முதலாளி,சிவகெங்கைச் சீமை, தை பிறந்தால் வழி பிறக்கும், சாரதா,வானம்பாடி, நானும் ஒரு பெண், பூம்புகார், ஆனந்தி, காக்கும் கரங்கள்,அவன் பித்தனா, மறக்கமுடியுமா போன்ற படங்கள் எஸ்.எஸ்.ஆர் கதாநாயகனாக நடித்த முக்கிய படங்கள்.
உணர்ச்சிகரமாக வசனம் பேசும் போது இரு கண்ணில் முத்தாய் கோர்த்து நிற்கும் இரு முத்து கண்ணீர் கீழே விழாமல் இவர் பேசுவது பிற நடிகர்கள் யாரிடமும் கண்டிராத அதிசயம்.
பாடல்களுக்கு இவர் வாயசைக்கும் அழகு சொல்லில் அடக்க முடியாது. நாக்கு கூட அழகாக புரளும்.
“வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது.
வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது.”
“எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
உலகே உன் செயல் தான் மாறாதோ”
“ வாராதிருப்பாளோ வண்ண மலர் கன்னியவள்”
“ பொன்னாள் இது போலே வருமா இனிமேலே “
“ கண்ணிலேஅன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்”
“ ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக”
போன்ற டி.எம்.எஸ் பாடல்கள் எப்போது கேட்டாலும் எஸ்.எஸ்.ஆரின் உணர்ச்சிகரமான முகம் நினைவுக்கு வரும்.
மற்ற கதாநாயகர்களிடம் காணக்கிடைக்காத ஒரு விஷயம். வில்லுப்பாட்டு நிகழ்ச்சி எஸ்.எஸ்.ஆர் நடத்தியவர்.
எம்.ஜி.ஆருடன் ராஜாதேசிங்கு, காஞ்சித்தலைவன்
சிவாஜியுடன் பராசக்தியில் ஆரம்பித்து தெய்வப்பிறவி,ஆலயமணி, பச்சைவிளக்கு, சாந்தி ஆகிய படங்கள்
ஜெமினியுடன் குலவிளக்கு, வைராக்கியம் என்று இணைந்து நடித்தவர்.
எஸ்.எஸ்.ஆர்- விஜயகுமாரி ஜோடி தமிழ்த்திரையின் மறக்கமுடியாத ஜோடி..
மு.கருணாநிதி வசனத்தில் 'குறவஞ்சி' படத்தில் கதாநாயகனான நிலையில் விஜயகுமாரியை திருமணம் செய்ய ஹைத்ராபாத் சென்று விட்டார். ஆதலால் சிவாஜி கணேசன் 'குறவஞ்சி'யில் நடித்தார்." மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள்! வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள்!"
‘வசன உச்சரிப்பு’ பொறுத்தவரை எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஒரு மேதை.
பூம்புகாரில் "என் சிந்தையிலே நடமாடும் செந்தமிழில் நலம் பாடி திரும்புகிறேன்"
பின்னால் திராவிட இயக்கத்தலைவர்கள் பலரும் கா.காளிமுத்து, வைகோ உள்பட எஸ்.எஸ்.ஆர் பாணியில் இமிடேட் செய்து பேசியவர்கள்.
1970ம் ஆண்டில் சிவாஜியோடு நடித்த 'எதிரொலி' படத்தில் பாலச்சந்தர் இயக்கத்தில் அதிருப்தியுற்று " பாப்பாரப்பய என்ன நினைச்சிக்கிட்டிருக்கான். அண்ணா, கருணாநிதி வசனத்தையே நான் பிரமாதமாகப் பேசி நடித்தவன். எனக்கு இவன் சொல்லிக்கொடுக்கிறானா?" என்று கோபப்பட்டவர் எஸ்.எஸ்.ஆர்.
மார்க்கெட் போன பின்னும் அதை ஒத்துக்கொள்ளாமல் மீண்டு வருவேன் என்று தான் கதாநாயக நடிகர்கள் சொல்வார்கள்.
மைக் மோகன் சமீப காலத்தில் கூட ஒரு படம் நடித்துப்பார்த்தார்.ஓய்ந்தார்!
ஜெமினி கணேசன் மார்க்கெட் போன பின் வேலையில்லாத நிலையிலும், தான் இன்னும் பிஸி, ஃபீல்ட் அவுட் ஆகவில்லை என்று ஒரு பிரமையை ஏற்படுத்த
ஃபுல் மேக் அப்பில் காரில் ஸ்டுடியோக்களில் வலம் வருவார்!
கமல் ரஜினி வெற்றி பெற்று தமிழ் திரையை ஆள ஆரம்பித்த பின்னும் மார்க்கெட்டில் மீண்டு நிலைக்க முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தவர் எஸ்.எஸ்.ஆர்.
'இரட்டை மனிதன்" என்று ஒரு படம் ரொம்ப காலமாக எடுத்து ஒரு வழியாக 1982ம் ஆண்டு ரிலீஸ் ஆகியது. வந்ததும் தெரியாது.போனதும் தெரியாது. அப்போதெல்லாம் அவர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.
சேடப்பட்டி தொகுதியில் இவர் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சேடப்பட்டி முத்தையாவை எதிர்த்துப் போட்டியிட்ட போது முத்தையா வாக்குகள் பிரிவதால் தி.மு.க விற்கு சாதகமாகி விடும் என்பதால் கடுமையாக இவரைத் தாக்கிப்பேசினார். வாபஸ் வாங்க மறுத்து நிச்சயம் பெரு வெற்றி பெறுவேன் என்று தான் ராஜேந்திரன் சவால் விட்டார்.. டெப்பாசிட் போயிற்று என்பதை விட பரிதாப படுதோல்வியடைந்தார் என்பது தான் உண்மை.
எம்.ஜி.ஆர் அப்போது இதை அறியாத நோயாளியாய் ப்ரூக்ளினில். எம்.ஜி.ஆருக்கு இங்கு நடந்த கட்சி குழப்பம் எதுவும் தெரியாது. நோயாளி எம்.ஜி.ஆருக்கு அதிர்ச்சி தரும் செய்தி எதுவுமே சொல்லப்படவில்லை. இந்திராகாந்தி படுகொலை,மதுரை முத்து மரணம் உள்பட!
...............................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.