ரோகினி இண்டர் நேஷனல் லாட்ஜ். ரிஸப்ஷனுக்கு
வெளியில் மீடியேட்டர் பெருமாள் நாயுடுவுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.
அங்கே ஒருவர் வந்தார். பெருமாள் நாயுடு என்னிடம்
அறிமுகப்படுத்தினார்.
“இவர் பொதும்பு முருகன்.”
வந்தவரிடம் “ முருகா, இவர் ராஜநாயஹம். ஹிந்து
ரங்கராஜன் தயாரிக்கும் ‘அழைத்தால் வருவேன்’ அஸிஸ்டண்ட் டைரக்டர்.”
பொதும்பு முருகனை ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’
படத்தில் ஒரு நடிகராக பார்த்திருக்கிறேன்.
பொதும்பு முருகன் நாடக்கம்பெனி நடத்தியவர்.
சுருளிராஜனுக்கும் என்னத்தெ கன்னையாவுக்கும் நாடகத்தில் நடிக்கும்போது நடந்த சண்டை
பற்றி சொன்னார். கன்னையாவின் மண்டையை கிண்டல் பண்ணி நாடகம் நடக்கும்போது சுருளி அடிக்கடி
பேசுவார். அதனால் சண்டை. சுருளி நாடகத்தில் ஒரு ட்ரபிள் மேக்கர். ஒரு தடவை
பொதும்பு முருகன் “ இனி நீ வேண்டாம். போடா” என்று விரட்டி விட்டார். ஆனால் அடுத்த
ஊருக்கு நாடக கோஷ்டி போன போது அங்கேயும் மறுபடியும் வந்து கெஞ்சினார்-“அண்ணே!
மன்னிச்சிக்கங்கண்ணே!” பொதும்பு
முருகன்:’’போனாப்போவுதுன்னு ‘இனி ஒழுங்கா இருடா’ன்னேன்.’’
இளையராஜா இவர் நாடகங்களுக்கு இசையமைத்த
கதையைப்பற்றியும் பொதும்பு முருகன் உற்சாகமாகச் சொன்னார்.
அப்போது சுருளி, இளையராஜா இருவரும்
தமிழ்த்திரையில் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்தார்கள்.
பெருமாள் நாயுடு “ முருகா, ஹிண்டு ரங்கராஜன் பட
பூஜை வாஹினியில நடந்தப்ப எங்கப்பா போனே? உன்னயத்தேடினென். உனக்கு ஒரு ரோல்
வாங்கித்தந்திருப்பேன். நீ தான் சிக்கவே இல்லை.”
ஹிண்டு ரங்கராஜனின் படம் இரண்டு ஷெட்யூல்
பெங்களூரில் முடிந்து விட்டிருந்த நேரம் அது!
பொதும்பு முருகன் உடைந்த குரலில்
தன்னிரக்கத்தோடு சொன்ன பதில் “அண்ணே! அது
என் தலையெழுத்துண்ணே! இருபது வருடமா இங்க கோடம்பாக்கத்த சுத்தி சுத்தித்தான்
வர்றேன். இங்கேயே தான் இருக்கறேன்.ஆனா யாரு கண்ணுலயும் சிக்க மாட்டேன்றேன். என்
தரித்திரம்..நான் யாரு கண்ணுலயும் பட மாட்டேன்றேன். என் கெட்ட நேரம்..”
அந்த டப்பா படம் “அழைத்தால் வருவேன்” ரிலீசான
அதே வருடத்தில் பாக்யராஜின் “ஒரு கை ஓசை” படத்தில் ‘சுடுகாட்டு சங்கிலி’ பாத்திரத்தில்
நடித்து சங்கிலி முருகனாக பிரபலமாகிவிட்டார்!
வில்லன் நடிகராக, தயாரிப்பாளராக வலம் வந்த
சங்கிலிமுருகன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.