Share

Oct 10, 2014

"ஒரு விரல்" கதாநாயகன் பிரேம் ஆனந்த்



வாழ்க்கை விரித்துக்காட்டும் விந்தைகள் பற்றி பேசி முடியாது.
1965ம் வருடம் தமிழ்த்திரை வரலாற்றில் ஒரு முக்கியமான ஆண்டு. ஜெயலலிதா கதாநாயகியாக இந்த ஆண்டில் தான் 'வெண்ணிற ஆடை'யில் அறிமுகமானார். அதே படத்தில் தான் ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோரும்.ஜெய்சங்கர் 'இரவும் பகலும்', சிவகுமார் சின்ன ரோலில் 'காக்கும் கரங்கள்'.
வீணாய்ப் போய் விட்ட ஆதித்தனுக்கு 'விளக்கேற்றியவள்'.
இந்த 1965ல் வந்த ஒரு சஸ்பென்ஸ் படம் 'ஒரு விரல்'.
'ஒரு விரல்' கிருஷ்ணாராவ் என்ற நகைச்சுவை நடிகர் இந்தப்படத்தின் பெயரால் தான் சாகும் வரை அழைக்கப்பட்டார். இந்தப் படத்தில் கிட்டத்தட்ட கதாநாயகனாக அறிமுகமானவர் பிரேம் ஆனந்த்.
இந்த பிரேம் ஆனந்த் ஒரு முஸ்லீம்.

ஜேசுதாஸ் பாடல் " அலங்காரம் கலையாமல் அணைப்பது தான் என்ன சுகமோ".
பி.ஆர் பந்துலு இயக்கத்தில் அவரே நடித்து
1966ல் வந்த 'நம்ம வீட்டு லக்ஷ்மி'யில்  இந்தப்பாடல் அதில் ஒரு ரோல் செய்த பிரேம் ஆனந்துக்குத்தான்!

1970களின் ஆரம்பத்தில் பிரேம் ஆனந்த் ஒரு நாடகக்கம்பெனியில் கதா நாயகன் ரோலில் நடித்துக்கொண்டிருந்தார். அதே கம்பெனியில் மற்றொரு நடிகர் கொத்தவால் சாவடி காய்கறி வியாபாரி ஜெய் கணேஷ்!


கதாநாயகன் ரோலில் நடித்துக்கொண்டிருந்த பிரேம் ஆனந்த் அப்போது ஏற்கனவே திருமணமானவர். அந்த நாடகத்தில் கதா நாயகியாய் நடித்த நடிகையுடன் காதல் வந்து இரண்டாவது  திருமணத்தில் முடிந்தது. இதன் காரணமாக அந்த நாடகக் கம்பெனியிலிருந்தே விலகும் நிர்ப்பந்தம் நாடகக் கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் ஏற்பட்டுப் போனது.

அப்போது நடந்து கொண்டிருந்த நாடகத்தில் கதாநாயகன் ப்ரொமோசன் உடனே ஜெய் கணேஷுக்கு!
அந்த நாடகம் பார்க்க பாலச்சந்தர் வருகிறார். நாடகம் முடிந்ததும் க்ரீன் ரூமுக்குள் நுழைகிறார். பாலச்சந்தர் சொன்னது என்னவென்றால் ' க்ரீன் ரூமுக்குள் நுழைந்த பாலச்சந்தரை அந்த நாடகக்கம்பெனி நடிகர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டனர். ஜெய் கணேஷ் மேக்கப்பைக் கலைத்து விட்டு புன்னகையுடன் வெளியேறியிருக்கிறார். ( 'எனக்கு உங்க படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்க' என்று மற்ற நடிகர்கள் போல ஜெய் கணேஷ் கெஞ்சவில்லை!) இந்த விஷயம் பாலச்சந்தரை கவர்ந்திருக்கிறது.


 'அவள் ஒரு தொடர்கதை' சுஜாதாவுக்கு அண்ணன் ரோல் யாருக்கு என்ற கேள்விக்கு ஜெய்கணேஷ் தான் இயக்குனர் நினைவுக்கு வந்திருக்கிறார். " தெய்வம் தந்த வீடு வீதியிருக்க" கண்ணதாசன் பாடல் ஜேசுதாஸ் பாடி ஜெய் கணேஷ் நடிப்பில்!
ஜெய் கணேஷ் தமிழில் பிசியான கதா நாயகனாகி பொருளும் பிரபலமும் அடைந்த கதை எல்லோருக்கும் தெரிந்தது தான்.


இந்த விஷயம் பிரேம் ஆனந்த் மனதை மிகவும் பாதித்து விட்டது.
பாலச்சந்தர் அந்த நாடகத்தை பார்க்க வந்த நேரத்தில், தான் அதில் கதாநாயகனாய் நடித்திருந்தால் இன்று பாலச்சந்தர் படத்தில் நடித்து நல்ல வசதி வாய்ப்புடன் இருந்திருக்க முடியும். ஜெய் கணேஷ் அனுபவிக்கும் செல்வாக்கும் செல்வமும் தனக்கு வந்திருக்க வேண்டிய பாக்யங்கள். விதி தன் வாழ்வில் இப்படி விளையாடி விட்டதே என்ற தன்னிரக்கம் நிரந்தரமாகி விட்டது.


இவருக்கு சிவாஜி கணேசன் படங்களில் நடிக்க கணிசமான வாய்ப்புகள் கிடைத்தன. இவர் சிவாஜியின் கைத்தடி நடிகர்களில் ஒருவராகவே ஆகிவிட்டார். சிவாஜி படங்களில் பிரதான பாத்திரங்கள் ஜெய் கணேஷுக்கு வாய்த்தது.

1980களில் முன் பகுதியில் சிவாஜிக்கு பிரேம் ஆனந்த் என்ற நடிகரைப் பிடிக்காமல் போய் விட்டது.

அந்த நேரத்தில் பிரேம் ஆனந்த் ஒரு பத்திரிக்கையில் சிவாஜிக்கு எதிராக பேட்டி கொடுத்தார். " ஸ்தாபன காங்கிரஸ் மேடைகளில் 1970களில் ஜெயகாந்தன் சிவாஜியை கடுமையாக விமர்சித்த போது சிவாஜி கணேசன் தன் கைத்தடிகளிடம்
' டேய்! என்னடா பாத்துக்கிட்டிருக்கீங்க? என்னை கேவலமா காங்கிரஸ் மேடையிலேயே ஜெயகாந்தன் பேசுறான். அவனை அடிங்கடா." என்று சொன்னார்!"
தமிழின் முக்கிய எழுத்தாளரை தமிழின் முக்கிய நடிகர் அடிக்கச்சொன்னார் என்ற விஷயம் அப்போது கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரேம் ஆனந்த் அப்புறம் திரையுலகில் இல்லாமல் ஆகி விட்டார்.


.........



மதுரை A.A.ரோட்டில் சிவாஜி ரசிகர் மன்ற மேடையிலேயே அவரை கடுமையாக ஜெயகாந்தன் சாடியதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் அது. மேடையில் மகாத்மா காந்தி, காமராஜர் படங்களுக்கு நடுவே சிவாஜி கணேசனின் படத்தை வைத்திருந்தார்கள்.
‘இது யாரு? தேசப் பிதா. அது யாரு ? கர்ம வீரர் காலா காந்தி நடுவிலே யாருடா இது? திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு சைத்தானை வளர்த்தார்கள். அது சில குட்டிச் சாத்தான்களை சேர்த்துக் கொண்டு வெளியே வந்து அண்ணா தி.மு.க. என்று ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டது. ஸ்தாபன காங்கிரஸிலும் நீங்கள் ஒரு சைத்தானை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று துணிச்சலுடன் பகிரஙகமாக ஜெயகாந்தன் கர்ஜித்தார்!
..................................

1 comment:

  1. http://www.thehindu.com/features/cinema/oru-viral-1965/article3900844.ece

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.