அசிஸ்டண்ட் டைரக்டர்! கேட்க எவ்வளவு பந்தாவாக இருக்கிறது. சொல்லொணாத் துயரங்கள் அனுபவிக்கும் இனம் இந்த உதவி இயக்குனர்கள்.
சக்கையாகப் பிழிந்து விட்டு குரு நாதர் என்று பக்தியோடு இவர்களால் அண்ணாந்து பார்க்கப்படும் டைரக்டர் இவர்களுக்கு செய்யும் அநீதி,கொடுமை.
இயக்குனர்கள் இவர்களை துடிக்க துடிக்க அவமானப்படுத்துவார்கள்.
வசதி வாய்ப்புள்ள உதவி இயக்குனர் பாடு வேடிக்கையானது.
அவ்வளவு பிரபலமோ,வசதியோ இல்லாத டைரக்டர் அந்த நேரத்தில் இயக்கிக்கொண்டிருக்கிற படம் சில்வர் ஜூபிலி போகும் என்று வாய்ப் பந்தல் போடுவதை நம்பியேயாக வேண்டும்.
1.அழைத்தால் வருவேன்
டைரக்டர் இந்த பசையுள்ள உதவி இயக்குனரை படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் தன் கூட அழைத்துக் கொண்டு போனால் ஆட்டோ செலவு, தியேட்டர் டிக்கட், வெற்றிலை பாக்கு செலவு எல்லாம் ஏற்றே ஆக வேண்டும்.
மத்திய அரசாங்க உத்தியோகத்தை சினிமாவுக்காக “ Nature of work doesn’t suit my temperament” என்று ராஜினாமா செய்த உதவி இயக்குனர் தான் ஸ்வாகத் ஓட்டலில் டிஸ்கசன் போது வெற்றிலை பாக்கு வாங்க மூன்றாவது மாடியிலிருந்து கீழே வந்து வாங்க வேண்டும். அசோசியேட் டைரக்டரிடம்
“ டேய்! நான் எங்க டைரக்டருக்கு போண்டா வாங்க அஞ்சி மைல் நடந்து போயிருக்கேன்டா!” என்று டைரக்டரின் டயலாக் வரும்.
சினிமாப்பத்திரிகை சப் எடிட்டரிடம் கெஞ்சிக் கேட்டு அந்த பிரபலமாகாத டைரக்டரின் பேட்டி எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேட்டியை பதிவு செய்ய தன் டேப் ரிக்கார்டரைத் தான் தரவேண்டியிருக்கும்.
பேட்டி எடுக்கும் நேரத்தில் ஸ்நாக்ஸ் செலவு போக டைரக்டரை ஆட்டோ பிடித்து அனுப்பி விட்டு சினிமாப் பத்திரிக்கை சப் எடிட்டரை பாண்டி பஜார் அழைத்துப் போய் இரவு உணவு வாங்கித் தரவேண்டும்.
உதவி இயக்குனரின் தகப்பனார் கஸ்டம்ஸ் அதிகாரி எனத் தெரிய வந்தால் 555 சிகரெட் காட்டன் காட்டனாக வாங்கித்தந்தாக வேண்டும். டைரக்டர் “ நான் குடிகாரன் கிடையாதுப்பா! ஆனால் ஃபாரின் சரக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க அப்பா கிட்ட சொல்லி வாங்கி தாப்பா! போன தடவை நீ கொடுத்த செண்ட் பாட்டில் தீந்து போச்சுப்பா. செண்ட் பாட்டில் வேணும்ப்பா!”
குடிப் பழக்கம்,சிகரெட் பழக்கமே இல்லாத உதவி இயக்குனர் சென்னை பாரீஸ் கார்னர் போய்த்தான் இதையெல்லாம் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை.
உதவி இயக்குனரின் தகப்பனார் திருச்சியில் கஸ்டம்ஸ் சூப்ரிண்ட். இது டைரக்டருக்கும் தெரியும்.
இதையெல்லாம் கொண்டு போய் குருதட்சினையாக் கொடுக்கும் போது ‘அவங்கப்பா கஸ்டம்ஸ் ஆஃபீசர்ப்பா!’ என்று அசோசியேட் டைரக்டரிடம் டயலாக். “பாவம்ப்பா! சினிமாவுக்காக சென்ட்ரல் கவர்மெண்ட் வேலையை ராஜினாமா பண்ணிட்டு வந்திருக்கான்யா! என்ன வசதி வாய்ப்பு அதிகம்.அதனால வந்துட்டான்.” என்று கரிசனமான வார்த்தைகள்!
இந்த வசதியான உதவி இயக்குனர் அந்தப்படத்து அசோசியேட் டைரக்டரையும் ரட்சிக்க வேண்டும். 12 வருடமாக சினிமாவில் இணை இயக்குனராக இருந்தவன் “ அரிசி வாங்க பணம் வேணும்யா!” என்று கெஞ்சுவான். அவனுடைய வீட்டுக்கு ஒரு தடவை அழைத்துக் கொண்டு போவான். அண்டர் கிரவுண்டில் அவன் தர்ம பத்தினி இருட்டில் சுருண்டு போய்க்கிடப்பாள். இவன் அன்றைய அவர்களின் பசிக்கு சாப்பாடு வாங்கித் தருவான்.
ஒரு கட்டத்தில் இந்த பஞ்சையான அசோசியேட் டைரக்டரிடம் “உன்னைப் பார்த்தவுடன் நான் கையில் ஐம்பது ரூபாய் எடுத்து வைத்திருப்பேன். அப்படி என் திறந்த கையில் ரூபாய் இல்லையென்றால் உடனே நீ திரும்பிப் போய் விடு. என்னிடம் தயவு செய்து கேட்காதே!” என்று இவன் கெஞ்சியிருக்கிறான்.
அந்தப்படத்துக் கதாநாயகியிடம் அந்த அசோசியேட் டைரக்டர் ஒரு கதை சொல்லி டைரக்டராக ஆசைப் பட்டு அவள் வீட்டுக்குப் போய் ஒரு மணி நேரம் கதை சொல்லிவிட்டு “ ஒரு ஐம்பது ரூபாய் தாருங்கள் “ என்று கேட்டுத் தொலைத்து விட்டான். பாவம் அரிசி வாங்கவே அவனுக்கு எப்போதும் பணம் தேவை.
அந்த நடிகையும் அவளுடைய அம்மாவும் உடனே ‘கதை பிடிக்கவில்லை’ என்று சொல்லி அவமானப்படுத்தி, பணமும் தர மறுத்து அனுப்பி விட்டார்கள்.
அதோடு பிரச் னை முடியவில்லை. டைரக்டரிடமும் “ உங்க அசோசியேட் எங்க வீட்டுக்கு வந்து கதை சொல்லி விட்டு ஐம்பது ரூபாய் பணம் கேட்கிறான்” என்று போட்டுக் கொடுத்து விட்டார்கள். டைரக்டருக்கு தன் அசோசியேட் உடனே டைரக்டராக முயற்சித்திருக்கிறான் என்கிற கோபம் தான் அதிகம். தனக்கே அடுத்த பட வாய்ப்புக்கு வழியில்லாத போது இவன் போட்டிக்கு வருகிறானே என்ற ஆத்திரம். ‘ஏன்டா! என் பேரைக் கெடுக்கிற! பிச்சைக்காரப்பயலே!’ என்று சொல்லி கேவலப்படுத்தி விட்டு அதோடு விடவில்லை. நாலு பேர் முன் பத்து பேர் முன் “ இவன் டைரக்டராக ஆசைப்படுறாய்யா! என்னை ஓவர் டேக் பண்ணப் பாக்குறான்!” என்று அவமானப்படுத்திக்கொண்டே இருப்பார்.
இவரிடமே பதினைந்து வருடம் அசோசியேட் ஆக இருக்கும் மொட்ட செவுடனைப் பார்த்துத் தான் மற்றவர்கள் மீதான தன் கோபத்தை வெளிப்படுத்துவார். “ அதாண்டா நீ இப்படி பதினஞ்சு வருடமா அசோசியேட்டாவே இருக்க! டே! என் ஒத்த மயிரைப் புடுங்கிப்போட்டா அது நின்னு டைரக்ட் பண்ணும்டா!”
அந்த மொட்ட செவுடனும் சொல்வான் “ டைரக்டருக்கு உடம்பு பூரா மூளைப்பா!”
அன்று அரசாங்க வேலையை விட்டு விட்டு அவரிடம் ‘வசதியான அஸிஸ்டண்ட் டைரக்டராக’ இருந்தவனுக்கு இலக்கிய ஈடுபாடு அதிகம். தி.ஜாவின் மோகமுள், அம்மா வந்தாள்,இ.பாவின் தந்திர பூமி, சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ வண்ண நிலவனின் ‘கடல் புரத்தில்’ போன்ற நாவல்களை படமாக்கும் கனவில் இருந்தவன்.
ஏவிஎம் ஸ்டுடியோவில் ரகளை போதையில் வந்து, ஆட்டோவை விட்டு கீழே இறங்க மறுக்கும் அக்ரஹாரத்தில் கழுதை ஜான் ஆப்ரஹாமைக் காட்டி “ நீயும் இப்படி ஆயிடாதப்பா. அவார்டு வாங்கின டைரக்டரை பாத்தியா!” என்று சிரிப்பார் அந்த டைரக்டர்.
எங்கேயாவது பத்து மாசம் சம்பளம் வாங்காமல் டைரக்டருக்கு தண்டம் அழுத ஒரு அஸிஸ்டண்ட் டைரக்டர் இருப்பானா? அது இவன் தான்!
................
2. ராசுக்குட்டி
அப்புறம் ஒரு மிகப் பிரபலமான பணக்கார டைரக்டரிடம் வேலை பார்க்கும் போது சந்தித்த சிறுமைகள்?
இந்தமிகப் பிரபல பணக்கார கதாநாயக டைரக்டர் இன்னொரு ‘மைல்கல்’ இயக்குனரிடம் அஸிஸ்டண்டாக வேலை பார்த்த போது அவரிடம் பாடல் காட்சியின் போது “ இந்த பாட்டுல ‘ ஒரே ஃப்ரேம்மில சார் ஹீரோயினி ஃபிகர் மட்டும் வேற வேற இடத்தில வருமே! அப்படி செஞ்சா நல்லாருக்குமே!” என்று சொல்லியிருக்கிறார். உடனே அந்த மைல்கல் இயக்குனர் “ யோவ்! அது ‘ஸ்டாப் ப்ளாக்’ டெக்னிக்.யோவ்! இதெல்லாம் நீ புரிஞ்சிக்க அஞ்சு வருஷமாகும்யா!” என்று முகத்தில் அடித்தார். ஆனால் இந்த அஸிஸ்டண்ட் அடுத்த இரண்டு வருடத்தில் தமிழில் மிகப் பிரபலமான இயக்குனராகிவிட்டார்!
இந்த பிரபல டைரக்டரிடம் இவன் அஸிஸ்டண்ட் வேலை பார்த்த போது ஒரு சொற்ப சம்பளம் கிடைத்தது. பட த்தில் அஸிஸ்டண்ட் டைரக்டராக வேலை பார்த்தும் டைட்டிலில் அஸிஸ்டண்ட் டைரக்டராக இவன் பெயர் வரவில்லை.
நடிகர்களில் கடைசியில் இவன் பெயர் போடப்பட்டு படத்தில் அந்தக் காட்சியும் இல்லை என்றாகிப் போனது!
படத்தில் இவன் நடித்த சீன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட பின் இவன் தலை விதி பாருங்கள். அந்த டைரக்டருக்கு ஸ்காட்ச் விஸ்கியும்,மார்ல்பரோ மெந்தால் சிகரட் ஒரு கார்ட்டனும் வாங்கிப்போய் கொடுத்தான்.
அதை சந்தோஷமாகப் பார்த்து அந்த டைரக்டர் “ இதையெல்லாம் எங்க புடிச்சீங்க!” (ஒரு நாளைக்கு நூறு சிகரெட் பிடிப்பார் அந்த கதாநாயக இயக்குனர்!)
திருச்சி கஸ்டம்ஸ் ஆஃபீஸ் ஸ்டோரில் நியாய விலையில் வாங்கியதை இவன் சொல்கிறான். உடனே அங்கிருந்த தயாரிப்பு நிர்வாக உதவியாளன் சொல்கிறான். “அவங்கப்பா கஸ்டம்ஸ் ஆஃபீஸர் சார்!” ஆனால் உண்மை என்னவென்றால் அப்போது இவனுடைய தகப்பனார் ரிட்டயராகி நான்கு வருடமாகி இருந்தது!
இந்த கதாநாயக இயக்குனர் எப்போதும் இவனைப் பார்த்து மலைத்துச் சொல்வது " நீங்க ரொம்பப் படிச்சிருக்கீங்க!ரொம்பப் படிச்சிருக்கீங்க!
மேட்டூரில் ஷூட்டிங் நடந்தபோது அலுத்து தூங்கிக் கொண்டிருந்தவனை நடு நிசியில் எழுப்பி " டைரக்டர் கூப்பிடுகிறார்" என்று கூப்பிட்டு இவன் போன போது டைரக்டர்
" இந்த இங்கிலிஷ் மேகசினில் இப்ப என்னை பேட்டியெடுத்திருக்காங்க. அவுங்க என்ன எழுதியிருக்காங்கன்னு செக் பண்ணி சொல்லுங்க.. இங்க உங்களுக்குத்தான் இங்கிலிஷ் தெரியும்! நான் சொன்னத சரியா எழுதியிருக்காங்களான்னு பாக்கனுமே! "
ஆங்கிலப்பத்திரிக்கை நிருபரிடன்"சார் நீங்க எழுதினத என் அஸிஸ்டண்ட் டைரக்டர் கிட்ட கொடுங்க."
இன்னொரு நாள் நடுநிசிக்குப்பின் எழுப்பி டைரக்டர் கூப்பிடுகிறார் என்று சொல்கிறார்கள்.
டைரக்டர் " திரௌபதியோட அண்ணன் பேரு என்னங்க?"
இவன் " த்ருஷ்டத்யும்னன்! அவன் தான் துரோணரைக் கொல்கிறவன்."
இந்த கதாநாயக இயக்குனர் ஒரு Night Bird!
காலையில் 11 மணிக்குத் தான் எழுந்திருப்பார்!
..........................................................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.