமணி விருது அவருக்கு அறிவிக்கப்பட்டபோது பட்டியலிலிருந்த மற்ற பெயர்களைப் பார்த்து விட்டு அந்தப் பட்டமே தனக்கு வேண்டியதில்லை என்று மறுத்து விட்டவர் இ.பா.
பத்மஸ்ரீ இந்திரா பார்த்தசாரதி!
................................................................

எந்தரோ மஹானுபாவுலு
- R.P.ராஜநாயஹம்

 ............................



























புதுவை பல்கலைக்கழக "திஜானகிராமன் " கருத்தரங்கம் காலையில் ஆரம்பித்து முடிந்த பின்னால் மாலை இந்திரா பார்த்த சாரதி தன் வீட்டுக்கு என்னை கூப்பிட்டார்.
இந்திரா மாமி முகம் இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறது. அவர் வீட்டில் இரு முறை எனக்கு அந்த காலத்தில் நல்ல சுவையான பட்சணங்கள் கிடைத்தன. பாதாம் அல்வா சாப்பிட்டதை மறக்கவே முடியாது.
பின்னால் அடுத்த வருடம் இ.பா சாகித்திய அகாதெமிக்காக தி.ஜா பற்றி ஒரு நூல் எழுத வேண்டி என்னிடம் உள்ள அனைத்து தி.ஜா நூல்களையும் வாங்கினார்.
புத்தகங்கள் கொடுத்து நான் சில மாதங்களில் ஊரை விட்டு செல்லவேண்டி வந்த போது புத்தகங்களை இ.பா திருப்பி கொடுத்தார்.
'மரப்பசு' நாவல் மட்டும் எங்கோ எப்படியோ தவறி விட்டது.கிடைக்கவில்லை.
அதற்காக மாமி என்னிடம் மிகவும் வருந்தியதுடன் மன்னிப்பும் கேட்டார்.
'ஐயோ ஒன்னும் இல்லே மாமி. அது கிடைக்க கூடிய புத்தகம் தான். நான் விலை கொடுத்து வாங்க முடியும். நீங்கள் கவலையே படாதீர்கள். ' என்றேன் நான் அப்போது.
விஷயத்துக்கு வருவோம்.திஜாநிகழ்வு முடிந்து அவர் வீட்டுக்கு போய் பேசிகொண்டிருந்தேன்.
திஜா விடம் பள்ளிக்கூடத்தில் படித்த மாணவர் இ பா.!
இ.பா விடம் படித்த கல்லூரி மாணவர்கள் ஆதவனும் சம்பத்தும்!
இபா சாகித்ய அகாடெமி விருது 'குருதிப்புனல்' நாவலுக்காக வாங்கிய பின்னால் தான் ' சக்தி வைத்தியம் ' சிறுகதைநூலுக்காக சாகித்திய அகாடெமி விருது ஜானகி ராமன் வாங்கினார்.
குருவுக்கு முந்தி சீடனுக்கு விருது !
இலக்கிய அரசியல் பற்றி பேச்சு திரும்பியது. அப்போது அந்த காலத்தில் டெல்லியில் இ பா வுக்கும் வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி.
மாமி கணவர் மீது பரிவுடன் பேசுவது இயல்பான விஷயம் .' உங்க மீது வெங்கட் சாமிநாதனுக்கு பொறாமை . நீங்க சாகித்திய அகாடமி அவார்ட் வாங்கியதுனால பொறாமை தான் உங்க மேல கோபத்துக்கும் காரணம் ' - சத்தமாக சொன்னார் .
சாதாரணமாக புருஷன் இப்படி பொஞ்சாதி பேசும்போது தலையாட்டி தானே பார்க்க முடியும் . ஆனால் !
உடனே இ பா அதை மறுத்து சொன்னார் " ச்சே ச்சே .. அதெல்லாம் வெங்கட் சாமிநாதன் விருதுக்காக ஏங்குகிற ஆள் இல்லே. அப்படி ஆசை அவனுக்கு கிடையவே கிடையாது. ரொம்ப நேர்மையான ஆள். நீ சும்மா இரு.. "
உடம்பில் எனக்கு சிலிர்ப்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் இந்திரா பார்த்த சாரதி, வெங்கட் சாமிநாதன் இருவரும் என்னில் உயர்ந்து விசுவரூபம் எடுத்தார்கள்!
"எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு"
தியாக பிரும்மத்தின் ஸ்ரீ ராக கீர்த்தனை என்னுள் வியாபித்த தருணங்களில் இதுவும் ஒன்று !
இந்திரா மாமி இருபத்திரெண்டு வருடங்களுக்கு முன் மறைந்து விட்டார்.
வெங்கட் சுவாமி நாதன் மனைவியும் நான்கு ஆண்டுகளுக்கு முன் மறைந்து விட்டார்.
இன்று இ.பா.,வெ.சா இருவருமே Widowers என்பது வேதனையான விஷயம்!
"தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை.
தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாரும் இல்லை!"
சொன்னது கண்ணதாசன் தானே!
................................................................

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_03.html

............................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.