Share

Oct 24, 2014

எஸ்.எஸ்.ஆர் - விஜயகுமாரி



 பெரியகுளம் தலைமை தபால் நிலையத்தில் நான் வேலை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நாள்
இலட்சிய நடிகர் S.S. ராஜேந்திரனின் உடன் பிறந்த தம்பி பாஸ்கர் தபால் ஆபீஸ் வந்து என்னிடம் "தம்பி , இன்று மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு வந்து விடுங்கள். அண்ணன் மதுரையிலிருந்து கிளம்பி இங்கே வருகிறார் .போன் இப்ப வந்தது ." என்றார். எனக்கு சந்தோசம். சென்னையிலிருந்து மதுரைக்கு ஏதோ நிகழ்ச்சிக்காக வந்தவர் பெரியகுளத்தில் இருக்கும் அப்பாவையும் தம்பியையும் பார்க்க S.S.R வருகிறார். அவரை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு.
மதியம் 12 மணிக்கு ஆபீஸ் PERMISSIONபோட்டு விட்டு பாஸ்கர் வீட்டுக்கு போய் விட்டேன். எஸ்.எஸ்.ஆருடைய தகப்பனார் சேடபட்டி சூரிய நாராயண தேவருக்கு அப்போது வயது ஒரு 75 இருக்கும். என்னிடம் நன்றாக பேசுவார்.
ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் தம்பி திலகர் மருது என் பால்ய நண்பன். ஓவியர் மருது ஒரு முறை பெரியகுளம் வந்திருந்த போது எஸ்.எஸ்.ஆருடைய இன்னொரு தம்பி கதிர் வேல் (போலீஸ் அதிகாரியாக இருந்தவர்) மகன் பாண்டியனுடன் என் அறைக்கு வந்து என்னிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.
உண்மையில் ஓவியர் மருது வின் அப்பா மருதப்பனும் ( இவர் ஒரு ஞானி ) நானும் மதுரையில் தல்லாகுளத்தில் ரோட்டில் சந்தித்தால் கூட இரண்டு மணி நேரம் பேசி கொண்டிருப்போம். அவர் தான் எனக்கு என் பதினெட்டு வயதில், ரஸ்ஸல் எழுதிய “WHY I AM NOT A CHRISTIAN” நூலை படிக்க கொடுத்தவர். மருது வீட்டில் ஒரு நூலகம் உண்டு. "இயேசுவின் மரணம் காஷ்மீரத்திலே " என்ற ஒரு விசித்திரமான நூல் கூட அவரிடம் இருந்து வாங்கி நான் படித்திருக்கிறேன்.
S.S.R க்கு இவர் சித்தப்பா. அதனால் தான் பெரியகுளத்தில் பாஸ்கர் எனக்கு அறிமுகம். ஓவியர் மருதுக்கு S.S.R அண்ணன் முறை.
விஷயத்திற்கு வருகிறேன். பாஸ்கர், அண்ணன் S.S.R வரப்போகிறார் என்ற பதற்றத்தில் இருந்தார். நான் பாஸ்கர் கேட்பதற்காக HITS OF S.S.RAJENDRAN ஆடியோ கேசெட் கொடுத்திருந்தேன். கேசெட்டை போட்டு கேட்பதற்காக என் டேப் ரெக்கார்டரையும் கொடுத்திருந்தேன்.
எஸ்.எஸ்.ஆருக்காக டி.எம்.எஸ் பாடிய பாடல்கள் தனி சிறப்புடையவை. அந்த பாட்டு எல்லாம் கேட்கும் போதே எஸ்.எஸ்.ஆர் அதற்கு பாவத்துடன் வாயசைப்பதை உணர முடியும். "ரொம்ப நல்லா இருந்தது. இது மாதிரி ஒரு டேப் ரெக்கார்டர் ஒண்ணு வேணும் " என்று சூரிய நாராயண தேவர் சொல்லிகொண்டிருந்தார். சூரிய நாராயண தேவர் குழந்தை போல.
ஒரு போன் வந்தது அப்போது . பாஸ்கர் ஏமாற்றத்தோடு என்னிடம்
" அண்ணன் அவசரமாக சென்னை திரும்பி போகிறாராம். அடுத்த முறை பெரியகுளம் வருகிறேன் என்று சொல்லி விட்டார் தம்பி " என்றார்.
அன்று தவறிபோனவாய்ப்பு ! காலம் ஓடி விட்டது.
 அதன் பிறகு இலட்சிய நடிகரை நான் பார்த்ததில்லை! பார்க்க வாய்ப்பு கிடைத்ததே இல்லை.

இந்த விஷயங்களை ஓவியர் மருது இங்கே திருப்பூரில் ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு வருடம் முன் வந்திருந்த போது நான் மத்திய அரிமா சங்க மேடையிலேயே பேசினேன்.
அன்றைய எம்.எல்.ஏ. கோவிந்தசாமி அவர்கள் மருது பற்றி நான் பேசிய விஷயங்கள் பிரமிப்பாய் இருப்பதாக குறிப்பிட்டார்.
எஸ் எஸ் ஆர் திமுக உடைந்த போது திமுக வில் தான் இருந்தார். அவர் மகன் ராஜேந்திர குமார் அதிமுக வில் உடனே சேர்ந்து விட்டார்.
அப்போது எம்ஜியாரை தாக்கி எஸ் எஸ் ஆர் ஒரு அறிக்கை விட்டார்.
" அன்றைய தினம் 'ராஜா தேசிங்கு' படத்தில் என்னுடன் திருமதி பத்மினி அவர்கள் நெருங்கி நடிக்கக்கூடாது என்பதற்காக எம்ஜியார் செய்த சூழ்ச்சிகளை நாடு மறக்குமா?"'

துக்ளக் சோ வுக்கு இந்த மாதிரி விஷயம் கிடைத்தால் நையாண்டிக்கு கேட்க வேண்டுமா ?
" எஸ் எஸ் ஆர் சார் ! கேட்கவே பதறுகிறதே.நெஞ்சு கொதிக்கிறது . இப்படியெல்லாம் அநியாயமா ? எப்பேர்ப்பட்ட அநீதி இது? இதையெல்லாம் இந்த நாடு மறந்தால் இந்த நாட்டிற்கு விமோசனம் ஏது? இந்த நாடு நன்றி கொன்ற நாடு ஆகிவிடாதா ?" என்று செமையாக கலாய்த்திருந்தார்.


எஸ் எஸ் ஆர் அவர்களுக்கும் எம்ஜியார் அவர்களுக்கும் பெரிய பனிப்போர் நடந்திருக்கிறது.
எம் ஆர் ராதா - எம்ஜியார் துப்பாக்கி சூடு நடந்த அந்த நேரத்தில் விஜய குமாரியின் தங்கை திருமணம் நடந்ததாம். அந்த திருமண நிகழ்வில் உரையாடலின் போது எஸ் எஸ் ஆர் சொன்னாராம் ' இப்போ கூட எம்ஜியாரிடம் துப்பாக்கி கொடுத்து யாரை யாவது சுட சொன்னா அவர் எம் ஆர் ராதாவை சுட மாட்டார் . எஸ் எஸ் ஆரை தான் சுடுவார் '

ஐம்பதுகளில் இருந்து திரை,திமுகஅரசியல் இரண்டிலும் எஸ் எஸ் ஆர் முக்கிய பங்கு வகித்தவர்.
 
திண்டுக்கல் பாராளு மன்ற உறுப்பினர் ராஜாங்கம் இறப்பதற்கு முந்திய தினம் மதுரை திலகர் திடலில் நடந்த கூட்டத்தில் பேசும்போது சொன்னார்.
' எனதருமை நண்பன் எஸ் எஸ் ராஜேந்திரனை திரையுலகில் இருந்து விரட்டியதே இந்த எம்ஜியார் தான் .'
இரவுகூட்டம் முடிந்த அன்று சில மணி நேரங்களிலேயே ராஜாங்கம் மாரடைப்பால் இறந்து விட்டார்.
சில நாளில் பத்திரிகை செய்தி ” ராஜாங்கம் சமாதியில் ராஜேந்திரன் கண்ணீர் "
திண்டுக்கல் இடைதேர்தலில் அண்ணா திமுக வுக்கு முதல் வெற்றி .
தொடர்ந்து அடுத்து மூன்று வருடங்களில் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு மிசா கொடுமைகளில் சிக்கிய போது எஸ் எஸ் ஆர் திமுக தலைவர் பதவியில் இருந்து கருணாநிதி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்.
செயற்குழுவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். பின்னால் ம.தி.மு. க விற்குப் போய்விட்டு மீண்டும் தி.மு.கவிற்குத் திரும்பிய மு கண்ணப்பன் தான் எஸ் எஸ் ஆரை விரட்டி விரட்டி தாக்கினார். அவருடைய கார், மூக்கு கண்ணாடி நொறுக்கப்பட்டது .
இந்த இடத்தில் கொஞ்சம் திரும்பிப்பார்க்க வேண்டும் .எம்ஜியார் கட்சியை விட்டு விலக்கப்பட்டதற்கு திமுக கூறிய காரணம் ' பொதுக்குழுவில் பேசவேண்டிய விஷயங்களை பொதுக்கூட்டத்தில் பேசினார்'
- பொதுக்குழுவில் எம்ஜியார் பேசியிருந்தால் உயிர் பிழைத்திருப்பாரா?
கோர்ட்டில் வக்கீல் எஸ் எஸ் ஆரிடம் ' அன்பகத்தில் அன்று நடந்த சம்பவம் நினைவிருக்கிறதா ?' என கேட்ட போது எஸ் எஸ் ஆர் ' மறக்க முடியுமா?!'என்கிறார். கோர்ட்டில் அமர்ந்திருந்த கருணாநிதி கண்ணாடியை கழட்டி கண்களை துடைத்து கொள்கிறார்.
திமுக விலிருந்து எஸ்.எஸ்.ஆர் விலக்கப்பட்ட போது வந்த பதிவு தபாலில் கூட அவர் ' எஸ்.எஸ் ராஜேந்திரன், தி.மு.க’ என்று தான் ஒப்பமிடுகிறார்.
வேறு வழியில்லாமல் அண்ணா திமுக வில் இணைந்து விட்டார்!
பின்னர் ஆண்டிப்பட்டி யில் பொதுத்தேர்தலில் எம் எல்ஏ வாக அதிக வாக்கு வித்தியாசத்தில் ( அகில இந்திய அளவில் ) எம்ஜியார் செல்வாக்கில் வெற்றி பெறுகிறார்.
எம்ஜியார் அடுத்த தேர்தலில் அமெரிக்கா வில் நோயாளியாய் இருந்த போது இவருக்கு சீட்டு மறுக்கப்பட்ட போது சேடப்பட்டி தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளரை ( சேடபட்டி முத்தையா)எதிர்த்து படு தோல்வியடைந்து டெபாசிட் இழக்கிறார்.இந்த அளவில் எஸ் எஸ் ஆரின் அரசியல் வாழ்வு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.
ஆனால்அதன் பிறகு திருநாவுக்கரசு கட்சி, அதன் பின் அந்த கட்சி அண்ணா திமுக வில் இணைந்த போது போய் கூட்ட நெருக்கடியில் தள்ளாடி கீழே விழுந்து வேதனையுடன் ' நேரம் , நேரம் ' என்று வாய் விட்டு சொன்னது,
2006 சட்ட மன்றத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்து அண்ணா திமுகவில் இணைந்தது எல்லாம் பேச வேண்டிய விஷயங்கள் அல்ல.
ஆனால் உண்மையிலேயே
' நாடு மறக்குமா ' என்று சுட்ட வேண்டிய நிகழ்வு ஒன்று.
ராஜ மான்ய ஒழிப்பு தீர்மானம் பாராளுமன்றத்தில் எஸ் எஸ் ஆர் வயிற்று வலி (!)காரணமாக ஒட்டு போடாததால் ராஜ்ய சபாவில் தோல்வியடைந்த நிலையில் 1971ல் இந்திரா காந்தி இந்திய பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு இடைதேர்தலை அறிவித்த நிகழ்வைத்தான்!
................

நடிகை விஜயகுமாரி 

 

நடிகை விஜயகுமாரி பேட்டி  கலைஞர் டி வி யில் பார்க்க நேர்ந்தது.
இளமை இவரிடம் எப்படி இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அவர் காலத்து சரோஜா தேவியை விட இப்போது ரொம்ப அழகாக தெரிகிறார். கே ஆர் விஜயா தொப்பையும் ,தோற்பையுமாக கழன்று போய்விட்டார்.
பின்னால் வந்த ஜூனியர் நடிகை 'கலர்' காஞ்சனா இப்போது முழுக்கிழவி . ராஜஸ்ரீ யும் உருக்குலைந்து போன நிலை . இவ்வளவு ஏன் இவர் கதாநாயகியாய் நடித்த ஜீவனாம்சம் படத்தில் அறிமுகமான லக்ஷிமியை இப்போது கமலின் ' உன்னைப்போல் ஒருவன் ' படத்தில் காண சகிக்கவில்லை. இன்று கடந்த சிலவருடங்களுக்கு முன் வந்த நடிகைகளே எத்தனை பேர்
குண்டி, கை,நெஞ்சி,மூஞ்சி சுருங்கி வத்திப்போய் அல்லது ஊதிப்பெருத்து யாளி போல விகாரமாக தோற்றமளிக்கிறார்கள்.
ஆனால் விஜய குமாரி அப்படியே இளமையுடன் இருக்கிறார்!

'எங்க வீட்டுக்காரர் ' என்று எஸ் .எஸ் . ஆர் பற்றி இன்னமும் குறிப்பிடுவது சோகம் தான் . அவர் எப்போதோ முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இவரை விட்டு விட்டு தாமரை செல்வி என்ற பெண்ணை மணந்து பிள்ளை குட்டி என்று ஒதுங்கி விட்டார் . அல்லது விஜயகுமாரி ஒதுங்கிகொண்டதால் மூன்றாவது திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார் என்று கூட சொல்லலாம். இலட்சிய நடிகருடன் வாழ்வு கசந்து பிணக்கு ஏற்பட்டதை, பின்னால் பிரிவு தவிர்க்கமுடியாதது என்பதை அவருடைய தலைவர் சி.என். அண்ணாத்துரையிடம் நேரில் தான் விளக்கியதைப்பற்றி அந்த காலத்தில் ஒரு பேட்டியில் நடிகை விஜய குமாரி கூறியிருந்தார் .
விஜயகுமாரி மகன் ரவி நடிகர் விஜயகுமார் மூத்த மகளை (மஞ்சுளா மகள் அல்ல)திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார் .

நிம்மதி இல்லை என்று நடிகைகள் எப்போதும் சொல்வதை டி வி பேட்டியில் விஜயகுமாரி அடிக்கடி சொன்னார் .'தலையில் குத்து ,முதுகில் குத்து , நெஞ்சில் ஏகப்பட்ட குத்து 'என்று அதை அப்படி தன் கையால் குத்தி செய்து காட்டினார். பிரச்னைகள் !The intray is never finished. யாருக்குமே தான் உயிர் உள்ளவரை!

சினிமாவில் செயற்கைத்தனம், நாடகத்தனம் விஜயகுமாரியிடம் உண்டு. இயல்பாக துருதுருப்பு,படபடப்பு அதிகம் உள்ளவர் என்பதால் கொஞ்சம் மிகை நடிப்பு. பத்மினி கூட கொஞ்சம் மிகையாகத்தான் நடிப்பார்.

பூம்புகார் படம் பற்றியும் கண்ணகி சிலைக்கு மாடல் தான் தான் என்பதிலும் விஜயகுமாரிக்கு மிகுந்த பெருமிதம்.


இவர் பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர். ஸ்ரீதர் " கல்யாண பரிசு ".
கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் முதல் படம் " சாரதா " விஜயகுமாரி படங்களில் மாஸ்டர் பீஸ்!

பி . மாதவன் முதல் படம் " மணியோசை " யில் விஜயகுமாரி தான் கதாநாயகி .
ஆரூர் தாஸ் இயக்கிய முதல் படம் "பெண் என்றால் பெண் " படத்திலும் நடித்துள்ளார்.
அன்று பேட்டி கொடுக்கும்போது அவர் நினைவில் வர மறுத்த படம் "ஜீவனாம்சம் ". மல்லியம் ராஜகோபால் இயக்கிய முதல் படம் . அதிலும் இவர் கதாநாயகி.
இன்னொன்று இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெயர் அப்போது படங்களின் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது.

சாரதா,
சாந்தி,
ஆனந்தி,
பவானி
போன்ற படங்கள்.
கற்பகமும் இவருக்கு வந்தது தான் . ஆனால் எஸ் எஸ் ஆர் தனக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கற்பகமாக விஜயகுமாரி நடிக்க அனுமதி தரமுடியும் என்று பிடிவாதம் பிடித்ததால் கே.ஆர். விஜயா என்ற நடிகை கற்பகமாக தமிழ் திரையில் அறிமுகமானார் !
கே எஸ் ஜி " இந்த விஜயா இல்லாவிட்டால் இன்னொரு விஜயா " என்று சவால் விட்டு கே ஆர் விஜயாவை நடிக்க வைத்தார்.

இலட்சிய நடிகை என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள விஜயகுமாரி கொடுத்த விலை இப்படி மிக அதிகம்.

சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினிபோன்றவர்கள் பிறமொழியில் இருந்து தமிழுக்கு வந்து அளப்பரிய சாதனை புரிந்தார்கள். அவர்களிடையே தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகை விஜயகுமாரி ஓரளவு சாதனை புரிந்தவர்.


மனோரமா எப்போதும் தமிழக முன்னாள் இந்நாள் முதல்வர்களுடனான தன்னுடைய rapport பற்றி பெரிதாக சொல்லிக்கொள்வார். ஆனால் விஜயகுமாரி தான் இப்படி பெருமைப்பட்டுக்கொள்ளும் முதல் தகுதி கொண்டவர்.
வி . என் .ஜானகி யின் கிச்சன் கேபினட் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர். எஸ் .எஸ் .ஆர் அவர்களின் அப்போதைய அரசியல்,சினிமா அந்தஸ்து காரணமாக அண்ணாத்துரை, கருணாநிதி, ஜெயலலிதா அனைவரும் இவர் வாழ்வில் முக்கியமானவர்கள்.

பல வருடங்களுக்கு முன் மணியனின் 'இதயம் பேசுகிறது ' வாரப் பத்திரிகையில் இவர் தன் வாழ்க்கை தொடரை பரபரப்பாக எழுதினார் . அப்போது அவர் நெஞ்சில் ,தலையில் ,முதுகில் விழுந்த குத்துகள் பற்றி நிறைய குறிப்பிட்டார் . பகீரங்கமாக.
அவற்றில் ஒன்று : எஸ் . எஸ் .ஆர் எடுத்த மணிமகுடம் திரைப்படம் பற்றியது . வெளிப்புற படப்பிடிப்புக்கு கொடைக்கானல் சென்ற எஸ் . எஸ் .ஆர் . இவரை அந்தப்படத்தில் நடித்த போதும் சென்னையில் ஒதுக்கி விட்டு விட்டு அந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகையுடன் சென்றார் என்கிற விஷயம்.

...............................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.